வெள்ளி, 9 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 14


பொருளாதார வசதியின்மையால், தகுதி உள்ள மாணவர்கள்
தொழிற்கல்வி உட்பட உயர் கல்வியை பெறமுடியாமல்
படிப்பை நிறுத்தக்கூடாது என்பதற்காக, மைய அரசு
மேலே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடனை
தரவேண்டும் என்று வங்கிகளுக்கு ஆணை இடுவதும்,
அப்படியும் கடன் தர மறுக்கின்ற அல்லது தயங்குகின்ற
வங்கிகளின் கிளைகளுக்கு நீதிமன்றமே தலையிட்டு
கல்விக் கடன் கொடுக்கும்படி ஆணையிடுவதும் இப்போது
நடக்கின்ற மற்றும் நாம் பார்க்கின்ற ஒன்று.

ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப் படுவதற்கு முன்பே,
அதாவது 19 ஜூலை 1969 க்கு முன்பே, மாணவர்களும்
பெற்றோர்களும் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள்
கல்லூரியில் படிப்பைத் தொடர கல்விக் கடன் திட்டத்தை
கொண்டு வந்தது எங்கள் வங்கிதான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
 
மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படித்தவுடன்
பணி கிடைக்கக்கூடிய படிப்புக்குத்தான் முதலில் கடன் தர
எங்கள் வங்கி ஆரம்பித்தது. பின்னால் மற்ற படிப்புகளுக்கும்
அதை விரிவுபடுத்தியபோது அதனால் பயன் பெற்றோர் பலர்
என்பது பதிவு செய்யவேண்டிய செய்தி. 

ஆனால் எங்கள் வங்கியில் அந்த சிறப்புத்திட்டம் இருந்தும்  
ஒரு சில கிளை மேலாளர்கள், கல்விக்கடன் கொடுக்க 
தயங்கினர் என்பது உண்மை.  

கல்விக் கடனைப் பெற்றவர்கள் படித்து முடித்தபின் ஏழு   
ஆண்டுகளில் தவணைத்தொகையாக  திருப்பி செலுத்தலாம்  
என்பது வங்கியின் விதி. 

கல்விக்கடன் தரும் மேலாளர்கள், மூன்றிலிருந்து ஐந்து 
வருடங்கள் தான் ஒரு கிளையில் இருப்பார்கள்.அவர்கள்  
இருக்கும் வரை அவர்கள் தந்த அந்த கடன்களை திருப்பி  
செலுத்தும் காலம் வராது என்பதால் அவர்களால் அந்த  
கடன் பெற்றவர்கள் தவணை கட்டும் காலத்தில் ஒழுங்காக  
தவணைத் தொகையை திருப்பிக் கட்டினார்களா  
என்பதை  Follow up செய்யமுடியாது.


அடுத்து வரும் மேலாளர் அதை வசூலிப்பதில் சுணக்கம்
காட்டினால்,கடன் கொடுத்த மேலாளர் ஓய்வு பெறும்போது
அந்த வாராக் கடன்களால் அவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு
உண்டு என்பது தான் சிலர் கல்விக்கடன் தர தயங்கிய
காரணம்.

நான் சக ஊழியர்களிடம் சொல்வதுண்டு. கடன்
தேவைப்படுவோருக்கு உதவவே, இந்த பொறுப்பை வங்கி
நமக்கு தந்திருக்கிறது. எனவே பதவியில் இருக்கும்போது
அதை நல்லபடியாக செய்வோம் என்று.

கல்விக் கடன் பெற்றவர்கள் தாங்கள் உயர் கல்வி பெற
உதவிய வங்கியை ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு இருந்ததால், வங்கிக் கிளையின் மேலாளராக இருந்த
15 ஆண்டுகளில், நான் அநேகம் பேருக்கு கல்விக்கடன்
கொடுத்து அவர்கள் படிப்பைத் தொடர உதவியிருக்கிறேன்.  

அப்படி எனது கிளையில் கல்விக் கடன் பெற்ற இரு இளம் வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் நான் சந்தித்த
மற்ற வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து
மாறுபட்டது. 


தொடரும்

24 கருத்துகள்:

  1. பதினைந்து ஆண்டு கால சிறந்த சேவைக்கு வாழ்த்துக்கள் சார்...

    நன்றி... தொடர்கிறேன்...
    tm1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வங்கிப் பணியில் இருந்த 34 ஆண்டுகளில்,15 ஆண்டுகள் மேலாளராக இருந்திருக்கிறேன் நண்பரே!

      நீக்கு
  2. ஆ... நானும் பல சமயங்களில் யோசித்ததுண்டு - வங்கியில் கார்க் கடன் பெறுவது கூட எளிதாக இருக்கிறது. கல்விக் கடன் பெற ஏன் இத்தனை கஷ்டம் என்று. இப்போது புரிந்தது காரணம். விதிவிலக்காக அமைந்த உங்களைப் போன்ற அதிகாரிகள் நாட்டுக்கு இன்னும் நிறையத் தேவை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  3. இது போன்ற ஒரு நல்ல அனுபவம் எனக்கும் உண்டு.காத்திருக்கிறேன்,தொடர.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உங்கள் அனுபவத்தையும் அறிந்து கொள்ள விருப்பம்.

      நீக்கு
  4. சுவையான அனுபவப் பகிர்வு.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  5. நல்ல அனுபவம் .பல மேலாளர்கள் கடன் என்றாலே இழுத்தடிப்பார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சீனிவாசன் அவர்களே!

      நீக்கு
  6. //மாணவர்களும்
    பெற்றோர்களும் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள்
    கல்லூரியில் படிப்பைத் தொடர கல்விக் கடன் திட்டத்தை
    கொண்டு வந்தது எங்கள் வங்கிதான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்//

    I don't know which bank you were working. I tried very hard to get a bank loan for my education, in vain. I wasted at least 20 rupees in transport (may be small today, but it was my week's food self cooking - in 1981).Every paise I had to calculate. I approched PNB, Statebank, Canera Bank. No one wanted to talk to me. I don't even want to remember those days. My worst period in my life is those 4 years.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் பணிபுரிந்தது சிண்டிகேட் வங்கி என்று வாடிக்கையாளர்களும் நானும் 2, என்ற இந்த தொடரின் இரண்டாம் பதிவில் செப்டம்பர் 15 ல் குறிப்பிட்டு இருக்கிறேன். ஒருவேளை நீங்கள் எங்கள் வங்கியை அணுகியிருந்தால் கடன் கிடைத்திருக்கலாம். இருப்பினும் நான் எழுதியிருந்தபடி வங்கிகள் திட்டங்களை அறிவிக்கத்தான் முடியும். அதை நிறைவேற்றவேண்டியது வங்கியின் அலுவலர்களும் ஊழியர்களும் தான். எனக்குத்தெரியும் கல்விக்கடன் பெற நிறைய மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று. பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றபின் கூட கல்விக்கடன் கிடைக்காத மாணவர் ஒருவருக்கு கடன் கிடைக்க உதவி இருக்கிறேன்.

      நீக்கு
  7. உங்கள் அனுபவங்கள்
    எங்களுக்கு பயனுறு தகவல்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி மருத்துவர் M.K.முருகானந்தன் அவர்களே!

      நீக்கு
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

      நீக்கு
  10. // மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படித்தவுடன்
    பணி கிடைக்கக்கூடிய படிப்புக்குத்தான் முதலில் கடன் தர
    எங்கள் வங்கி ஆரம்பித்தது. பின்னால் மற்ற படிப்புகளுக்கும்
    அதை விரிவுபடுத்தியபோது அதனால் பயன் பெற்றோர் பலர்
    என்பது பதிவு செய்யவேண்டிய செய்தி. //

    நானும் உங்கள் சிண்டிகேட் வங்கியின் ( குறிப்பாக கிராமப் புறத்தில்) இந்த சேவையைப் பற்றி அப்போதே கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த நாட்களில் இது ஒரு பெரிய சேவைதான்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

























    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

      நீக்கு
  11. கல்விக் கடன் கொடுக்க ஏன் தயங்குகிறார்கள்.ஏற்கனவே வங்கிக் கடன் பெற்றவர்கள் திரும்ப செலுத்திய புள்ளி விவரம் ஏதேனும் உள்ளதா?நிறையப் பேர் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் இருப்பார்களேயானால் மறுப்பதில் நியாயம் இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களது கேள்விக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
      கிடைத்த புள்ளி விவரத்தின் படி சுமார் 2.2 இலட்சம் பயனாளிகளுக்கு ரூபாய்கள் 50,000 கோடிகள் வரை வங்கிகள் கல்விக்கடனை வழங்கியிருக்கின்றன.

      இந்த தொகையில் பெரும்பகுதியை நான்கு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். நிலுவையில் உள்ள இந்த கடன் தொகையில் சுமார் 1 இலட்சம் பயனாளிகள் கடனை ஒழுங்காக செலுத்தாதலால் ரூபாய்கள் 1600 கோடிகள் வரை வாராக் கடன்களாக உள்ளன என்பது அதிர்ச்சி தரக்கொடிய செய்தி.

      இவை மொத்தக்கடனில் 5.5 விழுக்காடுத்தான் என்றாலும் இந்த விழுக்காடு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலை அளிக்கக்கூடியதே.

      வங்கிகள் ஆரம்பத்தில் (அதுவும் நான் பணிபுரிந்தபோது)கல்விக் கடன் கொடுக்கத் தயங்கியதே இல்லை. ஆனால் கல்விக்கடனின் திருப்பி செலுத்தும் காலம், மாணவர்கள் படித்து முடித்து ஓராண்டுக்குப் பிறகோ அல்லது வேலை கிடைத்த ஒரு மாதத்திற்குப் ஒரு பிறகோ தொடங்கி 7 ஆண்டுகள் வரை நீடிப்பதால், அநேகம் பேர் வேலை கிடத்து உள் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியில் அமர்ந்ததும் கடன் வாங்கியதை ‘மறந்துவிடுகிறார்கள்’.(இது பற்றி என் பதிவில் எழுத இருக்கிறேன்.)

      உதாரணமாக ஒரு பொறியியல் படிப்பிற்கு கடன் வாங்கிய மாணவன் படிக்கும் காலம் 4 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு Repayment Holiday போக கடன் செலுத்தும் ஆண்டுகள் 7 ஐயும் கூட்டினால் கடன் வாங்கியதிலிருந்து ஒழுங்காக கட்டி கடன் முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். அதற்குள் கடன் கொடுத்த வங்கி மேலாளர்கள் வேறிடம் மாறி சென்று விடுவதால் அந்த கடன் ஒழுங்காக இருக்கிறதா என follow up செய்யாவிட்டால் அது வாராக் கடனாக மாற வாய்ப்புண்டு. அதனால் சில வங்கி மேலாளர்கள் கடன் தர தயங்கலாம்.

      வங்கிகளும் கடன் தரவேண்டும் பயன் பெற்றவர்களும் மறக்காமல் வாங்கிய தொகையை திரும்பக் கட்டவேண்டும். இது நடக்கும் என நம்புவோம்.

      நீக்கு
  12. அன்பின் நடன சபாபதி - கல்விக் கடன்கள் தற்போது மத்திய அரசின் கொள்கைகளாலும் - நீதி மன்றத் தீர்ப்புகளினாலும் வாரி வழங்கப் படுகின்றன - வாராக்கடன்களில் கல்விக் கடங்களின் விகிதம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது - கடன் பெற்றவர்களுக்கோ திரும்பச் செலுத்த வேண்டெமென்ற எண்ணம் அரசியல் வாதிக்லஈன் பேச்சினால் குறைந்து கொண்டே போகிறது - வங்கிகளால் ஒன்றும் செய்ய இயல வில்லை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. இப்போது இருக்கும் வங்கி மேலாளர்களை நினைத்து அனுதாபப்படத்தான் முடியும் நம்மால்!

    பதிலளிநீக்கு