புதன், 19 ஏப்ரல், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 20

மாலை 6 மணிக்குள் பார்வை நேரம் முடிந்துவிடுவதால் அவசரம் அவசரமாக சரஸ்வதி மகால் நூலகத்திற்குள் நுழைந்தோம். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் அங்கே வேறு விதமாக இருந்தது. நாங்க சென்ற பொழுது அங்கே ஒரு பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்ததால் எங்களால் முழுதும் பார்க்க இயலவில்லை.





நூலகத்தின் படம் (இணையத்திலிருந்து)

கி.மு 17 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த சரஸ்வதி மகால் நூலகம், உலகில் உள்ள வெகு சில இடைக்கால நூலகங்களில் ஒன்று என்றும், நாயக்க மன்னர்களும். மராட்டிய மன்னர்களும் ஏற்படுத்திய ஈடு இணையற்ற பண்பாட்டுக் களஞ்சியமான இந்த நூலகம், அட்சய பாத்திரம் போல் அள்ள அள்ளக் குறையா நிறை வளமுடைய பொக்கிஷத்தை தன்னகத்தே கொண்ட அறிவுப் பெட்டகம் என்றும் படித்தது நினைவுக்கு வந்தது.

இந்த நூலகம் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தில் அவர் எடுத்த சீரிய முயற்சியால் தான் ஏற்றம் பெற்றதாம். அவர் காலத்தில் தான் வட இந்தியாவிலும் மற்றும் வெகு தொலைவில் உள்ள இடங்களிலும் உள்ள வடமொழி கற்பிக்கும் மய்யங்களிலிருந்து அங்குள்ள படைப்புகளை சேகரிக்கவும், வாங்கவும். படி எடுக்கவும் அநேக பன்மொழிப் புலவர்கள் நியமிக்கப்பட்டனராம்.

இந்த நூலகத்தில் வெகு அபூர்வமான ஓலைச்சுவடிகளும், தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்களும் உள்ளனவாம். அவைகளின் எண்ணிக்கை மட்டும் 60,000 க்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அவைகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடாமல் இருக்க அவைகளை நுண்ணிய நிழற்படப் பதிவு (Micro film) மூலம் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.


பனைஓலை சுவடிக்கட்டின் படம் (இணையத்திலிருந்து)

பிரிட்டானியா கலைக்களஞ்சியம் (The Encyclopaedia Britannica) உலகில் உள்ள நூலகங்களை பற்றி செய்த ஆய்வில் சரஸ்வதி மஹால் நூலகத்தை இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க (The most remarkable) நூலகம் என்று மதிப்பிட்டிருக்கிறது என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எங்களுக்கு குறைந்த நேரமே இருந்ததாலும், பலவித இரசனை கொண்ட குழு உறுப்பினர்களோடு சென்றதாலும் எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்து உள்வாங்க முடியவில்லை. உண்மையில் நாங்கள் பார்த்தது பலகணி வணிகம் (Window Shopping) செய்தது போலத்தான். விரைவாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

நூலகத்தை சரியாக பார்க்காத குறையோடு வெளியே வந்த நான், அடுத்த முறை தஞ்சை செல்லும்போது தனியாக ஒரு நாள் இந்த நூலகத்திற்காக ஒதுக்கி ஆற அமர பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வெளியே வந்ததும், நண்பர் முருகானந்தம், தஞ்சை பற்றிய ஒரு ஆவணக் குறும்படம் அங்குள்ள ஒலி ஒளி மய்யத்தில் காண்பிக்கப்படுகிறது என்றும், அனைவரும் அதை பார்த்து செல்லலாம் சொன்னார்.

எங்கள் குழுவினர் அனைவரும் அந்த குறும்படத்தைப் பார்க்க அந்த அரங்குக்கு சென்றோம். மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த அந்த குளிரூட்டப்பட்டிருந்த அரங்கில் சுமார் 40 மணித்துணிகள் எங்கள் கண் முன்னே கொடுவந்து காண்பிக்கப்பட்ட தஞ்சையை எங்களை மறந்து பார்த்து இரசித்தோம். தஞ்சையில் அரண்மனையைப் பார்க்க செல்லும் ஒவ்வொருவரும் பார்க்ககவேண்டிய படம் அது.

படம் எப்படி இருந்தது என்பதை என்னால் விவரிக்க இயலவில்லை. Seeing is believing என்று எங்களது வேளாண்மை விரிவாக்க பாடத்தில் சொல்லப்பட்ட அந்த ஒற்றை சொற்றொடரை இங்கு சொல்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

கோவிலுக்கு செல்ல பேருந்து நிறுத்தியிருந்த இடத்திற்கு செல்லுமுன், தஞ்சைக்கு வந்ததின் நினைவாக ஏதாவது வாங்கவேண்டும் என நினைத்தேன். திருநெல்வேலி என்றால் அல்வா நினைவுக்கு வருவதுபோல தஞ்சை என்றதும் நினைவுக்கு வரும் தலையாட்டி பொம்மையை வாங்க, அருகில் இருந்த கைவினைக் கலைஞர்களின் அங்காடிக்குள் நானும் என் துணைவியாரும் நுழைந்தோம்.

அங்கிருந்த பொம்மைகளில் இரண்டை வாங்கிக்கொண்டு வந்தபோது வெளியே வந்தபோது அதைப் பார்த்துவிட்டு நண்பர் முத்துகிருஷ்ணனும் அந்த பொம்மைகளை வாங்கினார்.


நாங்கள் வாங்கிய பொம்மைகளில் ஒன்று.

முதல் நாள் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்த மகிழ்ச்சியில் நண்பர் பாலு திளைத்திருக்க அருகில் நண்பர் அய்யம்பெருமாள் நிற்க திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் எடுத்த படம் கீழே.


இடப்புறம் இருப்பவர் நண்பர் அய்யம்பெருமாள்.வலப்புறம் நிற்பவர் நண்பர் பாலு.


நாங்கள் பொம்மைகள் வாங்குவதற்காக அங்காடிக்கு சென்று வருவதற்குள் எங்களை அழைத்து வந்த பேருந்து முதலில் வந்த நண்பர்களை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டதால் அது திரும்ப வரும் வரை காத்திருந்தோம்.


தொடரும்

14 கருத்துகள்:

  1. விவரிப்பு அருமை நண்பரே தலையாட்டி பொம்மை ஸூப்பர் தொடர்கிறேன்....
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அழகோ அழகு !

    பதிவினைப் படிக்கும்போது பல விஷயங்களுக்குத் தலையாட்டத்தான் வேண்டியுள்ளது. :)

    1) இரண்டாம் சரபோஜி மன்னர் செய்துள்ள பல நல்ல காரியங்கள்.

    2) அவைகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடாமல் இருக்க அவைகளை நுண்ணிய நிழற்படப் பதிவு (Micro film) மூலம் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி

    3) பிரிட்டானியா கலைக்களஞ்சியம் (The Encyclopaedia Britannica) உலகில் உள்ள நூலகங்களை பற்றி செய்த ஆய்வில் சரஸ்வதி மஹால் நூலகத்தை இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க (The most remarkable) நூலகம் என்று மதிப்பிட்டிருக்கிறது என அறியும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

    4) தஞ்சையில் அரண்மனையைப் பார்க்க செல்லும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் அது. பொருத்தமான சொற்றொடரான Seeing is believing முதலியன.

    தொடர்ந்து வாசிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்து கருத்து தந்தமைக்கும் (தலையாட்டியதற்கும்) தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. பயனுள்ள பகிர்வு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், வாழ்த்தியதற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம். சரஸ்வதி மாஹாலை சரபோஜி அமைக்கக் காரணமான நிகழ்வு பற்றிச் சொல்வார்கள். நீங்கள் அது குறித்து முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

    தஞ்சை எனக்கு மிக அணுக்கமான இடம்.

    நீங்கள் காட்டிய இடங்களுக்குப் பலமுறை சென்றதுண்டு.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! சரஸ்வதி மகால் நூலகத்தை மன்னர் சரபோஜி அமைத்த காரணம் எனக்கு சரியாகத் தெரியாததால் அது பற்றி குறிப்பிடவில்லை. தாங்கள் அதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  7. // நூலகத்தை சரியாக பார்க்காத குறையோடு வெளியே வந்த நான், அடுத்த முறை தஞ்சை செல்லும்போது தனியாக ஒரு நாள் இந்த நூலகத்திற்காக ஒதுக்கி ஆற அமர பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன். //

    மேலே சொன்னபடி நீங்கள் மறுபடியும் தஞ்சை சரஸ்வதி மஹால் செல்லுவதாக இருந்தால், ( எந்த நூலகமாக இருந்தாலும்) அதற்கு முன் அந்த நூலகத்தின் நூல் அட்டவணையை இணையதளத்தின் மூலம் பார்த்து விட்டுச் சென்றால் நேரம் பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
    முன்பே சொன்னதுபோல் இந்த தடவை குழுவாக சென்றதால் ஆற அமர பார்க்க இயலவில்லை. கண்டிப்பாக அடுத்தமுறை செல்லும்போது திட்டமிட்டு சென்று முழுவதையும் பார்த்துவருவேன். தங்களின் ஆலோசனைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சரஸ்வதி மகால் நூலகத்தின் சிறப்புகள் அறிந்தேன். Remarkabale library என்று பிரிட்டானியா ஆய்வு செய்து சொல்லியிருப்பதை அறிந்தேன். நான் பலமுறை தஞ்சை சென்றிருந்தாலும், நூலகத்தில் அதிக நேரம் செலவழித்ததில்லை. தஞ்சை தலையாட்டிப்பொம்மை பெயர் பெற்றது. அது போல தட்டில் வரையும் தஞ்சை ஓவியமும் புகழ் பெற்றது. Window shopping க்கு பலகணி வணிகம் என்ற தமிழ்ச்சொல்லை இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! இந்த நூலகத்தை பார்க்க தனியாக ஒரு நாள் ஒதுக்கினால் தான் முழுதுமாக பார்க்க இயலும்.

      நீக்கு