புதன், 1 ஜனவரி, 2014

கனவு மெய்ப்படவேண்டும்





சமீபத்தில் திரு வெ,துரைசாமி அவர்களின் கனவு மெய்ப்படவேண்டும் 
என்ற அரசியலை அடிப்படையாகக் கொண்ட கதை உள்ள ஒரு 
வித்தியாசமான நூலை படிக்க நேர்ந்தது. ஒரு இந்த நூலை படித்து 
முடித்தபோது இது போல் நடக்க வாய்ப்பு உண்டா என்ற ஐயம் 
ஏற்பட்டது உண்மை.


இருப்பினும், தேசியக் கவி பாரதியாரின் பாடலான மனதில் உறுதி 
வேண்டும் என்ற பாடலில் உள்ள கனவு மெய் பட வேண்டும் என்ற  
வரியை தலைப்பாக வைத்திருப்பதிலிருந்தே, நூலாசிரியர்  தான் 
காண்கின்ற கனவு நனவாகி நடக்கும் என்ற நேர்மறை எண்ணத்தோடு 
வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அது நடந்துவிட்டது என்பதை 
இந்த பதிவின் இறுதியில் அறிவீர்கள்.

இந்த நூலைப் படிக்கும்போது இதிலுள்ளதுபோல் நடந்தால் எவ்வளவு 
நன்றாயிருக்கும் என நினைத்தேன். ஆனால் முயற்சித்தால் முடியாது 
ஒன்றுமில்லை என்ற அவரது கருத்தை இந்த நூலை படிப்பவர்களும் 
படித்து முடித்தபின் என்னைப்போலவே அவரோடு ஒத்துப்போவார்கள் 
என்பது நிஜம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் பல நிகழ்வுகளில் அரசியல் வாதிகள் 
மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரின் நெறிகெட்ட செயல்களை 
எதிர்கொள்ளும்போது நமக்கு உட்கோபமும், சமூகத்தின் பேரில் ஊமைக் 
கோபமும் ஏற்படுவது உண்டு. ஆனால் நம்மால் என்ன செய்யமுடியும் 
என எண்ணி அதை சகித்துக்கொண்டு செல்வதைத்தான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியே ஏதேனும் செய்யவேண்டும் நினைத்தாலும்  
பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்து ஒதுங்கிக்கொள்வது 
நடைமுறை.

இந்த நாட்டில் உள்ள புரையோடிப் போன அரசியலை தூய்மையாக்கி, 
தீர்வு காணமுடியாத பிரச்சினைகளை அறிவாளிகள், தீர்க்கதரிசிகள் நாட்டை 
பெரிதென போற்றும் உத்தமர்கள், மாசற்ற அரசியல்வாதிகள் ,வல்லுனர்கள் ஆகியோருடைய துணை கொண்டு நாட்டு பிரச்சினைகளை நம்மால் 
தீர்க்கமுடியும் என்பதை பிஜே என்ற கதாபாத்திரத்தின் மூலம் 
எளிய நடையில் சொல்வதே இந்த நூலின் மய்யக் கரு.

நூலின் முகவுரையில் நூலாசிரியர் சொல்கிறார்.படித்த மற்றும் பாமர 
மனிதர்களுடன் பல காலகட்டங்களில் நடந்த உரையாடல்கள், விவாதங்கள், 
அதனால் உண்டான தாக்கத்தின் விளைவே இந்த நூலை எழுதத் 
தூண்டியது. என்று.

முகவுரையின் இறுதியில் எல்லா மதங்களிலும் கடவுள்கள் மீண்டும் 
மீண்டும் அவதாரம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.நமக்கு 
மீண்டும் ஒரு மகாத்மா பிறந்து வரவேண்டும் அல்லது பிறந்துவிட்டாரா? 
கனவு தொடர்கிறது.... என்று சொல்லி முடிக்கும்போது, அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் இந்த நூலில் என்று படிக்கத் தோன்றுகிறது..

இந்த நூலின் கதாபாத்திரமான பிஜே என்கிற பாப்பநாயக்கன்பாளையம் 
ஜெகந்நாதன் என்ற நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் ஒரு நாள் 
வெளியே செல்கிறார். அப்படி செல்லும்போது, பேருந்தில் ஏறி 
அவமானப்பட்டு இறங்கி நடக்கும்போது சாலையில் சென்ற ஊர்வலத்தால் 
ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் போக முடியாமல் தவிக்கும் ஒரு 
நோயாளர் ஊர்தியை பார்க்கிறார்.  

அந்த ஊர்திக்கு உதவமுடியாமல் நிற்கும் காவலரின் இயலாமை, சுவாமி 
தரிசனம் செய்ய கோவிலுக்குப் போனபோது முக்கிய பிரமுகர் ஒருவருக்காக செய்யப்பட சிறப்பு மரியாதையும் அவரை என்னவோ செய்கிறது.கோபத்தில் இறைவனை நிந்தித்துவிட்டு வீட்டுக்குவந்து கிடைத்த அனுபவத்தை வீட்டில் உள்ளோரிடம் பகிர்ந்துகொண்டு தூங்க செல்கிறார்.

ஆழ்ந்து தூங்கும்போது இறைவன் அவரது கனவில் வந்து அவரை நாட்டின் 
பிரதமராக ஆக்குவதாகவும் அதற்கு தான் பக்க பலமாக இருப்பதாகவும் 
ஆனால் பிஜே தன் மூளை தன் புத்தி தன் யோசனையுடன் தான் செயல்படவேண்டுமென்றும் கூறுகிறார். மனதிற்குள் எந்த மாசும் 
வந்துவிடாமல் பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்.

பின் எப்படி அவர் சுயேச்சையாக நின்று தேர்தலில் வெற்றி பெற்று நாடு 
முழுவதிலும் உள்ள எல்லோருடைய ஆதரவையும் பெற்று அப்பழுக்கற்ற 
ஒத்த கருத்துள்ளோரை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெற 
வைத்து தானும் பிரதமராகி, வல்லுநர்கள், அறிஞர்கள் ஆகியோரின் துணை 
கொண்டு இந்திய-பாகிஸ்தான் பிரச்சினை, காஷ்மீர் சிக்கல், நதி நீர் பங்கீடு, 
இலங்கை தமிழர் விவகாரம் போன்றவைகளை எப்படி சரியாக அணுகி  அனைவருக்கும் மன நிறைவு அளிக்கும் வகையில் தீர்வு காண்கிறார் என சொல்லியிருப்பதை படிக்கும்போது நிச்சயம் நூலாசிரியரின் கனவு மெய்யாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அரசியல்வாதிகள் பதவியில் இருந்தால் அவர்களது வாரிசுகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்த பதவிக்கும் வரக்கூடாது என்ற சட்டம் கொண்டு 
வரவேண்டும் என்பதையும், கருத்துக் கணிப்புக்கள் நம் நாட்டிற்கு நியாயம் 
வழங்காது என்பதையும், சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகளுக்கு எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதையும் பிஜே சொல்வதாக 
நூலாசிரியர் சொல்வது, நம் எல்லோருடைய கருத்தையே  பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இதை ஒரு கற்பனைக் கதை என சொல்வதை விட நாட்டில் உள்ள 
அனைவரின் எதிர்பார்ப்பின் வெளிப்பாடு என சொல்லலாம்.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள சில நிகழ்வுகள் தற்போது டில்லியில் 
பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வெற்றி பெற்று ஆட்சி 
அமைத்திருக்கும் சாமானியர் கட்சியின் செயல்பாடுகளோடு 
ஒத்துப்போவதைபோல் தோன்றுவதை பார்க்கும்போது ஆச்சரியமாக 
இருக்கிறது. ஒருவேளை இப்படி நடக்கும் என்பதை உணர்ந்துதான்    
திரு வெ.துரைசாமி அவர்கள் இந்த நூலில் முன்கூட்டியே எழுதியுள்ளாரோ 
என வியக்கவும் வைக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரே ஒரு குறை. பல இடங்களில் நூலாசிரியர் ஆங்கிலம் 
கலந்தே எழுதியிருக்கிறார். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் 
எழுதியிருக்கலாம். எடுத்துக்காட்டாக 6 ஆம் பக்கத்தில் மார்ச்சுவரி வண்டியை ஓவர்டேக் செய்துகொண்டு சென்றன. என்பதை அமரர் ஊர்தியை முந்திச் 
சென்றன. என்று எழுதியிருக்கலாம்.இதுபோல் அநேக இடங்களில் ஆங்கிலம் கோலோச்சுக்கிறது!


நூல் ஆசிரியர் பற்றி:




நூலின் ஆசிரியர் திரு வெ. துரைசாமி அவர்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் இள நிலை மற்றும் முதுநிலை 
பட்டப் படிப்பு படித்துவிட்டு வேளாண்மை ஆராய்ச்சித்துறையில் ஓராண்டு 
பணியாற்றி, பின்னர் நாட்டுடைமையாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில் 
சேர்ந்து ஊரக வளர்ச்சி அலுவலராகவும், முதுநிலை மேலாளராகவும் 
பணியாற்றியவர். 

வங்கி அலுவலர்களின் சங்கத்தில் இணைந்து இந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். உடுக்க உடை தரும் கோவை 
மாவட்டத்தில் பிறந்த இவர், உண்ண உணவு தரும் வேளாண் பெருமக்களுக்கு 
வங்கி மூலம் உதவி செய்துவிட்டு, கூடப் பணியாற்றிய தோழர்களுக்கும் 
தோள் கொடுத்துவிட்டு  தற்போது இருக்க வீடு கட்டித் தரும் பணியில் 
தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

அழகிய வடிவமைப்பில், பெரிய எழுத்துருவில் ஆப்பிள் பப்ளிஷிங்க் 
இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது.

இந்நூலின் விற்பனையின்  மூலம் கிடைக்க இருக்கும் வருமானம் 
அறக் கட்டளை மேற்கொள்ளும் நல்ல  செயல்பாடுகளுக்கும், நூலாசிரியருக்கு அரிச்சுவடி கற்றுக்கொடுத்த ஆரம்பப்பள்ளியை புனரமைப்பதற்கும்   
செலவிடப்பட இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான தகவல்.

இந்த நூல் ஒவ்வொருடைய வீட்டு நூலகத்திலும் அவசியம் இருக்கவேண்டிய 
நூல்.

அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


21 கருத்துகள்:

  1. ஆழ்ந்த நல்ல விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது... குறையையும் (ஆங்கிலம்) சுட்டிக்காட்ட தவறவில்லை... நன்றி ஐயா...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!தங்களுக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. முதற்கண், ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    வளமான கற்பனைக் கதை! எழுதியவருக்கும் எடுத்துக் காட்டிய
    உங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!தங்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. இப்படியெல்லாம் கனவு காண்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. இவை மெய்ப்படுகிறதோ இல்லையோ கனவு காண்பதில் தவறில்லையே. உங்களுடைய மதிப்பீட்டை படித்ததும் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றாலும் அவர்களில்லாமல் ஆட்சி இல்லையே என்றும் தோன்றுகிறது. இது இங்கு மட்டுமல்லாமல் உலகின் மிகச் சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதுதான் அமெரிக்கா உள்பட. ஆனாலும் அவைகளெல்லாம் முன்னேறத்தானே செய்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. பொதுமக்களாகிய
      நம்முடைய சகிப்புத்தன்மையும், தவறு நடக்கும்போது பொங்கி எழுந்து தட்டிக் கேட்காத கையாலாகாதத்தன்மையும் தான் இந்த நிலைக்கு காரணம்.

      நீக்கு
  4. ஒரு வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சாமான்ய மனிதனின் கட்சி மூலம் இந்த புது வருடத்தில் இந்தியாவிற்கு நல்லது நடக்கட்டும்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திருமதி இரஞ்சனி நாராயணன் அவர்களே! உங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நன்றி திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! வாழ்த்துக்கு நன்றி! தங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. It is the order of the day to mix 90% of English with local vernacular.

    பதிலளிநீக்கு
  7. It is the order of the day to mix 90% English and ten percent local vernacular. TV shows have set the trend.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! ஆங்கில சொற்களை உபயோகிக்க வேண்டாமென்று சொல்ல வரவில்லை. இணையான தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது ஏன் ஆங்கிலத்தைக் கலக்கவேண்டும் என்பதுதான் எனது கருத்து.

      நீக்கு
  8. இது அவர் கனவு மட்டுமல்ல ,நம் அனைவரின் கனவு !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி‌ K அவர்களே!

      நீக்கு
  9. தீயவற்றைப் பார்க்காதே; தீயவற்றைக் கேட்காதே; தீயவற்றைப் பேசாதே என்று குரங்கு பொம்மைகளை இந்தக் காலத்தில் ஊடகங்கள் நினைப்பதே இல்லை. நியூஸ் என்றாலே தீயவைகள் என்றாகிவிட்ட காலகட்டத்தில் இத்தகைய புத்தகங்கள் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. புத்தக அறிமுகத்துக்கு நன்றி. புத்தகம் கிடைக்கும் இணைய தளத்தையும் அறியப்படுத்தியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!
    இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ள Apple Publishing International(P) Ltd.; நிறுவனத்தின்இணைய தள முகவரி: www.applebooks.org,
    மின்னஞ்சல் முகவரி: cs@applebooks.org

    பதிலளிநீக்கு
  11. " THE EAGLES FLY HIGH, BECAUSE THEY THINK THEY CAN" எதுவும் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை தேவை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உங்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  12. Excellent review ..the review is so interesting that one is tempted to read the book.Lot can be achieved by perseverance and with single minded devotion. Unfortunately our country abounds in arm chair politicians and we as a nation have come to accept mediocrity and corruption as a way of life . We have become extremely cynical and take refuge under the belief that evil doers would be duly punished by Him in due course. But there have been instances when individuals have taken on the mighty and made them eat the humble pie. Take the case of Sh.Jayprakash Narayan and Sh.V.P.Singh. These two gentlemen could overthrow powerful rulers when it was believed to be impossible. Take the case of that American journalist Jack Anderson who wrote extensively on Water gate scandal leading to the resignation of the US Prez. Closer home our own Chitra Subramanians' extensive writings on Bofors scandal contributed to a great extent to the embarrassment suffered by the then PM who in the end lost the elections. Don't we see Traffic Ramasamy at chennai who has brought about many changes thru his PILs. All these persons believed in what they did and tirelessly worked to acheive the goals instead of passing judgements sitting at home like most of us do. The character in the book as you have described him resembles very much the present CM of Delhi. Nothing is impossible to achieve . One only needs to dream and think big and tirelessly toil to achieve the goal. But this is easier said than done. Well your inspiring review has prompted me to go on and on .. Please let me know where I can get the book at chennai. While I am not sure about the contents of the book , based upon your review I have decided to give it a shot all for a charitable cause. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் குறிப்பிட்ட அனைவருமே பொதுநலனையே குறிக்கோளாக கொண்டு முயற்சித்ததால், அவர்கள் நினைத்த மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது. முயன்றால் முடியாததொன்றுமில்லை என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

      இந்த நூல் கிடைக்கும் விபரம் பற்றி திரு N.பக்கிரிசாமி அவர்களது பின்னூட்டதிற்கு தந்த பதிலில் தந்துள்ளேன். வருகின்ற புத்தகக் கண்காட்சியில் Apple Publishing International(P) Ltd இன் விற்பனை அரங்கம் இருப்பின் அங்கும் வாங்கிக்கொள்ளலாம்.

      நீக்கு