வியாழன், 30 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 18

தஞ்சை அரண்மனையில் உள்ள அரசவை மண்டபத்தில் (King’s Royal Court) அமைந்துள்ள தஞ்சாவூர் கலைக்கூடம் என அழைக்கப்படும் இராஜராஜ சோழ கலைக்கூடத்தைப் பார்க்க அனைவரும் நண்பர் முருகானந்தம் வழிகாட்ட உள்ளே சென்றோம்.

மண்டபத்தின் நுழைவாயில்

உள்ளே நுழைந்ததும் அழகான சிற்பங்கள் மற்றும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட மேற்கூரையுடன் கூடிய பிரமாண்டமான தர்பார் மண்டபத்தைக் கண்டோம்.அங்கே கைகூப்பி அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இருக்கும், இரண்டாம் சரபோஜி மன்னரின் (King Serfoji II) கம்பீரமான பளிங்கு சிலையைக் கண்டோம்.தர்பார் மண்டபத்தின் குவிந்த கூரை
(நண்பர் அய்யம்பெருமாள் அவர்களின் துணைவியார் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் எடுத்த படங்கள் இவை)


மண்டபத்தின் முழுத்தோற்றம் – நன்றி கூகிளாருக்குஇரண்டாம் சரபோஜி மன்னரின் சிலை

மராத்திய மன்னர்களில் புகழ் வாய்ந்தவரான இரண்டாம் சரபோஜி மன்னர் தமிழ்,தெலுங்கு,உருது, வடமொழி (சமஸ்கிருதம்), ஃபிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ், கிரேக்கம், டச்சு மற்றும் இலத்தீன் ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமையுடைவராம்.

இவரது காலத்தில்தான், தமிழகத்தில் முதல் விலங்குகள் பூங்கா (Zoo) நிறுவப்பட்டதாம். கல்விச் சீர்திருத்தம், ஆளுகை (Administration) சீர்திருத்தம் மற்றும் சமுதாய சீர்திருத்தங்களில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தஞ்சைக்கு புதை வடிகால் (Underground Drainage) கொண்டு வந்ததும் இவரே.

இவர் கண் புரை (Cataract) அறுவை சிகிச்சை கூட செய்திருக்கிறாராம். ‘தனவந்த்ரி மகால்’ என்ற மூலிகை ஆராய்சி நிறுவனத்தை நிறுவியதும், நாயக்கர்கள் நிறுவிய சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தியதும், பல அன்னசத்திரங்கள் அமைத்ததும், கோவில்களுக்கு திருப்பணி செய்தலும் போன்ற எண்ணற்ற நற்பணிகளை இவர் மேற்கொண்டதால் இவர் மக்களின் அரசராக இருந்திருக்கிறார்.

இராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட சிறந்த மன்னர் இவர்தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

இவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருக்கும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய நண்பர் ஒருவர் “மராத்தியர்கள் தஞ்சையை ஆண்டபோது சாம்பாரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள் என்பது உண்மையா?” என்று என்னைக் கேட்டது நினைவுக்கு வந்தது.

அவர் அப்படி கேட்டதற்கு காரணம் செவி வழி வந்த ஒரு கதைதான். 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் ஷாகுஜி, ஒருதடவை தலைமை சமையல்காரர் இல்லாதபோது பச்சை பருப்புக்கு பதில் துவரம்பருப்பு போட்டு அதில் புளியை சேர்த்து தால் எனப்படும் பருப்பு தயாரித்து பார்த்தாராம். அதுதான் சாம்பார் என அழைக்கப்பட்டது என்கிறது அந்த கதை.

இது குறித்து மராத்திய நண்பருக்கு சான்றுடன் பதில் சொல்ல இணையத்தை நாடியபோது எனக்கு கிடைத்த தகவல்.

“சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு என்பது “அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,” என்ற 1530 C.E ஆம் ஆண்டின் தமிழக கல்வெட்டு பதிவின் வாயிலாக தெரிய வருகிறது.

(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha)

தஞ்சை மராத்தியர்கள் வசம் வந்ததே கி.பி 1674 ஆம் ஆண்டுதான். மேலே உள்ள கல்வெட்டுத் தகவல்படி கி.பி 1530 ஆம் ஆண்டிலேயே சாம்பார் தமிழ்நாட்டு உணவாக இருந்திருக்கும்போது சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை முற்றிலும் மறுத்து கூறலாம்.

மராட்டிய மாநிலத்தில் வெறும் பருப்பை ‘தால்’ என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.

தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள். அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம். எனவே சாம்பார் என்பது தஞ்சை வாழ் மராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நின்று தமிழர்களின் பூர்வீக உணவு என்பதை இந்த கல்வெட்டு ஆணித்தரமாக சொல்கிறது.”

இந்த சான்றை சுட்டிக்காட்டி என நண்பரிடம் சாம்பார் தமிழ் நாட்டில் மராத்தியர்கள் வருமுன்னேரே இருந்திருக்கிறது என்று சொன்னபோது அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

சாம்பார் நினைவுகளிலிருந்து மீண்டு கலைக்கூடத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களைப் பார்க்க சென்றேன்.


தொடரும்

24 கருத்துகள்:

 1. இடையில் சாம்பார் ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சிகளின் முடிவும் அருமை .... நம் தமிழ்நாட்டுக்கே பெருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 2. //அங்கே கைகூப்பி அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இருக்கும், இரண்டாம் சரபோஜி மன்னரின் (King Serfoji II) கம்பீரமான பளிங்கு சிலையைக் கண்டோம்.//

  இரண்டாம் படத்தை புகைப்படம் எடுக்கும்போது, இரண்டாம் சரபோஜி ராஜாவை ஓரம் கட்டி விட்டீர்கள்.

  //மண்டபத்தின் முழுத்தோற்றம் – நன்றி கூகிளாருக்கு//

  இதன் கீழ் அவர் பிரமாதமாகத் தெரிகிறார்.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இரண்டாம் சரபோஜி மன்னரை ஓரம் கட்டவில்லை. அருகில் சென்று படம் எடுத்தபோது அது நேர்ந்துவிட்டது.

   நீக்கு
 3. //மராத்திய மன்னர்களில் புகழ் வாய்ந்தவரான இரண்டாம் சரபோஜி மன்னர்//

  இவர் காலத்தில் தான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்மம் தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்துள்ளார் .... அவரை இந்த ராஜா தன் அரண்மனைக்கு வருகை தந்து பாடச்சொல்லி அழைத்தும், அவரை மரியாதையுடன் அழைத்துவர தேர் முதலியன அவர் வீட்டுக்கே அனுப்பியும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளவோ, புறப்பட்டுச் செல்லவோ மறுத்துவிட்டதாகக் கேள்வி.

  ‘நிதி கால சுகமா’ என்ற கீர்த்தனையை ஸ்ரீ ராம பிரானிடம் பாடியதே இந்த ராஜா அழைத்து, தான் போக மறுத்தபோது தானாம்.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இந்த தகவல் எனக்கு புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி!

   நீக்கு
 4. மற்றபடி பதிவும், படங்களும், செய்திகளும் வழக்கம்போல அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 5. இன்றுவரை தால் மராத்தியர்களின் முக்கிய உணவாகவே இருந்து வருகிறது
  அழகிய புகைப்படங்கள் நன்று தொடர்கிறேன்.
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், கருத்துக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERJEE அவர்களே!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 7. சாம்பார் நல்ல மணம். ஜெமினி கணேசன் நினைவில் வந்து சென்றார். தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! பாவம். ஜெமினி கணேசன்! நல்ல நடிகரான அவர் இந்த பெயரில் ஏன் அறியப்பட்டார் என்பது தெரியவில்லை.

   நீக்கு
 8. நீர் மோருக்கு மலையாளத்தில் சம்பாரம் என்னும் பெயர் உண்டு என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.மலையாளத்தில் தாளித்த நீர் மோரை சம்பாரம் என்று சொல்வார்கள்.
   திரு KILLERJEE அவர்களின் ஐயத்திற்கும் இந்த பின்னூட்ட பதில் விடையாயிருக்கும் என நினைக்கிறேன்.

   நீக்கு
 9. நாங்கள் பார்த்த இடத்தை மறுபடியும் உங்களுடன் பார்க்கிறோம், இன்னும் ரசனையுடன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 10. வணக்கம்.
  உணவு வகைகளின் தோற்ற காரணம் குறித்து இது போன்ற சுவையான கதைகள் ஒவ்வொரு சமூகத்திலும் உண்டு. அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

  ஆயினும்,

  தாங்கள் கல்வெட்டுச் சான்றில் குறிப்பிட்டுள்ள,

  “பல சம்பாரம் ” என்பது இன்றைய சாம்பாரைக் குறிக்குமா என்பதில் எனக்கு ஐயப்பாடு உள்ளது.

  இரண்டு காரணங்கள்.

  கூட்டினைக் குறிப்பிட்டு இந்தச் சொல் வழங்கலுண்டு.

  பல எனும் அடை இருப்பதால் இன்று நாம் குறிப்பிடும், சாம்பாரையோ, அன்றி ஜி.எம்.பி, ஐயா குறிப்பிடும் இஞ்சி பச்சை மிளகு பூண்டு, கரிவேப்பிலை, ஜீரகம், சின்ன வெங்காயம், மஞ்சள் உப்பு மோருடன் கூட்டித் தயாரிக்கப்படும் சம்பாரம் என்பதையோ குறிப்பதாகக் கொள்ளத் தடையுண்டு.

  கல்வெட்டுச் சான்றிலுள்ள,“பல சம்பாரம்” என்பதற்குப் பல (காய்கறிக்) கூட்டுகளும் என்பதாகப் பொருள்காணல் நலம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா.

   மீண்டும் வருகிறேன்.

   முதலில் கரிவேப்பிலை என நான் குறிப்பிட்டது கறிவேப்பிலை என்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

   அடுத்தது, இந்தச் சாம்பார் பற்றியது.

   இதைக் குறித்து யாரோ கேட்டு எங்கோ குறித்திருக்கிறோமே என்று பார்த்தால் அது நீங்கள் கேட்டதுதான்.

   ஒருவேளை இந்த நிகழ்வை நினைத்துத்தான் நீங்கள் அன்று கேட்டிருக்கக் கூடும். நானும் இது குறித்துத் தேடுவதாகக் குறிப்பிட்டுக் குறித்து வைத்திருந்தேன்.

   இந்தக் கல்வெட்டு கூறும் சம்பாரம் என்பது சாம்பாரைக் குறிக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் என்றால், மராட்டியர்தான் இதனை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்களா என்பது இன்னொரு புறம் பார்க்க வேண்டி உள்ளது.

   ஏதேனும் தரவுகள் கிடைத்தால் நிச்சயம் வருகிறேன்.

   நன்றி.

   நீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! சம்பாரம் என்பது மிளகாய், கொத்தமல்லி,மிளகு, சீரகம்,வெந்தயம் பருப்பு இவைகளைக் கலந்து செய்வதாம். இதிலிருந்துதான் சாம்பார் வந்ததாக சொல்கிறார்கள். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
   கேரளாவில் தாளித்த நீர்மோரை சம்பாரம் என்று சொல்வதை திரு G.M.B அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
   நீங்கள் சொல்வதுபோல், முன்பே தங்களது ‘தோசையின் வரலாறு’ என்ற பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்திலும் இது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.
   தங்களுக்குத் தெரிந்த மேலதிகத் தகவல்களை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
 11. ஆஹா! சாம்பார் தமிழக உணவு தானா? என்பதற்கு ஆதாரப்பூர்வமாக தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பகிருங்கள். சுவையான தொடருக்கு மேலும் சுவை சேர்க்கிறது சாம்பார் ஆய்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! சாம்பார் பற்றி புதிய தகவல்கள் கிடைத்தாள் கண்டிப்பாக பகிர்ந்துகொள்வேன்.

   நீக்கு