சனி, 2 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 7ஏமாற்றுபவர்கள் ஒவ்வொரு தடவையும் ஏதேனும் ஒரு புதிய 

உத்தியைக் கையாண்டு ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. 

எவ்வளவுதான் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் 

ஏமாற்றுபவர்களின் கோணல் புத்தி (Perverted Intelligence) சில சமயம் 

நம்மை ஏமாற வைத்துவிடும்.

 

சிலர் தங்களது சாதுர்ய பேச்சால் அல்லது செயலால் நம்முடைய 

கடவுள் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 

ஏமாற்றுவதும் உண்டு. ஆனாலும் அதை அறிந்து கொண்டு ஏமாற்ற 

நினைப்பவர்களை ஏமாற வைப்பவர்களும் உண்டு.  

 

இன்றைக்கும் பிச்சை எடுப்போர் கடவுள் வேடம் தரித்து வந்து 

கையேந்துகிறார்கள்.அவர்களுக்குத் தெரியும் அவர்களுக்காக 

இல்லாவிடினும் அவர்கள் போட்டிருக்கின்ற வேடத்திற்காவது 

பணம் தருவோர் உண்டு என்று.  

 

ஆனால் சிலர் கடவுள் பெயரை சொல்லி பிச்சை எடுப்பதை 

தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என எண்ணி, கடவுள் பெயரை 

சொல்லி வேறு விதமாக ஏமாற்றுவதும் உண்டு. அருகில் உள்ள 

ஊரில் கோயில் கட்டப்போவதாகவும் அதற்கு நிதி உதவி வேண்டும் 

எனக் கேட்டு வருபவர்கள் அநேகம். ஆடி மாதம் வந்துவிட்டால் 

அம்மனுக்கு கூழ் ஊற்றுவதாக சொல்லிக்கொண்டு பணம் 

பறிப்பவர்களும் உண்டு.

 

இன்னும் சிலர் குழுவாக வந்தால் நமக்கு நம்பிக்கை ஏற்படும் என்று, 

இல்லாத கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த குழுவாக வந்து பணம் 

கேட்பதுண்டு. இதற்கென்றே கொஞ்சம் செலவு செய்து 

துண்டறிக்கை (Notice) அச்சடித்து வந்து கொடுப்பதும் உண்டு.

 

இன்னும் சிலர் இதற்கென்றே பற்றுச்சீட்டு கணக்கேடு (Receipt Book) 

அச்சடித்துக் கொண்டு வருவதும் உண்டு. எங்கள் வங்கியில் 

அலுவலர் ஒருவர் இருந்தார். அவர் வங்கியின் ஆய்வுத்துறையில் 

(Inspection Department) பணியாற்றியபோது வங்கி கிளைகளை ஆய்வு 

செய்ய செல்லும்போது கையில் இது போன்ற பற்றுச்சீட்டு 

கணக்கேடு வைத்திருப்பார்.

 

வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்கு செல்லும் ஆய்வு 

அலுவலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக (at random) சில 

வாடிக்கையாளர்களைத்  தேர்வு செய்து அவர்கள் தொழில் செய்யும் 

இடத்திற்கே சென்று,கள ஆய்வு செய்து வங்கி எந்த நோக்கத்திற்கு 

கடன் கொடுத்ததோ அதற்கே அந்த கடன் தொகை 

உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என சரி பார்க்க வேண்டும் 

என்பது விதி.

 

அவ்வாறு அவர் கள ஆய்வுக்கு செல்லும்போது 

வாடிக்கையாளர்களிடம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 

தன்னுடைய ஊரில் ஒரு கோவில் கட்டப்பட்டு வருவதாகவும் 

அதற்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்பார்.

 

ஊழியர்கள் யாரும் வாடிக்கையாளரிடம் எந்த சலுகையையும் 

பெறக்கூடாது என்பது வங்கியின் விதி. ஆனால் அவர் இவ்வாறு 

நன்கொடை வசூலித்ததை கோவிலுக்குத்தானே பணம் கேட்கிறார் 

என்று யாரும் தலைமை அலுவலகத்திற்கு புகார் ஏதும் 

அனுப்பவில்லை.   

 

வாடிக்கையாளர்களும் வங்கியிலிருந்து ஆய்வுக்காக, வட்ட 

அலுவலகத்திலிருந்து வரும் ஒரு அலுவலர் உண்மையில் 

கோவில் கட்டத்தானே நன்கொடை கேட்கிறார். அதுவும் கோவில் 

கட்ட நிதி கொடுத்தால் புண்ணியம் தானே என்றெண்ணி 

கொடுப்பதுண்டு. மேலும் அவர் வாங்கிய பணத்திற்கு பற்றுச்சீட்டு 

தந்ததால் அவர் மேல் யாருக்கும் ஐயம் வந்ததில்லை.

 

இதுபோல் அவர் பல இடங்களில் மக்களின் கடவுள் நம்பிக்கையை 

மூலதனமாக கொண்டு தனது பதவியை தவறாக பயன்படுத்தி 

பணத்தை கறந்துகொண்டிருந்தார்.  கடைசியில் அவரது இந்த 

தீவிர நன்கொடை வசூல் நடவடிக்கை வங்கியின் கவனத்திற்கு 

சென்றபோது, முழுமையாக விசாரித்ததில் அவரது ஊரில் எந்த 

கோவிலும் கட்டப்படவில்லையென்றும், கோவில் கட்ட என்று 

சொல்லி பெற்ற பணம், அவர் மது குடிப்பதற்காக என்று 

தெரிந்ததும் வங்கி அவர் மேல் நடவடிக்கை எடுத்தது.

 

கடைசியில் புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி கடவுள் 

நம்பிக்கை உள்ள மக்கள் கொடுத்த நன்கொடை ஒரு ஏமாற்றுக்காரரின் 

மதுபான செலவிற்கு சென்றது தான் கொடுமை.

 

இதுபோல் கடவுள் பெயரை சொல்லி என் அண்ணனின் மாமனார் 

அவர்களை ஏமாற்றப் பார்த்தார் ஒருவர். ஒரு நாள் அவர் வீட்டில் 

இருந்தபோது கோவிந்தா! கோவிந்தா! என்ற குரல் கேட்டு வெளியே வந்திருக்கிருக்கிறார்.

 

அங்கே மேனி எங்கும் திருமண் இட்டு கையில் மஞ்சள் துணி 

கட்டிய  ஒரு சொம்போடு ஒரு பக்தர் நின்றிருக்கிறார். அவர் 

மாமாவிடம் ஐயா திருப்பதிக்கு செல்ல இருக்கிறேன். உங்கள் 

வேண்டுதல் ஏதேனும் இருந்தால் அதை  நான் உங்கள் சார்பில் 

அங்கு சேர்ப்பித்து விடுகிறேன். என்றிருக்கிறார்.

 

அப்போதெல்லாம் ஊர்களில் திருப்பதிக்கோ அல்லது பழனிக்கோ 

வேண்டிக்கொண்டு பணம் முடிந்து வைத்திருப்பவர்கள் தாங்கள் 

செல்ல முடியாவிட்டால் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து 

அதை அங்குள்ள உண்டியலில் சேர்ப்பிக்க சொல்வது வழக்கம். 

அதுபோல் வந்தவரும் தான் அந்த பணத்தை உண்டியலில் 

சேர்ப்பதாக கூறியிருக்கிறார்.

 

மாமாவிற்கு தெரிந்துவிட்டது வந்தவர் நூதன முறையில் பணம் 

பறிக்கத்தான் வந்திருக்கிறார் என்று. உடனே வந்தவரிடம் நிச்சயம்.

என் வேண்டுதலை நிறைவேற்றுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

 

அந்த பக்தரும் மகிழ்சியோடு நிச்சயம் நிறைவேற்றுவேன் அய்யா. 

என்றதும் மாமா அவர்கள் நான் திருப்பதியில் மூன்று முறை 

அங்கப்பிரதட்ணம் செய்வதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். அதை 

எனக்காக நீங்கள் நிறைவேற்றிவிடுங்களேன். என்றிருக்கிறார்.

 

மாமா சொன்னதைக் கேட்டவுடன் வந்தவருக்கோ அதிர்ச்சி. 

அவர் எதிர்பார்த்தது பணத்தை. என்னங்க. அங்கப்பிரதட்ணம் 

செய்ய சொல்றீங்க. நீங்கள் உண்டியலில் போட பணம் தருவீர்கள் 

என்றல்லவா நினைத்தேன். என்றாராம்.

 

அதற்கு மாமா ஏன் இதுவும் வேண்டுதல் தானே. நீங்கள் தானே 

எனது வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னீர்கள். 

அதனால் தான் அதை சொன்னேன்.என்ன எனது வேண்டுதலை  

நிறைவேற்றுவீர்கள் தானே ?’ என்றதும், வந்தவர் ஒன்றும் 

சொல்லாமல் ஏமாற்றத்தொடு நகர்ந்துவிட்டாராம்.

 

ஆனால் இதுபோல் எல்லோராலும் முன்னெச்சரிக்கையுடன் 

நடக்கமுடியுமா என்பது சந்தேகமே.

 

 

தொடரும்

23 கருத்துகள்:

 1. ஏமாற்றுபவர்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் பல சமயங்களில் தோற்று விடுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 2. உங்கள் மாமா கேட்டது அருமை இந்தமாதிரி எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு நண்பரே...
  மாமாவுக்கு எனது சார்பில் ஒரு சபாஷ் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  மிக அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 4. இதைத்தான் கோலத்தில் போனால் தடுக்கில் போவது என்கிறார்களோ.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! சரியாய் சொன்னீர்கள்.

   நீக்கு
 5. இதைப் போன்றே திருப்பதியில் பண உதவி கேட்டு வந்தவருக்கு உதவி இருக்கிறார் ஒருவர் .சிலநாட்களில் பணத்தை மதுரையில் வந்து தருவதாக சொன்னவர் வரவே இல்லை ,அவர் சொன்ன முகவரியில் சென்று விசாரித்தால் ,கதவு இலக்கமே இல்லை !
  திருப்பதிக்கு உண்டியலில் போட்டு விட்டதாக ஆறுதல் அடைந்தார் நண்பர் !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! மனமார அந்த பணத்தை ஒருவருக்கு கொடுத்திருந்தால் பரவாயில்லையே. இப்படி ஏமாற்றி பணம் பிடுங்குவோரை பற்றி என்ன சொல்ல. நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

   நீக்கு
 6. ஏமாற்றுபவர்களிடமிருந்து தப்புபவர்கள் என்றால் ஒன்று அவர்களுக்கு ஏமாந்த அனுபவம் (சொந்தமாகவோ, கேள்வியாகவோ) இருக்கவேண்டும். அல்லது அவர்களும் அதே வகையைச் சேர்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் இப்படித்தான் நடக்கவேண்டும் என்றிருந்தால் விதி கண்ணை மறைத்துவிடும் என்பார்கள். தெரிந்து தானமாகக் கொடுத்தால் உறுத்தாது. ஆனால் தெரியாமல் ஒரு எட்டணாவைத் தொலைத்துவிட்டால்கூட அது மனதைவிட்டகல அதிக நேரமாகும். சாப்பாட்டுக்கு இல்லாதவன் ஏமாற்றினால் அது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் வருமானம் உள்ளவர்கள் ஏமாற்றினால் (கோவில் திருப்பணி) தண்டனைதான் தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஒருமுறை ஏமாந்தவர்களால் தான் அடுத்த முறை ஏமாறாமல் இருக்கமுடியும் என்பது சரியே. ஆனால் நம்மை ஏமாற்றியவர்கள் பெற்ற பொருள் அவர்களிடம் தங்காது என்பதை
   வள்ளுவர் அறத்துப்பாலில்
   ‘’ அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
   பிற்பயக்கும் நற்பா லவை.
   என்று அழகாக சொல்லியிருக்கிறார்.

   நீக்கு
 7. ‘நான் திருப்பதியில் மூன்று முறை

  அங்கப்பிரதட்ணம் செய்வதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். அதை

  எனக்காக நீங்கள் நிறைவேற்றிவிடுங்களேன்.// சூப்பர். இப்படித்தான் இவர்களை கையாள வேண்டும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

   நீக்கு
 8. தகவலுக்கு நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. தங்கள் அண்ணனின் மாமனார் அவர்கள் போட்டாரே ஒரு போடு...
  உண்மையில் மக்கள் எல்லோரும் இப்படி இருந்துவிட்டால், இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகள் காணாமல் போய்விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

   நீக்கு
 10. ''..அங்கப்பிரதட்ணம் செய்வதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். அதை
  எனக்காக நீங்கள் நிறைவேற்றிவிடுங்களேன்.’ என்றிருக்கிறார்...'''
  அருமை /புத்திசாதுரியம்.
  அங்கம் 7 லிருந்து தொடங்கியுள்ளேன் ஐயா.
  இன்ரநெற் எக்ஸ்புளொறாவிலிருந்து குரோமுக்கு மாறிவிட்டேன்.
  இப்போது நன்கு வாசிக்க முடிகிறது. இனி தொடர்ந்து வருவேன்.
  பதிவிற்கு நன்றி(அனுபவம் தருவதற்கு)
  வேதா. இலங்காதிலகம்.
  (மன்னித்துக் கொள்ளுங்கள் இதுநாள்வரை வராததற்கு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிற்கு வருகை தந்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 11. வேண்டுதலை நிறைவேற்ற இப்படி ஒரு வழியா? நன்றாக இருக்கிறதே! ஏமாறாமல் இருப்பது நம் சாமர்த்தியம் தான்.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Viya Pathy அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. நல்ல சாமர்த்தியமான சமாளிப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களே!

   நீக்கு