ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 4



அந்த விவசாயி நான் எந்த ஊரைச்சேர்ந்தவன் எனக் கேட்டதற்கு,
நான் சென்னைக்கு அருகே உள்ள ஊரைசேர்ந்தவன் என 
சொன்னேன். என்று சொன்னேன் அல்லவா, அதற்கு அவர் சொன்னார்.அதாங்க. நீங்க மரியாதை இல்லாமல் பேசுறீங்க. 
என்று.

அதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்துவிட்டேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அப்படி என்ன மரியாதை இல்லாமல் பேசிவிட்டேன் நான். வந்தவரை அன்போடு வரவேற்று உட்காரச்சொல்லியிருக்கிறேன்.அவர் கேட்ட 
கேள்விகளுக்கு விடை அளித்து அவருக்கு உதவியிருக்கிறேன்.
அப்படி இருந்தும் நான் மரியாதை தரவில்லை என்கிறாரே என
குழப்பதோடு இருந்தபோது, அவர், நீங்கள் சொன்ன
ஆவணங்களோடு வந்து பார்க்கிறேங்க. என்று கூறி 
விடைபெற்று சென்றார்.

அவர் சென்ற பிறகு நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு 
நின்றிருந்த வங்கி ஊழியர் ஒருவர் (உள்ளூரைச்சேர்ந்தவர்) 
என் அருகில் வந்தார். அவரிடம் நான் என்ன இவர் இப்படி 
சொல்லிவிட்டு செல்கிறார்?நான் மரியாதையோடு தானே 
அவரிடம் நடந்துகொண்டேன்.என்றேன். 

அதற்கு அவர் சொன்னார். சார். நீங்கள் பேச்சை 
முடிக்கும்போது மரியாதையோடு பேசவில்லை என அவர் 
நினைக்கிறார். என்றார்.

சரி. பிறகு பார்க்கலாம். நல்லது. என்றுதானே சொன்னேன்
இதில் மரியாதை குறைவு எங்கே இருக்கிறது எனக் கேட்டதற்கு
அவர் சொன்னார். இல்லை சார். நீங்கள் அவரிடம் சரிங்க.பிறகு
பார்க்கலாங்க. என சொல்லியிருக்கவேண்டும். இங்கேயெல்லாம் அப்படித்தான் சொல்வார்கள். நீங்கள் அப்படி சொல்லாமல், 
சரி.பிறகு பார்க்கலாம் என சொன்னதால் அவர் அதை மரியாதை
குறைவாக பேசியதாக நினைக்கிறார். என்றார்.

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் மரியாதை
கொடுத்து பேசுவதாக நினைத்துப் பேசியது இங்கே மரியாதை
குறைவாய் தோன்றுவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

எங்கள் ஊர் பக்கத்தில் பேச ஆரம்பிக்கும்போது மரியாதை
கொடுத்துத்தான் பேசுவோம்.ஆனால் பிறகு பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த ங்க என்பதை சேர்த்து சொல்வதில்லை.
காரணம் ஆரம்பிக்கும்போதே மரியாதை கொடுத்துவிட்டதால்
பின்னால் பேசும் வார்த்தைகளுக்கும் அவை பொருந்தும் என்ற
எண்ணத்தால் அவ்வாறு பேசுவதில்லை என நினைக்கிறேன்.
(தொக்கி நிற்கிறது என்று சொல்வது போல!)

அப்புறம்தான் தெரிந்தது கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார
வழக்கு தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதை கோயம்புத்தூர்
பாஷை என்றும் சொல்வார்கள் என்று.

நமக்குத்தான் எல்லாம் தெரியும் நினைத்தது தவறு என அந்த
நிகழ்வின் மூலம் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு மிகவும்
கஷ்டப்பட்டு அந்த கோவை வட்டார பேச்சு முறையைக் கற்றுக்
கொண்டேன். கஷ்டப்பட்டு என சொல்வதன் காரணம் 25 ஆண்டுகள் பேசியமுறையை  உடனே மாற்றுவது கடினம் என்பதால்.

(சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 23 ஆண்டுகள் கழித்து
அதாவது 1993 ல் சென்னை அமைந்தகரையில் இருந்த எங்களது
வங்கியின் கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் என்னிடம் பேச எனது  அறைக்கு வந்தார்.

பேசிமுடித்து கிளம்பும்போது, சார். ஏனுங்க.நீங்க 
கோயம்புத்தூருங்களா?’ என்று கேட்டார், ஏனுங்க, அப்படி 
கேட்கிறீங்க?’ என்றதற்கு அவர்உங்கள் பேச்சை வைத்து 
கேட்டேனுங்க. என்றபோது நான் கோயம்புத்தூர் பாஷையில் 
பட்டம் பெற்றது போன்ற உணர்வைப் பெற்றேன்!)

சொன்னது போலவே, அந்த விவசாயி இரண்டு நாட்கள் கழித்து
நான் சொல்லியிருந்த சிட்டா மற்றும் அடங்கல் 
ஆகியவைகளோடு வந்தார். அவருக்கு அந்த கடன் விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது எனத் தெரியாததால் அதை பூர்த்தி 
செய்ய உதவினேன். முன்பு நான் பெற்ற அனுபவத்தால், மிகவும் ஜாக்கிரதையாக (மரியாதையோடு) அவரிடம் பேசினேன்.

