ஞாயிறு, 9 ஜூன், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 51கையூட்டு தந்தோ அல்லது வேறு வழியை உபயோகித்தோ தங்கள் காரியத்தை முடித்துக்கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் எல்லா வாடிக்கையாளர்களும் இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள் என நான் சொல்ல வரவில்லை. அதுபோல் எல்லா வங்கி மேலாளர்களும் கையூட்டு பெற்றுக்கொண்டுதான் காரியத்தை முடித்துத் தருகிறார்கள் என்பதும் உண்மை அல்ல.நான் முன்பே சொன்னது போல கருப்பு ஆடுகள்  இரண்டு பக்கத்திலும் உண்டு என்பது தான் உண்மை.

கையூட்டு தந்து காரியத்தை முடிக்கும் குறுக்கு வழியை, எல்லோராலும் செய்ய முடியாது என்பது என் கருத்து. யார் கொடுத்தால் வாங்குவார்கள் அல்லது யார் தாங்கள் வைக்கும் பொறியில் சிக்குவார்கள் எனத் தெரியாதாகையால் இந்த வழியை  பின்பற்ற தயங்குபவர்கள் பலர். சில சமயம் தவறான ஆட்களிடம் கையூட்டு தர முயற்சித்து திண்டாடுவோரும் உண்டு.(சென்ற பதிவில் நான் சொன்னதுபோல்) ஆனால் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள் சிலர் உண்டு.

இவர்கள் தங்கள் காரியம் நடக்க நேரடியாக கையூட்டு தராமல் வேறு வழிமுறைகளை பயன் படுத்தி காரியத்தை சாதிக்க முயல்வதும் உண்டு.

தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்ட தலை நகரில் இருந்த, எங்களது  வங்கியின் கிளையில் நான் முது நிலை மேலாளராக  பணியாற்றியபோது அப்படிப்பட்ட ஒருவரை சந்திக்க(!) நேர்ந்தது.

அந்த ஊரில் பணியாற்றியபோது சனிக்கிழமை அல்லது ஞாயிறன்று பழைய திரைப்படங்களைப்  பார்க்க வேண்டி, எனது வீட்டிற்கு அருகே இருந்த ஒரு ஒலி நாடா (Cassette) வாடகைக்கு தரும் கடையில் நானே நேரில் சென்று வாங்கி வருவது வழக்கம்.

அதை வாங்க செல்லும்போது பல முறை அந்த கதையின் உரிமையாளரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரிடம் பேசியதில்லை. பேசவேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. அங்கிருந்த ஊழியரிடம் எனக்குத் தேவையான ஒலி நாடாவைக் கேட்டு வாங்கி வருவது வழக்கம்.

ஒரு தடவை ஒரு சனிக்கிழமை மாலை அந்த கடைக்கு சென்றபோது அந்த ஊழியர் இல்லை. கதையின் உரிமையாளர் மட்டும் தான் இருந்தார். அவரிடம் நான் வழக்கமாக வரும் வாடிக்கையாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட ஒலி நாடா தருமாறும் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் யார்? எங்கு வேலை செய்கிறீர்கள்?’என்று விசாரித்தார்.

நான் வங்கியில் பணிபுரிவதாக கூறியதும், அடடே. உங்கள் வங்கியில் தான் நான் தின சேமிப்பு திட்டத்தில் தினம் பணம் கட்டி வருகிறேன் சார். இந்த கடை நடத்துவது மட்டுமல்லாமல் வேறு தொழிலும் செய்து வருகிறேன். அதை விரிவாக்கம் செய்ய உங்கள் வங்கியில்தான் கடன் பெற எண்ணியிருந்தேன். நல்ல வேளை. உங்களை இங்கே பார்த்துவிட்டேன்.அது பற்றி இப்போது பேசலாமா?’ என்றார்.

அதற்கு நான், வெளியிடங்களில் இது பற்றி பேச விரும்பவில்லை. திங்களன்று வங்கிக்கு வாருங்களேன். விரிவாகப் பேசலாம். எனக் கூறிவிட்டு நான் கேட்ட ஒலி நாடாவைப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சுவாரஸ்யமாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, யாரோ வெளியே வாயில் கதவை (Gate) திறக்கும் ஓசை கேட்டு எழுந்து சென்று பார்த்தேன்.
அங்கே முதல் நாள் நான் சந்தித்த, அந்த ஒலிநாடா கடையின் உரிமையாளர் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சரியம். இவரை நாளை அல்லவா வங்கிக்கு வர சொன்னேன். இப்போது ஏன் இங்கே வருகிறார் மேலும் இவருக்கு நான் குடியிருக்கும் வீடு எப்படி தெரிந்தது என்று என்னுள் பல கேள்விகள்.

எனது ஆச்சரியத்தை வெளியே  காட்டிக்கொள்ளாமல் அவரை உள்ளே வர அழைத்தேன். உள்ளே வந்து அமர்ந்ததும் எப்படி நான் இருக்கும் இடம் உங்களுக்குத்தெரியும்?’ என்றேன். அதற்கு அவர் பக்கத்தில் விசாரித்து வந்தேன். என்றார்.

அவரிடம் நான் எந்த பகுதியில் வசிக்கிறேன் என்று சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது பக்கத்தில் விசாரித்தேன் என்று அவர் சொல்வது அப்பட்டமான பொய் எனத் தெரிந்ததால் அவர் சொன்ன பதில் எனக்கு திருப்தி தரவில்லை.

அவர் எப்படி எனது இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்றால் அவரிடம் தின சேமிப்பு திட்டத்தில் பணம் வசூல் செய்யும் எங்கள் வங்கியின் முகவரிடம் (Agent), நான் திரும்பிய பின், தொலை பேசிமூலம் தொடர்புகொண்டு முகவரியைத் தெரிந்துகொண்டிருக்கிறார். 

நான் பணியில் இருந்தபோது வாடிக்கையாளர்கள் வீட்டில் வந்து பார்ப்பதை எப்போதும் விரும்பியது கிடையாது. எதுவானாலும் வங்கியில்தான்  பேசவேண்டும் என்பதை கறாராக கடைபிடித்தவன் நான்.

கிளையில் மேலாளராக சேர்ந்த அன்றே வங்கி நண்பர்களிடம்  சொல்வதுண்டு. நீங்கள் உங்களுக்கு ஏதேனும் கூறிய இருக்குமானால் இங்கும் சொல்லலாம். எனது வீட்டிற்கும் வந்தும் சொல்லலாம். ஆனால் யாருக்கும் எனது முகவரியைத் தராதீர்கள். அதுவும் குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு எனது முகவரி தெரியவேண்டாம் என சொல்லியிருக்கிறேன். வாடிக்கையாளர்கள் எனது வீட்டிற்கு வருவதை நான் விரும்புவதில்லை.

அப்படி இருந்தும் எப்படியோ சில வாடிக்கையாளர்கள் இவர் போல வந்ததுண்டு. அவர்கள் மனம் புண்படாமல் பேசி அவர்களை கிளைக்கு வரச் சொன்னதுண்டு.

அன்றைக்கு வந்த வந்த வாடிக்கையாளரிடம், என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள். நான் தான் நாளை கிளைக்கு வாருங்கள் என்று சொன்னேனே. நான் வீட்டில் வங்கி கடன்கள் பற்றி பேசுவதில்லை. மன்னிக்கவேண்டும். என்றேன்.  

அதற்கு அவர் சார். அதற்காக நான் வரவில்லை. எனக் கூறிவிட்டு தான் வந்த காரணத்தை சொன்னார்.  தொடரும்

18 கருத்துகள்:

 1. அன்பைத்தெரியாத அன்புகாட்டும் பருவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு பாலசுப்ரமணியன் அவர்களே! மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பதிவை படித்தேன்.இரசித்தேன்!

   நீக்கு
 2. கையூட்டு தந்து காரியத்தை முடிக்கும் குறுக்கு வழியை, எல்லோராலும் செய்ய முடியாது என்பது என் கருத்து

  இதற்கும் அனுபவமும் நுணுக்கமும் தேவை போல..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! நான் கூறியுள்ள கருத்து சரி என்பதால் அநேகம் பேர் ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

   நீக்கு
 3. வேறு எதற்கு வந்தார் என்பதை அறிய காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! ஆக்கப் பொறுத்தீர்கள்.ஆறப் பொறுக்கக்கூடாதோ?

   நீக்கு
 5. // வாடிக்கையாளர்கள் எனது வீட்டிற்கு வருவதை நான் விரும்புவதில்லை.//

  ஒவ்வொரு பதிவிலும் வங்கிப் பணியாளர்கள் மட்டுமன்றி மர்றவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதனைச் சொல்லும் அனுபவ வரிகள். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 6. முகவரி வாங்கும் அளவுக்கு சிந்தித்தவர், அந்த முகவரிடமே, மேனேஜர் வீட்டுக்குச் சென்றால் காரியம் நடக்குமா என்று கேட்டுக்கொள்ள சிந்திக்கவில்லை. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! சில விஷயங்களை இரகசியமாக வைத்திருக்க நினைப்போர், தேவையான தகவல்களுக்கு மேல் விசாரிக்கமாட்டார்கள். இவரும் அப்படி நினைத்திருக்கலாம். காத்திருப்பதற்கு நன்றி!

   நீக்கு
 7. வாடிக்கையாளர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு ரகம்! இவர் எத்தகைய டைப் என்பதை அறிய ஆவல் மேலிடுகிறது. அந்நாளில் VHS டேப் வாங்கிப் படம் பார்த்த நினைவுகளும் மனதில் ஓடுகிறது. நன்றி! அவர் என்ன பேசியிருப்பார்ங்கறதை தெரிஞ்சுக்க கட்டாயம் வர்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நினைவுகள் சுகமானவை என்பதை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்தேன். தொடர்வதற்கு நன்றி!

   நீக்கு
 8. ''..‘கருப்பு ஆடுகள்’ இரண்டு பக்கத்திலும் உண்டு என்பது தான் உண்மை. ..''
  முன்பு சில தடவை வாசித்துக் கருத்திட்டேன் .மறுபடி இன்று.
  சுவையாக உள்ளது.
  வாசித்தேன்.
  நன்று.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரும்பவும் வருகை தந்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு