வெள்ளி, 5 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 7

பம்ப் செட்கடன் பெற்றிருந்த இன்னொரு வாடிக்கையாளரின்   தோட்டத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது எனக்கு ஏற்பட்ட 
அனுபவம் வேறு வகையானது.

நான் சென்றபோது அந்த வாடிக்கையாளர் தோட்டத்தில் 
இல்லை.அவரது வயதான தாயார் மட்டும்தான் இருந்தார். 
அந்த வாடிக்கையாளர் அவ்வளவு வசதியானவர் இல்லை 
என்பது அவரது வீட்டைப் பார்த்ததும் தெரிந்துகொண்டேன்.

நான் எங்கிருந்து வருகிறேன் என சொல்லிவிட்டு பம்ப் செட் வைக்கப்பட்டிருந்தகிணற்றை காட்டுமாறு அவரது தாயாரிடம் 
சொன்னேன். அவரும் கூட வந்து அது பொருத்தப்பட்டு இருந்த 
கிணற்றை காட்டினார்.அந்த இறைப்பானில் (Pump) 
பொறிக்கப்பட்டு இருந்த வரிசை எண்ணும் (Serial Number), 
நாங்கள் கடன்கொடுத்தபோது கடையில் தரப்பட்ட 
விலைப்பட்டியலில் (Invoice) கொடுக்கப்பட்டு இருந்த வரிசை 
எண்ணும் ஒன்றா என்பதை சரி பார்த்துவிட்டு, அவரிடம் 
அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பற்றி விசாரித்து 
பேசிக்கொண்டு இருந்தேன்.

எனக்குத்தேவையான விவரங்கள் கிடைத்ததும் அவரிடம்,
சரிங்கம்மா. நான்வருகிறேன். உங்கள் மகன் வந்தால் 
வங்கியிலிருந்து கள அலுவலர் (Field Officer)வந்தார்.என்று 
சொல்லுங்கள். என்றேன். 

உடனே,’சார்.கொஞ்சம் இருங்கள்.எனக்கூறி அவர் வீட்டின் 
உள்ளே சென்றார். திரும்ப வெளியே வந்து சார். உங்களுக்கு 
காப்பி தரலாமென பார்த்தால் பால் இல்லை. வரக்காப்பி
சாப்பிடுகிறீர்களா?’ என்றார் அன்புடன்.

வரக்காப்பி என்பது பால் சேர்க்காத வெறும் சர்க்கரை போட்ட
காப்பி வடிசாறு (Decoction). (இதை கட்டங்காப்பி என்றும் 
கேரளாவில் சொல்வதுண்டு.)

எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லையாதலால், அன்போடு 
அதைமறுத்துவிட்டு கிளம்ப யத்தனித்தேன். உடனே அவர் 
கொஞ்சம் இருங்கள்சார். எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார். 

எதற்காக இருக்க சொல்கிறார் என நினைத்துக்கொண்டு 
இருந்தபோது, உள்ளிருந்து வந்த அவர் கையில் 5 ரூபாய் 
நோட்டு இருந்தது. அதை என்னிடம் நீட்டி, சார். 
இந்தாருங்கள்.என்றார்.

அவர் அவ்வாறு திடீரென ஐந்து ரூபாய் நோட்டை நீட்டியதும் 
எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. 
கிராமப்புறங்களில்ஆய்வுக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பு 
என்ற பெயரில் சிலர் பணத்தைதருவதுண்டு. ஆய்வுக்கு 
செல்லும் சிலர் அதை எதிர்பார்ப்பதும் உண்டு.

ஒருவேளை எனக்கும் அவ்வாறு தருகிறாரோ என்று 
நினைத்து இது எதற்குஅம்மா? எனக்கு வங்கியில் நல்ல
சம்பளம் தருகிறார்கள். நான்என் பணியைத்தான் செய்தேன். 
எதையும் எதிர்பார்த்து அல்ல. என்றுசொன்னேன்.

அய்யய்யோ. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சார். 
உங்களுக்கு பால்போட்டு காப்பி தரமுடியல்ல.அதான் நீங்க 
கடையிலே காப்பி குடிப்பதற்கு இதைத் தருகிறேன்.என்றார்.

நான் அவரிடம்.அதெல்லாம் வேண்டாம் அம்மா. உங்கள் 
உபசரிப்புக்குநன்றி. நீங்கள் காப்பி கொடுக்க நினைத்ததே 
எனக்கு காப்பி குடித்ததுபோல் ஆகிவிட்டது. இந்த பணத்தை 
நீங்கள் வங்கியில் வட்டிக்கு பணம் கட்ட உபயோகித்து 
கொள்ளுங்கள். எனக் கூறிவிட்டு விடை பெற்றேன்.

(அப்போது அந்த கடனுக்கு அவர்கள் கட்டவேண்டிய 
வட்டித்தொகை ஆண்டொன்றுக்கு ரூபாய் 135. அதாவது 
ஒரு மாதத்திற்கு ரூபாய் 11.25 அதாவது நான் காஃபி 
குடிப்பதற்காக அவர் கொடுத்த பணம் கிட்டத்தட்ட
கட்டவேண்டிய மாத வட்டியில் பாதித்தொகை.)   

அது கையூட்டு அல்ல என்பது தெரிந்ததால் அவ்வாறு 
அவர் பணம் கொடுத்ததை நான் தவறாக நினைத்து 
கோபப்படவில்லை. ஏனெனில்வீட்டுக்கு வந்தவர்களை 
காப்பி கொடுத்து உபசரிக்க முடியவில்லையே என்பதால்தான் 
அவ்வாறு செய்து இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.   

அப்போதிருந்த விலைவாசியில் ஐந்து ரூபாய் என்பது 
அவருக்கு பெரிய தொகைதான்.ஏனெனில் அப்போது நகர்ப்புற 
உணவு விடுதிகளில் காஃபியின் விலை வெறும்  
20 காசுகள்தான். அவர் கொடுத்த பணத்திற்கு 25 காஃபிகள்
சாப்பிடலாம். ஆனாலும் விருந்தோம்பலுக்கு விலை 
உண்டா என்ன?

கிராமப்புறங்களில் சிலர் வெகுளிகளாகவும்,வந்திருப்பவர்களை 
அவர்கள் அலுவலக ரீதியாக வந்திருந்தாலும், விருந்தினர்கள் போல்நினைத்து உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் 
இருக்கிறார்கள் என்பதை அப்போது கண்டேன்.

எனக்கு கிடைத்த அடுத்த அனுபவம் இதைவிட சுவாரஸ்யமானது.
அது அடுத்த பதிவில்!


தொடரும்

25 கருத்துகள்:

 1. என்னது... ஒரு காபி 20 பைசாவா...? எந்த வருஷம் சார் அது? நினைக்கவே மலைப்பா இருக்குது. விருந்தோம்பலுக்கு விலை இல்லைன்னு நீங்க சொல்லியிருக்கறது லட்சத்துல ஒரு வார்த்தை. அந்தத் தாயின் பரந்த மனம் வியக்க வைக்கிறது. அடுத்த அனுபவத்தைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! 1970 களில் காஃபியின் விலை 20 காசுகள் தான். அப்போது பெட்ரோல் விலையே ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் 10 காசுகள்தான். அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. காத்திருப்பதற்கு நன்றி!

   நீக்கு
 2. நகரத்து நாகரிகத்தால் பாழ்படாத எளிய கிராம மக்களின் பண்பு!
  அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 3. //கிராமப்புறங்களில் சிலர் வெகுளிகளாகவும்,வந்திருப்பவர்களை
  அவர்கள் அலுவலக ரீதியாக வந்திருந்தாலும், விருந்தினர்கள் போல்நினைத்து உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும்
  இருக்கிறார்கள் என்பதை அப்போது கண்டேன்.//

  உண்மையை நன்கு உணர்ந்ததோடு, அதைத் தெளிவாக உரைத்தும் விட்டீர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

   நீக்கு
 4. விலைவாசியும் அரசாங்க ஊழியர்கள் சம்பளமும் போட்டி போட்டுக் கொண்டு ஏறுகின்றன. 10 பைசாவுக்கு டீ குடித்த நாட்கள் ஞாபகம் வந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. நான் தார்வாரில் இருந்தபோது (1967) தேநீர் வெறும் 7 காசுகளுக்கு கிடைத்தது.

   நீக்கு
 5. அந்த உபசரிப்பு நினைத்து மனது ஏங்குகிறது சார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!. இன்னும் சில இடங்களில் அந்த உபசரிப்பு இருக்கிறது என்பது உண்மை.

   நீக்கு
 6. கிராமப்புறங்களில் சிலர் வெகுளிகளாகவும்,வந்திருப்பவர்களை
  அவர்கள் அலுவலக ரீதியாக வந்திருந்தாலும், விருந்தினர்கள் போல்நினைத்து உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும்
  இருக்கிறார்கள் என்பதை அப்போது கண்டேன்.
  மிகச்சரியான உண்மையே அதுவும் அந்த அன்பின் உணர்வு அவர்கள் முகத்தில் அப்படியே தெரியும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 8. //எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லையாதலால், அன்போடு
  அதைமறுத்துவிட்டு கிளம்ப யத்தனித்தேன்//

  But, it is not a good gesture. At least you should have accepted some water instead.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.அன்போடு தருதல் விஷமாயினும் அதை அமிர்தம் என எண்ணி குடிக்கவேண்டும் என்பார்கள். அதை மறுப்பது தவறு என அப்போது எனக்கு தெரியவில்லை

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 10. அனுபவம் புதுமை,,, அதைவிட இனிமை,, தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!

   நீக்கு
 11. விருந்தோம்பலுக்கு விலை
  உண்டா என்ன?

  அனுபவம் புதுமை !

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. அன்பின் நடன சபாபதி - வாடிகையாளரகள் பலவிதம் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் - பல ஊர்களில் பல கிளைகளில் பணியாற்றிய பல அனுபவங்கள் - ம்ற்றவற்றையும் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. அன்பின் நடன சபாபதி - பக்கிரிசாமியின் அறிவுரையும் அதனை தாங்கள் ஏற்றுக் கொண்ட விதமும் நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நாம் செய்த தவறை சுட்டிக் காட்டும்போது ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும். அதைத்தான் செய்தேன் திரு பக்கிரிசாமி அவர்கள் சுட்டிக் காட்டியபோது.

  பதிலளிநீக்கு