சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 10



 

என்னை ஏமாற்ற நினைத்தவர் பற்றி காவல் துறையிடம் ஏன் புகார் 

தெரிவிக்கவில்லை என்றால் காவல் துறையிடம் எனக்கு முன்பு   

ஏற்பட்ட அனுபவம் தான் காரணம்.

 

எனது பொருள் ஒன்று திருடப்பட்டபோது காவல் நிலையம் சென்று 

புகார் அளித்து போதே உதவாதவர்கள் நான் பணம் ஏதும் இழக்காதபோது 

எனது புகாரை காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள் என்பதால் அந்த 

தவறை செய்யவில்லை.

 

அப்போது நான் சேலத்தில் ஐந்து சாலை அருகே உள்ள ஸ்டேட் வங்கி 

குடியிருப்பில் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே 

இருந்த கொட்டகையில் எனது ஃபியட் காரை நிறுத்தியிருந்தேன்.தினம் 

காலையில் எனது காரை துடைப்பது வழக்கம். (இன்றும் அதை செய்து 

கொண்டு இருக்கிறேன்)

 

ஒரு நாள் காலை காரை துடைக்க வெளியே வந்தபோது எனது காரின் 

இடப்பக்க கதவு திறந்திருப்பதைப் பார்த்தேன். அதிர்ச்சியோடு கதவை 

திறந்து பார்த்தபோது காரில் பொருத்தப்பட்டிருந்த புதிய ஒலிப்பேழை 

இயக்கி (Cassette Player) திருடப்பட்டிருந்தது. அது இருந்த இடத்தில் 

துண்டிக்கப்பட்ட மின் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.

 

பூட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து வந்து எனது 

கார் நிறுத்தப்பட்டிருந்த கொட்டகையில் நுழைந்து யாரோ 

திருடியிருக்கவேண்டும் என யூகித்தேன். எப்படி பூட்டியிருந்த காரை 

திறக்கப்பட்டது எனப் பார்த்தபோது,காரின் முன் உள்ள கண்ணாடியின் 

ஓரத்தில் பிடிப்புக்காக உள்ள இரப்பரை இழுத்து கண்ணாடியை 

அப்படியே வெளியே எடுத்துவிட்டு கையை விட்டு இடப்பக்க கதவைத் 

திறந்து உள்ளே நுழைந்திருக்கிறான் திருடன் என்பதை அறிந்துகொண்டேன்.

 

காரும் அதனுடன் உள்ளவைகளும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் 

காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் முதலில் அந்த காப்பீட்டு நிறுவனத்தின் 

வளர்ச்சி அலுவலரை  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடந்ததை 

சொல்லி என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன். 

 

அதற்கு அவர் சார். நான் நேரில் வருகிறேன். வந்து பார்த்த பின் 

இருவரும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார்

கொடுப்போம். அவர்கள் முதல் தகவல் அறிக்கை கொடுத்து 

திருடுபோனதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என  அறிக்கை 

கொடுத்ததும் உங்களது காப்பீட்டு கோரிக்கையை விரைவில் 

பரிசீலித்து இழப்புத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன்.' 

என்றார்.

 

சொன்னது போலவே சிறிது நேரத்தில் அவர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். 

வந்து பார்த்துவிட்டு, சார். இதுபோல் காரில் உள்ள ஒலிப்பேழை 

இயக்கிகளை திருடுவதற்கென்றே திருடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 

யார் என்பது நிச்சயம் காவலர்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. எனவே 

நாம் புகார் கொடுத்தால் அவர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் 

கொடுக்கலாம். வாருங்கள் போகலாம்.எனக் கூறி அவரது காரிலேயே 

அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

 

என் அதிர்ஷ்டம் காலை வேளையிலேயே நிலையத்தில் காவல் துறை 

ஆய்வாளர் இருந்தார். என்னை அழைத்துசென்ற காப்பீட்டு நிறுவன 

வளர்ச்சி அலுவலர் நேரே என்னை அழைத்து சென்று ஆய்வாளரிடம் 

அறிமுகப்படுத்தி நடந்ததை சொன்னார். நான் பொதுத் துறை வங்கியில் 

முது நிலை மேலாளராக இருக்கிறேன் என்று சொன்னதால் அவர் 

எதிரே இருந்த நாற்காலியில் என்னை உட்கார சொன்னாலும் அவரது 

முகம் என்னை வேண்டாத விருந்தாளியை வரவேற்பதைபோல் 

இருப்பதை. உணர்ந்தேன்.

 

அந்த சிறிய திருட்டுக்காக முதல் தகவல் அறிக்கை (First Information  

Report) தயார் செய்தால், திருட்டு பற்றி புலனாய்வு செய்து அந்த 

கோப்பை முடிக்கும் வரை அவரது மேலதிகாரிகளுக்கு பதில் 

சொல்லவேண்டியிருக்கும் என்ற கவலை அவருக்கு வேண்டா 

வெறுப்பாக சரி. ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுத்து செல்லுங்கள். 

என்றார். நல்ல வேளையாக நாங்கள் வீட்டிலேயே புகாரை 

எழுதிக்கொண்டு சென்றிருந்ததால் அதை கொடுத்துவிட்டு சார் 

எப்போது FIR கிடைக்கும்?’  எனக் கேட்டோம்.

 

அதற்கு அவர் இன்று வெளியே வேலையாக செல்கிறேன். வந்ததும் 

ஆவன செய்கிறேன். என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு  

வெளியே வரும்போது அந்த காப்பீட்டு நிறுவன நண்பர் சார். நல்ல 

வேளை. நாம் புகாரை வீட்டிலேயே எழுதிக் கொண்டுவந்துவிட்டோம். 

இல்லாவிட்டால் அதை எழுத இங்கு பேப்பர் கேட்டால் நம்மை 

வெளியே சென்று ஒரு கொயர் (24 தாட்கள்) பேப்பர் வாங்கி வர சொல்லியிருப்பார்கள். என்று வழக்கமான எனக்குத் தெரியாத 

நடைமுறையைச் சொன்னார்.

 

பின்னர் என்னை வீட்டில் வந்து விட்டு, சார். நீங்கள் FIR படி (Copy) 

வாங்க காவல் நிலையம் செல்லவேண்டாம். நானே வாங்கி வந்து 

தருகிறேன். என்று சொல்லிவிட்டு சென்றார். அதற்குப்பிறகு 

ஒரு வாரம் ஆயிற்று. இரண்டு வாரம் ஆயிற்று. FIR படி 

வந்த பாடில்லை.   

 

ஒரு நாள் அந்த காப்பீட்டு நிறுவன வளர்ச்சி அலுவலர் வந்து,’சார். 

நானும் தினம் நடையாய் நடந்து பார்த்துவிட்டேன். இதோ தருகிறேன். 

இதோ தருகிறேன். என்கிறார்களே தவிர அதை தரவில்லை. நீங்கள் 

எதற்கும் உங்களுக்குத் தெரிந்தவர் மூலம் முயற்சி செய்து 

பாருங்களேன். FIR படியும், திருட்டுப்போன பொருளை கண்டுபிடிக்க 

முடியவில்லை என்ற காவல்துறையின் அறிக்கையும் வந்தால் தான் 

மேற்கொண்டு என்னால் எதுவும் செய்யமுடியும். என்று கூறி 

சென்றுவிட்டார்.

 

சரி.போனது போகட்டும். இதை இத்தோடு விட்டுவிடலாம் என 

நினைத்தபோது, என்னோடு பணிபுரிந்துகொண்டிருந்த சக ஊழியர் 

ஒருவர். சார். கவலை வேண்டாம் எனது சகலர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் A1 பிரிவில் வேலை செய்கிறார். 

அவரை விட்டு சொல்ல சொல்கிறேன். அவர்கள் சொன்னால் நிச்சயம் 

நமக்கு FIR படி கிடைக்கும். என்றார்.

 

அரசு அலுவலகங்களில் அலுவலகப் பணித் தொகுப்பில் 

(Ministerial Service) உள்ள இந்த A1 பிரிவில் பணிபுரிவோர் தான் 

ஊழியர்களின் சம்பளம், பயணப்படி, விடுப்பு போன்றவைகளை கவனிப்பவர்கள்.இவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை 

தமிழக அரசில் பணிபுரிந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி 

எழுதும்போது சொல்லுவேன்.

 

வேடிக்கையாய் சொல்லுவார்கள். காவல் துறையில் பணிபுரிபவர்கள் 

இருவரிடம் தங்கள் அதிகாரத்தைக் காண்பிக்காமல் அனுசரித்துப் 

போவார்களாம். ஒருவர். அரசு மருத்துவர். மற்றவர் A1 பிரிவில் 

பணிபுரிவோர்.

 

சொன்னபடி எனது கிளை நண்பர் எனது பிரச்சினையை அவரது 

சகலரிடம் சொல்ல அவரும் அந்த ஆய்வாளரை தொடர்புகொண்டு   

சீக்கிரம் FIR படியை எனக்குத் தர கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் 

அந்த வேண்டுகோளை விரும்பாவிடினும் அதை தட்டமுடியாமல் 

விரைவில் தருவதாக சொல்லியிருக்கிறார்.

 

பின்னர் ஓரிரு நாட்களில் அந்த காவல் நிலையத்திலிருந்து ஒரு 

காவலர் எனது வீட்டிற்கு வந்து திருட்டுப்போன இடத்தில் நிறுத்தியிருந்த 

எனது காரை பார்வையிட்டுவிட்டு, என் மனைவியிடமும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் விசாரித்துவிட்டு சென்றார்.

 

இது நடந்த வாரத்தில், எனது கிளைக்கு காவல் துறையில் 

ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்று ஒரு நூற்பாலையை  

நடத்திக் கொண்டிருந்த எங்களது முக்கியமான வாடிக்கையாளர் 

ஒருவர் வந்தார். அவரிடம் இது பற்றி சொன்னபோது,’சார். இதை 

என்னிடம் சம்பவம் நடந்த அன்றே சொல்லியிருக்கலாமே. அந்த 

ஆய்வாளர் என்னிடம் பணி புரிந்தவர் தான். நானே வந்து உங்களுக்கு 

FIR படியை வாங்கி கொடுத்தித்திருப்பேனே. என்று சொல்லிவிட்டு 

உடனே அந்த ஆய்வாளரை தொடர்புகொண்டார்.

 

அவரிடம் பேசிவிட்டு, என்னிடம். சார். FIR தயார் செய்து விட்டார்களாம். 

வாருங்கள் நேரில் போய் வாங்கி வரலாம். என்றார்.  நானும் ஆவலுடன் 

அவருடன் அந்த காவல் நிலையத்திற்கு சென்றேன்.  

 

 

 

தொடரும்


 

19 கருத்துகள்:

  1. இன்னும் தொடருமா ? நல்ல சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துகிறீர்கள்.
    நண்பரே கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கவிதையை காணவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தொடரில் ஸஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை. பதிவின் நீளம் கருதி ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டேன்.

      நீக்கு
  2. இந்தக் காவல் துறை பணியாளர்கள் எல்லோரும் ஒரே போல் இருக்கிறார்களே. கவல் துறையினர் உங்கள் நண்பன் எனக்கூறுவதெல்லாம் வெறும் வார்த்தைகளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! காவல் துறை நமது நண்பன் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    தங்களின் ஒவ்வொரு தொடரையும் தொடர்ந்து படித்து வருகிறேன்... இந்த தொடரும் நன்றாக உள்ளது அடுத்த தொடருக்காக காத்திருக்கேன்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  4. நமது நண்பன் என்று சொல்லும் காவல் துறையின் அலட்சியம்தான் அவர்களை தூரத்தில் வைக்கிறது! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! அடுத்து நடந்தது என்ன என்பது அடுத்த பதிவில்.

      நீக்கு
  6. சம்பவம் நடந்த உடனேயே F.I.R - போடுவதில் போலீசாருக்கு என்ன சிரமம் என்று தெரியவில்லை. மேலும் இதுபோன்ற தொல்லைகளினால் நிறையபேர் புகாரே கொடுப்பதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாகப் போய் விடுகிறது.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.காவல் நிலையத்திற்கு சென்றால் உதவி கிடைப்பது கடினம் என்பதால் பெரும்பாலோர் புகாரே தருவதில்லை.

      நீக்கு
  7. வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. முந்தைய பகுதிகளையும் படித்து விட்டு வந்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்துப் பகுதிகளையும் படித்து விட்டேன். பல நேரங்களில் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்தும் ஏமாந்து விடுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    தினந்தோறும் நிதி நிறுவன மோசடிகள் செய்தித்தாளில் வந்து கொண்டிருப்பது நிற்கவில்லை.படித்தவர்களும் விவரம் அறிந்தவர்களையும் ஏமாற்றும் புத்திசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    அடுத்த பகுதியை ஆவலுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! ஆசை இருக்கலாம். பேராசை இருக்கக்கூடாது. அதனால் தான் இன்று தோன்றி நாளை மறையும் நிதி நிறுவனங்களில் மக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

      நீக்கு
  9. என்னிடம் ஒரு முறை உங்களுக்கு கிடைக்கப் போற இன்சூரன்ஸ் தொகையில அஞ்சி பர்சன்ட் குடுத்துருங்க இப்பவே FIR குடுத்துருவாங்க, என்ன சொல்றீங்க என்றார் காவல்நிலைய வாசலில் நின்ற தரகர் ஒருவர். இதெல்லாம் அவர்களுக்கு மிகவும் சகஜம். என்ன செய்வது? வங்கி தலைவர்களே லட்சக் கணக்கில் கையூட்டு கேட்கும்போது நான்கிலக்க ஊதியம் பெறும் காவலர்களை குறை சொல்லி என்ன பயன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வேலியே பயிரை மேயும் போது என் செய்ய!

      நீக்கு
  10. உண்மையில் F.I.R எழுதுவதில் காவல் துறையினருக்கு என்னதான் பிரச்சனை? காவல் துறையினருக்கே இது போல சம்பவம் நிகழ்ந்தால் என்ன செய்வார்கள்? Bar - க்குள்ளே நல்ல நாடு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! காவல் துறையினருக்கு இவ்வாறு நேர்ந்தால் FIR போடாமலே அடுத்த நிமிடத்தில் திருடனைக் கண்டுபிடித்து பொருளை கைப்பற்றிவிடுவார்கள். மக்கள் தான் ஏமாளிகள். அவ்வளவே.

      நீக்கு