நாங்கள் தங்கியிருந்த Great Mount Coco Lagoon ஓய்வகத்திலிருந்து மாசாணி அம்மன் கோவில் உள்ள ஆனைமலை 10 கி.மீ தொலைவுதான். நாங்கள் புறப்பட்ட நேரம் மதியம் 2.30 மணி என்பதால் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை.
சாலையின் இருபக்கங்களிலும் இருந்த தென்னந் தோப்புகள் தந்த நிழல், வழி முழுதும் குடை போல இருந்து வெயிலின் தாக்கத்தை நாங்கள் உணரா வண்ணம் உதவி செய்தன.
இருபக்கங்களிலும் உள்ள பசுமையை இரசித்துக்கொண்டே 30 மணித்துளிகளில் ஆனைமலையை அடைந்தோம். மாசாணி அம்மன் கோவிலருகே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியதும். எல்லோரும் கோவிலுக்கு செல்ல கீழே இறங்கினோம்.
ஆழியாற்றில் உள்ள அறிவுத் திருக்கோவில் மற்றும் ஆழியாறு அணை ஆகிய இடங்களை அடுத்து பார்க்க வேண்டியிருப்பதால் சீக்கிரம் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புமாறு நண்பர் பாலு கேட்டுக்கொண்டார்.
எல்லோரும் சிறுசிறு குழுவாக பிரிந்து கோவிலுக்கு செல்ல நடந்தோம்.என்னுடன் நண்பர்கள் மீனாட்சிசுந்தரம் மற்றும் பிச்சைதுரை வந்தனர்,
சாலையிலிருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருமருங்கிலும் பூசைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்ய அநேக கடைகள் இருந்தன. அதிலிருந்தோர் கோவிலுக்கு செல்வோரை அழைத்த வண்ணம் இருந்தனர். பூசை செய்ய நேரம் இல்லாததால் அவர்களின் அழைப்பை நிராகரித்து ஒரு வழியாய் வடக்கு நோக்கி இருந்த கோவிலின் முகப்பை அடைந்தோம்.
கோவில் வெளியில் பெரிதாகத் தெரியவில்லையென்றாலும் உள்ளே சென்றதும் அதனுடைய பிரமாண்டம் தெரிந்தது. உள்ளே சென்று தரிசனம் செய்ய இலவச வழி இருந்தாலும், எல்லா கோவில்களிலும் இருப்பதுபோல் நுழைவுக் கட்டணம் செலுத்தி செல்லும் சிறப்பு வழியும் இருந்தது. நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 5 ரூபாய் தான்.
(படங்கள் உதவிய கூகிளார்க்கு நன்றி!)
எங்களுக்கு குறைவான நேரமே இருந்ததால், சிறப்பு வழியில் செல்ல தீர்மானித்தோம். நண்பர் மீனாட்சிசுந்தரம் எங்கள் மூவருக்கும் நுழைவுச் சீட்டை வாங்கி வந்தார்.
வரிசையில் நின்று நெற்றியில் பெரிய பொட்டுடன் தெற்கே தலை வைத்து படுத்திருந்த நிலையில் இருந்த 15 அடி நீளம் கொண்ட மாசாணி அம்மனை தரிசித்தோம்.
இங்கு அம்மன் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் "மயானசயனி" முதலில் அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் "மாசாணி" என்றாகிவிட்டது. இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டாம்.
இவரது சிலை படுத்த நிலையில் ஏன் உள்ளது என்பது பற்றி அடுத்த பதிவில்.
தொடரும்
மாசாணியம்மனின் சிலை படுத்த நிலையில் உள்ளது ஏன் ? என்பது பற்றி அறிய ஆவலுடன்... நானும்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! நீங்கள் எழுப்பிய வினாவுக்கான விடையை அறிந்து கொள்ள காத்திருப்பதற்கு நன்றி!
நீக்குபோன வருடம் மட்டும் 3 முறை சென்று வந்தோம்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சென்ற ஆண்டு மூன்று முறை மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி. எனவே நான் சொல்லப் போகும் தகவல்கள் தங்களுக்கு புதியதாய் இருக்காது. எனினும் மேலதிகத் தகவல்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நீக்குகோயிலின் பிர்மாண்டம் புகைப்படத்தில் பளிச்.
பதிலளிநீக்குஆனைமனை எல்லாம் பார்த்ததே இல்லை. ஆனைமலை பெயர்க் காரணம் என்ன?.. ஆனை போல இருக்குமோ?..
வருகைக்கு நன்றி திரு ஜீவிஅவர்களே! நாங்கள் சென்ற ஆனைமலை என்ற சிறிய ஊர் இருப்பது ஆனைமலை தொடருக்கு அருகில். ஆனால் ஆனைமலை என சொல்லப்படுவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரவியுள்ள மலைத்தொடராகும்.
நீக்குஇதன் உயரமான இடமான ஆனைமுடி ( 2, 695 மீ (8, 842 அடி)) என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே இமயமலைத் தொடரில் அல்லாத இந்தியாவின் உயரமான இடம் ஆகும்.
ஆனைமலை என்ற இந்தக் தொடரின் பெயர் காரணப்பெயர் தான். இந்த மலைத் தொடரில் உள்ள காடுகளில் யானைகள் அதிகம் காணப்படுவதால் இது யானை மலை என அழைக்கப்பட்டு அது பின்னர் மருவி ஆனைமலை ஆகியிருக்கலாம்.
(மதுரைக்கு அருகே வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை என்ற ஊரில் உள்ள மலைக்கு யானைமலை என்று பெயர். இந்த மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என அழைக்கப்படுகிறது யானை மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.}
பொள்ளாச்சி சென்றால் ஆழியாறு அணை, அறிவுத் திருக்கோவில், வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம்) உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை, திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி போன்றவைகளைப் பார்க்கலாம். அவசியம் சென்று வாருங்கள்.
ஆனைமலை பற்றி விவரமாகச் சொன்னதற்கு நன்றி, நண்பரே! அறிவுத் திருக்கோயிலுக்காகக் காத்திருக்கிறேன்.
நீக்குமீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! அறிவுத் திருக்கொவில் பகுதி வரும்போது ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.
நீக்குநுழைவு கட்டணம் ஒருவருக்கு 5 ருபாய்தானா? ... பரவாயில்லையே ... ஆனா எங்க ஊரு சாமியெல்லாம் 100 ரூபாய்க்கும் குறைச்சு ஒத்துக்குறதே இல்ல. மீட்டருக்கும் மேலே போட்டு கொடுத்தா அவரே எழுந்து வெளியில வந்து நேரடியா காட்சி கொடுக்குறாரு !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! தற்போது உள்ள கட்டணம் வரும் நாட்களில் கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமானால் அதிகப்படுத்தப்படலாம்.
நீக்குஇக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். வித்தியாசமான மூலவர். சில கோயில்களில்தான் இவ்வாறாக வித்தியாசமான நிலைகளில் மூலவரைக் காணமுடியும். காஞ்சீபுரத்தில் 30 அடி உயரமுள்ள உலகளந்த பெருமாள், கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ராமர் பட்டாபிஷேகக் கோலம்..என பல கோயில்களை இவ்வாறு பார்த்துள்ளேன். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! இந்த கோவில் பற்றி விரிவாக தங்களைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள் தான் எழுதமுடியும். நான் ஒரு சுற்றுலாப் பயணியின் பார்வையின் எழுதுகிறேன். மேலதிகத் தகவல்கள் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டுகிறேன்.
நீக்குதங்களின் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியின் ஊடே எனது பதிவைப் படித்து கருத்திட்டமைக்கு நன்றி!
இந்தப் பகுதிகளுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன் - ஆனால் மாசாணியம்மன் கோவில் சென்றதில்லை. ஆழியார் அணை, அறிவுத் திருக்கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று வந்துள்ளேன். உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குஐயா எப்படி இருக்கிறீர்கள். இனி தொடர்கிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் எனது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! நலமே. தாங்கள் நலமா ?
நீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கஸ்தூரி ரங்கன் அவர்களே!
பதிலளிநீக்கு