வியாழன், 20 மார்ச், 2014

சிட்டுக்குருவி பற்றிய சேதி தெரியுமா?சிட்டுக்குருவி பற்றி நிறைய பதிவர்கள் எழுதிவிட்டார்கள். இருப்பினும் நானும் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கிறேன்.


Passeridae விலங்கியல் குடும்பத்தைச் சேர்ந்த, முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினமான சிட்டுக்குருவி ஒருகாலத்தில் காக்கைகள் போல் எங்கும் காணப்பட்டது. ஆனால் இப்போது அது சிற்றூர்களில் காணப்பட்டாலும் நகரங்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதற்கு காரணம் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்கிறார்கள் விலங்கியல் அறிவியலார்.

இன்றைக்கும் கிராமங்களில் சில வீடுகளில் குருவிகள் வந்து சாப்பிடுவதற்காகவே அறுவடை முடிந்ததும் நெல் மணிகளை அழகாக சர விளக்குகள் போல் வீட்டின் முகப்பில் கட்டி வைத்திருப்பார்கள். சிட்டுக்குருவிகளும் அங்கு வந்து அவைகளை கொத்தி சாப்பிட்டுவிட்டு, அங்குள்ள எரவாணத்தில்(ஓடு வேய்ந்த வீடுகளில் அவைகளைத் தாங்க போடப்பட்டுள்ள மரச்சட்டங்கள்) கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். அதனால் சிற்றூர்களில் இன்னும் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிகிறது.   

ஆனால் நகரங்களிலோ முன்பெல்லாம் வீட்டைச்சுற்றி தோட்டங்கள் இருக்கும்.அங்கே பறவைகள் கூடு கட்டி வாழ வழி இருந்தது. இப்போதோ இடப்பற்றாக் குறையால் தனி வீடுகள் மறைந்து அடுக்ககங்கள் வந்துவிட்டதால் தோட்டம் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. எனவே அவைகள் கூடு கட்டி வாழ இடம் இல்லை என்கிறார்கள்.  

மேலும் நகர்ப்புறங்களில் கைபேசிக்கு தொடர்பு தர அமைக்கப்பட்டிருக்கும்  கைபேசி கோபுரங்கள் (Cell Phone Towers) வெளிப்படுத்தும் மின் காந்த அலைகள் சிட்டுக்குருவி இனத்தை மலடாக்கிவிட்டதாம். அதனால் தான் முன்பு போல் இனப்பெருக்கம் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்த கைபேசி கோபுரங்கள் அமைக்கப்படாத சிற்றூர்களில் தற்போதைக்கு சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்தில்லை என்றாலும், எதிர்காலத்தில் இந்த இனமே அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக அழிந்து பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு  படங்களை காட்டித்தான்  சிட்டுக்குருவிகளை அறிமுகம் செய்யவேண்டியிருக்குமோ என்னவோ.

Biological Control எனப்படும்  உயிரினக் கட்டுப்பாடு நடக்க, இயற்கையின் கொடையால் பல்வேறு உயிரினங்கள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக நெற்பயிரை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்த பாம்புகள் இருக்கின்றன. பாம்புகளைக் கட்டுப்படுத்த கீரிப்பிள்கள் இருக்கின்றன. அந்த வகையில் புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்த சிட்டுக்குருவிகள் போன்றவகள் உதவுகின்றன. இவைகள் அழிந்துபோனால் இயற்கையில் சமமின்மை ஏற்படும். எனவே சிட்டுக்குருவி இனம் அழிவதை தடுப்பதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு என்பதை மறக்க கூடாது.  

அழிந்து வரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற Citizens Sparrow என்ற பொது மக்கள் அனைவரும் பங்கேற்கும் திட்டம் ஒன்றை Bombay Natural History Society, 30 க்கும் மேற்பட்ட இயற்கை மற்றும் பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட நிறுவனங்களுடன் கூடி ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புபோர் தங்களைப்பற்றிய விவரங்களைத் தந்து பதிவு செய்துகொண்டதும் அவர்கள் தரும் வினாப்பட்டியலில்(Questionnaire) தாங்கள் வாழும் இடங்களில் காணப்படும் சிட்டுக்குருவி பற்றிய தகவல்களை தரவேண்டும். எல்லோரிடமும் பெறும் தகவல்களை ஆதாரமாக வைத்து சிட்டுக்குருவியைப் பற்றிய மேலதிக ஆராய்ச்சி செய்ய இருக்கிறதாம்.  

இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட தகவல்கள் வந்திருப்பதாகவும் அவைகளை ஆராய்ந்ததில் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளதாம்.

 1. முன்பை விட இப்போது சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
 2. சிட்டுக்குருவிகள் சிற்றூர்களையும் பேரூர்களையும் விட நகரங்களில் குறைவாகவே காணப்படுகின்றன. .
 3. நகரங்களில் கூட அவைகளின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக மும்பையிலும் கோவையிலும் அதிகம் காணப்படும் இவைகள் சென்னை, பெங்களூரு, தில்லி போன்ற நகரங்களில்  சில இடங்களில் காணப்படவே இல்லையாம்!

இதைப் படித்த நான் நாமும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும்.என்று என் துணைவியிடம் சொன்னேன். ஒரு நாள் என் துணைவியார் என்னிடம் நமது வீட்டு புறக்கடையில்  இரண்டு சிட்டுக்குருவிகள் வந்து புழுவையோ எதையோ கொத்தி தின்றுகொண்டு இருக்கின்றன.வந்து பாருங்கள்என்றார்.

நான் சென்று பார்க்க எத்தனித்தபோது  என்னைக் கண்டதும் அவைகள் பறந்தோடிவிட்டன. மறு நாள் வரும் என்பதால் அந்த இடத்தில் சில அரிசி மணிகளை தூவி வைத்தோம்.ஆனால் அவைகள் வரவில்லை.

பிறகு என் துணைவியார் ஒரு தட்டில் நெல்லை வைத்து வெளியே வைத்துவிட்டார். நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே ஓரிரு நாட்கள் கழித்து அவைகள் இரண்டும் வந்து அழகாக அமர்ந்து, நாம் கடலையில் இரு கைகளாலும் தோலை உரிப்பதுபோல், தங்களது அலகால் இலாவகமாக தோலை உரித்து அரிசியை சாப்பிடத் தொடங்கின.

முதல் நாள் காலையில் வந்த அந்த குருவிகள், மறுநாளிலிருந்து தினம் காலையும் மாலையும் சொல்லி வைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்திற்கு வரத் தொடங்கின. எங்களுக்கோ ஒரே மகிழ்ச்சி. எனவே தினம் அந்த தட்டில் நெல்லை வைக்கத் தொடங்கிவிட்டோம். தினம் அவைகள் வந்து சாப்பிடும் அழகை பார்ப்பது எங்களது தினசரி வேலையாகிவிட்டது.  

ஒரு நாள் அவைகள் சாப்பிடுவதை படம் எடுக்க நினைத்தேன். என்னைப் பார்த்தால் ஓடிவிடும் என்பதால், ஒளிந்திருந்து அவைகளுக்குத் தெரியாமல் படம் எடுத்தேன். அந்த படங்கள் கீழே.போன வாரம் அவைகள் மூன்று நாட்கள் வராமல் இருந்தபோது என் துணைவியார் ஏன் அவைகளைக் காணோம்?’ என்று கவலைப்பட்டபோது நான்  விளையாட்டாக சொன்னேன். ஒருவேளை அவைகள் ஊருக்கு போயிருக்கிறதோ என்னவோ. என்று.  

இப்போதெல்லாம் அவைகள் வரவில்லையென்றால் அவைகளுக்கு என்னவாயிற்றோ  என்ற கவலை எங்களுக்கு வருகிறது.

உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் சிட்டுக்குருவிகளை வாழ வைக்க தங்களாலானதை செய்வோம் என ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம்.29 கருத்துகள்:

 1. படங்களை பார்க்கும் சிறு வயது இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது... பல தகவல்களுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. நாங்கள் இருக்கும் ஆவடிப் பகுதியில் தனிவீடுகள்தான் அதிகம். பல வீடுகளிலும் முன்னும் பின்னும் தோட்டம் அமைத்து இருப்பதாலும் ஆங்காங்கே நிறைய இடங்கள் காலியாக கிடப்பதாலும் இங்கு குருவிகள் உட்பட சென்னையில் காண முடியாத பல அரிய பறவைகளை தினமும் காண முடிகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு மாடியிலுள்ள படுக்கையறை ஒன்றில் இரண்டு குருவிகள் (அவை சிட்டுக்குருவிகள்தானா என்பது தெரியவில்லை) ஒரு சில மாதங்கள் கூடு கட்டி குஞ்சு பொறித்தன. ஆனால் அறை முழுவதும் மலம கழித்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிட்டதால் வேறு வழியின்றி கூட்டை கலைத்து விரட்டிவிட வேண்டியதாகிவிட்டது. அதில் எனது இரண்டாவது மகளுக்குத்தான் பெரிய வருத்தம். இப்போதெல்லாம் வீட்டின் பின்புறத்தில் உள்ள வயல்வெளியில் அவ்வப்போது அவற்றைக் காண முடிகிறது.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்தவை சிட்டுக்குருவிகளாகத்தான் இருக்கமுடியும். அவைகளுக்கென தனியே ஒரு அட்டைப் பெட்டி வைத்திருந்தால் நீங்கள் சொன்ன தொல்லை இருந்திருக்காது.

  பதிலளிநீக்கு
 4. சிட்டுக்குருவிதின வாழ்த்துகள்.. கிராமத்து வீட்டில் குருவிகளுக்கு பஞ்சமே இல்லை.

  தலைநகரில் சிட்டுக்குருவிகள் ஒருதடவைவந்தன அப்புறம் காணவில்லை. அண்டையில் மாமரங்கள் இருப்பதில் கிளிகள்,புறாக்கள் வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே! பால்கனியில் அட்டைப் பெட்டிகள் வைத்தால் நிச்சயம் சிட்டுக்குருவிகள் வந்து கூடு கட்டி வாழும்.

   நீக்கு
 5. //சிட்டுக்குருவி இனம் அழிவதை தடுப்பதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு என்பதை மறக்க கூடாது//

  சிட்டுகுருவியை மட்டுமல்ல. அனைத்து உயிரினங்ககளையும் காப்பதில் மனித இனம்தான் முன் நிற்க வேண்டும். தினம் கொல்லைபுறத்தில் தண்ணீர் வைத்தாலே போதும். நான் சென்னை வந்த பொழுது நாய்களும் காகங்களும் தண்ணீருக்குத் தவிப்பதை நேரடியாகப் பார்க்க நேர்ந்தது அதிர்ச்சியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் யோசனைக்கும் நன்றி திரு N. பக்கிரிசாமி அவர்களே! தங்கள் ஆலோசனைப்படி புறக்கடையில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க இருக்கிறோம்.

   நீக்கு
  2. நன்றி. இங்கே பொதுவாக தோட்டங்களில் அழகுக்காக வைக்கப்படும் சிலைகளிலேயே பறவைகளுக்கு தண்ணீர்தொட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். பழைய காலங்களில் குளம், குட்டைகள் அதிகமாக இருந்ததால் நம்மூர்களில் அதற்கு தேவையில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. கருத்துக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! மழை பொய்த்துவிட்ட காரணத்தால் குளம் குட்டைகளில் நீர் இல்லை. அப்படி உள்ள குளங்களையும் பல இடங்களில் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டதால், பெய்கின்ற மழை தேங்கி நிலத்தடிக்கு செல்லாமல் வீணே கடலுக்கு செல்வதால் கிணற்றிலும் நீர் மட்டம் குறைந்துவிட்டது. அடிப்படை தேவைக்கே தண்ணீர் இல்லாமல் மக்களே சிரமப்படுவதால் பறவைகளுக்கு நீர் தரவேண்டுமென்ற நினைப்பு எங்கே வரப்போகிறது.

   நீக்கு
 6. நாங்கள் பெங்களூருக்கு வந்த போது (1991-1992) சிட்டுக் குருவிகள் தினமும் காலயில் எங்கள் வீட்டு சன்னல் வழியே உள்ளே வந்து கண்ணாடியில் அவற்றின் உருவத்தை பார்த்துக் கொத்த ஆரம்பிக்கும் நாணடைவில் குறைந்து விட்டு இப்போது காண்பதே அரிதாகி விட்டது. இவற்றுக்காக ஒரு தூக்கணாங்க் குருவிக் கூடு வாங்கி பின்புறம் இருக்கும் மாமரத்தில் கட்டித் தொங்க விட்டும் அவை ஏனோ வருவதில்லைஅவ்வப்போது சிலவற்றைக் காண்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பெங்களூருவில் BCIL helpline எண்ணான 84318 48224 க்கு போன் செய்தால் அவர்கள் எப்படி சிட்டுக்குருவிகளை பேணலாம் என சொல்வார்கள் என படித்திருக்கிறேன்.

   நீக்கு
 7. சிட்டுக்குருவி.... தில்லி பகுதியில் அழிந்து விட்டதோ என்றே தோன்றுகிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தில்லியில் சிட்டுக்குருவிகள் அநேக இடங்களில் காணப்படவில்லையென்றே புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   நீக்கு
 8. இதனை ஒட்டி கவிஞர் இரத்தின புகழேந்தியின் கவிதை ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமக இருக்கும் என நம்புகிறேன்.

  நகர்க்குருவி.
  --------------------

  அப்பா
  பார்த்திருக்க வேண்டும்
  புது வீட்டில்
  முற்றம் வரை வந்து
  ஏமாந்து திரும்பும்
  தவிட்டுக் குருவிகளளை

  ஊரிலிருந்து திரும்புகையில்
  எடுத்துப் போகச்சொன்னார்
  கத்தரிமேட்டிலிருந்து
  அறுவடையின் போது கொண்டு வந்து
  சின்னப்பா பின்னிக் கொடுத்த
  நெற்கதிர்களை

  வாஸ்துமணி கட்டுவதற்காக
  பொறியாளர் அமைத்த
  வளையத்தில் தொங்கவிட்டு
  கண்காணிக்கையில்

  வினோதமாகவே பார்க்கின்றன
  நகரத்து மனிதர்களைப் போலவே
  குருவிகளும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகர்ப் புறத்துக் குருவிகளைப் பற்றிய கவிஞர் இரத்தின புகழேந்தி அவர்களின் பொருத்தமான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தேசியக்கவியை தங்களுக்கு நினைவூட்டுகிறது என் பதிவு என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

   நீக்கு
 10. தங்கள் பதிவு சிட்டுக்குருவி பற்றிய பல செய்திகளை தந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

   நீக்கு
 11. சிட்டுக்குருவியைப் பற்றி நிறைய தகவல்கள். ஒரு பேராசிரியரின் உரை போன்று இருந்தது. நீங்களும் வேளாண்துறை பேராசிரியர். சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை குறைவுக்கும் செல்போன் கோபுரங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் சிலர்.
  http://vovalpaarvai.blogspot.in/2012/03/20.html

  (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி தமிழ் இளங்கோ அவர்களே! ஒரு திருத்தம். என்னை வேளாண்துறை பேராசிரியர் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.நான் வேளாண்துறை பேராசிரியர் அல்ல.

   வேளாண் அறிவியல் படித்துவிட்டு மாநில வேளாண் துறையிலும் மைய அரசின் நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும் பணியாற்றி, பின் சிண்டிகேட் வங்கியில் வேளாண் களஅலுவலராக சேர்ந்து வங்கியாளனாக ஆனவன். எனக்கு படிக்கும்போது பேராசிரியாக பணியாற்ற விருப்பம் இருந்தது.ஆனால் ஏனோ அது நடக்கவில்லை. இப்போது தாங்கள் என்னை பேராசிரியர் எனக் கூப்பிட்டு எனது ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள்.நன்றி!

   சிட்டுக்குருவிகள் குறைவதற்கும் கைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின் காந்த அலைகளுக்கு தொடர்பு உண்டு என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் உண்டு. எப்படி இருப்பினும் சிட்டுக்குருவிகளை நாமும் பேணி காப்பாற்றுவோம். நீங்கள் தந்த இணைப்பிற்கும் சென்று ‘வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்’ பதிவையும் படித்தேன். பகிர்வுக்கு நன்றி!

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே! இன்று தான் உங்கள் தளத்துக்கு வருகிறேன்.சிட்டுக்குருவி பற்றிய பதிவைப் படித்தேன். நான் சொன்ன எல்லாச் செய்திகளையும் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள். அது தான் சிறப்பு! எல்லாவற்றையும் விட இக்குருவியினத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை உங்கள் எழுத்தில் தெரிகிறது. உங்களைப் போலவே சிட்டுக்குருவி வரவில்லையென்றால் அவைகளுக்கு என்னவாயிற்றோ என்று நானும் கவலைப்படுவேன். அவற்றின் கீச் கீச் சத்தம் போல எனக்கு இனிமை தரும் சங்கீதம் வேறில்லை. அவைகளுக்குக் கூடு கட்டுவதைப் பற்றி நானெழுதிய பதிவை வாசித்தீர்களா என்று தெரியவில்லை. அதன் இணைப்பு இது:-http://unjal.blogspot.com/2015/04/blog-post.html சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற இப்பதிவு இதன் மேல் அக்கறை உள்ளவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. நானும் ஸ்டேட் வங்கியில்வேலை பார்க்கிறேன். நீங்கள் வங்கியாளர் என்றறிய மகிழ்ச்சி. ஊமைக்கனவுகள் தளத்தில் என்னை மிகவும் புகழ்ந்திருந்தீர்கள். மிகவும் நன்றி. ஆனால் அந்தளவுக்குப் புகழப்பட நான் பெரிய சாதனையாளர் இல்லை. ஊமைக்கனவுகள் சகோவை நோக்குமிடத்து நான் மிகவும் சாதாரணமானவள். மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி கலையரசி அவர்களே! சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவது பற்றிய தங்களின் பதிவையும் படித்தேன். அவைகள் கூடு கட்ட எடுக்கும் முயற்சிகளை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது தங்களின் பதிவை படிக்கும்போது. அவைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்திருந்தால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும். மிக நேர்த்தியாக வர்ணித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!
   உங்களை ‘ஊமைக்கனவுகள்’ வலைத்தளத்தில் புகழ்ந்துள்ளதாக கூறியுள்ளீர்கள். என் மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன் அவ்வளவே.நீங்களும் ஒரு சாதனையாளர் தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
   தாங்களும் ஒரு வங்கியாளர் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. 34 ஆண்டுகள் சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான் தற்போது இருப்பது சென்னையில்.

   நீக்கு
 13. வணக்கம் ஐயா.

  அறிவியற்பெயரில் இருந்து தொடங்கி நடைமுறையில் சிட்டுக்குருவிகளோடு தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் வரை ஈர்த்துப்போகின்ற மொழிநடையில் உரிய தினத்தில் வெளியிடப்பட்ட பதிவு.

  சிட்டுக்குருவிகளின் அழிவும் காரணங்களும் உணர்ந்தவை எனினும் அதன்மேல் காட்டப்படும் பரிவிற்குத் தங்களைப் போன்றோர் எழுதும் இவை போன்ற பதிவுகள் பெரிதும் துணைபுரியும்.

  தாங்களும் சகோ. கலையரசி அவர்களும் கூறுமளவிற்கு நான் இல்லை என்பதே உண்மை. இது ஒருபோதும் தன்னடக்கம் அன்று.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நீங்கள் எனது பழைய பதிவுகளை நேரம் கிடைக்கும்போது பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

   நீக்கு