செவ்வாய், 22 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 6




ஏமாற்றுபவர்களை நமக்கு முன்பின் தெரியாதவர்கள் என்றும் நமக்குத் தெரிந்தவர்கள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். முன்பின் தெரியாதவர்களிடம் ஏமாறுவதென்பது, முன்பே சொன்னதுபோல அவர்களின் பேச்சாற்றலில் மயங்கியோ அல்லது அவர்கள் மேல் ஏற்படுகின்ற அதீத நம்பிக்கையாலோ அல்லது அவர்களின் நடிப்பை நம்பி இரக்கப்பட்டோ அல்லது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பியோ ஏமாறுவது.  

 

நமக்கு தெரிந்தவர்களிடம் ஏமாறுவதென்பது நமக்குத் தெரிந்தவர் சொல்வது சரியாக இருக்கும் என நம்பி ஏமாறுவது அல்லது அவர்கள் கைமாற்றாக கடன் கேட்கும்போது அவரது முகதாட்சண்யத்திற்கு உதவி செய்துவிட்டு ஏமாறுவது.

 

முதலில் குறிப்பிட்டவர்களிடம் ஏமாறிய பிறகு ஏமாந்தது தெரியும்போது நம்மை நாமே நிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் தெரிந்தவர்களிடம் ஏமாந்துவிட்டு, அது தெரியும்போது, தெரிந்தவர்கள் இப்படி நம்மை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என அறியும்போது வீணான மனக்கசப்புதான் மிஞ்சும்.   

 

தெரிந்தவர்களிடம் ஏமாந்தவர்கள் அனேகமாக சொந்த ஊருக்கு அருகே பணிபுரிபவர்களாகத்தான் இருப்பார்கள். ஊருக்கு அருகே உள்ள நகரில் பணியில் இருப்பது சௌகரியம் என்றாலும் சில நேரம் அதுவே அசௌகரியமாகவும் இருக்கும். ஊரிலிருந்து நகருக்கு பொருட்கள் வருவோர் சிலர் ஏதேனும் காரணம் சொல்லி நம் ஊர்க்காரர் தானே என எண்ணி நகரில் வசிப்போரிடம் கடன் கேட்க வருவதுண்டு.  

 

அதில் சிலர் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் சிலர் பொய் சொல்லி கடன் கேட்பதும் உண்டு.அவர்கள் சொல்வதை நம்பி கடன் தந்தால் திருப்பித்தருவார்களோ இல்லையோ என நினைத்து, இல்லையென்று சொல்லிவிட்டால் அவர்களோடு உள்ள உறவு பாதிக்கப்படும். ஒருவேளை பணத்தைக் கொடுத்து அவர்கள் திருப்பித் தரவில்லையென்றாலும் உறவு கெடும். இதுபோன்ற நிலையில் பலபேர் கேட்ட பணத்தைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுத்து நிலைமையை சமாளிப்பதுண்டு.

 

மக்களை ஏமாற்றி அவர்களின் அனுதாபத்தைப் பெற்று பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரர்களை தெரிந்துகொண்டு அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை மடக்குபவர்களும் உண்டு. ஏமாற்றுபவர்கள் விடாக்கண்டர்கள் என்றால் இவர்கள் கொடாக்கண்டர்கள்.

 

எங்கள் ஊரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இது போன்ற சூழ்நிலைகளை சமாளித்த விதமே தனி! அவர் விருத்தாசலத்தில் பள்ளியில் பணிபுரிந்து வந்தபோது பள்ளி விடுமுறையின்போது வீட்டில் இருந்தபோது எங்கள் ஊரில் இருந்து வந்த ஒருவர் அவரைத்தேடி வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் ஆசிரியர் புரிந்துகொண்டார். இவர் எதற்கு வந்திருக்கிறார் என்று.

 

மலர்ந்த முகத்தோடு வாருங்கள். வாருங்கள் என அவரை வரவேற்று அமர சொல்லிவிட்டு, திரும்பி உள்ளே அவரது துணைவியாரிடம் யார் வந்திருக்கிறார் எனப் பார். நம் ஊர் மிராஸ்தார் வந்திருக்கிறார். ஒரு சொம்பில் குடிக்கக் தண்ணீர் கொண்டு வா. என்றிருக்கிறார்.

 

பின்பு அவரிடம், பாருங்கள். என்னைப்போன்ற மாதச் சம்பளம் வாங்கும் ஆசிரியரால் உங்களைப் போல் அரிதாக வருபவர்களுக்கு மாதக் கடைசி என்பதால்  தண்ணீர் தான் கொடுக்க முடிகிறது. ஆனால் உங்களைப் போன்ற நிலக்கிழார்களுக்கு கவலையே இல்லை. எந்த நேரமும் பணம் புழங்கும் ஆட்கள் நீங்கள். எங்களைப் பாருங்கள் முதல் தேதி வரும் சம்பளம் மாதக் கடைசிவரை கூட வருவதில்லை. என்றிருக்கிறார்.

 

வந்தவருக்கு தர்மசங்கடம். அவர் வந்தது இவரிடம் பணம் பெற்றுக்கொண்டு போகத்தான். ஆசிரியர் ஆரம்பத்திலேயே பணம் இல்லை என்பதை குறிப்பினால் தெரிவித்துவிட்டதால் எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

 

அந்த ஆசிரியர் அவரிடம் எப்படி இருக்கிறீர்கள்? ஊரில் அனைவரும் நலந்தானே?’ என விசாரித்துவிட்டு, அப்புறம்.. என்றிருக்கிறார். இதுதான் சமயம் என்று வந்தவர் . ஊரில் அனைவரும் நலமே. நான் இன்று மாட்டு சந்தை என்பதால் சந்தையில் மாடு வாங்க வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்து போக வந்தேன். என்றிருக்கிறார்.

 

அப்படியா. நீங்கள் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. என்றதும், வந்தவர் மாட்டை விற்பவரிடம் பேசி முடித்துவிட்டேன். ஆனால் எதிர்பார்த்ததை போல் பேரம் படியாததால் நான் பார்த்த மாட்டிற்கு அதிக விலை தரவேண்டியுள்ளது. நான் கொண்டு வந்த பணத்தில் ஒரு இருநூறு ரூபாய் குறைகிறது. ஊரில் பணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது கையில் இல்லாததால் பணத்தைக் கொடுத்து மாட்டை வாங்கமுடியவில்லை. அதனால் தான் உங்களைப் பார்த்து வாங்கிப் போகலாம் என்று வந்தேன். நாளை மறுநாள் இங்கு வரும்போது அதை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என்றிருக்கிறார்.       

அவரிடம் பணம் கொடுத்தால் அது நாளை என்ன எப்போதுமே திரும்பாது என்றும் தெரியும் ஆசிரியருக்கு. அதனால் மிகவும் இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டு. ஒன்று செய்யுங்களேன். இப்போது மணி 12 தான் ஆகிறது. இப்போது நம் ஊருக்கு செல்லும் CTP பஸ்ஸில் போனால் வீட்டில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு, அதே பஸ் ஸ்ரீமுஷ்ணம் போய்விட்டு திரும்ப நம் ஊருக்கு வரும்போது அதில் வந்து பணத்தைக் கொடுத்து மாட்டைப் பிடித்து செல்லலாமே. என்றிருக்கிறார்.

 

வந்தவருக்கு அசட்டு சிரிப்புடன், ஊரில் பணம் இப்போது தோதாக இல்லை. அதனால் நீங்கள் கொடுத்தால் அவசியம் திருப்பித் தந்துவிடுகிறேன். என்று சொல்லியிருக்கிறார்.

 

ஆனால் ஆசிரியர் 'என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் உங்களை ஊருக்கு  போய் கொண்டு வரச் சொல்லுகிறேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்று சொல்லிவிட்டார். வந்தவர் வேறு வழியின்றி திரும்பிவிட்டாராம்.

 

இது போல் வேறு காரணம்  சொல்லி பணம் கேட்க வந்தவரை என் உறவினர் எவ்வாறு சமாளித்தார் என்பது அடுத்த பதிவில்.

 

 

 

 

தொடரும்



23 கருத்துகள்:

  1. இப்படியெல்லாம் சமாளிக்க எனக்குத் தெரியாதே. வந்ததும், கேட்டதும் கையிலிருந்தால் பணத்தை கொடுத்து ஏமாந்த கதைகள் பலவுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! இப்போதுதான் தெரிந்துகொண்டீர்களே. இனி சமாளிக்கலாமே!

      நீக்கு
  2. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். யாரும் வேண்டுமென்றே ஏமாறுவதில்லை. இவ்வாறு நானும் ஏமாந்திருக்கிறேன். தெரியாதவர்களிடம் இல்லை. அதை இப்போது நினைத்தாலும் வருத்தம் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! அனேகமாக எல்லோருமே ஒரு முறையாவது ஏமாந்திருப்பார்கள். அதை புத்தி கொள்முதல் என நினைத்து ஆறுதல் பட வேண்டியதுதான்.

      நீக்கு
  3. "//இதுபோன்ற நிலையில் பலபேர் கேட்ட பணத்தைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுத்து நிலைமையை சமாளிப்பதுண்டு.//", இதுவும் சரி, அந்த ஆசிரியர் சமாளித்த விதமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் சிலர் கேட்டதை கொடுக்காமல் குறைவாக கொடுத்து நஷ்டத்தை குறைப்பதும் உண்டு.

      நீக்கு
  4. வந்தவர் தட்டிக்குள் நுழைந்தால் ஆசிரியர் கோலத்திற்குள்ளேயே நுழைந்து விட்டாரே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. நாம் ஏமாறுவதும் ஏமாறாமல் தப்பிப்பதும் அந்த ஒரு நொடியில்தான். கரணம் தப்பினால் மரணம். அந்த ஒரு நொடி எது என்பதும் எப்படி கையாள வேண்டும் என்பதும் ஏமாற்றுபவர்களுக்கு கை வந்த கலை. நம்மைப் போன்ற எதார்த்தவாதிகளுக்கு இது ச்ட்டென புரியாது.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! ஒரு தடவை ஏமாந்தால் அடுத்த தடவை எச்சரிக்கையாக இருப்போம். இது சொந்த அனுபவம்.

      நீக்கு
  6. எதற்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும் என்று புரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது தானே பழமொழி.

      நீக்கு
  7. பதிவை படித்தவுடன் வித்தியாசமான ஒரு பதிவு மனதில் தோன்றியது... விரைவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எனது பதிவு உங்களை ஒரு வித்தியாசமான பதிவை எழுத தூண்டியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. விரைவில் அந்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

      நீக்கு
  8. இந்தமாதிரியெல்லாம் சமாளிக்க எனக்கு தெரியாமபோச்சே தெரிஞ்சிருந்தா... அப்பாவினு பேரெடுத்து இருக்கமாட்டேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு KILLERGEE அவர்களே! இனி அப்பாவியாக இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  9. என்னைப்பொறுத்தவரை yes or no தான். அய்யே, அவன் மூஞ்சில அடிச்சமாதிரி பேசிடுவான்னு, தெரிந்தவர்களும் அதற்கேற்றபடிதான் பழகுவார்கள். உதவி செய்யுமளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவர்களுக்காக ஏன் பொய் சொல்லி சமாளிக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நம் ஊர்க்காரர்களிடமும் நமக்குத் தெரிந்தவர்களிடம் ‘இல்லை’ என்று உடனே சொல்லிவிடமுடியாதே. அதைத்தான் முகத்தாட்சண்யம் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

      நீக்கு
  10. நோ என்று சொல்ல வேண்டிய இடத்தில் யெஸ் என்று சொல்லக் கூடாது. எப்போது நோ எப்போது யெஸ் என்பது பட்டறிவில் தெரிய வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு GM.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  11. Almost every one must have faced this kind of situation atleast once in his/her lifetime. To evade loan seekers especially when they are acquaintances/friends etc is very difficult and one needs all the skills under the sun to master this technique. As you have rightly pointed out this would lead to strained and uneasy relations following refusal to give loans. I used to successfully avoid loan seekers ( where I was sure that the amount would have to be written off) by lending small amounts and never expecting it to be returned. I used to give small amounts say Rs20/ to attenders of the Bank where I worked ...they would never even pretend to return it nor I would demand it back only to ensure that they dont come back with requests for higher amounts.. In any case the technique may vary from person to person. Despite all the precautions taken I too have lent money on humanitarian grounds knowing fully well that ultimately that would have to be written off....Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் கடன் கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்பதைவிட குறைவாக பணம் கொடுத்துவிட்டால் திரும்ப அவர்கள் வரமாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அதை திருப்பிக்கொடுத்துவிட்டு பிறகு அதிகம் கேட்டால் என்ன செய்யமுடியும். எனவே கடன் கேட்பவர்கள் பொய் சொல்லி கடன் கேட்கிறார்கள் என்பதும் அவர்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பித் தரமாட்டார்கள் என்றும் தெரிந்தால்(?) இல்லை என்பதை முதல் தடைவையிலேயே சொல்வது நன்று.

      நீக்கு
  12. வருகைக்கும், நன்றி திரு விக்னேஷ் செல்வம் அவர்களே! தகவலுக்கு நன்றி1

    பதிலளிநீக்கு