புதன், 25 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.121965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் நடக்க இருக்கும் கண்டனப் போராட்டம் போல் எங்கள் பல்கலைக் கழக மாணவர்களும் நடத்தபோகிறாமோ இல்லையா என்று தெரியாமல் அன்றிரவு உறங்க சென்றோம்.காலையில் விழித்தெழுந்த என்னை எங்களது அறையின் அருகே கிடந்த ஒரு சிறிய துண்டறிக்கை (Notice) வரவேற்றது. யார் போட்டிருப்பார்கள் அதில் என்ன இருக்கும் என்ற ஆவல் என்னை உந்த அதை எடுத்துப் படித்தேன்.

சில நாளிதழ்களில் சூடான செய்திகளைத் தரும்போது ‘தொட்டால் சுடும்’ என விளம்பரப் படுத்தியிருப்பார்கள். எப்படி ஒரு நாளிதழை தொட்டால் சுடும் என யோசித்ததுண்டு. ஆனால் அதை அன்று நான் உணர்ந்தேன்.

படிக்கும்போது இரத்த நாளங்கள் சூடேறும் வண்ணம் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இருந்தன. என்னை அறியாமலே நான் உணர்ச்சி வசப்பட்டேன். உண்மையில் அந்த அறிக்கை என் உடலில் வெப்பத்தை உண்டு பண்ணியதை என்னால் அன்று அறிய முடிந்தது.

உடனே எனது வகுப்பு நண்பரும் அறைத் தோழருமான நண்பர் திரு நாச்சியப்பனை எழுப்பி அந்த அறிவிப்பை காண்பித்தேன். எங்கள் அறையை விட்டு வெளியில் வந்தபோது, வேளாண்மை அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த திரு.வி.க மனையின் மற்ற அறைகளிலிருந்த எனது வகுப்பு தோழர்களும் கையில் அந்த துண்டறிக்கையோடு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த அறிக்கை யார் பெயரிலும் வெளியிடப்படவில்லை.அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மதுரை நிகழ்வு பற்றி எந்தவித எதிர்ப்பையும் காண்பிக்காமல் இருக்கிறார்களே என்ற கோபத்தில் யாரோ ஒரு சில மாணவர்கள் அந்த அறிக்கையை அச்சடித்து ஒவ்வொரு அறையிலும் போட்டிருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருந்த திரு..வி.க மனையில் மட்டுமல்ல விடுதியில் இருந்த திருவள்ளுவர், இளங்கோ, சேக்கிழார், பாரதி, கம்பர், தொல்காப்பியர் ஆகிய மனைகளிலிருந்த அனைத்து அறைகளிலும் அந்த துண்டறிக்கையை போட்டிருகிறார்கள் என பின்னர் அறிந்துகொண்டேன்.

அந்த அறிக்கையில் மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து போராட்டம் நடத்தாமல் இருப்பது வெட்கக்கேடு.எனவே அனைவரும் கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டு நமது எதிர்ப்பை காண்பிக்கவேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின் கடைசியில் எழுதியிருந்த வரிகள் இன்னும் எனது நினைவில் இருக்கின்றன. அதுவும் முத்தாய்ப்பாய் தந்திருந்த வரிகள் தமிழ் உணர்வுள்ள, இல்லாத அனைவரையும் அன்று கிளர்ந்தெழச் செய்ததை நேரில் கண்டேன்.

முடிவாக ‘தமிழ் உணர்வு உள்ளோரே இன்று காலை நடக்க இருக்கின்ற போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள நமது Eastern Hostel முன்வாயில் அருகே காலை 9 மணிக்கு கூடுக.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காலையில் உணவுக்கூடத்தில் சிற்றுண்டி சாப்பிடும்போது கூட அந்த அறிக்கை பற்றியே பேச்சு. ஆனால் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டபடி ஊர்வலத்தில் கலந்துகொள்வதா வேண்டாமா என்று நாங்கள் யாருமே விவாதிக்கவில்லை.

யாரும் சொல்லாமலே சரியாக 9 மணிக்கு முன்னதாகவே சாரை சாரையாக மாணவர்கள் விடுதியின் முன்வாசல் அருகே வந்து குழுமத் தொடங்கியபோது .நானும் எனது வகுப்புத் தோழர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன்.

விடுதியில் இருந்த அனைவரும் ஒன்றுகூடிய பிறகு ஒவ்வொருவரும் அந்தந்த வகுப்பு நண்பர்களோடு இரண்டிரண்டு பேராக நிற்க தொடங்கினோம். ஊர்வலத்தை தலைமை ஏற்று யாரும் நடத்தவில்லை.ஆனால் எல்லோரும் அவரவர் புலத்தை (Faculty) சேர்ந்த மாணவர்களோடு நின்றிருந்ததால் அந்தந்த புலத்தின் மாணவர் ஒருவரே ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி செல்லும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

எங்களது புலத்தில் வேளாண்மை முது அறிவியல் முதலாமாண்டு (M.Sc.,(Agriculture)) படித்துக்கொண்டிருந்த ஒருவர் எங்களது வரிசையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னாட்களில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் தமிழ் நாட்டில் பணியாற்றினார்.

எங்களது ஊர்வலம் போர்க்குரல் எழுப்பியபடி சிதம்பரத்தை நோக்கி நகர்ந்தது.


எல்லா மாணவர்களையும் கிளர்ந்து எழச் செய்த அந்த வரிகள் என்ன என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் என எண்ணுகிறேன். இதோ அந்த உணர்ச்சியூட்டும் வரிகள்.


அரேபியனுக்கு சலாம் போட்டாய்
ஆங்கிலேயனுக்கு சல்யூட் செய்தாய்
இந்திக்காரனுக்கு நமஸ்தே செய்கிறாய்
கண்டவனுக்கு முந்தானை விரிக்கும் நிலையா உன் நிலை?


சாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.


தாய் பிறன் கைப்பட சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ?இதைப் படித்தவர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பார்களா என்ன?தொடரும்


28 கருத்துகள்:

 1. ஓடற பாம்பை மிதிக்கிற வயசு, சொல்லவா வேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தங்களின் கூற்று உண்மைதான்.

   நீக்கு
 2. உணர்வூட்டிடும் இந்தப் பதிவும், தங்களின் எழுத்துக்களும், விறுவிறுப்பான அந்த ஊர்வலத்தில் செல்வதுபோலவே உள்ளன. பாராட்டுகள்.

  சரித்திரத்தை நினைவூட்டிடும் இந்தப் பதிவு மேலும் வெற்றிகரமாகத் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 3. உண்மையிலேயே தமிழனுக்கு உணர்ச்சி வரக்கூடிய வரிகளே... இது இன்றும் பொருந்துகிறதே.... என்பதுதான் வேதனை நண்பரே... தொடர்கிறேன்.

  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்

  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ந. இராஜகோபாலன் அவர்களே! இதை படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு நிச்சயம் அந்த நாள் ஞாபகம் வரும். மறக்கமுடியுமா?

   நீக்கு
 5. உணர்ச்சியூட்டும் வரிகள் மிகவும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! என்றைக்குமே உணர்ச்சியூட்டும் வரிகள் தாம் அவை.

   நீக்கு
 6. இப்போது படித்தாலும் சூடேறுகிறது!
  என்ன நினைவாற்றல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அந்த வரிகளை இன்றைக்கு படித்தாலும் இரத்தம் சூடாகிறது என்பது உண்மைதான்.

   நீக்கு
 7. Might of student power that led to the fall of the Mighty congress... Expecting more interesting incidents to be described by you..  Soul stirring slogans. Few more incidents provoked the students and led to more slogan shouting.... " KAKKA MANAVARGAL ENNA KOKKA' etc .You may throw light on this too...
  Be that as it may... Fury of students manifested like a powerful Tsunami that led to the fall of the mighty congress.. Congress could never regain its past glory in Tamil Nadu .....
  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வாசு அவர்களே!. நீங்கள் சொல்வதுபோல் மாணவர்கள் போராட்டம் என்ற ஆழிப்பேரலையில் பலம் வாய்ந்த காங்கிரஸ் அரசு தூக்கி வீசப்பட்டதன் காரணம் மாணவர்களின் உணர்ச்சியை, எழுச்சியை மதிக்காமல் அவர்களின் திறனை குறைவாக எடை போட்டதுதான், மாணவர்களின் போராட்டம் பற்றி நான் பார்த்ததை, கேள்விபட்டதை எழுதுவேன்.

   நீக்கு
 8. நினைவுகளை உயிரோட்டமுள்ள வகையில் பகிரும் விதம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!.

   நீக்கு
 9. அதேமாதிரி ஒரு துண்டுப்பிரசுரம் இப்போது அதே எழுச்சியையும் செயலையும் கொடுக்குமா. அந்த வயது . சட்டெனெ உணர்ச்சி கொள்ள வைக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த வரிகளைப் படித்துவிட்டு தேவகோட்டை திரு KILLERGEE, வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன், திரு சென்னைபித்தன், மற்றும் திரு KILLERGEE யின் கருத்தை ஆதரிக்கும் திரு N.பக்கிரிசாமி ஆகியோருக்கு இன்றும் அந்த எழுச்சி வருகிறதென்றால், வயதிற்கும் உண்மையாய் கோபத்தில் எழுகின்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.

   தாயை சம்பந்தப்படுத்தி பற்றி சொன்னால் எவருக்கும் கோபம் வருவது இயற்கை. அப்படி வராவிட்டால் அவன் உயிரில்லா வெறும் சதைப் பிண்டமே.

   நீக்கு
 10. நான் சொல்ல நினைத்ததை கில்லர்ஜி அருமையாக சொல்லிவிட்டார். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

   நீக்கு

 11. வணக்கம் அய்யா
  எல்லா மாணவர்களையும் கிளர்ந்து எழச் செய்த அந்த வரிகளுக்கு சல்யூட்!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஐயா.

  தாமத வருகைக்குப் பொறுத்தாற்றுங்கள்.

  தங்களின் நினைவோடை நெடுகும் பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் காட்சிகளை எழுத்தில் இறக்கி வைத்துப் போகிறீர்கள்.

  எங்களைப் போன்றவர் அறிய வரலாற்றின் சி்த்திர எழுத்துகளாய் மிளிரும் பதிவு.

  ஒரு பாடல் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்குச் சாட்சியாக திரண்டிருந்த அந்தக் கூட்டத்தைக் காண்கிறேன்.

  தொடர்கிறேன்.

  த ம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், மேலான கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வரலாற்றை படைத்த வரிகள் என சிலவற்றை சொல்வார்கள். என்னைப் பொருத்தவரையில் இவைகள் கூட வரலாற்றை படைத்த வரிகள் தான்.

   நீக்கு
 14. உணர்ச்சி பூர்வமான வரிகளை, இன்றும் அதே உணர்வோடு, அப்படியே சொன்ன, உங்களின் தமிழ் உணர்வினுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! 4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்திற்கு பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க!

   நீக்கு
 15. சாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.///பலரையும் வீறுகொண்டு எழச்செய்த வரிகள்..
  மலரும் நினைவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...முடியுமெனில் என் வலைப்பூவுக்கும் வாருங்கள் சாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.
  சாம்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலுமே தமிழ் மணந்து வேகவேண்டும்.
  http://naanselva.blogspot.com/

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கு நன்றி நான் ஒன்று சொல்வேன் வலைப்பூவின் நண்பரே! தங்களது தமிழ் உணர்வுக்கு பாராட்டுக்கள்! 4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்திற்கு உடனே பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க! தங்களது வலைப்பூவிற்கு அவசியம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு