புதன், 24 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 11நான் ஊருக்கு செல்லும் சமயம் பேருந்து நிலையத்திற்கு வந்து  
என்னை சந்திப்பதாக அந்த வாடிக்கையாளர் சொன்னதும், அங்கு
எதற்காக சந்திக்கவேண்டும் எனக் கேட்டேன் என்று சொன்னேன்
அல்லவா?

அதற்கு அவர் தயங்கிக்கொண்டே, தப்பாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்,
உங்களுக்கு எங்கள் தோட்டத்தில் தயாரான அச்சு வெல்லம்
மூன்று கிலோ தரலாமென்று நினைக்கிறேன்.அதைக்கொண்டு
வந்து கொடுப்பதற்குத்தான் உங்களை வந்து சந்திக்க
நினைத்தேன். என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது. அதே
நேரத்தில் வருத்தமும் வந்தது. கோபம் வந்த காரணம் நான்
எதையும் எதிர்பாராது, எனது கடமையை செய்ததற்கு 'விலை'
தர நினைக்கிறாரே என்பதால். வருத்தம் வந்த காரணம்,
அதைக் கொடுத்தால் நான் வாங்கிக்கொள்வேன் என
நினைத்துவிட்டாரே என்பதால்.

(அந்த நேரத்தில் பம்ப் செட் டை ஆய்வு செய்ய சென்றபோது
காபி குடிக்க 5 ரூபாய் கொடுத்த அந்த மூதாட்டியை நினைத்துப்
பார்த்தேன். அவர் பணம் கொடுத்தது விருந்தினரை உபசரிக்கும்
நோக்கத்தில். ஆனால் படித்த அதுவும் வளரும் வழக்கறிஞரான
இவர் கொடுக்க நினைப்பதோ காரியம் நடக்க!) 

நான் வெல்லம் வேண்டும் எனக் கேட்கவில்லையே.பின் எதற்கு
சார் தரவேண்டும்? ஒருவேளை அதைக் கொடுத்தால்தான் உங்கள்
கடன் ஒப்பளிப்பு ஆகும் என நினைத்துவிட்டீர்களா? உங்களுக்கு வேண்டுமென்றால், ஊரிலிருந்து வரும்போது எங்கள் பக்கத்தில்
தயாராகும் உருண்டை வெல்லத்தை வாங்கி வரட்டுமா?’ என்றேன்
எனது கோபத்தை வெளிக்காட்டாமல்.

நான் கோபத்தில் பேசுகிறேன் என்பதை புரிந்துகொண்டு, சார்.
என்னை மன்னிக்கவேண்டும்.நீங்கள் எனக்கு கடன் பரிந்துரை
செய்ததற்காக கைமாறு செய்வதாக எண்ணி அதைத் தரவில்லை. பொங்கலுக்கு ஊருக்கு போகிறீர்களே.பண்டிகைக்கு உபயோகமாக
இருக்குமே என்ற எண்ணத்தில் தர நினைத்தேன்.மற்றபடி தவறாக எண்ணாதீர்கள். என்றார்.

நான் கேட்காதபோது, நீங்கள் கொடுப்பதை வேறெந்த விதத்தில் எடுத்துக்கொள்வது? உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்வேன்.
நீங்களும் வளரும் வழக்கறிஞர். நானும் வங்கியில் புதிதாய்
பணியைத் தொடங்கியவன். என் போன்ற இளைஞர்களை
உங்களுக்கு பணி விரைவாக நடக்கவேண்டும் என்ற உங்கள்
சுய நலத்திற்காக இதுபோல் ஏதேனும் கொடுத்து,
கெடுத்துவிடாதீர்கள்.

இன்றைக்கு நீங்கள் அன்போடு தரும் வெல்லத்தை இப்போது
நான் வாங்கிக்கொண்டால், வரும் நாட்களில் கடன் பரிந்துரை
செய்யும்போது உங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் வேறு
ஏதாவது தரமாட்டார்களா என்ற நினைப்பு எனக்கு வரலாம்.

அந்த நினைப்பே பின்னால் ஏதாவது கொடுத்தால்தான் கடன்
பரிந்துரை செய்யமுடியும் என்ற நிபந்தனை விதிக்கும் அளவுக்கு
என்னை மாற்றிவிடலாம். எங்கள் வங்கியில் நான் செய்கின்ற
பணிக்கு எனக்கு தகுந்த சம்பளம் தருவதால், அவ்வாறு மாற
நான் விரும்பவில்லை.எனவே நீங்கள் தயை செய்து என்னை
பேருந்து நிலையத்தில் வந்து சந்திக்கவேண்டாம்.தங்களுடைய
அன்புக்கு நன்றி. என்று சற்று காட்டமாகவே சொன்னேன்.

அவருக்கு முகம் சிறுத்து என்னவோ போல் ஆகிவிட்டது. உடனே
நான் வருகிறேன் சார். எனக்கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.
நான் கூட எனது மறுப்பை வேறுவிதமாக காட்டியிருக்கலாமோ
என நினைத்தேன். இருந்தாலும் இதை முளையிலேயே
கிள்ளியதுதான் சரி என எண்ணி இருந்துவிட்டேன்.

நான் நினைத்தபடி அவர் அதை கொடுக்க நினைத்தது அவருடைய
கடனை பரிந்துரை செய்ததற்கு, கைமாறாகத்தான் என்பது பிற்பாடு ஊருக்குபோய் வந்ததும் தெரிந்தது. என்னிடம் பேச வருமுன்பே,
அவர் அந்த இன்னொரு கிளையின் மேலாளர் வீட்டுக்கும் சென்று வெல்லத்தை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் என்று. மேலாளருக்கு கொடுத்திருக்கிறோமே கள அலுவலருக்கும் தராவிட்டால் பணி
நடக்காது என நினைத்திருப்பார் போல.

வங்கியில் பின்னாட்களில் மேலாளராகவும், வட்டார மேலாளராகவும் பணியாற்றியபோது இது போன்ற சோதனைகள் ஏற்பட்டதுண்டு.
நல்லவேளையாக அந்த மாயவலையில் நான் சிக்கிக்கொள்ளவில்லை.
கையூட்டு பெறுவோர் மற்றும் தருவோர் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். அது பற்றி பின்னர் எழுதுவேன். 


தொடரும்


19 கருத்துகள்:

 1. நீங்கள் சொன்னது போல் சிலவற்றை முதலிலேயே (வேரோடு) கிள்ளி ஏறிய வேண்டும்... இல்லையெனில் தஞ்சைவூர் பொம்மை ஆகி விடலாம்...

  நன்றி சார்... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. வங்கி பணி என்றவுடன் ஏற்கனவே ஒருவர் எழுதிய பதிவு தான் ஞாபகம் வந்தது.
  முளையிலேயே கிள்ளியது நல்லது தான்.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார் அவர்களே!

   நீக்கு
 4. நல்ல அனுபவம். தமிழ் மணத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு நீங்கிவிடது. வழக்கம் போல உங்களுக்கு ஓட்டு போட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 5. நல்லவேளையாக அந்த மாயவலையில் சிக்கிக்கொள்ளவில்லை. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 6. கையூட்டு தேசமிது நல்லவேளையாக கைநழுவி சென்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 7. நல்ல பதிவு ...... புதிய ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு முத்துக்குமார் சின்னசாமி அவர்களே!

   நீக்கு
 8. "..அந்த மாயவலையில் சிக்கிக்கொள்ளவில்லை..."
  நல்ல செயற்பாடு.
  மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி மருத்துவர் M.K.முருகானந்தம் அவர்களே!

   நீக்கு
 9. இதுமாதிரி பெறுவது இழுக்கு. அந்த மாயவலையில் சிக்காமல் முளையிலேயே கிள்ளி எறிந்த நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

   நீக்கு
 10. அன்பின் நடன சபாபதி - தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது இச்செயல் - அன்பின் காரணமாகவும் அன்பளிப்புகள் அளிக்கப் படுகின்றன - கொடுப்பவர் - பெறுபவர் - இருவரின் மனப்பான்மையினைப் பொறுத்து இவ்வன்பளிப்புகள் எடை போடப்பட வேண்டும் - கையூட்டா - அல்லது அன்பின் வெளிபாடா என்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! உண்மைதான். கையூட்டுக்கும், அன்பளிப்புக்கும் இடையே நூலிழைதான் வித்தியாசம்.

  பதிலளிநீக்கு