புதன், 19 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 3


கோவை மாவட்டத்தில் இருந்த அந்த வங்கிக் கிளையில்
ஒருநாள் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது, ஒரு விவசாயி
என்னைப் பார்க்க வந்தார்.

நான் வேளாண்மைக் கடன் துறையைப் பார்க்க ஆரம்பித்த பின்
வந்த முதல் வாடிக்கையாளர் அவர். அவரை அன்போடு வரவேற்று,
உட்காரச்சொல்லி எங்கிருந்து வருகிறார்?’ என்றும் அவருக்கு
என்ன வேண்டும்?’ என விசாரித்தேன்.   

அவர் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரிலிருந்து வருவதாகவும், தான் நிலக்கடலை பயிரிட்டு இருப்பதாகவும், 
வங்கிகள்பயிர் செய்ய விவசாயிகளுக்கு கடன் தருவதாக கேள்விப்பட்டதால் அது பற்றி விசாரித்து விட்டு, அது கிடைக்க 
என்ன செய்யவேண்டும்எனத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாக 
சொன்னார். 

அந்த விவசாயியைப் பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி
ஏற்பட்டது. அதற்கு காரணம் உண்டு. வேளாண் அறிவியல்
படித்திருந்த எனக்கு, மாநில அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றியபோது இருந்ததைவிட,தேசிய விதைக் கழகத்தில்
மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோது, நான் கற்றுக்கொண்ட
வீரிய விதைப் பெருக்கம் (Hybrid Seed Production) சம்பந்தப்பட்ட
தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்து
அவர்களுக்கு என்னால் உதவமுடிந்ததால், அங்கே பணியில்
மனநிறைவு (Job Satisfaction) அதிகம் இருந்தது.

பின்னர் தேசிய விதைக் கழகத்தில் பணியாற்றிவிட்டு,
சிண்டிகேட் வங்கியில் சேர்ந்தபோது நான் கற்றுக்கொண்ட/
தெரிந்துகொண்ட வேளாண் தொழில் நுட்பங்களை/உத்திகளை
வங்கியில் கடன் பெற வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
  
அதனால் தினம் வானொலியில் ஒலிபரப்பான விவசாய 
நிகழ்ச்சிகளைக் கேட்டும்,வேளாண்மை ஆய்விதழ்களைப் 
(Agricultural Journals) படித்தும்எனது உயர் தொழில்நுட்ப 
அறிவுப்பரப்பை விசாலப்படுத்திக் கொண்டு வங்கியின் விவசாய வாடிக்கையாளர்களுக்கு உதவக் காத்துக்கொண்டு 
இருந்தபோதுதான் அந்த விவசாயி வந்தார்.  

அவரைப் பற்றியும் அவரது பண்ணையில் (தோட்டத்தில்) உள்ள 
பயிர்கள் பற்றியும் விசாரித்துவிட்டு, அவரிடம் பயிர்க்கடன் விண்ணப்பத்தைக்  கொடுத்து அதை  பூர்த்தி செய்து, அதனுடன்
சிட்டா மற்றும்அடங்கல் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு
வருமாறு கேட்டுக்கொண்டேன்.

(சிட்டா என்பது  நிலத்தினுடைய உரிமையாளரின் பெயர்,
நில அளவை எண், மற்றும் பரப்பளவு இவைகளைக் கொண்ட
ஆவணம். அடங்கல் என்பது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிரின்
பெயர், அது பயிரட்டப்பட்டுள்ள பரப்பளவு, ஃபசலி ஆண்டு
(பயிரிடப்படும் ஆண்டு)  மற்றும் பயிர் செய்வோரின் பெயர்
அடங்கிய ஆவணம்)

அப்படி அவரால் அந்த  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய இயலாவிடில்/தெரியாவிடில் குறிப்பிட்ட ஆவணங்களுடன்
வரும்போது நான் அதை  பூர்த்தி செய்ய உதவுவதாகவும்  
சொன்னேன்.

அப்போதெல்லாம், தற்போது உள்ளது போல் வங்கியின்
வாடிக்கையாளராக ஏற்றுக்கொள்ள கடைப்பிடிக்கும்
Know Your Customer (KYC) போன்ற விதிகள் எதுவும் இல்லை.

கடன் கொடுக்குமுன்பு அந்த பயனாளியை ஒரு சேமிப்பு 
கணக்கை  ஆரம்பிக்க சொல்வோம். வங்கியில் கணக்கு 
வைத்துள்ள ஒருவர் அவரை அறிமுகப்படுத்தவேண்டும், அவ்வளவுதான்.வேறு எந்தவித ஆவணமும் தரத் 
தேவையில்லை.

சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கான படிவத்தில் அவரை
அறிமுகப்படுத்த ஆட்கள் யாரும் இல்லாவிட்டால் 
என்னைப்போன்ற கள அலுவலர்களே அறிமுகப்படுத்தி கையொப்பமிடுவதுண்டு.

ஏனெனில் நாங்கள் அந்த வருங்கால வாடிக்கையாளரின் 
வீட்டிற்கும் பண்ணைத்தோட்டங்களுக்கும் சென்று 
வந்திருப்பதால் அவர்களது வசிப்பிடம் தெரியும் என்பதால் 
நாங்களே அறிமுகப்படுத்துவதுண்டு.

ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். வங்கிக்குத் 
தெரிந்தவர்தான் புதிய வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதன் நோக்கமே,ஒருவர் தவறாக அல்லது வேண்டுமென்றே வேறொருவர் பெயரில் கணக்கு தொடங்கக்கூடாது என்பதால்தான்.

அப்படி வேறொருவர் பெயரில் கணக்குத் தொடங்க அனுமதித்தால்
ஏற்படும் சிக்கலுக்கு வங்கியே பொறுப்பேற்க நேரிடும் 
என்பதால்தான் தங்களுக்கு தெரிந்தவர்கள், புதிய 
வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தாவிட்டால் வங்கிகள் 
அவர்களை வாடிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால் அப்போதெல்லாம் கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் 
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதில்லை. அதனால் முதன்முதல் 
ஒரு கிராமத்தில் உள்ள ஒருவர்  வங்கியில் கணக்கைத் தொடங்க விரும்பினால், அந்த கிராமத்தில் உள்ள வங்கிக்குத் தெரிந்தவர்தான் அவரை அறிமுகப்படுத்தவேண்டும் என்றால் அது நடவாத காரியம். அதனால் எங்களைப்போன்றோரே அவர்களை 
அறிமுகப்படுத்துவதுண்டு.

அன்று வங்கிக்கு வந்த அந்த விவசாயி  கடன் விண்ணப்பதைப் பெற்றுக்கொண்டு தேவையான சிட்டா மற்றும் அடங்கள் போன்ற ஆவணங்களோடு இரண்டொரு நாட்களில் வருவதாக சொன்னார்.
நானும் சரி.நல்லது. பிறகு பார்க்கலாம் என்றேன்.

என்னிடம் விடை பெறும்போது அவர் சாருக்கு எந்த ஊர்?’ 
என்றார்.எனது ஊர் விருத்தாசலத்தை அடுத்த சிறிய ஊர் என்றால் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என எண்ணி,‘சென்னைக்கு 
அருகே உள்ள ஊர் என்றேன்.

அதைக் கேட்டு அவர் சொன்னது என்னை அதிர்ச்சியில் 
ஆழ்த்தியது.


தொடரும்

26 கருத்துகள்:

 1. நிறைய வங்கிநடைமுறைகள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. கிராம மக்கள் நகரவாசிகளை விட விவரமானவர்கள். அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 4. நிறையச் செய்திகல் தெரிந்து கொண்டேன்.நன்றி
  இன்று என் தளத்தில்”பைத்தியம் தெளிவதில்லை”

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை. பொறுத்திருங்கள்!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! உங்கள் கவிதையையும் இரசித்துப் படித்தேன்.

  பதிலளிநீக்கு

 8. தங்களைப் போல வங்கி ஊழியர்கள் அனைவரும அன்று இருந்திருந்தால் நான் விவசாயியாகவே இருந்திருப்பேன்

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! நீங்கள் விவசாயியாக இருந்திருந்தால், தமிழ்கூறும் நல்லுலகம் ஒரு தமிழ் அறிஞரை இழந்திருக்குமே!

  பதிலளிநீக்கு
 10. வழக்கம்போல் சஸ்பென்ஸா?
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. பணியில் உங்களுக்குள்ள அர்ப்பணிப்பு அறிந்ததுதானே!நிச்சயம் ஒரு சிறப்பான தொடரை எதிர்நோக்கியிருக்கிறேன்.ஆரம்பமே எதிர்பார்க்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பாராட்டுதற்குரிய பணியை அறிந்து மகிழ்கிறோம்.அந்த விவசாயி சொன்னது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல்.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!. சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை ஆனால் எதிர்பாராத ஒன்று!

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இந்த தொடர் சிறப்பானதா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும். தொடர்வதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்...

  பதிலளிநீக்கு
 17. தொடர்வதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 18. அடுத்தது என்ன எனும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள்!...என்ன?....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 19. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 20. ஐயா.வணக்கம்.தங்களது பதிவுகளை எனது மின்அஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்
  snrmani@rediffmail.com

  பதிலளிநீக்கு
 21. வருகைக்கு நன்றி திரு கொச்சி தேவதாஸ் அவர்களே! நிச்சயம் எனது பதிவுகளை உங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதில் இன்றுள்ள நடைமுறைச் சிக்கல்கள் இல்லாத காலத்தைப் படிக்கையில் வியப்பாக இருக்கிறது. நல்ல பல தகவல்களுடன் சஸ்பென்ஸாக வேறு நிறுத்தி அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விடுகிறீர்கள்

  பதிலளிநீக்கு
 23. வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! இப்போதுபோல் வங்கிக் கணக்குகளை தவறாக உபயோகிக்கும் பழக்கம் அப்போது இல்லாததால் கணக்கு ஆரம்பிக்கும் முறை சுலபமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 24. அன்பின் நடன சபாபதி - வங்கி நடைமுறைகளை - வாடிக்கையாளர்களுக்கு உதவுதலை - சுவாரஸ்யமாக எழுதுவது நன்று - மிக மிக இரசித்தேன் - சிட்டா அடங்கல் முதற்கொண்டி விளக்கம் அளித்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 25. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

  பதிலளிநீக்கு