சனி, 8 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 21



ஏற்காடு சென்ற போதும்,ஹொகனக்கல் புறப்பட்ட போதும் அனைவருக்கும் இருந்த உற்சாகம் சுற்றுலாவை முடிந்து திரும்பவும் சேலத்திற்கு பேருந்தில் ஏறி புறப்பட்டபோது காணாமல் போனது போல் தெரிந்தது எனக்கு. 


ஆங்காங்கே சிலர் பேசிக் கொண்டிருந்தாலும் சிலர் மௌனமாகவே இருப்பதைப் பார்த்தேன். அதற்கு காரணம் இரண்டு நாட்களாக கூடிக் களித்த நண்பர்களை விட்டு பிரிந்து செல்லவேண்டுமே என்பதாலா அல்லது இரண்டு நாளும் ஓய்வெடுக்காமல் சுற்றியதால் வந்த களைப்பாலா எனத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும். இதற்கு முன்பு நாங்கள் சந்தித்தபோது வகுப்புத் தோழர்களாகிய நாங்கள் பழைய நிகழ்வுகளை சொல்லி ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து இரசித்துக் கொண்டிருப்போம். ஆனால் எங்களோடு வந்த துணைவியார்களும் உறவினர்களும் அதில் பங்கெடுக்க முடியாமல் வெறுமனே அமர்ந்திருப்பார்கள்.

ஆனால் இந்த தடவை அதை அப்படியே மாற்றிவிட்டார் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள். அவர் எல்லோருடைய துணைவியர்களிடமும்  சென்று சகஜமாக பழகி எல்லோரையும் ஒன்றிணைத்துவிட்டார்.

எல்லோருடைய முகவரி மற்றும் தொலைபேசி/கைபேசி எண்களை பெற்றுக்கொண்டு தான் கனடா சென்றதும் அவர்களை தொடர்பு கொள்வதாக சொல்லி எல்லோரையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் உணர வைத்துவிட்டார். நாங்கள் கூட விளையாட்டாக சொன்னோம் அவர் ஒரு மகளிரணியை உருவாக்கிவிட்டார் என்று!

எங்கள் வகுப்புத் தோழர் திரு சுப்ரமணியன் கேரளாவில் உள்ள அவரது ஏலக்காய் Estate லிருந்து அனைவருக்கும் ஏலக்காய் கொண்டு வந்திருந்தார். காலையில் ஹொகனக்கல் அருவியைப் பார்க்க வந்துகொண்டிருந்த போது பேருந்தில் அவர் நண்பர்கள் அனைவருக்கும் அதைக் கொடுத்தார்.  

நாங்கள்  வாங்கி வழக்கம்போல் அதை எங்கள் துணைவியர்களிடம் கொடுத்தபோது திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் நண்பர் சுப்ரமணியனிடம், அதெப்படி நீங்கள் குடும்பத் தலைவியிடம் கொடுக்காமல் உங்கள் நண்பர்களிடம்  கொடுக்கலாம்?’ எனக் கூறி எங்களுடைய  துணைவியர்களிடம்  அதை வாங்க வேண்டாமென்று தடுத்து (விளையாட்டாக) ஒரு கலகத்தையே உண்டாக்கி பேருந்தில் ஒரு கலகலப்பையே உண்டாக்கிவிட்டார்.

அதுபோல ஹொகனக்கல்லிலிருந்து திரும்பும்போதும் எல்லோரிடமும் பேசிக்கொண்டும், பேருந்தில் இருந்தவர்களை புகைப்படம் எடுத்தும், பழைய கலகலப்பை கொண்டுவந்தார்.

திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் பேருந்துக்குள் எடுத்த புகைப்படம் கீழே.


திருமதி செல்லய்யா அவர்களும் தன் பங்கிற்கு எங்கள் வகுப்புத் தோழர்கள் சிலருக்கு பட்டங்கள் கொடுத்து மேலும் கலகலப்பூட்டினார்.

எங்களது பேருந்து தர்மபுரி புறவழிச் சாலையை அடைந்தபோது, நண்பர்கள் அந்தோணி ராஜும் D.கோவிந்தராஜனும், தர்மபுரி சென்று முறையே அவர்கள் இருக்கும் ஊரான மரக்காணத்திற்கும், வேலூருக்கும் செல்ல இருப்பதாக கூறி, அங்கே இறங்கிக் கொண்டனர்.  

(அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அதுதான் நாங்கள் திரு D.கோவிந்தராஜனைப் பார்ப்பது கடைசி என்று.)

சேலத்தை நாங்கள் நெருங்கியபோது, பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு நண்பர் முருகானந்தம், இந்த சந்திப்பை நல்ல முறையில் ஏற்பாடு செய்த வகுப்புத் தோழர்கள் பழனியப்பன் மற்றும் வெங்கடரமணனுக்கு எங்கள் சார்பில் நன்றி கூறினார்.

எங்களது பேருந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எதிரே அடைந்தபோது மணி 6.15 ஆகிவிட்டது. எங்களது அறைகள் அனைத்தும் அன்று மாலை 6 மணி வரைக்கும் தான் முன்பதிவு செய்திருந்தாலும், அறைக்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு அடுத்த அரை மணிக்குள் அறைகளை காலி செய்தால் போதும் என்றார் நண்பர் வெங்கடரமணன்.  

எங்களில் அநேகம் பேர் அப்போதே பேருந்தில் ஊருக்கு திரும்பிவிட்டனர். எங்களைப்போல இரயிலில் திரும்புவோர் மட்டும் வரவேற்பறைக்கு அருகில் உள்ள அறையில் உடைமைகளை வைத்துவிட்டு ஊருக்கு செல்பவர்களை வழியனுப்பிவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

இரவு 8 மணிக்கு அருகில் இருந்த சரவண பவன் உணவு விடுதியில் இரவு சிற்றுண்டியை முடித்துவிட்டு நான், அய்யம்பெருமாள் கோவிந்தசாமி ஆகிய மூவரும் துணைவியர்களோடு காத்திருந்தபோது, என் நண்பர் திரு செல்லய்யன் அவர்கள் எங்களை சேலம் இரயில் சந்திப்பு நிலையத்தில் கொண்டு விட தனது காரில் வந்தார்.

நாங்கள் சென்னைக்கு திரும்ப இருந்த ஏற்காடு விரைவு இரயில் இரவு 10 மணிக்குத்தான் என்றாலும் அங்கிருப்பதை விட இரயில் நிலையத்திற்கே செல்லலாம் எனத் தீர்மானித்து சேலம் நண்பர்களிடம் நன்றி சொல்லி விடை பெற்று காரில் ஏறி சேலம் சந்திப்பை வந்தடைந்தோம்.

இரயில் வரும்வரை காத்திருக்கிறேன். என்று திரு செல்லய்யன் சொன்னபோது வீணே நீங்கள் காத்திருக்கவேண்டாம். நாங்கள் போய்க்கொள்ளுகிறோம். என்று சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவிட்டு நடைமேடையில் (Platform) காத்திருந்தோம்.

ஈரோடிலிருந்து சேலத்திற்கு இரவு 9.55 மணிக்கு  வந்த சென்னை திரும்பும் ஏற்காடு விரைவு இரயிலில் ஏறி படுத்தது தான் தெரியும். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. திடீரென பெரம்பூர், பெரம்பூர் .என சத்தம் கேட்டு கண் விழித்தபோது சென்னை வந்துவிட்டது என அறிந்து இறங்கத் தயாரானோம்.

காலை சரியாக 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் அடைந்ததும் கீழே இறங்கி வேறு பெட்டியில் பயணம் செய்த நண்பர்களுக்காக நானும் என் மனைவியும் காத்திருந்தோம். அவர்கள் வந்ததும் கோவிந்தசாமியிடமும் அவரது துணைவியாரிடமும் சொல்லிவிட்டு நானும் அய்யம்பெருமாளும் எங்கள் துணைவியர்களோடு வெளியே வந்து Fast Track Call Taxi யை அமர்த்தி வீடு வந்து சேர்ந்தோம். எங்களை வீட்டில் விட்டு அய்யம்பெருமாளும் அவர் துணைவியாரும் எங்களிடம் விடைபெற்று சென்றனர்.

கடந்த மூன்று நாட்களாக கல்லூரித் தோழர்களை சந்தித்து பழைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி, வயதை மறந்து ஒருவரை ஒருவர் கேலி செய்து மகிழ்ந்ததை நினைத்தபோது மனதளவில் இளைஞனாகிப் போனது போல் உணர்ந்தேன்.

பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றவர்கள், அடிக்கடி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு இருக்கவேண்டும்.அப்போதுதான் எப்போதும் சுறுசுறுப்போடும் சந்தோஷமாகவும் இருக்கமுடியும் என்று படித்ததாக நினைவு என்பதை முன்பே எழுதியிருக்கிறேன். அது உண்மையும் கூட.
 
சொல்லப்போனால் இந்த சந்திப்பு எனக்கு/எங்களுக்கு சொல்லவொணா புத்துணர்ச்சியைத் தந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த சந்திப்பி‌ல்  தங்குமிடம், வாகன வசதி, உணவு உபசரிப்பு போன்ற எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாகவும், குறைகள்  இல்லாமலும் அனைவரும் இரசித்து மகிழும் வண்ணம் ஏற்பாடுகள் செய்த நண்பர்கள் பழனியப்பனுக்கும் வெங்கடரமணனுக்கும், தஞ்சையிலிருந்து பல தடவை வந்து அவர்களுக்கு உதவிய நண்பர் R.பாலசுப்ரமணியனுக்கும்  எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

கடந்த ஓராண்டாக அவர்கள் இந்த சந்திப்பை சிறப்பாக நடத்த எப்படி பாடுபட்டார்கள் என்பதை அறிந்ததால் அவர்களுக்கு நானும் இதன் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து தஞ்சையில் 2016 இல் நடக்க இருக்கின்ற எங்களது பொன் விழா சந்திப்பு க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.  


17 கருத்துகள்:

  1. இனிய சந்திப்பு + இனிய பயணம்... வருடம் ஒரு முறையாவது இது போல் தொடர்ந்தால், வரும் அந்த நாளை எண்ணியே மனம் புத்துணர்வு அடையும் என்பது உங்களின் பகிர்வு மூலம் புரிகிறது ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. (திரு D.கோவிந்தராஜன் ஐயாவை நினைத்து வருத்தம்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க ஆவல்தான். இருப்பினும் எல்லோராலும் எப்போதும் வரமுடியுமா என்ற ஐயத்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்கிறோம்.

      நண்பர் D.கோவிந்தராஜனின் அகால மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது நிஜம்.

      நீக்கு
  3. உங்கள் தொடரைத் தொடர்ந்து படித்ததில் ஒரு மனநிறைவு எனக்கு! மனமார்ந்த நன்றி! அடுத்ததாக தஞ்சையில் 2016 இல் நடக்க இருக்கின்ற உங்கள் நண்பர்கள் குழுவின் பொன் விழா சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள்! உங்கள் நண்பர்கள் குழுவிற்கு ஏதேனும் பெயர் வைத்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! எங்கள் குழுவிற்கு தனி பெயர் எதுவுமில்லை. எங்கள் சந்திப்பை Annamalai Agri.1966 Reunion Meet என்றே கூறுவோம்.

      நீக்கு
  4. கூடியவர் பிரியும் போது மனம் சங்கடப்படுவது தெரிகிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,உணர்வை புரிந்துகொண்டமைக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  5. ரொம்ப சந்தோஷம்; உங்களை சந்திப்பது. மிகவும் நன்றாக எழுதியிரிக்கிறீர்கள். தொடர்ந்து சந்திக்க விரும்பிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி NRI Girl அவர்களே!

      நீக்கு
  6. நீங்கள் பயணித்ததுமூன்று நாள்தானா? ஆனால் அதைவைத்தே 21 பதிவுகள் எழுதும் அளவுக்கு அனுபவங்கள்! ஆச்சரியம். அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு அழகான புகைப்படங்கள் மற்றும் அரிய தகவல்களுடன் அளித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! பயணித்தது மூன்று நாட்கள்தான் என்றாலும் பார்த்தவை அநேகம். மேலும் பழகிய நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஏற்பட்ட உற்சாகமும் என்னை அனைத்தையும் மறக்காமல் எழுதத்தூண்டியது என்பது தான் உண்மை.

      நீக்கு
  7. துணைவியார்கள் நம்மைவிட அதிகம் பழகிவிடுவார்கள் ஐயா... சந்திப்பும் பயணமும் மிகவும் இனிமை... தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  8. ஒவ்வொரு நிமிடத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்து இன்புறும் அளவுக்கு இருந்ததால்தான் மூன்று நாட்கள் சந்திப்பை 21 பதிவுகளுக்கு தங்களால் எழுதமுடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல. அடுத்த சந்திப்பும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  9. நண்பர்களோடு இப்படி பயணம் செய்வதில் பல சந்தோஷங்கள் கிடைக்கின்றது நமக்கு.

    எங்களது கல்லூரி நண்பர்கள் சிலர் சில வருடங்களுக்கு முன் சென்னையை அடுத்த நீலாங்கரையில் ஒரு ரிசார்ட்டில் சந்தித்து மகிழ்ந்தோம். அடுத்த முறை எப்போது சந்திப்போம் என காத்திருக்கிறோம்....

    மிகச் சிறப்பாய் இந்த பயணத்தினை உங்கள் பகிர்வுகள் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு