திங்கள், 1 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 6



அந்த பண்ணைக்கு சென்று திரும்பிய பின், நான் யாருக்கும்
என்ன பயிர் / இரகம் பயிரிடுவது என்பது பற்றி  ஆலோசனை
சொன்னது இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை.
கட்டிவிட்டேன் என்று வள்ளலார் சொன்னதுபோல் நானும்
எனது ஆலோசனையைக் கேட்க ஆள் இல்லாததால், அதைத்
தொடரவில்லை.

எங்களது வங்கியில் தலைமை அலுவலகத்தில் இருந்த
வேளாண்மை நிதித்துறை ஒவ்வொரு பயிருக்கும் ஒரு ஏக்கரில்
ஒரு பயிரை விளைவிக்க என்ன செலவாகும் என கணக்கிட்டு,
அதில் எவ்வளவு கடனாகத் தரலாம் என நிச்சயித்து கிளைகளுக்கு
அறிவித்து இருந்ததால் என் போன்ற கள அலுவலகர்களின் பணி
சுலபமாக இருந்தது.

வயலுக்கு சென்று கடன் விண்ணப்பிப்போர் கொடுத்த தகவல்
சரியா என சரிபார்த்து விளைவிக்கப்பட்டிருக்கும் பயிருக்குத்
தகுந்தாற்போல் கணக்கிட்டு கடன் தொகையை சிபாரிசு செய்ய வேண்டியதுதான்.

இதன் காரணமாக நான் படித்ததையும்,தேசிய விதைக் கழகத்தில் பணியாற்றியபோது தெரிந்துகொண்டதையும் பகிர்ந்துகொள்ள
வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால்
வங்கியில் பணியாற்றிய 34 ஆண்டுகளில் சுத்தமாக நான் படித்த வேளாண்மை தொழில் நுட்பத்தை மறந்தே போனேன் என்பதுதான்
உண்மை. நான் கூட விளையாட்டாக சொல்வதுண்டு என்னால்
சோளம்(Sorghum) எது, கரும்பு(Sugarcane) எது என்று கண்டுபிடிக்க
முடியாது என்று?(ஏனெனில் இரண்டுமே ஆரம்ப கட்டத்தில் பார்க்க 
ஒன்று போல் இருக்கும்,)

எனக்கு ஏற்பட்ட இன்னொரு அனுபவம் வேறொரு பாடத்தைக்
கற்றுத்தந்தது.

எங்கள் வங்கியில் பம்ப் செட் கடன் பெற்றவர்களின்
பண்ணைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்று
பம்ப் செட் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு அந்த விவசாயியின்
வருமானம் அதை நிறுவியபின் எவ்வளவு உயர்ந்துள்ளது
என்பதை கள அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை
தரவேண்டும். .

அதன்படி ஒரு கிராமத்தில் இருந்த ஒரு விவசாயிக்கு
கொடுத்திருந்த பம்ப் செட்டை பார்க்க சென்றிருந்தேன். அந்த
விவசாயியின் தோட்டம் இருந்த இடம் தெரியாததால், அந்த
கிராமத்தில் இருந்த ஒருவரிடம் விசாரித்தேன்.

உடனே அவர் நான் கேட்டதற்கு  பதில் சொல்லாமல்
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். நான்
அவரிடம் சிண்டிகேட் வங்கியிலிருந்து வருகிறேன்
என்று சொல்லிவிட்டேன்.

உடனே அவர் உங்கள் பாங்கில் அவர் கடன் வாங்கி தவணை
கட்டலைங்களா?’ என்று கேட்டார். நான் அப்போது நினைத்தேன்
நான் வங்கியிலிருந்து வருகிறேன் அவரிடம் என
சொல்லியிருக்கக்கூடாது என்று.

பொதுவாகவே நம் எல்லோருக்கும் மற்றவர்களைப்பற்றி
அறிந்துகொள்ளும் ஆர்வம் (Inquisitiveness) இருக்கும். அதுவும்
கிராமத்தில் கேட்கவே வேண்டாம்.      

அதெல்லாம் இல்லைங்க. அவரது தோட்டத்தைப் பார்க்க
வந்தேன். அவரது தோட்டம் எது என்று சொல்லுங்கள். என்றேன்.  
நான் சொன்ன பதிலில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும்
வேறு வழியின்றிஅந்த தோட்டம் இருக்கும் இடத்தை சொன்னார்.

அவர் சொன்னபடியே அந்த தோட்டத்தை அடைந்தபோது அந்த
விவசாயி அங்கு இருந்தார். அவரிடம் என்னை
அறிமுகப்படுத்திக்கொண்டு நான் அங்கு வந்த விஷயத்தை
சொன்னேன். அவர் கேட்ட முதல் கேள்வி எப்படி நீங்கள் என்
தோட்டத்தை கண்டுபிடித்தீர்கள்?’ என்பதுதான்.

நான் வழி விசாரித்து வந்தேன். என்றதும், அவர் கேட்ட
அடுத்த கேள்வி வங்கியிலிருந்து வருகிறேன் என்று
சொன்னீர்களா?’ என்பதுதான்.

ஆமாம். என்று சொன்னதும் அதுவரை சிரித்த முகத்தோடு  
இருந்த அவர். சிறிது கோபத்தோடு, ஏன்.சார். நான்தான் கடன்
வாங்கும்போதே சொன்னேனே. தவணையை ஒழுங்காக கட்டிவிடுவேன்.வங்கியிலிருந்து யாரும் எனது வீட்டிற்கோ
அல்லது தோட்டத்திற்கோ வரவேண்டாம்.நோட்டீசும் அனுப்ப
வேண்டாமென்று.

நான் ஒழுங்காய் தவணை செலுத்திக் கொண்டு இருக்கும்போது
ஏன் தேடி வந்தீர்கள். நான் வாங்கிய கடனோ வெறும்
1500 ரூபாய்கள் மட்டும்தான்.ஏதோ இலட்சக்கணக்கில் கடன்
வாங்கி வங்கிக்கு கட்டாததுபோல் வீடு தேடி வந்துவிட்டீர்களே.
என்றார்.

நான் அவரிடம் பொறுமையாக, சார். நீங்கள்  கடன் வாங்கும்போதே சொல்லியிருப்பார்கள். உங்கள் கடன் நிலுவையில் இருக்கும் வரை ஆறுமாதத்திற்கு ஒருமுறை எங்கள் வங்கியின் அலுவலர்கள்
உங்கள் இடத்திற்கு வந்து பம்ப் செட் இருக்கிறதா என பார்ப்பார்கள்
என்று. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு நீங்களும் கையொப்பம் இட்டிருக்கிறீர்கள். அதனால்தான் நான் வந்திருக்கிறேன்.என்றேன்.
(வங்கிப்பணியில் நான் சேருமுன்பே கொடுக்கப்பட்ட கடன் அது)

எனது பதிலில் சமாதானம் அடையாத அவர் சரி நீங்கள் வந்த
வேலையைப் பாருங்கள். நான் நாளை வங்கிக்கு வருகிறேன்.
என்றார்.

நான் எனது  பணியை முடித்துவிட்டு இருப்பிடம் திரும்பினேன்.
பின்பு யோசித்ததில் அவர் கோபம் சரி என்றே தோன்றியது.
காரணம் அப்போது (1969-70) கடன் வாங்குவது ஏதோ கௌரவக்
குறைவு போல் கருதப்பட்டது.(ஆனால் இப்போது வங்கியில் கடன்
வாங்குவது தான் கௌரவமாக/உரிமையாக கருதப்படுகிறது!)

தான் கடன் வாங்கியது ஊரில் ஒருவருக்குத் தெரிந்தால்
அவர் மூலம் எல்லோருக்கும் தெரிந்து தன்னை ஒரு மாதிரியாகப்
பார்ப்பார்களே என அவர் நினைத்திருக்கலாம்.

சொன்னபடியே அவர் மறுநாள் வங்கிக்கு வந்தார். வந்தவுடன்
வட்டியையும் சேர்த்து எவ்வளவு கட்டவேண்டும்?’ எனக் கேட்டார். கணக்கிட்டு சொன்னவுடன் நான் முழுத்தொகையும் கட்டி
என் கணக்கை முடித்துக்கொள்கிறேன். என்று சொன்னதும்
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் உடனே அவரிடம் நீங்கள் இப்போது கணக்கை முடிக்கத் தேவையில்லை. நீங்கள் தவணை முறையில் இன்னும் நான்கு
ஆண்டுகள் கட்டலாம். என்றேன். நான் எவ்வளவோ எடுத்து
சொல்லியும் அவர் விடாப்பிடியாக முழுத் தொகையையும்
கட்டிவிட்டு திரும்பிவிட்டார்.

நாம் அவரைப்பற்றி விசாரித்ததால்தானே அவர் கணக்கை முடித்துக்கொண்டார் என எண்ணியபோது, எனக்கு என்னவோ
போல் ஆகிவிட்டது.

வாடிக்கையாளர்களில் சிலர் தொட்டால் சிணுங்கி
போன்றவர்கள் என்பதை உணர்ந்து கொண்டதால், அந்த
நிகழ்வுக்குப் பிறகு கடன் பெற வருபவர்களிடம் வங்கியின்
விதிகளை எடுத்து சொல்லி வங்கி அலுவலர்கள் அவர்கள்
இடத்திற்கு வருவது அவர்களுக்கு எந்த விதத்திலும் கௌரவக்
குறைச்சல் இல்லை என்பதை புரிய வைத்தேன்.   

தொடரும்

22 கருத்துகள்:

  1. அன்று கடன் வாங்குவது கௌரவக் குறைவு போல் கருதப்பட்டது.

    இன்று வாங்கி விட்டு (சில பேர்) சந்தோசப்படுகிறார்கள்... ஒழுங்காக கட்ட வேண்டுமே என்கிற நினைப்பு இருந்தால் தானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  3. தொட்டால்சிணுங்கி நல்ல உவமை இந்த முறையும் நல்ல அனுபவம் எங்களுக்கு பாடமாக பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு ஆலோசனைகளை சொல்ல வழியில்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக உள்ளது. இந்த ப்ளாக்கிங் வசதி அன்று இருந்திருந்தால் நீங்கள் உங்கள் வேளாண்மை அறிவை பகிர்ந்து கொண்டிருந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு bandhu அவர்களே! உண்மைதான் நான் கற்றுக்கொண்ட வீரிய விதைப் பெருக்க தொழில் நுட்பத்தை இப்போதுபோல் இணையம் இருந்திருந்தால் நிச்சயம் எல்லோரோடும் பகிர்ந்து கொண்டிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. அந்த விவசாயி கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரா? அவர்களுக்குத்தான் இப்படி முணுக்கென்றால் கோபம் வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் கந்தசாமி அவர்களே! நீங்கள் யூகித்தது சரியே. அந்த விவசாயி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்தான்.

      நீக்கு
  8. கிராமத்துப் பக்கம் நம்மைப் போல் நறுக்குத் தெரித்தாற்போல் கேள்வி கேட்கமாட்டார்கள். எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துதான் பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு


  9. இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது கடன் கொடுத்தவர்தான் கவலைப் படவேண்டும் வாங்கியவர் பெரும்பாலும் கவலைப் படுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  10. கடன் பட்டார் நெஞ்சம்போல் வாழும் மானுடர்க்கு உங்கள் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  11. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ‘மாற்றுப்பார்வை’ நண்பர் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. கடன் கொடுத்தார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்ததையை கடன் கொடுத்தார் நெஞ்சம் போல என்று மாற்ற வேண்டிய காலம் இது. அந்த் தொட்டாற்சிணுங்கியைப் பற்றிப் படிக்கையில் மனதில் எழுந்தது வியப்பு. உங்களின் அனுபவம் எங்களுக்கும் பாடமாகவே எப்போதும் அமைகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  13. சார் இந்த வரிசையில் உள்ள கட்டுரைகள் இன்று தான் படித்தேன் சுவாரஸ்யமான அனுபவங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மோகன்குமார் அவர்களே!

      நீக்கு
  14. அன்பின் நடன சபாபதி - வங்கிப்பணியில் நாம் பெறும் அனுபவங்கள் பல்வேறு வாடிக்கையாளர்களீன் பல்வேறு குணங்களால் வருவது - மறகக் இயலாதது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு