செவ்வாய், 4 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 20



தொங்குபாலத்தின் வழியே திரும்பி இறங்குபோது கீழே ஓடும் காவிரி ஆற்றைப் பார்த்தபோது அந்த இடத்தை விட்டு வரவே மனமில்லை. திரும்பவும் இந்த இடத்தை எப்போது பார்க்கப் போகிறோமோ என்ற எண்ணமும், அப்படியே மறுபடியும் வந்தாலும் இன்று இருப்பதுபோல் இந்த காவிரி ஆற்றில் தண்ணீர் ஒடுமா என்ற ஐயமும் மனதில் ஏற்பட்டது.  


ஏனெனில் 1991 இல் குடும்பத்தோடு ஹொகனக்கல் வந்த நான், 22 ஆண்டுகள் கழிந்தே திரும்பவும் வகுப்புத்தோழர்களோடு இங்கு வர முடிந்தது. அப்போது பார்த்த காவிரிக்கும் இப்போது பார்க்கின்ற காவிரிக்கும் அநேக வேறுபாடுகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது.  

அன்றைக்கு காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது போல் இன்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் நடவடிக்கைகளால், காவிரியில் தண்ணீர் வரத்து இன்னும் குறைய வாய்ப்புண்டு என்றே கருதுகிறேன்.

கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரியில் உற்பத்தியாகும் காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் 320 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தாலும், தமிழக எல்லையான பிலிகுண்டலாவில் நுழைந்து 64 கிலோமீட்டர் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே ஓடி, காவிரிப் பூம்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்குமுன் அதிக (416 கிலோ மீட்டர்) தொலைவு ஓடுவது தமிழகத்தில்தான்.  

ஆனால் 1892 ஆம் ஆண்டிலும் 1924 ஆம் ஆண்டிலும் அன்றைய மைசூர் சமஸ்தானத்திற்கும் சென்னை ராஜதானிக்கும் இடையே போடப்பட்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் தங்களுடைய விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாக கூறி தற்போதைய கர்நாடக மாநிலம் யாருக்கும் கட்டுப்படாமல் ஹரங்கி ஹேமாவதி ஆகிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி தங்கள் மாநிலத்திற்கே காவிரி ஆற்று நீரை உபயோகப்படுத்திக்கொண்டது.   

நமக்கு ஆற்றங்கரை நிலம் சார் உரிமை (Riparian Rights) இருந்தும்,
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது மட்டும் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்து விட்டு தமிழகத்தில் ஓடும் காவிரியை ஒரு வடிகாலாக (Drainage Channel) மாற்றிவிட்டதுதான் சுயநலத்தின் உச்சகட்டம்.  
உச்ச நீதிமன்றம் தலையிட்டும் நமக்கு இன்னும் கிடைக்க வேண்டிய நீரின் அளவு கிட்டவில்லை. கர்நாடகம் காவிரியில் இன்னும் பல அணைகள் கட்ட இருப்பதாக கேள்வி. அப்போது தமிழகத்தில் காவிரி ஆறும், பாலாறு போல வறண்டு,வெறும் மணல் ஓடும்(!) ஆறாக மாறும் என்பது திண்ணம்.

அப்படி நடந்தால், நமது சந்ததியினர் நாம் பார்த்த இந்த காட்சியைக்கூட பார்க்கும் வாய்ப்பு இருக்காதே என நினைத்துக்கொண்டே என் துணைவியாருடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை உணவு விடுதிக்கு திரும்பினேன்.

வரும் வழியில் அருவியிலிருந்து நீராடி வருவோருக்காக வரிசையாய் சிறுசிறு உணவகங்கள் ஆற்றில் பிடித்த மீன்களை வறுத்து வைத்துக்கொண்டு  காத்திருப்பதைக் கண்டேன்.

நாங்கள் விடுதியை அடைந்தபோது அநேக நண்பர்கள் எங்களுக்கு முன்பே வந்து குழுமிவிட்டனர். அவர்களில் சிலரை திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த புகைப்படங்கள்  கீழே.






 
எல்லோரும் வந்ததும் உணவகத்திற்கு சென்று எடுத்தூண் (Buffet) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டோம். அசைவம் உண்ணும் நண்பர்களுக்கு அவர்கள் ஹொகனக்கல்லில் உண்ண விரும்பும் உணவும் கிடைத்தது.

எல்லோரும் சாப்பிட்டு பேருந்தில் ஏறி புறப்பட மணி 3.30 ஆகிவிட்டது.



தொடரும்








14 கருத்துகள்:

  1. சுயநலத்தின் உச்சகட்டத்தை மாற வேண்டும்... மாற்ற அனைவரும் ஒன்று பட வேண்டும்... படங்கள் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. //தமிழகத்தில் காவிரி ஆறும், பாலாறு போல வறண்டு,வெறும் மணல் ஓடும்(!) ஆறாக மாறும் என்பது திண்ணம்.//

    ஆற்றில் மணலா? ஆற்று மணலைக் கதைகளிலும் கற்பனைகளிலும் கண்டால்தான் உண்டு. நமது அரசியல்வாதிகள் செய்த மிகப் பெரிய தவறு, அணைகள் கட்டுவதற்கு தடை உத்தரவு வாங்காததுதான். தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். வருங்காலத்தில் நாம் அரசியல்வாதிகள் கைங்கரியத்தால் ஆற்று மணல் கூட காண்பதற்கு அரிதாகலாம்.
      அணை கட்ட தடை வாங்கினாலும் கர்நாடக மாநிலம் நீதி மன்ற ஆணையையே மீறி இருக்கும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எல்லாவற்றையும் சுயநலத்தோடும் வாக்கு வங்கிக்கான அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் இவர்களை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது தான் வேதனை.

      நீக்கு
  4. காவிரி தமிழகத்தில் அதிக தூரம் பயணித்தாலும் அது உற்பத்தியாவது கர்நாடகத்தில்தானே? அதனால்தான் அவர்களால் யாருக்கும் கட்டுப்படாமல் தண்ணீரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது. ஒருவேளை அது தமிழகத்தில் உற்பத்தியாகி கர்நாடகாவில் பயணித்திருந்தால் நாமும் இப்போது கர்நாடகா செயல்படும் பாணியில்தான் செயல்பட்டிருப்போமோ என்னவோ? இதற்கு முக்கிய காரணம் நல்ல வலுவான மத்திய அரசு இல்லாமைதான். உங்களுடைய பயணக் கட்டுரையில் இத்தகைய முக்கியமான விஷயங்களையும் தொட்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீங்கள் சொல்வதுபோல் காவிரி தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகி கர்நாடாகாவில் பயணத்திருந்தால் நாமும் அவர்கள் பாணியில் அணை கட்டியிருப்போம் என்பதை வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும், ஆற்றங்கரை நிலம் சார் உரிமை (Riparian Rights) ப்படி, நீர் நிலையை அடுத்துள்ள நில உரிமையாளர்களுக்கு அவர்களது நிலத்தின் மேலேயோ அல்லது வழியாகவோ ஓடும் தண்ணீரை நியாயமாக உபயோகித்துக்கொள்ளும் உரிமை உள்ளது என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட என்பதால், நாம் செய்தாலும் அது தவறுதான்.

      ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கு பவானி ஆற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். பவானி ஆறு நீலகிரி மலையில் உற்பத்தி ஆகி கேரளா வழியாக தமிழ் நாடு வந்தாலும், நாம் பவானி ஆற்றை மறித்து அணை கட்டவில்லை. ஆனால் இப்போது கேரளா தங்கள் நிலத்தின் மேல் ஓடும் பவானி ஆற்றில் குறுக்கே அணை கட்ட இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. அது நடந்தால் மேட்டுப்பாளையம் அருகே ஓடும் பவானி வறண்டு போக வாய்ப்புண்டு.

      // இதற்கு முக்கிய காரணம் நல்ல வலுவான மத்திய அரசு இல்லாமைதான்.//

      நமக்கும் கர்நாடகவிற்கும் பிரச்சினை வந்தபோது இந்திரா காந்தி தலைமையில் மத்தியில் மிக வலுவான காங்கிரஸ் அரசுதான் இருந்தது. ஆனால் அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நமக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, கை கட்டி வேடிக்கை பார்த்தது என்பது தான் உண்மை. தமிழ் நாட்டின் தலையெழுத்து தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை சார்ந்த்திருக்கவேண்டியது தான் என்றாகிவிட்டது என் செய்ய.

      நீக்கு
  5. இந்த நதிநீர் பங்கீடு ஒரு சிக்கலான விஷயம். அது குறித்து அறிவு பூர்வமான தீர்வு வருவது சிரமம் . அந்தப் பேச்சே உணஎச்சிகளைத் தூண்டி விடுகிறது ( இரு மாநிலங்களிலும் )ஜோசப்பின் கருத்துக்கு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இது உணர்ச்சிபூர்வமான விஷயம் மட்டுமல்ல. நம்மால் நமது எதிரி நாடான பாகிஸ்தானுடன் நதி நீர் ஒப்பந்தம் போட முடிகிறது, பங்களா தேசத்துடன் ஒப்பந்தம் போட முடிக்கிறது ஆனால் நமக்கு உரிமை இருந்தும் நம் நாட்டில் அண்டை மாநிலத்திடமிருந்து நமக்கு கிடைக்கவேண்டியதை பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதியது.

      நீக்கு
  6. வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியைப் பற்றிய தங்களது ஆதங்கம்! எல்லோருக்கும் உண்டானது. இனி நினைந்து என்ன ஆகப் போகிறது? வானம்தான் பொழிய வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! மனிதன் உதவாதபோது இயற்கையாவது உதவும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

      நீக்கு
  7. சிறப்பான கட்டுரை.... உங்கள் ஆதங்கம் எனக்குள்ளும் - விரைவில் காவிரி ஆறு வெறும் மணல் படுகையாகி அங்கேயும் வீட்டுமனைகள் வந்துவிடுமோ என்று பயம்.......

    தொடர்ந்து பயணிப்போம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு