வெள்ளி, 30 மே, 2014

எதற்கும் எப்போதும் மாற்று வழி (Alternative) உண்டு!முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது மன அலைகள் வலைப்பதிவில் 
சமீபத்தில் எனது பெங்களூரு விஜயம் என்ற பதிவில், பெங்களூரு செல்வதற்காக இரயிலில் முன் பதிவு செய்த பின், பெங்களூருவிற்கு புறப்படும் நாளன்று ஏற்பட்ட கவலைகள் பற்றி அவரது பாணியில் வழக்கம்போல் சுவைபட எழுதியிருந்தார்.

அவருக்கு ஏற்பட்ட கவலைகள் போன்று நான் படித்த ஒரு தகவலை பதிவிட இருப்பதாக அந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தேன். அவரும், எழுதுங்கள். காத்திருக்கிறேன். என்று நம்பிக்கை அளித்ததால் அதை இங்கே 
பகிர்ந்துகொள்கிறேன். 
  
நம்மில் பலருக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் வருவதுண்டு. அந்த சந்தேகம் ஒன்றோடு நிற்பதில்லை. ஒரு சந்தேகம் தீர்வதற்குள் இன்னொரு சந்தேகம் 
ஏற்பட்டு தொடர் கதைபோல் தொடர் சந்தேகமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக தேர்வு எழுதுவோருக்கு தேர்வுக்கு நன்றாக தயார் 
செய்யமுடியுமா என்றும், அப்படி தயார் செய்தாலும் நன்றாக தேர்வு எழுத 
முடியுமா என்றும், அப்படி எழுதினாலும் தேர்வில் வெற்றி பெறுவோமா 
என்றும், வெற்றிபெற்றால் நல்ல மதிப்பெண்கள் என்றும் கிடைக்குமா என்றும், 
அப்படி நல்ல மதிப்பெண்கள் கிடைத்தாலும் நல்ல கல்லூரியில் இடம்   
கிடைக்குமா என்றும், நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தாலும்  நாம் 
விரும்பிய பாடப் பிரிவு கிடக்குமா என்றும், அப்படி கிடைத்தாலும் நன்றாக 
படித்து வேலைக்குப் போகமுடியுமா என்பது போன்ற  சந்தேகங்கள் 
வருவதுண்டு. இந்த சந்தேகத்தொடரை இன்னும்கூட  நீட்டிக்கொண்டு 
போகலாம். 

அப்படிப்பட்ட சந்தேகப் பிராணி பற்றிய செய்தி இது. ஒரு இளைஞன் 
மிக மிக கவலையோடு இருந்தானாம். அவனது கவலைக்கு காரணம் என்ன 
என்று கேட்டதற்கு  இளைஞர்களை பாதுகாப்புப் படைக்கு ஆள் எடுக்க அரசு 
சட்டம் கொண்டு வரப்போவதாகவும் அப்போது தன்னைப்போன்ற இளைஞர்கள் பாதுகாப்புப் படையில் சேர அழைக்கப்படலாம் என வதந்தி உலவுவதாகவும் சொன்னான்.

அந்த வதந்தியைக் கேட்ட பிறகு  தனக்கு இரண்டு விதமான கவலைகள் 
இருப்பதாக சொன்ன அவன் மேலும் சொன்னான். 
  
“அந்த வதந்தி உண்மையாய் இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். 
அது பொய்யாக இருப்பின் கவலை இல்லை. ஆனால் அந்த வதந்தி 
உண்மையாக இருப்பின் என்னை படையில் பணிபுரிய அழைப்பார்களோ 
அல்லது மாட்டார்களோ  என்ற இரண்டு கவலைகள்.

என்னை படையில் பணிபுரிய அழைக்காவிடில் கவலை இல்லை. 
ஆனால் அழைத்தால், என்னை போர்முனைக்கு அனுப்புவார்களோ அல்லது மாட்டார்களோ என்ற இரண்டு கவலைகள்.

என்னை போர்முனைக்கு அனுப்பாவிடில் கவலை இல்லை. ஆனால் 
போர்முனைக்கு அனுப்பினால் அங்கே எதிரியின் துப்பாக்கியை சூட்டை 
சந்திப்பேனோ அல்லது தப்பிப்போனோ என்று  இரண்டு கவலைகள்.

போர் முனையில் துப்பாக்கி சூட்டை சந்திக்காவிடில் கவலை இல்லை. 
ஆனால் எதிரியின் துப்பாக்கி சூட்டை சந்திக்கவேண்டியிருந்தால் காயம் 
ஏற்படுமோ அல்லது ஏற்படாதோ என்று இரண்டு கவலைகள்.

போரில் காயம் ஏற்படாவிட்டால் கவலை இல்லை. அப்படி காயம் ஏற்பட்டால் 
அது எனது உயிரைப் பறிக்குமோ அல்லது சாதாரண காயமாக இருக்குமோ 
என்று இரண்டு கவலைகள். 

சாதாரண காயமாக இருந்தால் கவலை இல்லை. அப்படி அது எனது உயிரைப் பறித்தால், யுத்தகளத்தில் எனது உடலுக்கு ஈமக்கிரியை செய்ய மதகுருமார்கள் இருப்பார்களோ இல்லையோ என்று இரண்டு கவலைகள்
.
மதகுருமார்கள் இருந்தால் கவலை இல்லை. இல்லையென்றால் நான் 
நரகத்திற்கு போக வேண்டியிருக்குமோ அல்லது  போகாமல் இருப்பேனோ 
என்று இரண்டு கவலைகள்.

நரகத்திற்கு போகாவிடில் கவலை இல்லை. அப்படி நரகத்திற்கு போனால் 
அங்குள்ள சாலைகளில் பயணம் செய்வது, சென்னை, பெங்களூரு மற்றும் 
மும்பை சாலைகளைவிட மோசமாக இருக்குமோ என்ற கவலைதான்.” 

அவன் சொன்னது வேடிக்கை போலத்தோன்றினாலும், அதில் ஒரு தகவல் 
இருப்பது உண்மை. எவ்வளவு சிக்கலான பிரச்சினை என்றாலும் அதை 
இருமத் தெரிவாக (Binary Choice) பிரிக்கலாம் என்பதே இந்த கதையின் 
படிப்பினை!

‘’எவ்வளவு மோசமான சூழ்நிலையானாலும் அதற்கு இரண்டு விருப்பத் 
தேர்வு (Option) உண்டு.’’ என்ற ஒரு போலந்து பழமொழியை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

26 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  கவலைகளை அடுக்கிகொண்டு சென்றுள்ளீர்கள்... நல்ல சிந்தனையோட்ம் உள்ள கவலை.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 2. வித்தியாசமான பதிவு
  இரண்டு விருப்பத் தேர்வுகள் சரி
  ஆனால் அது கவலையும் அவநம்பிக்கை கொண்டதாக இருக்கக் கூடாது என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மருத்துவர் முருகானந்தன் M.K அவர்களே! நீங்கள் சொல்வதும் சரிதான்.

   நீக்கு
 3. சொன்ன படிப்பினை அருமை... பல பதிவுகளை எழுத தூண்டும் பகிர்வு... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. வாழ்க்கையை இப்படி சந்தேகத்துடனேயே வாழ்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். ஆனால் அப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. ஆஹா, எனக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி, நடனசபாபதி. ஒரு தடவை கோவைக்கு வாருங்களேன். சுற்றியுள்ள இடங்களை எல்லாம் பார்த்து, இருவரும் ஆளுக்கு ஒரு பத்து பதிவு தேத்தி விடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு விளம்பரம் தேவையா என்ன? கோவை வர அழைத்தமைக்கு நன்றி ஐயா. அவசியம் கோவை வருவேன் தங்களை சந்திக்க. சந்திப்பு பற்றி பத்து பதிவு போட இயலாவிட்டாலும் ஆளுக்கொன்றாவது போடமாட்டோமா என்ன?

   நீக்கு
 6. தலைய சுத்துது. ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கவலை தாங்காது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே! வீணாக கவலைப்பட்டால் கஷ்டப்படவேண்டியதுதான்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 8. நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போல எதற்கும் இரு முடிவுகள். சொல்லிச் சென்றது ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ‘G.M பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 9. கதையில் உள்ளதுபோல எந்தப் பிரச்ச்னைக்கும் ஏகப்பட்ட வழிகள் உண்டு. சிலர் வேலையை செய்யாமல் இருப்பதற்கு ஏகப்பட்ட வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் வேலையை செய்வதற்கு அவர்களுக்கு அடுத்தவர்கள்தான் வழி சொல்லவேண்டும். மருத்துவர் கூறியதுபோல வழிகள் கவலையும் அவநம்பிக்கையை மட்டுமே சார்ந்து இருக்காமல் பார்த்துக்கொள்வது எப்பொழுதும் நல்லது என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ‘விருப்பத் தேர்வுகள் கவலையும் அவநம்பிக்கையை மட்டுமே சார்ந்து இருக்காமல் பார்த்துக்கொள்வது எப்பொழுதும் நல்லது.’ என்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

   நீக்கு
 10. மனம் கனப்பது போன்று ஆகிவிட்டது ஐயா.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை KILLERJEE அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. கவலைப் பட ஆரம்பித்து விட்டால் அதற்கு முடிவு தான் ஏது........

  பதிலளிநீக்கு
 13. ஒரு சந்தேகப் பிராணியான இளைஞனின் கதை நன்றாகவே இருந்தது. எந்தப் பிரச்சினைக்கும் இருவழித் தீர்வு உண்டு என்ற உங்கள் பதிவு தரும் செய்திக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! கவலை இல்லாத மனிதன் உண்டோ? ஆனாலும் தேவையில்லாமல் கவலைப்பட்டால் அதற்கு முடிவு இல்லைதான்.

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

  பதிலளிநீக்கு
 16. On the face of it, this blog appears very hilarious however highly thought provoking ...Such doubting Thomasses not only end up being miserable but are a sheer pain for others. I am remembered of a hilarious scene in a very old movie starring Gemini/nagesh etc.
  The scene : A marriage is about to take place. Nagesh the inimitable comedian that he was, starts suddenly crying .. People seek his explanation as to why he is
  ruining the whole show ....why should he weep when an auspicious event is taking place.. His reply left every one in the audience in splits. He says he was wondering what would be the consequence of the Pandahl catching fire if the oil from the lamp(Kuthu villaku) spills on the ground ..the fire would spread and destroy the Marriage pandhal ..leading to destruction of property etc etc ..may be the groom too may die in the accident and the marriage would not take place etc etc..In my view people who suffer from Obsessive compulsive disorder are prone to such behavior. All said and done thanks to the blog of Mr.Palani kandaswami, that has given birth to this blog of yours. K.Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! அனாவசிய எண்ணங்கள் ஊடுருவதால் ஏற்படும் பதற்றக் குழப்பமே சிலரை சந்தேகப்பிராணிகளாக ஆக்கிவிடுகிறது என்கிறார்கள் அறிவியலார்.

   ஜெமினி கணேசன் & நாகேஷ் நடித்த நீங்கள் குறிப்பிடும் படத்தை நான் பார்த்ததாக நினைவில்லை.இருப்பினும் நீங்கள் கூறிய காட்சியில், நடிகர் நாகேஷ் அவர்கள் எப்படி நடித்திருப்பார் என கற்பனை செய்து பார்த்து இரசித்தேன்.

   நீக்கு