வியாழன், 27 ஏப்ரல், 2017

குமுதமும் விகடனும் – சிறுகதைத் தொகுப்பு 1 – நூல் ஆய்வு

மூத்த வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 30-03-2017 அன்று ‘மின்னல் வேகத்தில் மின்னூல்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த பதிவில் மின்னூல்கள் (e-books) பற்றி குறிப்பிட்டு, அவருடைய 10 படைப்புகள் குறுகிய காலத்தில் மின்னூல்களாக வெளிவந்திருப்பதாக எழுதியிருந்தார். சகோதரி திருமதி கலையரசி அவர்களுடைய படைப்புகளும் மின்னூல் வடிவில் வந்திருப்பதாக எழுதியிருந்தார்.


அதைப் படித்தபிறகு மின்னூல் பற்றி மேலும் அறிய ஆவல் எழுந்தது. ஆனால் அந்த நூல்களை வாங்கிப் படிப்பது குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மின்னூல் பற்றிய மேல் விவரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு, 20-4-2017 அன்று சென்னை வந்திருந்த மூத்த பதிவர் திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க வேளச்சேரி சென்றபோது எழுத்தாளரும் பூவனம் வலைத்தள பதிவருமான திரு ஜீவி அவர்கள் மூலம் கிட்டியது.


திரு ஜீவி அவர்கள்

அதுவரை நான் திரு ஜீவி அவர்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-03-2016 இல் திரு ஜீவி அவர்களின் ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை’ என்ற நூலை திறனாய்வு செய்து வெளியிட்டதை படித்தபோது தான் எழுத்தாளர் திரு ஜீவி அவர்கள் பற்றி அறிந்துகொண்டேன். பின்னர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

திரு G.M.B அவர்கள் வீட்டிலிருந்து திரும்பும்போது திரு ஜீவி அவர்களோடு ஒன்றாக பயணித்தபோது இருவரும் பல கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஒரு பெரிய எழுத்தாளரோடு நட்பு ஏற்பட்டது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சியே. இரண்டு நாட்களுக்கு முன் அவரோடு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது Pustaka.com இல் உறுப்பினராகி மின்னூல்களை வாங்கியும் படிக்கலாம் இல்லையெனில் அவர்கள் வைத்திருக்கும் மாதாந்திர, கால் ஆண்டு, அரை ஆண்டு ஆண்டு திட்டங்களில் பணம் கட்டி மின்னூல்களை தரவிறக்கம் செய்தும் படிக்கலாம் என்றும் சொன்னார்.

நானும் உடனே Pustaka.com இன் மாதாந்திர திட்டத்தில் 99 ரூபாய் செலுத்தி சேர்ந்துவிட்டேன். இந்த திட்டத்தின் படி 30 நாட்களில் கணக்கற்ற நூல்களை வாடகைக்கு எடுத்து படிக்கலாம். நாம் விரும்பும் நூல்களை தேர்வு செய்தால் அது நமது நூல்அடுக்கத்திற்கு (Book Shelf) வந்துவிடும். நாம் விரும்பும்போது படித்துக்கொள்ளலாம்.

நானும் முதலில் திரு ஜீவி மற்றும் திரு வை.கோ ஆகியோருடைய நூல்களில் 10 நூல்களை தரவிறக்கம் செய்து வைத்துவிட்டு முதலில்திரு ஜீவி அவர்களின் குமுதமும் விகடனும் என்ற சிறுகதைகள் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

குமுதமும் விகடனும் – சிறுகதைத் தொகுப்பு 1 பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


இந்த தொகுப்பில் மொத்தம் 11 கதைகள் உள்ளன. இவை பத்தோடு பதினொன்று அல்ல. அத்தனையும் முத்துக்கள்! ஒரு எழுத்தாளன் தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அவைகளுக்கு ஒரு உரு கொடுத்து இயல்பான நடையில் கதையாக வாசகர்களுக்கு படைக்கும்போது, அவைகளை படிக்கும் வாசகர்கள் தாங்களும் அந்த கதை நடக்கும் இடத்தில் இருப்பதுபோல் உணர்ந்தால் அதுவே அந்த எழுத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றி.

அந்த வகையில் திரு ஜீவி அவர்கள் வாசகர்களை தன் வயப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்வேன். ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது நாமே அந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை நேரில் பார்த்தது போலவும் அதில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றது போலவும் உணரமுடிகிறது. திரு ஜீவி அவர்கள் சிறுகதைகளில் தனது முத்திரையை பதித்துவிட்டார் என்பதற்கான சான்று இது.

இனி கதைக்குள் நுழைவோம். அனைவரும் மின்னூலை வாங்கியோ அல்லது வாடகைக்கு எடுத்து படிக்கவேண்டும் என்பதற்காக கதைகள் பற்றி ஓரிரு வரிகளில் எனது கருத்தை தந்துள்ளேன்.

1.சங்கிலி

நம்பி என்கிற ஒரு ஸ்கூட்டர் மெக்கானிக் கதாசிரியரிடம் பழுது நீக்க அதிக தொகையை வாங்கிவிட்டு பின்னர் அந்த மெக்கானிக் ஒரு மருத்துவரிடம் மருத்துவ செலவுக்கு அதிக பணம் தந்த அனுபவத்தை சுவைபடத் தந்திருக்கிறார். கடைசியில் அநியாய இழப்புகளுக்கும் அல்லது வரவுகளுக்கும் ஏதோ சங்கிலித் தொடர்பு இருக்கிறதோ எனக் கேட்டுவிட்டு முடிக்கிறார்

2.புதுமைப் பெண்களடி

சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ள கணவனை கல்யாணம் ஆகி நாலு நாட்களில் திருத்திய மனைவியைப்பற்றிய கதை இது. இதில் அந்த இளம் மனைவி நடத்திய நாடகம் ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று சிந்திக்க வைக்கிறது.

3.நான் சினிமாவுக்கு வரலே!..

ஒரு திரைப்பட விளம்பர சுவரொட்டியில் தெரிந்த கதாநாயகனின் கோலம் அருவருப்பைத் தர, அந்த படத்திற்கு அம்மா அழைத்தபோது போகாமல் தவிர்க்கும் கல்லூரியில் படிக்கும் பெண் கதா பாத்திரத்தின் மூலம், இன்றைய இளந் தலைமுறையினர் நம்மில் சிலர் நினைப்பது போல் விவரம் தெரியாதவர்கள் அல்ல. நம்மை விட விவரமானவர்கள் என்று கோடிட்டு காட்டுகிறார் திரு ஜீவி.

4. நீர் மோர்

இருபது ஆண்டுகளுக்கு முன் தனது நண்பனை ஒரு திடீர் விபத்தில் பறி கொடுத்த ஒருவர், அந்த நண்பன் போன்ற சாயலில் இருக்கும் ஒரு கை ரேகை பார்க்கும் இளைஞனைப் பார்த்து அவரிடம் கையை காட்டிவிட்டு அவருக்கு எவ்வளவு தர வேண்டும் எனக் கேட்டபோது அவர் சொன்ன பதிலால் அவருக்கு ஏற்பட்ட எதிர்பாரா அதிர்ச்சியே இந்த கதைக்கான கரு.

5.இந்த கதை அவளுடன் பேசட்டும்

இளம் விதைவையான ஒரு பள்ளி ஆசிரியை தன்னுடன் பணிபுரியும் இன்னொரு ஆசிரியரின் காதலியோடு சேர்த்து வைப்பதற்காக ஒரு கற்பனை நிகழ்வை கதைபோல் எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்ப அது பிரசுரமாகும்போது அவர் நினைத்தது நடந்ததா என்று ஆவலுடன் படிப்போருக்கு எதிர்பாரா முடிவைத் தரும் கதை இது

6.மதிப்பீடுகள்

ஒரு தச்சு வேலை செய்பவரிடம் ஒரு நடுத்தர குடும்பத்தினர் ஒரு வேலை செய்ய முன் பணம் கொடுத்து விட்டு அவர் சொன்ன நேரத்திற்கு வராதபோது அவரைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கதை மூலம் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்கள் பற்றி அறியாமல் அவர்களை எப்படி தவறாக மதிப்பீடு செய்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறார் திரு ஜீ வி அவர்கள்.

7.இன்று செருப்பு நாளை சேலை

குமுதம் இதழில் வெளியான இந்த கதையை திரு ஜீ.வி அவர்கள் தனது ‘பூ வனம்’ வலைத்தளத்திலும் சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியிட்டிருந்தார். மற்றவர்களின் உண்மை நிலை தெரியாமல் தவறாக எண்ணி, பின்னர் திருந்தும் ஒரு சராசரி மனிதனின் கதை இது.

8.நான் குப்புசாமி இல்லை.

வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் பெயரன் ஒருவன் எப்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லி தன் தாத்தாவை திருத்தியது போல் அமைந்த ஒரு மாறுபட்ட கதை இது. இதைப் படித்தால் புரியும் நாம் குப்புசாமியா இல்லையா என்று!

9.செய்தி

இந்த கதையையும் திரு ஜீ.வி அவர்கள் தனது ‘பூ வனம்’ வலைத்தளத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்டிருந்தார். நம்மில் பலர் வேற்று மொழிச்சொல்லை குறிப்பாக வடமொழிச்சொல்லை பயன்படுத்த விரும்பாமல் அதை தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழில் அதற்கான மாற்றுச் சொல் இருந்தும் தவறாக எழுதுவதை ஒரு குடும்பத்தினர் உரையாடலில் இயல்பாக இணைத்து தந்திருக்கிறார்.

10. அனந்த குமாரும் ஆனந்த குமாரும்

ஒரு திரைப்படக் கவிஞர் தனது உதவியாளரை சபையோர் முன் தான் எழுதியதை தன் உதவியாளர் எழுதியது என சொல்லி கௌரவப்படுத்துகிறார் என்று சொல்லி, இதுபோன்ற தனது உதவியாளர்களை கைதூக்கிவிடும் கவிஞர்கள் இருக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் கதை இது. கதையில் வரும் கவிஞர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரின் பெயர்கள் ஓரெழுத்தை தவிர்த்து ஒன்றுபோல் இருப்பதால் சில இடங்களில் குழப்பம் வருகிறது.

11.குமுதமும் விகடனும்

தொகுப்பின் தலைப்பைக்கொண்ட இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களான மணமுறிவு ஏற்பட்ட கணவனும் மனைவியும் எப்படி தங்களின் குழந்தையின் உடல் நிலை காரணமாக உணர்ச்சிபூர்வமாக இணைந்தார்கள் என்பதை வெகு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் திரு ஜீவி அவர்கள். உண்மையில் நம் வீட்டில் நாமும் இந்த குமுதம் விகடன் தம்பதியர் போலத்தான் என்பதையும், விட்டுக்கொடுப்பதே வாழ்க்கை என்பதையும் வெகு எளிதாக புரியவைத்துவிட்டார் திரு ஜீ வி அவர்கள்.

எல்லாக் கதைகளுக்கும் சிகரமான இதை கடைசியில் வைத்திருப்பதன் காரணம் புரியவில்லை.

சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டு மணி நேரத்தில் தொகுப்பில் இருந்த கதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன் என்பதிலிருந்தே கதைகள் எந்த அளவுக்கு வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

திரு ஜீவி அவர்களின் மற்ற கதைகளையும் படிப்பேன். எனது கருத்தையும் தெரிவிப்பேன்

பி.கு இந்த கதை தொகுப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்போது எனக்கு Pustaka விலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் திரு ஜீவி அவர்கள் தனது படைப்புகளான ‘இருட்டுக்கு இடமில்லை’ பார்த்தவை படித்தவை ஆகிய இரண்டு மின் நூல்களை பரிசளித்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. நானும் Pustaka.com சென்று எனது நூல் அடுக்கத்தை பார்த்தபோது அதில் Author Gifted Books என்ற தலைப்பின் கீழ் அவைகள் இடம் பெற்ருந்தன.

நன்றி திரு ஜீவி சார்!

30 கருத்துகள்:

 1. மின்னூல் பற்றிய தங்களின் நூல் ஆய்வும், சுருக்கமான மற்றும் மிகத்தெளிவான விமர்சனமும் மிகவும் அருமையாகவும், அந்த நூலை உடனே வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

  தங்களுக்கும் நூலாசிரியர் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உண்மையில் இந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நூல் ஆசிரியர் திரு ஜீவி அவர்களுக்கே உரித்தானவை.

   நீக்கு
 2. தங்களின் மிகச்சிறப்பான கட்டுரைகளான

  1) BOSS கள் பலவிதம்
  2) வாடிக்கையாளர்களும் நானும்
  3) மீண்டும் சந்தித்தோம்
  4) நினைவோட்டம்
  5) ஏமாற்றுவதும் ஒரு கலைதான்
  6) இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

  ஆகிய அனைத்தையும் உடனடியாக மின்னூலாக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கும் எனது பதிவுகளை மின்னூல்களாக ஆக்க தாங்கள் தந்த ஆலோசனைக்கும், அன்புக்கட்டளைக்கும் நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 3. சீக்கிரமே,ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள் மின்னூலாக வர வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், எனது பதிவுகள் மின்னூல்களாக வர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு.பகவான்ஜி அவர்களே!.

   நீக்கு
 4. தங்களது பாணியில் விமர்சனம் நன்று நண்பரே
  த.ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!.

   நீக்கு
 5. நன்றி. சந்தோஷமாக உள்ளது. வளர்க உங்கள் தொண்டு. ஸ்ரீநாத்.தொடர்பு கொள்க. srrinath@yahoo.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராமநாதன் வெங்கடராமன் அவர்களே! நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

   நீக்கு
 6. நல்லதொரு பகிர்வு. புஸ்தகா மூலம் தொடர்ந்து பலரும் புத்தகங்கள் வெளியிடுவது நல்ல விஷயம். உங்கள் மின்புத்தகமும் விரைவில் வெளிவர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், எனது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 7. திரு.வைகோ சொன்னதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள்.சிறப்பான நூல் அறிமுகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அது சரி! நீங்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் சாரைத்தானே குறிப்பிட்டீர்கள்!

   நீக்கு
 8. வாசித்ததைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது ஒரு கலை. அந்தக் கலையைத் திறன்படச் செய்திருக்கும் அன்பு நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி. அருமை நண்பர் கோபு சார் குறிப்பிட்டிருப்பதைப் போல, தாங்களும் அந்த ஆறு கட்டுரைப் பகுதிகளையும் மின்னூலாக்கினால் வெகு சிறப்பாக இருக்கும். தாங்கள் விரைவில் அதற்கான முயற்சியில் இறங்க அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

  பதிவுலக நண்பர்களுக்கு:

  புஸ்தகா மின் நூலகத்திற்கு நம் படைப்புகளை எப்படி அனுப்புவது, அவை எப்படி நூலாக்கம் கொள்ளும் என்பதற்கான தகவல்களை வேண்டுவோருக்குத் தர தயாராக உள்ளேன். இது பற்றிய தகவல்கள் வேண்டுவோர் என்னைத் தொடர்பு கொண்டால் விவரமாகச் சொல்கிறேன்.

  1. jeeveeji@gmail.com --க்கு மெயில் அனுப்பலாம். இது விவரங்கள் அனுப்பி வைக்க உபயோகமாக இருக்கும்.

  2. பதிவுகளை எப்படி நூலாக்கலாம் என்பதற்கு இதுவரை www.pustaka.co.in வெளிவந்திருக்கும் என் நூல்களும் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 'பூவனம்' தளத்தில் வந்த பல கட்டுரைகள் மின் நூல் வடிவம் கொண்டிருப்பதால் அவற்றை வாசிப்பதும் பதிவுகளை மின்நூலாக்குவதற்கு ஒரு பயிற்சியாக அமையும்.

  மின்நூல் என்கிற வடிவம், பதிவுலக நண்பர்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. காலத்தின் மாற்றங்கள் நமக்குத் தந்திருக்கும் பரிசு. புஸ்தகா மின் நூலகம் நம் படைப்புகளுக்காக கடை பரப்பியிருக்கிறது. அதை நண்பர்கள் அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டு தம் படைப்புகளை மின் நூலாக வெளிக்கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது நூலை எனது பார்வையில் திறனாய்வு செய்திருந்ததை பாராட்டியமைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! நான் அதை திறம்படசெய்திருக்கிறேன் நீங்கள் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதற்கு மூல காரணம் தாங்கள் தான். தங்களின் எழுத்து இயல்பாகவும் எளிமையாகவும் இருந்ததை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன், அவ்வளவே.

   தங்களின் ஆலோசனைப்படியும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படியும் எனது படைப்புகளை மின்னூல்களாக ஆக்க முயற்சிப்பேன்.

   தங்களது படைப்புகளை மின்னூல்களாக கொண்டுவர விரும்பும் பதிவுலக நண்பர்களுக்கு தங்களின் ஆலோசனை பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

   நீக்கு
 9. அன்பு நண்ப்ர் வே.ந். அவர்கள் தான் வாசித்ததின் ரசனையை வெகு அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்தக் கதைகள் தொடர்ப்பான சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டால் அவை அவரது வாசிப்புக்கும், இனி இந்தக் கதைகளை வாசிக்க இருப்போருக்கும் மகிழ்வூட்டும் என்பதினால் சில தகவல்கள்:

  1. குமுதமும் விகடனும் கதை பிரசுரமாக நான் தேர்வு செய்தது, குமுதமும் அல்ல, விக்டனும் அல்ல. தமிழகத்திலிருந்து வெளிவரும் நாலைந்து பிரபலப் பத்திரிகைகளை விட வெகு பிரமாதமாக வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தென்றல்' என்ற அற்புதமான தமிழ்ப் பத்திரிகையே இந்தக் கதை பிரசுரமாக சரியான பத்திரிகை என்று தேர்ந்து நான் அமெரிக்காவில் இருந்த பொழுது 'தென்றல்' பத்திரிகைக்கு அனுப்பி வைத்து அதில் பிரசுரமான கதை இது.

  2' 'எல்லாக் கதைகளுக்கும் சிகரமான இதை கடைசியில் வைத்திருப்பதன் காரணம் புரியவில்லை' என்று குமுதமும் விகடனும் கதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். என் பார்வையில் எல்லாக் கதைகளும் சிறப்பானவை தான் என்றாலும் கோபுரக் கலசம் போல சிகர உச்சிக்குப் போக கீழிருந்து மேல் தான் என்பதினால் அது அப்படி அமைந்து விட்டது போலும்.

  3. நான் சினிமாவுக்கு வரலே-- கதையின் அந்த சினிமா கதாநாயகன் யார் என்பதற்கான க்ளூ அந்தக் கதையின் முதல் வரியிலேயே இருக்கிறது.

  4. நான் குப்புசாமி இல்லை-- கதை, என் பேரன் தன் தாத்தாவிற்கு உபதேசம் செய்த பாங்கு கதையாகியிருக்கிறது.

  5. மதிப்பீடுகள்-- கதை நாங்கள் வைத்திருந்த குட்டியூண்டு தேக்கு மரத் துண்டின் வழியாக கிடைத்த ஞானோதயம்.

  6. நீர் மோர்-- சிறு வயதில் நான் கண்ட அதிர்ச்சிக் காட்சி ஒன்று மூத்த வயதில் ஆன்மீகக் கருவாய் மலர்ந்திருக்கிறது.

  மற்ற கதைகளுக்கு இப்படி ஏதாவது குறிப்பிட்ட எண்ணத் தொடர்புகள் உண்டு. பார்ப்பவை, படிப்பவை, அனுப்பவிப்பவை இவை எல்லாம் தானே எழுத்தாளனின் உணர்வில் படிந்து கதைகள் ரூபம் கொள்கின்றன?..

  தங்கள் அருமையான விமர்சனனளுக்கு நன்றி, நண்பரே!..

  தொடர்ந்து என் கதைகளை வாசித்து அது பற்றி நீங்கள் எழுதப் போவதை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஒவ்வொரு கதைக்கும் தொடர்பு உள்ள நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! நிச்சயம் தங்களது கதைகளை/படைப்புகளை படித்து கருத்திடுவேன்.

   நீக்கு
 10. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

   நீக்கு
 11. மின்னூலக்கும் முயற்சியில் எனது மூன்று படைப்புகளும் மின்னூலாக வெளி வந்திருக்கின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு நாவலும் ( நினைவில் நீ ) வெளியாகி இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்  1. வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களது படைப்புகள் மின்னூல்களாக வெளிவந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 12. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வியாபார பயணத்தில் உள்ளேன்... அதனால் உடனே கருத்திட முடியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 13. வணக்கம்.

  தங்களின் நூலறிமுகம் நூலாசிரியர் பற்றியும் அவரது படைப்புகளையும் படிக்கத் தூண்டும் வண்ணம் உள்ளது.

  சிறப்பாக, கதாசிரியர் பின்னூட்டத்தில் கதையாக்கச் சூழல் பற்றிப் பகிர்ந்திருப்பதைச் சிறப்பாகக் கருதுகிறேன்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! திரு ஜீவி அவர்களின் கதையாக்க சூழல் பற்றிய பின்னூட்டம் இந்த நூல் ஆய்வு பதிவுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது என்பதை நானும் வழிமொழிகின்றேன்.

   நீக்கு
 14. திரு வைகோ அவர்கள் கூறியது போல உடனடியாகத் தங்கள் எழுத்துக்களைத் தொகுத்து மின்னூலாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என் அவா.
  இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு இராய.செல்லப்பா அவர்களே! கண்டிப்பாக எனது எழுத்துக்களை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படி மின்னூல்களாக கொண்டுவருவேன். தங்களது ஆலோசனைக்கும் நன்றி!

   நீக்கு
 15. நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அருமையான விமர்சனத்துக்குப் பாராட்டுகள். விரைவில் உங்கள் படைப்புகளையும் மின்னூலாக்குங்கள். இதுவரை படிக்காத உங்கள் பதிவுகளை மின்னூல் வாங்கிப் படித்துவிடுவேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! தங்கள் அனைவருடைய ஆலோசனைக்கிணங்க விரைவில் எனது படைப்புகளை மின்னூலாக்குவேன்.

   நீக்கு