பிறகு அவரது தோட்டத்தைப் பார்க்க என்னை அழைத்து செல்ல
ஒரு டாக்ஸியையும் ஏற்பாடு செய்து வந்திருந்தார்.
(அப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 
ஒரு ரூபாய் 10 காசுகள் தான்!) கிளை மேலாளரிடம் அனுமதி 
பெற்று அவரோடு அவரது தோட்டத்திற்கு சென்றேன்.

தொடரும்

24 கருத்துகள்:

  1. ஏனுங்க! பதிவு நல்லாத்தானுங்க இருக்குங்க!

    பதிலளிநீக்கு
  2. திரு தமிழ் இளங்கோ அவர்களே! பாராட்டுக்கு நன்றிங்க!!

    பதிலளிநீக்கு
  3. அப்புறம்தான் தெரிந்தது கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார
    வழக்கு தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதை ‘கோயம்புத்தூர்
    பாஷை’ என்றும் சொல்வார்கள் என்று.

    ‘கோயம்புத்தூர் பாஷை’யில் பட்டம் பெற்றது போன்ற உணர்வைப் பெற்றேன்!

    பதிலளிநீக்கு
  4. அந்த "ங்க" ஒவ்வொரு வார்த்தைக்கும் போடோணுமுங்க. இல்லாட்டிங்க்ணா கோவிச்சுக்குவாங்க்ணா.

    சினிமா நடிகர் விஜய் இப்படித்தான் பேசுவார்னு சொல்றாங்க்ணா.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் மொழியே மாறி விடுகிறதே சார்!(நான் குறுகிய காலமே குமரி மாவட்டத்தில் இருந்தாலும், மொழியைக் கப்பென்று பிடித்துக் கொண்டு, உள்ளூர் ஆள் என்றே கருதப்பட்டேன்!)
    அருமையான நினைவுகள்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்க சொல்றதுங்க உண்மைதாங்கண்ணா. கருத்துக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நான் கூட கர்நாடகாவில் தார்வாரில் இருந்தபோது, அங்கு பேசப்பட்ட கன்னடத்தையும் பின் பெங்களூரு வந்தபின் அங்கு பேசப்படும் கன்னடத்தையும் சரியாக கற்றுக்கொண்டு உள்ளூர் மக்கள் போலவே பேசினேன். ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறு இருக்காது என நினைத்து என் வழக்கப்படி பேசியதால்தான் இந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு வார்த்தையில் இவ்வளவு வேறுபாடா !ஆடக்கடவுளே! முதலில் எனக்குத் தோன்றவேயில்லை!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நீங்கள் பல விஷயங்களைக்கற்றுக் கொண்டதோடு அவற்றைப் பயண படுத்தி இருக்கிறீர்கள்.இப்போது அதை பகிர்வது எங்களைப் போன்றவர்களுக்கு
    பயனளிக்கக் கூடியது.

    பதிலளிநீக்கு
  12. கோயம்புத்தூர் பரவாயில்லீங்க திண்டுக்கல் பக்கம் போனீங்கங்கன்னா ரெண்டு ங்க ங்க போடனுங்கங்க.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! புதிய தகவலைத்தந்தமைக்கு நன்றிங்கங்க!!

    பதிலளிநீக்கு
  15. "ங்க" இதில் இவ்வளவு விஷயம் இருக்கா உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக.
    உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில பதிவுகளை தவற விட்டுவிட்டேன் நேரம் இருக்கும் போது பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! இப்போது நலந்தானே!

    பதிலளிநீக்கு
  17. "ங்க" எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க...

    பகிர்வுக்கு நன்றிங்க...

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! திண்டுக்கல்லைச்சேர்ந்தவர் ஆயிற்றுங்களே ‘ங்க’ பிடிக்காமல் போகுங்களா?

    பதிலளிநீக்கு
  19. அருமை சகோ விவசாயியின் நிலைமை அவள்தான்

    பதிலளிநீக்கு
  20. கோயம்புத்தூர் போன புதுசுல அஙக நடத்துனர் சின்னப் பையன்களைக் கூட ஏனுங்க எங்கங்க போவணும் என்று கேட்டதைப் பார்த்து வியந்திருக்கிறேன். நானும் அங்கிருந்த வரை அப்படித்தான் பேசினேன். சென்னையிலோ நடத்துனர்கள் முன்ன போ சார் என்று மரியாதையையும் அவமரியாதையையும் சேர்த்து அளிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ்தான் எத்தனை விதமாக ஊருக்கு ஊர் வடிவமெடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  22. அன்பின் நடன சபாபதி - வங்கியில் சந்தித்த வாடிக்கையாளரின் குண ந்லன்களையும் அவருக்கு உதவியதையும் பற்றிய பதிவு நன்று - அசைபோட்டு ஆனந்தித்து எழுதுவது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு