ஞாயிறு, 4 மே, 2014

நினைவோட்டம் 79



கல்லூரியில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி உடற்கல்வி ஆசிரியர் 
திரு ஜோசப் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் கோலாகலத்துடன் 
நடக்கும்.நான்  படித்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக 
அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை 
அழைத்திருந்தார்கள்.  


சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோதும், கல்லூரி 
முதல்வர் அருட் தந்தை எரார்ட் (Rev Fr Ehrhart SJ) அவர்களிடம் காட்டிய 
பணிவு எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி முதல்வர் அவரை 
வரவேற்று பேசியபோது தான் அதன் காரணம் புரிந்தது எங்களுக்கு.

முதல்வர் அவர்கள் தனது வரவேற்புரையில் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தும்போது, அவர் எங்கள் கல்லூரியின் பழைய மாணவர் 
என்ற உண்மையை சொல்லி, தான் படித்த கல்லூரிக்கு ஒருவர். அதுவும் 
அந்த கல்லூரி அமைந்திருக்கும் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக 
இருக்கும்போது சிறப்பு விருந்தினராக வருவதே ஒரு சிறப்புதான் 
என்றபோது எழுந்த கைத்தட்டலின் ஓசையால் கல்லூரி வளாகமே 
அதிர்ந்தது.

மாவட்ட ஆட்சியரும், தான் இந்த நிலையை அடைய உதவியது 
கல்லூரியில் கற்றுக்கொண்ட கட்டுப்பாடும் ஒழுக்கமும் தான் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதாகவும், புனித வளவனார் 
கல்லூரியில் பயின்றோர் சோடை போகமாட்டார்கள் என்றும் சொன்னார்.

அவர் சொன்னதில் தவறில்லை என்பதற்கு, எங்கள் கல்லூரியில் படித்து 
பின்பு பிரபலங்கள் ஆன முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.அப்துல் கலாம் 
அவர்கள், எழுத்தாளர்கள் சுஜாதா, சாண்டில்யன், நீதிபதி அசோக் குமார், 
நடிகர்கள் அசோகன், நெப்போலியன்  திரைப்பட இயக்குனர்கள் வசந்த், 
பிரபு சாலமன், போன்றவர்களே சான்று.

அந்த விளையாட்டு விழாவின் இடைவேளையின் போது மாணவர்கள் 
தாகத்தை தணித்துக் கொள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த Stall இல் 
குளிர் பானங்களை அருந்த எங்களுக்கு கூப்பன் கொடுத்திருந்தார்கள்.

அந்த கூப்பனில் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர் (William Shakespeare)
அவர்களின் புகழ்பெற்ற படைப்பான As you like it என்பதை 
அச்சிட்டிருந்தார்கள். Stall க்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாம் விரும்பும் 
எந்த குளிர்பானத்தையும் வாங்கிக்கொள்ளலாம் என்பதை அப்படி ஒரு 
இலக்கிய நயத்தோடு சொல்லியிருந்தார்கள் என்று.

நான் படிக்கும்போது நடந்த இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. 
எங்கள் கல்லூரியில் ஒருமுறை Lawley Hall இல் ஒரு சனிக்கிழமை மதியம் 
தமிழ் திரைப்படம் ஒன்றைக் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 
எங்களுக்கு ஒரே ஆச்சரியம். கண்டிப்பான கல்லூரியிலும் திரைப்படம் காண்பிக்கிறார்களே என்று.

எங்களுக்கு அப்போது காண்பிக்கப் படம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 
நிறுவனம் தயாரித்து 1958 இல் வெளிவந்த பிரபல பாடகரும் நடிகருமான 
திரு T.R. மகாலிங்கம் நடித்திருந்த மாலையிட்ட மங்கை என்ற திரைப்படம். 
அந்த படத்தில் இருந்த எல்லா பாடல்களுமே பிரபலமானவைகள்


அந்த படம் திரு மகாலிங்கம் அவர்களுக்கு திரையுலக மறு பிரவேசம் 
எனவும் சொல்லலாம். இந்த படத்தில் தான் நகைச்சுவை நடிகை மனோரமா 
அவர்கள் முதன் முதல் அறிமுகமானார்.

அதில் திரு T.R. மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் என்ற 
பாட்டு இன்றைக்கும் எல்லோராலும் விரும்பப்படும் பாடல். திரைப்படத்தில் 
அந்த பாடல் இருமுறை வரும். ஒன்று அவர் பாடிய சந்தோஷமான பாடல். இன்னொன்று திருமதி ஜமுனா ராணி அவர்கள் பாடிய சோகமான பாடல்.
  
நாங்கள் எல்லோரும் படத்தைக் காணவும், இனிமையான பாடல்களைக் 
கேட்கவும் Lawley Hall இல் வெகு ஆவலோடு கூடியிருந்தோம். படம் 
ஆரம்பிக்கு முன்னர் கல்லூரி முதல்வர் அருட் தந்தை எரார்ட் அவர்களும் 
வந்து அரங்கின் பின் வரிசையில் எங்களோடு அமர்ந்துகொண்டார்.

தமிழ் படத்தை அவரும் எங்களோடு பார்க்க போகிறாரா என்று எங்களுக்கு 
ஒரே ஆச்சரியம். அப்புறம் தான் தெரிந்தது அவர் வந்து அமர்ந்தது படம் 
பார்க்க அல்ல என்றும் மாணவர்கள் ஏதும் சத்தம் போடக்கூடாது 
என்பதற்காக என்று.

அவ்வளவுதான் அதுவரை இருந்த எங்களது உற்சாகம் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டது. சத்தமே போடாமல், கை தட்டாமல் அமைதியாய் 
இருந்து திரைப்படத்தை இரசிப்பது(!) அதுவும் மாணவப் பருவத்தினருக்கு 
எவ்வளவு கடினம் என்பதை அனுபவித்த எங்களுக்குத்தான் தெரியும்.

சத்தமே காட்டாமல் அமைதியாய் அமர்ந்து படம் பார்த்தபோது இன்னொரு 
ஏமாற்றம். சோக கீதத்தில் திருமதி ஜமுனா ராணி பாடல் செந்தமிழ் 
தேன்மொழியாள் என்ற பாடல் படத்திலே இல்லவே இல்லை. பின்னர் 
அது பற்றி விசாரித்தபோது கல்லூரி முதல்வர் ஒரே பாட்டு இரண்டு தடவை 
எதற்கு (?) என்று அதை நீக்க சொல்லிவிட்டாராம்.

நல்ல வேளை அதற்குப் பிறகு கல்லூரியில் வேறெந்த திரைப்படத்தையும் 
பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படவில்லை. 

ஆண்டு இறுதியில் கல்லூரி வெளியிடும் ஆண்டு மலருக்கு மாணவர்கள் தங்கள் படைப்புகளை தரலாம் என அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த நான் Indian Ink இல் ஒரு நடராஜர் படத்தையும் மகாத்மா காந்தி படத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு வரைந்து கொண்டுபோய் அந்த மலருக்கு பொறுப்பாசிரியராக இருந்த Rev Fr T.N.செக்யூரா அவர்களிடம் கொடுத்தேன். அந்த படங்களை பார்த்த அவர் மலரில் இடம் இருந்தால் போடுகிறேன். என்று வாங்கிக்கொண்டார்.
  
எனது ஓவியம் ஆண்டு மலரில் இடம் பெறாது என நினைத்திருந்தபோது, நான் வரைந்திருந்த ஓவியம் அந்த மலரில் வெளியாகியிருந்தது. அந்த ஆண்டு மலரை பல ஆண்டுகள் பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எங்கோ காணாமல் போய்விட்டது. 

(பின் குறிப்பு: கடந்த பத்து நாட்களாக தொலைபேசி இணைப்பு பழுதாகி வேலை செய்யாததால் எனது பதிவை வெளியிட இயலவில்லை.இன்று மதியம் தான் இணைப்பு கிடைத்து இணையத்தில் உலவ முடிந்தது. தாமதமானாலும் பழுதை சரி செய்த  BSNL க்கு நன்றிகள் பல!) 

நினைவுகள் தொடரும் 
  
வே.நடனசபாபதி  










18 கருத்துகள்:

  1. லாலி ஹால் நினைவுகள் வாழ்க! ஒருமுறை லாலி ஹாலில் அவர்களது பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சினிமா ஒன்றை காட்டினார்கள். நான் வெளி பள்ளி மாணவன். இருந்தும் அந்த பள்ளி, கல்லூரி ஊழியர்கள் பலர் எனது அப்பாவுக்கு பழக்கம் என்பதால் அனுமதி தந்தார்கள். அதற்கு அப்புறம் அங்கு நான் படம் பார்க்க சென்றது இல்லை.

    உங்கள் ஓவியம் இடம் பெற்ற அந்த ஆண்டு மலர் எந்த வருடம் என்று சொல்லி, உங்களுடைய கல்லூரியில் கேட்டால் விவரம் சொல்லுவார்கள். (1977 வெள்ளத்தில் செயிண்ட் ஜோசப் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி நூலகங்களின் புத்தகங்கள் பல அழிந்து போயின. ) எந்த வருடம் என்பதனை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி கல்லூரியை தொடர்புகொண்டு எனது ஓவியம் இடம்பெற்ற ஆண்டுமலர் இருக்கிறதா என விசாரிக்கிறேன்.

      நீக்கு
  2. கல்லூரி நினைவுகளை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள் .
    முந்தைய பதிவுகளை படிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  3. இலக்கிய நயத்தோடு இனிமையான அனுபவம்...

    ஒவ்வொரு பாடலும் சிறப்பான பாடல் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. //பின்னர் அது பற்றி விசாரித்தபோது கல்லூரி முதல்வர் ஒரே பாட்டு இரண்டு தடவை எதற்கு (?) என்று அதை நீக்க சொல்லிவிட்டாராம்./

    நான் படிக்கும்பொழுது, எங்கள் ஹாஸ்டலில் வருடாவருடம் திரைப்பட விழா நடக்கும். பத்து நாட்கள் தொடர்ந்து சினிமா திரையிடுவார்கள். நல்ல பாடல்கள் வந்தால் மீண்டும் மீண்டும், திரையிட்டு நெகடிவையே வீணடித்துவிடுவார்கள். ஆனால், மாணவர்கள் மட்டுமே இருப்போம். ஆசிரியர்கள் யாரும் வரமாட்டார்கள். ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு விதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு விதம் தான்.

      நீக்கு
  6. தொலைபேசி இணைப்பில் பழுதா? அப்படியானால் நீங்கள் இன்னும் BSNL இணைப்பைத்தான் நம்பியுள்ளீர்களா? நானும் ஒரு காலத்தில் (சர்வீசில் இருக்கும்போது) அதைத்தான் நம்பியிருந்தேன். இப்போது அதை விட நல்ல விரைவான பல தனியார் நிறுவனங்களுடைய இணைப்பு உள்ளதே? நினைவோட்டம் மிக அருமையாக செல்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் ஆரம்பத்தில் Sify யின் இணைப்பை வைத்திருந்தேன்.அதிலும் சில சிக்கல்கள் வந்ததால் 2006 ஆம் ஆண்டிலிருந்து BSNL இணைப்பை நம்பி இருக்கிறேன்.இது போன்ற நிலை தொடர்ந்தால் வேறு நிறுவனங்கள் தரும் சேவைக்கு மாறவேண்டியதுதான்.

      நீக்கு
  7. செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் எனக்கும் நினைவில் நிற்கும் பாடல் - கல்லூரி சமயத்தில் என்னுடைய தோழிகள் சிலர் இந்தப் பாடலுக்கு நடனமாடினார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  8. நினைவோட்டம் படிப்பதற்கு சுவை என்பது மட்டுமல்லாமல் எழுதுபவரின் இயல்புகளையும் கோடி காட்டிச் செல்கிறது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  9. காலத்தைக் கடந்து நிற்கும் பாட்டல்லவா அது!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! 56 ஆண்டுகள் சென்ற பின்னும் நாம் அந்த பாடல் பற்றி பேசுகிறோம் என்பதிலிருந்தே அது ஒரு காலம் கடந்து நிற்கும் பாடல் என்பதில் ஐயம் இல்லை.

    பதிலளிநீக்கு