ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6

அரங்கினுள் நுழைந்தபோது அங்கே இருந்த மேடையின் பின்னே உள்ள திரையில் எங்களது சந்திப்பு பற்றிய இன்னொரு பதாகை மிளிர்ந்துகொண்டு இருக்க, அந்த மேடையில் அமர்ந்து தஞ்சையைச் சேர்ந்த இசைக்கலைஞர் திரு S.K. வேதய்யன் அவர்கள் தன் குழுவினருடன் வீணையை மீட்டி, வருவோருக்கு செவிக்கு விருந்து அளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டேன்.
வயிற்றுக்கு உணவளிக்கு முன் சிறிது செவிக்கும் உணவு அளிக்க நண்பர் பாலுவும் விழா ஏற்பாடு செய்திருந்த மற்ற நண்பர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள் போலிருக்கிறது என்று எண்ணி, சற்று நேரம் இசையை கேட்டு இரசிக்கலாமே என அமர்ந்தேன்.

ஆனால் இசையை முழுமையாய் கேட்க இயலவில்லை. காரணம் அதற்குள் உள்ளே நுழைந்த நண்பர்களைக் கண்டு எழுந்து நின்று வரவேற்று பேசிக்கொண்டு இருக்கவேண்டியதாயிற்று.

‘காலை சிற்றுண்டி தயாராக உள்ளது. வாருங்கள் அதை சாப்பிட்டுவிட்டு பேசுவோம். என்ற குரல் கேட்டு, வீணை இசையை பின்னர் கேட்டு இரசிக்கலாம். இப்போது சிற்றுண்டியை சுவைக்கலாம் என்று என் துணைவியாருடன் அந்த அரங்கிற்கு பின் இருந்த அறைக்கு செல்ல யத்தனித்தபோது அந்த அறைக்கு செல்லும் நுழைவாயிலில் இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற பல நாட்கள் உழைத்த நண்பர்கள் நின்றுகொண்டு வருபவர்களையெல்லாம் வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள்.

அங்கு நின்றிருந்தவர்களில், விழா ஏற்பாட்டர்களான தஞ்சை நண்பர்கள் பாலு. முருகானந்தம், நாகராஜன், ஜனார்த்தனம், மற்றும் பெத்தபெருமாள் ஆகியோரில் நண்பர் முருகானந்தம் மற்றும் பெத்தபெருமாள் ஆகியோர் அங்கு இல்லை அவர்கள் உள்ளே இருந்தார்கள் போலும். மற்ற நண்பர்களோடு அவர்களுக்கு விழா நடக்க பெரிதும் உதவியாய் இருந்த சிதம்பரம் நண்பர்கள் கோவிந்தசாமியும் நாச்சியப்பனும் உடன் இருக்க, அங்கு நண்பர் கம்பம் சுப்ரமணியனும் நின்றிருந்தார்.படத்தில் இருப்போர். இடமிருந்து வலம் : ஜனார்த்தனம். நாகராஜன் கோவிந்தசாமி நாச்சியப்பன்,பாலசுப்ரமணியன் (பாலு) மற்றும் சுப்ரமணியன்

அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு சிற்றுண்டி வழங்கப்படும் அறைக்கு சென்றேன். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே நண்பர் முருகானந்தம் எல்லோரையும் உபசரித்துக்கொண்டு நின்றிருந்தார்.

ஏற்கனவே உள்ளே சென்றிருந்த நண்பர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டும் பேசிக்கொண்டும், சிலர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதையும் கண்டேன்.சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருந்த மேசைமீது கேசரியோடு,இட்லி,சாம்பார்,வடை,சட்னி,பொங்கல்,ஊத்தப்பம்,ஆம்லெட்,ஆகியவகைகளுடன் ரொட்டி (Bread), வெண்ணெய், பழப்பாகு (Jam), ஓட்ஸ் பால், பழத்துண்டுகள், பழச்சாறு, காஃபி மற்றும் தேநீர் ஆகியவைகள் இருந்தன.

அவைகளைப் பார்த்ததும் மாயா பஜார் திரைப்படத்தில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலில் நடிகர் ரங்கராவ் அவர்கள் ‘கல்யாண சமையல் சாதம்’ என்று பாடியது போல் பாடவேண்டும் போல் இருந்தது எனக்கு.

அந்த பாடலை கேட்காதவர்களுக்கும், திரும்பவும் அதை கேட்டு இரசிக்க விரும்புவர்களுக்கும் கீழே தந்திருக்கிறேன் காணொளியாக.
(நன்றி: திரு கிருபாகரன் சௌந்தராஜன் அவர்கட்கு)


அங்கு இருப்பவைகளில் எதை எடுப்பது எதை விடுவது எனத் தெரியாமல் சிறிது நேரம் திகைத்தேன். எல்லாவற்றையும் சாப்பிட ஆசை இருந்தாலும் ஔவைப்பாட்டி பாடியது போல்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

அனைத்தையும் சாப்பிட வயிறு இடம் கொடாதே. ஆகையால் ‘பசித்திரு’ என்று வள்ளலார் இராமலிங்க அடிகள் சொன்னதுபோல் விரும்பிவற்றை மட்டும் அளவோடு சாப்பிட்டுவிட்டு படிக்கும்போது நெருங்கிய நண்பர்களான முகம்மது உஸ்மான் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.இடப்புறம் நானும் வலப்புறம் நண்பர் மீனாட்சி சுந்தரமும் இருக்க நடுவில் நாங்கள் பேசுவதை உன்னிப்பாய் கேட்பது நண்பர் முகம்மது உஸ்மான்.

ஆங்காங்கே நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்க


நான் அரங்க அறைக்கு செல்ல வந்த வழியே திரும்பும்போது. அங்கே பொன் விழா சந்திப்புக்கு வந்த நண்பர்கள் பதிவு செய்துகொண்டு (Registration) இருப்பதைப் பார்த்து நானும் பதிவு செய்ய அங்கு சென்றேன்.


தொடரும்
16 கருத்துகள்:

 1. சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது என்பதில் மகிழ்ச்சி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. வீணைக்கச்சேரி உள்பட அனைத்துப் படங்களும், விருந்து பற்றிய வர்ணனைகளும், மாயாபஜார் திரைப்படக் காணொளிக்காட்சியும் அருமையோ அருமை.

  ஒளவைப்பாட்டி சொல்லியுள்ளதையும், வடலூர் வள்ளலார் சொல்லியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளன.

  நண்பர்களுடனான சந்திப்புகளில் உள்ள மகிழ்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். தங்களின் பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சிகள் மேலும் இனிமையாகத் தொடரட்டும். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 4. சந்திப்பினைப் பதியும் விதம் அருமை. எடுத்தூண் (buffet)பொருள் தற்போதுதான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 5. வருகை புரிந்தவர்களுக்கு இந்தத் தொடர் நினைவுகளை அசைபோட மிகவும் உதவும். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்த தொடர் பதிவு எங்களது சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசை போட உதவும் என்று நீங்கள் சொல்வது சரியே. ஆனால் இது முதல் நாள் நிகழ்வு மட்டும் பொருந்தும். ஆனால் இரண்டாம் நாள் நாங்கள் மேற்கொண்ட முத்துப்பேட்டை காயல் (Lagoon) பயணம் பற்றிய பதிவு அனைவரையும் (குறிப்பாக புதிய இடங்களைப் பார்க்க விரும்புவோரை) ஈர்க்கும் என வ்ண்ணுகிறேன்.

   நீக்கு
 6. நீங்கள் சிற்றுண்டி வழங்கப்படும் அறைக்குச் செல்லும் பொழுதே என் கவனம் தமிழ் ஆர்வலரான உங்கள் மொழிபெயர்ப்பில் பதிந்து விட்டது. இன்று ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு என்று நேர்த்தியான இரண்டு தமிழாக்க சொற்கள் கிடைத்தன.

  1. எடுத்தூண் (Buffet) எடுத்துண் தட்டச்சு செய்கையில் நெடில் சேர்ந்து தூண் ஆகிவிட்டதோ என்ற ஐயம் உண்டு.
  பஃபேக்கான மூலச் சொல் எதுவென்று தெரியவில்லை. அதிலிருந்து அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு (Self service என்கிற மாதிரி) தமிழ்ச் சொல் புழக்கத்தில் வந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்ற நினைப்பும் வந்தது.

  2. பழப்பாகு (Jam) பழக்கூழில் இனிப்பு இல்லை என்பதால் பாகு பொருத்தமாக வந்திருக்கிறது.

  எந்த விவரத்தையும் விட்டு விடாமல், அதே சமயத்தில் விவரமாகச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பில் தொடர் அழகாகச் சென்று கொண்டிருக்கிறது. வாசிக்கையில் தொலைத்தொடர்புத் துறையில் நடைபெறும் எங்கள் தொழிற்சங்க மாநாடுகள் நினைப்புக்கு வந்தன. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  பின்னூட்டத்தில் காயலையும் நினைவூட்டியிருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! பதிவில் பயன்படுத்திய இரு தமிழ் சொற்கள் தங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
   பதிவில் கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சொற்களை பயன்படுத்துவது என்ற ஒரு கொள்கையை ஆரம்பத்திலிருந்து கடைப்பிடித்து வருகிறேன்.
   Buffet என்பதை தமிழில் எடுத்தூண் அல்லது மகிழ்ந்தூண் அல்லது கூட்டூண் என்று சொல்லலாம் என்றாலும் நாமே எடுத்து உண்பதால் எடுத்தூண் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன். தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்படவில்லை. எடுத்தூண் என்பது சரிதான்.
   தங்களின் பாராட்டுக்கு நன்றி! பொருத்திருங்கள் காயல் பயணம் பற்றிய அறிய!

   நீக்கு
 7. எனக்கு இதில் சின்ன குழப்பம். எல்லா உணவுகளையும் எடுப்பதற்கு படைக்கப்பட்ட கையினால் தானே எடுத்து உண்கிறோம்? இந்த 'எடுத்தூண்' விஷயத்தில் அப்படி என்ன விசேஷம்?.. மற்றவர்கள் பரிமாறாமல் நாமே எடுத்துண்பதால் அப்படிச் சொல்கிறீர்களா?..

  ஆக, வழக்கமாக நாம் கையால் எடுத்து உண்பதற்கும், இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், 'பரிமாறல்' இல்லை என்பது தான்.

  அப்ப்டியென்றால் பரிமாறல் இல்லை என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக நாம் அமைக்கும் வார்த்தை அமைய வேண்டும் அல்லவா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஒரு வார காலமாக இணைய இணைப்பு இல்லாததால் உடனே தாங்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கு பதில் அளிக்க இயலவில்லை.

   ‘எல்லா உணவுகளையும் எடுப்பதற்கு படைக்கப்பட்ட கையினால் தானே எடுத்து உண்கிறோம்? இந்த 'எடுத்தூண்' விஷயத்தில் அப்படி என்ன விசேஷம்?.. ‘ என்று கேட்டுவிட்டு தாங்களே ‘மற்றவர்கள் பரிமாறாமல் நாமே எடுத்துண்பதால் அப்படிச் சொல்கிறீர்களா?..’ என்று பதில் சொல்லியுள்ளீர்கள்.

   உண்மைதான். பரிமாறப்பட்ட உணவை கையினாலோ அல்லது (முள்) கரண்டியாலோ எடுத்து சாப்பிட்டாலும் அந்த செயலை எடுத்து உண்பதாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அங்கு பிறர் பரிமாறிய உணவைத்தான் உண்கிறோம்.

   நாமே எடுத்து உண்பதைத்தான் எடுத்தூண் என்று சொல்லவேண்டும். நம் வீட்டிலே கூட சிலசமயங்களில் ‘நீங்களே போட்டு சாப்பிடுங்கள் சொல்வதில்லையா?’ நீங்களே சாப்பிடுங்கள் என்று சொல்லாமல் போட்டு சாப்பிடுங்கள் என்று சொல்வது நாமே எடுத்து சாப்பிடுவதால் தான். எனவே Buffet என்பதற்கு எடுத்தூண் என்ற தமிழாக்கம் சரி என்றே கருதுகின்றேன்.

   நீக்கு
 8. எடுத்தூண் - புதிய சொல். எடுத்துண் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றுதான் எனக்கும் பட்டது. சுய சேவை உண்டி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! எடுத்தூண் என்ற சொல் தமிழ் வல்லுனர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. எடுத்துண் என்பது ஆணை இடுவதுபோல் தோன்றுவதால் அந்த சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். சுயமாக சாப்பிடும் முறை என்றும் சிலர் சொல்வதுண்டு.

   நீக்கு