செவ்வாய், 7 ஜனவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 12


நண்பர் நாச்சியப்பன் நடத்திய புதிர் போட்டி பற்றி எழுதியிருந்தேன். இந்த
போட்டியில் அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். முதலில்
சொல்லவேண்டும் என்ற அவசரத்தில் மூவரைத் தவிர அனேகமாக
எல்லோருமே தவறாக சொன்னார்கள்.

சில கேள்விகளுக்கு சரியான பதிலை முதலில் சொல்லாததால் பரிசை
இழந்தவர்களும் உண்டு. ஆனால் சில கேள்விகளுக்கு யாருமே சரியான
பதிலை சொல்லவில்லை. எடுத்துக்காட்டாக Peacock இன் முட்டையின்
நிறம் என்ன என்ற கேள்விக்கு பச்சை வண்ணம் என்றும் சாம்பல் வண்ணம்
என்றும் வெள்ளை என்றும் அவசரபட்டு யோசிக்காமல் சொன்னவர்கள்,
Peacock என்பது ஆண் மயில் என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள்!

Peacock என்பது ஆண் மயில் என்றும் அது முட்டையிடாது என்ற சரியான
பதிலை நண்பர் நாச்சியப்பன் சொன்னபோது ஒரே சிரிப்பலை தான்.
அதுபோல் கணித மேதை இராமானுஜத்திற்கு ஏன் நோபல் பரிசு
கிடைக்கவில்லை என்றதற்கு யாருமே சரியான பதிலை சொல்லவில்லை.
கணிதத்திற்கு நோபல் பரிசே இல்லை என்று நண்பர் நாச்சியப்பன்
சொன்னபோது எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது உண்மை.

‘காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி’

என்ற பாட்டை நண்பர் நாச்சியப்பன் அருமையாய் பாடி முடித்ததும் அது
‘பாக்யலக்ஷ்மி’ என்ற படத்தில் வந்த பாட்டு என்பதை வகுப்புத்தோழர்
சேதுராமன் சரியாக சொல்லி பரிசைத் தட்டிசென்றுவிட்டார்.


கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்த பாடலுக்கு மெல்லிசை
மன்னர்கள் இசையமைத்த அந்த அருமையான பாடல் உங்களுக்காக கீழே.







இன்னொரு கேள்விக்கு முனைவர் அந்தோணிராஜ் சரியான பதிலை
முதலில் சொல்லி பரிசைப் பெற்றார். மற்றொரு கேள்விக்கு கை தூக்கிய
பலரில் ஒருவர் தவறாகவும் இன்னொருவர் சரியான பதிலை சொன்னார்கள்.

நண்பர் நாச்சியப்பன் தவறான பதிலை சொன்னவர்தான் முதலில்
சொன்னதாக முடிவெடுத்து யாருக்கும் பரிசு இல்லை என தீர்ப்பு
அளித்ததும் சரியான பதிலை சொன்ன திருமதி செல்லையா
அவர்கள் தான் தான் முதலில் கை தூக்கியதாக சொல்லி தனக்கு
பரிசு தரவேண்டும் என்றார்.

நண்பருக்கும் அவருக்கு உதவியாக இருந்த எங்களுக்கும் யார் முதலில்
கை தூக்கியவர் என்ற குழப்பம் வந்தது. கடைசியில் ஐயத்தின் அனுகூலம் (Benefit of the doubt) என்ற அடிப்படையில் திருமதி செல்லையா அவர்களே
முதலில் பதில் சொன்னதாக கருதி அவர் பரிசு பெற்றதாக
அறிவிக்கப்பட்டது.

இப்படி கலகலப்பாக ஆரம்பித்த முதல் போட்டி முடியவே மணி 4.20
ஆகிவிட்டது. மாலை 4.30 மணிக்கு காஃபி போர்டின் அரங்கத்திற்கு
திரும்ப வேண்டும் என்பதால் நண்பர் நாச்சியப்பன் நடத்த எண்ணியிருந்த
மகளிருக்கும், ஜோடிகளுக்குமான இரண்டு போட்டிகளையும்
நடத்த முடியவில்லை.

எனினும் திறமையாக, வேகமாக புதிர் போட்டியை நடத்தி எல்லோரையும்
அவசரமாக, தவறான பதிலை சொல்லவைத்த நண்பர் நாச்சியப்பனை
பாராட்டத்தான் வேண்டும்.

எனவே போட்டியை அத்தோடு முடித்துக்கொண்டு எல்லோரும் அருகில்
உள்ள அந்த அரங்கத்திற்கு திரும்பத் தொடங்கியபோது நான் மட்டும்
அண்ணா பூங்காவிற்கு எதிரே உள்ள ஏற்காட்டிற்கு அழகு சேர்க்கும்
ஏரியை படமெடுத்தேன்.

அந்த படங்கள் கீழே





மாலை நேரம் ஆகிவிட்டபடியால் நான் எடுத்த புகைப்படம் அவ்வளவு
தெளிவாக இல்லை. அதனால் கூகிளார் உதவியுடன் மற்றொரு படத்தைக்
கீழே தருகிறேன்.




இந்த ஏரியைப் படம் எடுத்தபோது எனக்கு முன்பு நடந்த ஒரு
நகைச்சுவையான நிகழ்வு நினைவுக்கு வந்தது.சேலம் சிண்டிகேட் வங்கிக்
கிளையில் முது நிலை மேலாளராக இருந்தபோது எங்கள் மண்டலத்தின்
துணைப் பொது மேலாளரை ஏற்காட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன்
என்று முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா.

அப்போது இந்த ஏரியில் படகில் சவாரி செய்யலாம் என முடிவெடுத்தபோது
துணைப் பொது மேலாளர் அவர்கள் இருவர் மிதித்து செலுத்தும் படகில்
செல்ல ஆசைப்பட்டார். கூட வந்தவர்கள் இயந்திர படகில் செல்ல
விரும்பியபோது துணை மேலாளர் தனியாக செல்லமுடியாதே என்பதால்
நான் அவருடன் அந்த படகில் சென்றேன்.

அவரால் சிறிது தூரம் சென்றதும் மிதிக்க முடியவில்லை. என் ஒருவனால்
தனியாக மிதித்து அந்த படகை மேலே செலுத்த இயலவில்லை. எனவே
திரும்பலாம் என நினத்து திரும்பியபோது அவரால் மிதிக்கவே
முடியவில்லை. நான் மட்டும் மிதித்ததால் படகு அந்த இடத்திலேயே
சிறிது நேரம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நாங்கள் படகோடு அல்லாடுவதை கரையிலிருந்தவர்கள் பார்த்து இரசித்துக்
கொண்டிருந்தார்கள். எனக்கோ என்னவோபோல் ஆகிவிட்டது.அதற்குள்
இயந்திரப் படகில் சென்றவர்கள் ஏரியை சுற்றி வந்துவிட்டார்கள்.எப்படியோ
கஷ்டப்பட்டு கரைக்கு திரும்பினோம்.

அன்று ஏரியில் சுற்றமுடியாததை திரும்ப ஏற்காட்டிற்கு எனது
அண்ணனுடன் வந்தபோது இயந்திரப் படகில் ஏறி சுற்றி ஆசையை
தீர்த்துக்கொண்டேன்.அந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தபோது சிரிப்புத்தான்
வந்தது.

எல்லோரும் அரங்கத்திற்கு வந்ததும் தந்த சுடச்சுட பகோடாவும் தேநீர்
மற்றும் காஃபியும் சுறுசுறுப்பைத் தர அடுத்த நிகழ்ச்சியான
அறிமுகப்படலத்தை காணத் தயாரானோம்.



தொடரும்



16 கருத்துகள்:

  1. உண்மை தான் ஐயா... அவசரம்...

    முதல் மற்றும் கடைசி கேள்வியும் - பதில் சொல்ல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. கேள்விகளில் ஏதாவது cat இருக்கிறதா என்று முதலில் யோசிக்க வேண்டும். சுவையான அனுபவங்கள் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. நான் மட்டும் மிதித்ததால் படகு அந்த இடத்திலேயே
    சிறிது நேரம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. //

    பில்டிங் ஸ்ட்ராங்கு ஃபவுன்டேஷந்தான் வீக்கு என்ற வடிவேலுவின் காமடி நினைவுக்கு வருகிறது. மனசுக்கு இருக்கும் வலிமை சில வேளைகளில் உடலுக்கு இருப்பதில்லை. நாமும் நமக்கு வயசாகிவிட்டதே என்பதையும் பல சமயங்களில் மறந்துபோகிறோம். நன்றாக சுவை குறையாமல் கொண்டு சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  4. Peacock, Peahen என்று இப்பொழுதுதான் கூகிளில் பார்த்தேன். இரண்டு பேர் உள்ள இடத்தில், ஒருவர் மட்டுமே படகை மிதித்தால் படகு இருந்த இடத்திலேயே சுற்றத்தான் முடியும். கரையிலிருந்தவர்களுக்கு, கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். யாராவது, மகிழ்ச்சியடைந்தாலும் நல்லதுதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நம்மால் யாராவது மகிழ்ச்சி அடைந்தால் நல்லதுதான்.

      நீக்கு
  5. ” காதலெனும் வடிவம் கண்டேன்” பாட்டைக் கேட்டுக் கொண்டே பதிவைப் படித்தேன். நீங்கள் எடுத்த ஏரியின் படம், நண்பர்களுக்கு நான் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை நினைவூட்டியது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  6. பக்கோடா-டீ, அருமையான காம்பினேஷன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  7. Normally a pedal boat for the use of two persons will have two sets of pedals. But both pedals will drive only a single propellor and it is not necessory that both should pedal simultaneously. It is only when using paddles, if one paddle is used the boat will remain at the same place, revolving around itself.
    Namakkal Venkatachalam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு நாமக்கல் வெங்கடாசலம் அவர்களே!

      நீக்கு
  8. சிறப்பான படங்கள். உங்கள் கட்டுரை ரசித்தேன்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு