வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 8 

“திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”  

என்கிறார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஏமாற்றுவதும் 

ஒரு திருட்டுதான். ஆனால் இது ஒரு நூதன திருட்டு. இந்த திருட்டை 

செய்பவர்கள் தாங்களாக நிறுத்தினாலோழிய இதை தடுக்கமுடியாது.

 

இவர்களில் திறமைசாலிகளும் உண்டு. ஆனால் அந்த திறமைசாலிகள்’ 

தங்களது அறிவைஅல்லது திறமையை நற் செயல்களுக்குப் 

பயன்படுத்துவதில்லை என்பது தான் வேதனை.  அப்படிப்பட்ட

திறமைசாலி ஒருவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இதோ.

 

சேலத்தில் எங்களது வங்கியின் முதன்மைக் கிளையில் முதுநிலை 

மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை 

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (District Rural Development Agency) 

நடத்தும் மாவட்ட கலந்தாய்வுக் குழுவின் கூட்டத்திற்கு (District Consultative  

committee Meeting) செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன்.

 

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராக இருக்கும் அந்த குழுவில் 

மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுமே அதில் உறுப்பினர்கள்.

அதில் தான் மாவட்டத்தில் வங்கிகள் பங்கு பெற வேண்டிய அரசின் 

திட்டங்கள், வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், முதலியவை   

அலசப்படும். அந்த கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் மட்டுமல்ல 

வங்கியின் உயர் அலுவலர்களும் அரசின் வெவ்வேறு துறையையைச் 

சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொள்வர். ஆண்டு தோறும் நடக்கும் 

அந்த கூட்டம் மிக முக்கியமானது.

 

அது மிக முக்கியமான கூட்டம் என்பதால் சீக்கிரம் செல்லவேண்டும் 

என்பதற்காக காலையில் 7.30 மணிக்கே சிற்றுண்டி சாப்பிட்டு கிளம்ப 

எண்ணி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தொலை பேசி மணி 

அடிப்பதைக் கேட்டு அதை எடுத்தேன். அப்போது எதிர் முனையில் 

பேசியவர்.என்னிடம் இது சிண்டிகேட் வங்கியின் மெயின் பிராஞ்ச் 

கிளையின் மேலாளர் வீடு தானே?’ என்றார்.

 

நான் அதற்கு ஆமாம். என்றதும், நான் DGM(O) பேசறேன்.என்றார் 

எதிர்முனையில் இருந்தவர். அப்போது எங்கள் மண்டல அலுவலகத்தில் 

இருந்த துணைப் பொதுமேலாளர், பணி ஓய்வு பெற்று சென்று விட்டதால் 

புதியவர் வந்து பொறுப்பேற்கும் வரை அங்கிருந்த உதவிப் பொது 

மேலாளர் தற்காலிகமாக அந்த பொறுப்பை  ஏற்றிருந்ததால் அவர்  

Deputy General Manager(Officiating) என அழைக்கப்பட்டார். அதாவது 

சுருக்கமாக DGM(O). ஆனால் சொல்லும்போது DGM என்றே 

சொல்லுவோம்.

 

பேசியவர் எங்கள் வங்கியின் சென்னை மண்டல உதவிப் பொது 

மேலாளர் போல் தோன்றியதால் வணக்கம் சார். சபாபதி. 

பேசுகிறேன். என்றேன். உடனே அவர் சபாபதி. ஒரு உதவி 

செய்யவேண்டும். எனது மைத்துனர் பெங்களூர் செல்லும் வழியில் 

சேலத்தில் அவரது பணம் உட்பட அவரது உடமைகளை 

தொலைத்துவிட்டார். அவருக்கு மேற்கொண்டு பயணிக்க 

பணம் தேவை.

 

நீங்கள் அவரிடம் செலவுக்காக ரூபாய் 5000 த்தை கொடுங்கள். 

நான் காலை அலுவலகம் சென்றதும் அந்த பணத்தை MT (Mail Transfer) 

மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.  இப்போது அவர் சேலம் 

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை 

அருகே நின்றுகொண்டு இருக்கிறார். நீங்கள் உடனே சென்று அவரிடம்  கொடுத்துவிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தெரிவியுங்கள். என்றார்.

 

சரி. என சொல்ல நினைத்த எனக்கு மனதில் ஏதோ ஒரு சந்தேகப் 

பொறி தோன்ற நீங்கள் எங்கள் DGM தானா? சந்தேகமாக இருக்கிறது. 

நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்?’  என்றேன். உடனே அவர் 

என்னை நம்பவில்லையா?. என சொல்லிவிட்டு தொலைபேசி 

இணைப்பை துண்டித்துவிட்டார்.

 

கூப்பிட்டது உண்மையில் Boss ஆக இருக்குமோ நாம் தான் தவறுதலாக எண்ணிவிட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு வந்ததும், எதற்கும் 

திரும்பவும் அவருக்கு தொலைபேசியில் அழைத்து கேட்கலாம் என 

நினைத்து அவரது வீட்டுத் தொலைபேசியில் அவரை தொடர்பு 

கொண்டேன்.

 

அவரது குரலைக் கேட்டதும்,’வணக்கம் சார்.சபாபதி பேசுகிறேன்.’ என்று 

நான் சொன்னதும், சொல்லுங்கள் சபாபதி. நலந்தானே. என்றார். உடனே 

எனக்குத் தெரிந்துவிட்டது என்னை தொலைபேசியில் அழைத்து பணம் 

கொடுக்க சொன்னவர் அவர் இல்லையென்று.

 

இருப்பினும் எனது ஐயம் சரிதானா என உறுதிப்படுத்திக்கொள்ள அவரிடம் 

சார். நீங்கள் சற்றுமுன் என்னை அழைத்தீற்களா?’ என்றேன்.அதற்கு அவர் 

இல்லையே. ஏன். கேட்கிறீர்கள்?’ என்றார்.  

 

நான் உடனே சார். உங்கள் குரலில் யாரோ என்னை அழைத்து உங்கள் 

மைத்துனர் பெங்களூர் செல்லும் வழியில் பணத்தைத் தொலைத்துவிட்டு, 

சேலத்தில் பழைய பேருந்து அருகில் நிற்பதாகவும். உடனே சென்று 

ரூபாய் 5000 த்தை அவரிடம் கொடுக்குமாறும் சொன்னார். என்றேன்.

 

அதற்கு அவர், சபாபதி. எனது மைத்துனர் பெங்களூர் செல்லவும் இல்லை. 

பணத்தை தொலைக்கவும் இல்லை. யாரோ உங்களிடம் போய் சொல்லி 

பணம் பெற முயற்சித்திருக்கிறார்கள்.  நீங்கள் பணம் ஏதும் 

கொடுக்கவில்லைதானே?’ என்றார். இல்லை. சார். எனக்கு சந்தேகம் 

இருந்ததால் அவரை யாரெனக் கேட்டேன். உடனே அவர் தொலைபேசி 

இணைப்பை துண்டித்துவிட்டார். என்றேன்.

 

அவர் உடனே நீங்கள் சேலத்தில் உள்ள நம்முடைய மற்ற கிளை 

மேலாளர்களுக்கும் இது பற்றி சொல்லி விழிப்போடு இருக்க 

சொல்லுங்கள். என்றார். நானும் சேலத்தில் இருந்த எங்கள் வங்கியின் 

மற்ற 5 கிளை மேலாளர்களையும் தொலைபேசியில் அழைத்து 

நடந்தை சொல்லி ஏமாந்து பணத்தை விட்டு விடாதீர்கள். என்றேன்.

 

என்னோடு தொலைபேசியில் பேசியவர் போலியானவர் என்பதை 

எப்படி கண்டுபிடித்தேன் நான்?  

 

 

 

தொடரும்

20 கருத்துகள்:

 1. பாஸ் சொல்கிறார் என்றால் பொதுவாக எல்லோரும் நம்பிவிடுவார்கள். ஆனால் தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு பணத்தை காப்பாற்றி விட்டீர்கள். எப்படி அவர் போலி என்று கண்டுபிடித்தீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அவர் போலி என்பதை எப்படி கண்டுபிடித்தேன் என்பதை அடுத்த பதிவில் சொல்வேன்.

   நீக்கு
 2. சஸ்பென்சாக போகிறதே... வரட்டும் வரட்டும்.
  எனது பதிவு Mr. திருவாளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு ‌KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  அருமையான பாடல் மூலம்மும் தங்களின் வேலை அனுபவம் மூலமும் பதிவை விளக்கியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ‌ரூபன் அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், சஸ்பென்ஸை அறிய காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. அருமை. உள்ளுணர்வு சொல்வது பல வேலைகளில் உண்மையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.நமது வலைத்தளம் : சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ‌சிகரம் பாரதி அவர்களே!

   நீக்கு
 6. சேலத்திலிருந்து பெங்களூருக்கு 5000 ரூபாயா?
  போலியானவர் என்று கண்டுபிடித்தது சரி. அந்த மைத்துனரை வரவழைத்து மாட்டிவிட்டிருக்கவேண்டும்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அவர் கேட்ட பணம் சேலத்திலிருந்து பெங்களூர் செல்ல மட்டுமல்ல, உடைகள் உள்ள பையை தொலைத்துவிட்டதால் உடைகள் வாங்கவும், பெங்களூரில் தங்கும் செலவுக்கும், சேர்த்து ரூபாய் 5000 கேட்டிருக்கிறார்.

   நீக்கு
 7. வலையுலகின் முதல் வலை இதழையும் படித்தேன். பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. சாதாரண ஒரு சம்பவத்தையும் ஒரு சஸ்பென்ஸ் கதை போல் சொல்வது நன்றாக உள்ளது... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வாழ்க்கையே சஸ்பென்ஸாக இருக்கும்போது நிகழ்வுகள் சஸ்பென்ஸாக இருப்பதில் வியப்பில்லையே.

  பதிலளிநீக்கு
 10. ஏமாற்றுபவர்கள், முதலிம் நம்மைப் பற்றிய அவர்களுக்குத் தேவையான விவரங்களை எப்படியோ கேட்டு வைத்துக் கொள்கிறார்கள்.
  அடுத்து என்ன? சஸ்பென்ஸ்! வாழ்க்கையே அதுதானே! தொடருங்கள்!!
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 11. ஒன்று உங்கள் DGM குரல் உங்களுக்குப் பழக்கப் பட்டதாகி இருக்க வேண்டும். இரண்டாவது அந்த உதவியை அவரே செய்யாமல் உங்களிடம் ஏன் கேட்கவேண்டும் என்ற சந்தேகம் எழுந்திருக்கவேண்டும் .உங்கள் DGM-ன் தொலை பேசி எண் உங்களுக்குத் தெரிந்திருந்து வந்தது வேறு எண்ணிலிருந்து என்றால் சந்தேகம் எழுந்திருக்கலாம் சஸ்பென்ஸை உடையுங்கள்..

  பதிலளிநீக்கு
 12. எனக்கு இரண்டு மூன்று காரணங்கள் தோன்றுகிறது. சஸ்பென்ஸை சீக்கிரம் உடையுங்கள். இதற்கு முன் எழுதிய பின்னூட்டம் என்னாயிற்று.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! தொலைபேசியில் என்னை அழைத்தவர் குரல் DGM குரல் போல் தான் இருந்தது.அதில் சந்தேகம் இல்லை. அவர் சென்னையில் இருந்ததால் சேலத்தில் ‘தவித்து’க்கொண்டிருக்கும் அவரது மைத்துனருக்கு அங்கிருந்து உடனே பணம் தர இயலாது என்பதால் தான் அழைத்திருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அப்போது எனது தொலைபேசியில் அழைத்தவர் விவரம் தெரியும் வசதி இல்லை. எனவே கூப்பிட்டது எனது Boss தானா என தொலைபேசி எண்ணைக்கொண்டு அறிந்துகொள்ளவும் முடியாது, பின் எப்படி கண்டுபிடித்தேன் என்பதை இன்று அல்லது நாளை பதிவேற்ற இருக்கும் அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

   நீக்கு