வெள்ளி, 28 அக்டோபர், 2011

நினைவோட்டம் 54

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான வகுப்புகள் ஆஸ்பெஸ்டாஸ்
கூரை போட்ட கட்டிடங்களில் நடக்கும்.

பள்ளி இறுதி ஆண்டு (S.S.L.C) படிக்கும்
மாணவர்களுக்கு மட்டும் தலைமை ஆசிரியர்
அறைக்கு அருகே உள்ள மங்களூர் ஓடுகள்
வேய்ந்த கட்டிடத்தில்(தாலுக்கா அலுவலகங்கள்
மற்றும் மாவட்ட நீதி மன்றங்கள் அமைந்துள்ள
கட்டிடங்கள் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம்)
வகுப்புக்கள் நடக்கும்.

தலைமை ஆசிரியரே எங்களுக்கு ஆங்கில பாடம்
எடுப்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் எங்களுக்கோ
இது ஒரு Promotion போல.

இறுதி ஆண்டு வந்ததுமே மாணவர்களின் நடை உடை
பாவனையில் மாற்றம் தெரியும்.அதுவரை அரைக்கால்
சட்டை அணிந்த சிலர் வேட்டி கட்டி வருவார்கள்.

நான் கூட பொங்கல் முடிந்த பின் ஒரு நாள் நாலு
முழம் வேட்டி கட்டி பள்ளிக்கு நடக்கமுடியாமல்
நடந்து சென்றிருக்கிறேன்.

S.S.L.C மாணவர்களுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ்
பாட புத்தகங்கள் சென்னை பல்கலைக் கழகம் தான்
வெளியிடும் அந்த புத்தகங்களை வாங்கும்போதே
அப்போதே கல்லூரியில் சேர்ந்த மகிழ்ச்சி எங்களுக்கு.

அப்போது ஒவ்வொரு பள்ளி இறுதி மாணவன்
கையில் பாட நூல்கள் இருக்கிறதோ இல்லையோ,
இது கண்டிப்பாய் இருக்கும்

பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார் அவர்களால்
எழுதப்பட்டு திருச்சி பழனியப்பா பிரசுரம் வெளியிட்ட
தமிழ் பாடத்திற்கான கோனார் நோட்ஸ் எனப்படும்,
கோனார் தமிழ் உரை நூல் தான் அது.

அதை வாங்காத மாணவர்களே இல்லை எனலாம்.
எங்கள் உரை நூல் என்று வேறொரு உரை நூல்
இருந்தாலும், பெரும்பாலோர் விரும்பியது கோனார்
உரை நூலைத்தான்.(பிற்காலத்தில் 4 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு கூட கோனார் உரை நூல்
வந்துவிட்டது.)

அந்த அளவுக்கு கோனார் உரை நூல்,பாடப்புத்தகம்
போலவும், அகராதி போலவும் பயன்படுத்தப்பட்டது.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனக்கு பிடித்த
புதுக்கவிதை என ஒரு வார இதழில்
குறிப்பிட்டிருந்த புதுக்கவிதை இந்த நேரத்தில்
எனக்கு நினைவுக்கு வருகிறது.

“வள்ளுவரும் தேர்வு எழுதப்போனார்
தேர்விலே தோல்வியுமே ஆனார்
பாவம் படிக்கவில்லை அவர் கோனார்!”

(இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.)

இந்த கவிதை வள்ளுவரை கிண்டல் செய்வது
போல இருந்தாலும் நாட்டு நடப்பை சொன்ன
கவிதை அது.

நான் கூட கோனார் உரை நூலைத்தான்
வாங்கினேன். எனக்கு அப்போது தெரியாது,
மறு ஆண்டு புகுமுக வகுப்பு படிக்கும்போது
பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார்
அவர்களின் நேரடி உரையையே
புனித வளவனார் கல்லூரியில்
(St.Joseph’s College) கேட்கும் வாய்ப்பு
கிடைக்குமென்று.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. உங்கள் நினைவாற்றலுக்கு ஒன்று, அனுபவப் பகிர்வுக்கு ஒன்று என இரண்டு ஓட்டுப்போட நினைத்தாலும் முடியவில்லையே!
    நீங்கள் அய்யம்பெருமாள் கோனாரின் மாணவரா?அதுதான் தமிழில் கலக்குகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    மதிப்பிற்குரிய அய்யம்பெருமாள் கோனார் அவர்களின் மாணவனாயிருந்தாலும் உயர் நிலைப்பள்ளியில் எனக்கு தமிழாசிரியராக இருந்த புலவர் குப்புசாமி அய்யா அவர்கள் தான் எனக்கு முதன் முதல் தமிழைக் காதலிக்க கற்றுக்கொடுத்தவர்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து அதனை மனதில் பதித்து வைத்துகொண்டு , பல வருடம் கடந்தும் மறவாமல் துல்லியமாக வர்ணிக்கும் தங்கள் திறன் பாராட்டுக்குரியது . பள்ளி கட்டிடங்களை நேரில் பார்த்தது போல் இருந்தது . கோனார் உரையை படிக்காதவர்களே இருக்க முடியாது . நானும் விதிவில்லகு அல்ல . ஆனால் அவர் உரையை நேரில் கேட்கும் சந்தர்ப்பம் சிலருக்கே கிட்டிஇருக்கும். வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! சில நிகழ்வுகள் நம் மனதில் ‘பசுமரத்தாணி’ போல் பதிந்துவிடும் அல்லவா? அவைகளைத்தான் நினைவிலிருந்து மீட்டெடுத்து எழுதுகிறேன்.எனினும் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு