புதன், 1 ஏப்ரல், 2020

மற(றை)க்க முடியுமா?





சிண்டிகேட் வங்கியில் நேற்றுவரை பணி புரிந்தோருக்கும், பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் இன்றைய நாள் ஒரு சோகமான நாள். காரணம் இன்று முதல் சிண்டிகேட் வங்கி என்ற மாபெரும் வங்கி,  கனரா வங்கியுடன் இணைந்து விட்டதால்  இனி சிண்டிகேட் வங்கி என்ற பெயருடன் அது தனித்து இயங்கப் போவதில்லை என்பதால் தான். 


இந்த நேரத்தில் சிண்டிகேட் வங்கியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.




1925 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் அப்போதைய சென்னை ராஜதானியில் (தற்போதைய கர்நாடக மாநிலம்) மங்களூருவிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள  உடுப்பியில் Dr T. M. A. Pai, Mr Upendra Ananth Pai, Mr Vaman Srinivas Kudva ஆகிய மூவரால், வெறும் 8000 ரூபாய் மூலதனத்தில் Canara Industrial and Banking Syndicate Limited. என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி. 1928 ஆம் ஆண்டு உடுப்பிக்கு அருகே உள்ள  பிரம்மாவர் என்ற ஊரில் தான் முதல் கிளையை திறந்தது. ( ஆனால் இன்றோ ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி 4000 கிளைகளைக் கொண்டுள்ளது)
  

Canara Industrial and Banking Syndicate Limited என்ற வங்கியின் பெயர், பொது மக்கள் விருப்பப்படி சிண்டிகேட் வங்கி என பெயர் மாற்றப்பட்டு வங்கியின் தலைமையகம் 19-04-1964 அன்று உடுப்பியிலிருந்து 8 கி.மீ தொலைவில் ஒரு சிறு குன்றின் மேல் உள்ள மணிப்பால் என்ற சிற்றூருக்கு மாற்றப்பட்டது


உலகிலேயே ஒரு சிற்றூரில் வங்கியின் தலைமையகத்தை கொண்ட வங்கி  சிண்டிகேட் வங்கி தான். 

அது மட்டுமல்ல உலகிலேயே நம்பிக்கைக்குரியது  நட்புணர்வு கொண்டது (Faithful, Friendly) என்ற சொல்லாட்சியுடன்  நன்றியுள்ள நாயை சின்னமாக வைத்ததும் சிண்டிகேட் வங்கி தான்.





இந்த வங்கி தொடங்கிய நாள் முதல் எளியோருக்கான வங்கி என்பதை சொல்லிலும் செயலிலும் காட்டியது. சொன்னால் நம்பமாட்டீர்கள். வெறும் 5 ரூபாய் இருந்தால் போதும் சிண்டிகேட் வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்கிவிடலாம். மேலும் கணக்கில் குறைந்த பட்சம் 25 காசுகள் கட்டலாம். கணக்கிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கலாம். அதனால் அடித்தட்டு மக்கள் அனைவரையும் இந்த வங்கி தன் பக்கம் இழுத்தது என்பது ஊரறிந்த உண்மை. அதனால்தான் தன்னை  எப்போதும் Small man’s Bank என்றே சொல்லிக்கொண்டது. 

பல புதுமையான பயனுள்ள சேவைகளை அறிமுகப்படுத்தியதும் இந்த வங்கிதான். சிண்டிகேட் வங்கியின் இந்த சேவைகளை பார்த்து மற்ற வங்கிகள் அதுபோல் தாங்களும் தொடங்கின என்பது உண்மை. சொல்லப்போனால் எல்லா வங்கிகளுக்கும் இது ஒரு முன்மாதிரி (Role Model) ஆக இருந்தது என்பதற்கு சான்றுகள் உண்டு. 

வாடிக்கையாளரின் கதவருகே  வங்கி சேவையை  முதன்முதல் கொண்டுவந்தது இந்த வங்கிதான். Pigmy Deposit என்ற திட்டத்தின் கீழ் முகவர்களை நியமித்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சிறு தொகையை வைப்புகளாக பெற்று வாடிக்கையார்களுக்கு சிறுசேமிப்பை அறிமுகப்படுத்தியதால் வாடிக்கையாளர்கள் தங்களை அறியாமலேயே பணத்தை சேமித்து தேவைப்பட்ட போது அதை ஈடாக காட்டி மேற்கொண்டு கடன் பெற உதவியது 
    
வணிக வங்கிகள் வேளாண் தொழிலுக்கு கடன் தராதபோது சிண்டிகேட் வங்கி ரிசர்வ் வங்கியிடம் சிறப்பு அனுமதி பெற்று 1964 ஆம் ஆண்டே (வங்கிகள் நாட்டுடைமை ஆக்குவதற்கு 5 ஆண்டுகள் முன்பே) வங்கியில் வேளாண்மைக் கடன் துறையைத்தொடங்கி  வேளாண் பெருமக்களுக்கு கடன் கொடுத்து எதிலும் தாங்கள் தான் முன்னோடி(Pioneer) என்பதை நிலை நாட்டியது. இந்த கடன்களை பரிசீலித்து கடன் தேவையை அறிந்து உதவிட  முதன் முதல் வேளாண் அறிவியல் பட்டதாரிகளை நியமித்ததும் இந்த வங்கிதான். 

இந்த வங்கி செய்த பணியைத்தான் மற்ற வங்கிகள் நாட்டுடைமையாக்கப் பட்டதும் பின் பற்றத் தொடங்கின. வேளாண் பெருமக்களுக்கு கடன் தந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு புதிய வேளாண் உத்திகளை சொல்லித்தர  தாங்களே முதன் முதல் Taichung Native 1 என்ற நெற்பயிரை விளக்கப் பண்ணையில் விளைவித்து வழிகாட்டியதும் இந்த வங்கிதான். 

மேலும் சிற்றூர்களில் Farm Clinic. Future Farmers Club, மற்றும் Farm information Exchange Club போன்றவைகளை உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு தொடங்கி வேளாண் மக்களுக்கு வேளாண் துறையில் உள்ள புதிய அறிவியல் நுட்பங்களை அறிந்துகொள்ள உதவியது இந்த வங்கிதான். Syndicate Agriculture Foundation என்ற அமைப்பைத் தொடங்கி வேளாண் பெருமக்களுக்கு வழி காட்டியதும் இந்த வங்கிதான்.

இன்றைக்கு அநேக வேளாண் பெருமக்கள் பயன்படுத்தும் கடன் அட்டை (Kisan Card) க்கு முன்னோடி, 1969 ஆம் ஆண்டுக்கு முன்பே வேளாண் பெருமக்கள் விதைகள், உரம், பூச்சி சொல்லி மருந்துகள் வாங்க வசதியாக இந்த வங்கி அறிமுகப்படுத்திய Agri Card தான். 

வங்கிகள் 19-07-1969 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டபோது சிண்டிகேட் வங்கியும் நாட்டுடைமையாக்கப்பட்டது.  மற்ற வங்கிகள் எந்த காரணத்திற்காக நாட்டுடைமையாக்கப்பட்டனவோ அவைகளை சிண்டிகேட் வங்கி முன்பே செய்து வந்ததால் வங்கியின் பணியில் எந்த மாற்றமும்  செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. 

இந்த வங்கி கொண்டுவந்த புதுமையான பல திட்டங்கள், பின்னர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக வங்கியின் Area approach என்ற முறை Lead Bank ஆகவும். 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாண எரிவாய்வு கலன்களுக்கு கடன் தரும் திட்டம் மரபு சாரா எரிசக்தி திட்டமாகவும் மாறின என்பது வங்கியில் உள்ளோருக்குத் தெரியும்.

வங்கிகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்பே  மாணவர்களுக்கு கல்விக் கடன்  கொடுத்ததும் இந்த வங்கிதான். பின்னர் இதுவே அரசால் வங்கிகளின்  முன்னுரிமைக் கடன் பட்டியலில் ஒன்றாக ஆக்கப்பட்டது. 

Manned by Women என்று அறிவித்து முழுதும் மகளிராலேயே நடத்தப்பட்ட 10 கிளைகளை தொடங்கியதும் இந்த வங்கிதான். பெண்களுக்கு முதன் முதல்  அதிக அளவில் வேலை வாய்ப்பு கொடுத்ததும் இந்த வங்கிதான். 

இந்தியாவின் முதல் வட்டார ஊரக வங்கி (Regional Rural Bank) யான Prathama Bank ஐ உத்திர பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற ஊரில் 1975 ஆண்டு அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் தொடங்கியதும் இந்த  வங்கிதான்.   

இந்த வங்கி ஆற்றிய பணிபற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. 4000 கிளைகளுக்கு மேல் 35000 ஊழியர்களுடன் உள்ள இந்த வங்கி இந்த தனது தனித்தன்மையை இன்று இழந்துவிட்டது என்பது பலருக்கு வருத்ததையும் சோகத்தையும் தந்திருக்கிறது என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த நிகழ்வு எனக்கும் சொல்லொணா துயரத்தைத் தந்திருக்கிறது என்பதை பகிர்ந்துகொள்கிறேன்.

உனக்கென்ன அக்கறை என பலர் நினைக்கலாம். நானும் இந்த வங்கியில் கள அலுவலராக சேர்ந்து  பல்வேறு நிலைகளில், பல்வேறு மாநிலங்களில் 35 ஆண்டுகள் பணியாற்றி துணைப் பொதுமேலாளராக பணிஓய்வு பெற்றவன். இந்த வங்கி எனக்கு புகலிடத்தையும், ஊதியத்தையும், சமுதாயப்படி நிலையையும் (Shelter, Salary and Status) கொடுத்தை எப்படி மறக்கமுடியும்? 

இந்த வங்கிதான் எனக்கு  பல மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பையும், விரிந்த மனப்பான்மை பெறவும், மூன்று மொழிகளைக் கற்கும் வாய்ப்பையும் எண்ணற்ற நண்பர்களை பெறவும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யவும் வழிசெய்தது. 

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.' என்ற பாடல் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. சிண்டிகேட் வங்கி என்ற பெயர் இல்லாமல் போகலாம். ஆனால் அது விட்டுச் சென்ற நற்பணிகளும், அது ஈட்டிய நன்மதிப்பும் என்றும் நிலைத்திருக்கும். காரணம் அவைகள் மணலில் வடித்த சிற்பங்கள் அல்ல, கல்லில் செதுக்கிய சிற்பங்கள். 

இறுதியாக சிண்டிகேட் வங்கியை மறக்க முடியுமா அல்லது அது செய்த நற்பணிகளை மறைக்கத்தான் முடியுமா? என்று கேட்டால்  நிச்சயம் முடியாது என்பதுதான் என் பதில்   


50 கருத்துகள்:

  1. இந்திய வங்கி உலகில் ஒரு முன்மாதிரியாக செயல்பட்ட வங்கியில் நாமும் பணிபுரிந்தது ஒரு பெருமையானது.அதன் புகழ் பல்லாயிரம் விவசாயிகளிடம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அரங்கநாதன் அவர்களே! மக்கள் (குறிப்பாக வேளாண் பெருங்குடி மக்கள்) மனதிலிருந்து மறையாத சிண்டிகேட் வங்கியில் நாம் இணைந்து பணி புரிந்தோம் என்பதை நினைக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

      நீக்கு
  2. எனக்கும் இங்கு கணக்கு உள்ளது ஐயா... அவர்களின் சேவை என்றும் மறக்க முடியாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், சிண்டிகேட்வங்கியின் சேவையை பாராட்டியமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நண்பரே...

    1985 என்று நினைவு நண்பர் திரு. நாகலிங்கம் அவர்கள் என்னை தேவகோட்டை சிண்டிகேட் வங்கிக்கு அழைத்து சென்று எனக்கு கணக்கு துவங்கி கொடுத்தார்.

    முதன் முதலாக 40 (நாற்பது) ரூபாய் போட்டு பெருமையாக புத்தகத்தை வாங்கி வந்தேன் இன்றுவரை இருக்கிறது.

    அன்று நான் வாரம் 700 ரூபாய் வரை சம்பாரிக்கும் எவர்சில்வர் வெல்டிங் வைக்கும் தொழிலாளி. தற்போது அமரராகி விட்டார்.

    அவர் வண்டியில் நிலக்கடலை வறுத்து விற்கும் முதலாளி கணக்கு துவங்கிய மறுநாள் அவரே சொன்னார்.

    "நீயெல்லாம் பேங்க்ல அக்கவுண்ட் தொடங்கிட்டே ?"

    அவ்வளவுதான் இன்றுவரை அந்த வங்கியின் வாயிற்படி மிதிக்கவே இல்லை அந்த நாற்பது ரூபாய் என்ன ஆனதோ ?

    பிறகு இறையருளால் நான் மூன்று நாடுகளில் 11 வங்கிகளில் பணப் புழக்கத்தில் வாழ்ந்து விட்டேன் இன்று ஒன்றேயொன்று மட்டுமே...

    சிண்டிகேட் வங்கியை நாய் பேங்க் என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

    இப்பதிவு பல நினைவுகளை மீட்டி விட்டது நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! இந்த பதிவின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டமைக்கும், தங்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியதற்கும் நன்றி! யாரோ ஒருவர் சொன்னதற்காக வங்கியின் வாசற்படியையே மிதிக்காதிருந்தது சரியல்ல. உங்களின் தகுதியை நிர்ணயிக்க அவர் யார்?

      நீங்கள் 35 ஆண்டுகளுக்கு முன் போட்ட பணம் முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செயலற்ற வைப்புக்கு (Dormant deposit) மாற்றப்பட்டு,பின்னர் ௧0 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை அலுவகத்திற்கு மாற்றப்பட்டிருக்கும். அதனாலேன்ன. சிண்டிகேட் வங்கியில் முதல் கணக்கு துவங்கிய நேரம் மூன்று நாடுகளில் 11 வங்கிகளில் பணப் புழக்கம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளதே.

      மனிதர்களைவிட நன்றியுள்ள நாயை சின்னமாக கொண்டிருந்த எங்களது வங்கியை நாய் வங்கி என்று செல்லமாக அழைத்ததில் தவறேதும் இல்லை.

      நீக்கு
    2. அவர் சொன்னதற்காக நான் வங்கிக்கு செல்லாமல் இல்லை அதன் பிறகு அங்கு செல்லும் வாய்ப்பே அமையவில்லை.

      நீக்கு

    3. மீள் வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! அவர் சொன்னதிற்காக நீங்கள் எங்கள் வங்கிக்கு செல்லாமல் இல்லை என அறிந்து மகிழ்ச்சி. இப்போது போகலாமே. பெயர்தான் மாறியிருக்கிறதே சேவையில் எந்த குறையும் இருக்காது.

      நீக்கு
  4. Very true.We were lucky we had opportunity to work there .As rightly mentioned it was really small mans bank and the crowd seen in branches wiil confirm it.Some times i have a strong feeling we must have remained a small mans bank...May be we would have remained high in banking industry.The need for feeding to corporate account were not really matched by us.Many of todays big corporares were encouraged by our bank ...including reliance.We were not able to satisfy them as they grew leaving them with our bank a symbolic account.I can say much more.I wish to share your feelings and say bye

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீதர் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் நமது வங்கியும் எளியோருக்கான வங்கியாக இருந்திருக்கலாம். பெரிய நிறுவனங்கள் தங்களது காரியம் ஆகும் வரை இருந்துவிட்டு வேறு வங்கிக்கு தாவிவிடுவார்கள் என்பது உண்மைதான். என்னுடைய உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!


      நீக்கு
  5. I am still unable to believe the great Manipal giant has vanished during our life time
    It is a sad dayforme S. JAGANNATHAN

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெகந்நாதன் அவர்களே! நம்மை உயர்த்திவிட்ட வங்கி நம் ஆயுட்காலத்திலேயே திடீரென வேறொரு வங்கியுடன் இணைந்து மறைந்துவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லா சிண்டிகேட் நண்பர்களுக்கும் சோகமான நாள்தான்.

      நீக்கு
  6. சிண்டிகேட் வங்கி - எனது உறவினரும் இந்த வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர். பல முறை அலுவல் சம்பந்தமாக சிண்டிகேட் வங்கியுடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். நல்ல வங்கி. இன்றிலிருந்து வேறு வங்கியுடன் இணைந்து செயலாற்றப் போகிறது என்பது பலருக்கும், குறிப்பாக அவ்வங்கியில் பணியாற்றிய உங்கள் போன்றவர்களுக்கு வருத்தமான விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தாங்களும் எங்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு இருந்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி! எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி!

      நீக்கு
  7. எனக்கும் இங்கு கணக்கு உள்ளது ஐயா... அவர்களின் சேவை என்றும் மறக்க முடியாது. நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சிவராமன் அவர்களே! தாங்களும் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர் என அறிந்து மகிழ்ச்சி. எங்கள் வங்கியின் சேவையை பாராட்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  8. I am equally pained at the developments . I was in fact hoping for a miracle till yesterday .. that this could be deferred or even withdrawn . There appears to be no logic in merging a strong bank with another strong bank . Now that the inevitable has taken place we can only walk down the memory lane frequently and think of the glorious time spent in Syndicate Bank . Be that as it may, your blog about our Bank was very informative and any one reading this would be terribly impressed . Not only to you but for thousands like me also this great institution provided 3 Ss. Like they eulogize departed leaders" long live Syndicate Bank" With your permission i am forwarding the contents of this blog to some of our friends who were in this Bank with us .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! . பதிவை பாராட்டியமைக்கு நன்றி! கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நம் வங்கி தனித்து இயங்க ஆணை வராதா என நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நடக்கவில்லை.

      தாங்கள் சொன்னது போல் நாம் இனி பழைய இனிமையான நிகழ்வுகளை நினைத்து மனதில்அசை போட வேண்டியதுதான்இந்த பதிவை நம் வங்கியில் பணிபுரிந்த நண்பர்களுக்கு அனுப்ப என்னுடைய அனுமதி தேவையில்லை.

      நீக்கு
  9. This blog has brought tears to my eyes. The unbelievable has taken place. The history of this great institution could not have been told more succinctly . Long live Syndicate Bank. With your permission i am forwarding the contents of this blog to some of our colleagues .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! தங்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
  10. நமது வங்கி துவக்கம் முதல், வங்கி துறைக்கே முன்னோடியாக செய்த அரும் பணிகளை அருமையாக தொடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    சுவர் இருந்தால் தான் சித்திரம்.
    வங்கி இருந்தால் தான் சங்கம்.மற்றும் எல்லாம்.
    என்ற கோட்பாடுடன், 39 ஆண்டுகளுக்கு மேல் வங்கிப்பணி. 36 வருடங்கள் சங்கப்பணியாற்றிய எம்மை போன்றவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், இன்றும் தொடரும் கிடைத்தற்கரிய நட்பு வட்டங்களை எம் வாழ் நாளில் மறக்க இயலாது.

    உலகமே கரோனா பாதிப்பில் மிக துன்பத்திலிருக்கும் போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் வங்கிகள் இணப்பை செய்து முடித்த ஆட்சியாளர்களை பற்றி என்ன சொல்வது?

    பொது மக்களுக்கு பாதிப்பை தந்து, யாருக்கும் மகிழ்ச்சியை தராத இச்சங்கமத்திற்கு காரணமானவர்களை அந்த கோவிட் 19 வைரஸ் தாக்காமல் இருக்க பைரவரை வேண்டிக் கொள்கிறேன்.
    சு.கங்காதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், உணர்ச்சி மிக்க கருத்துக்கும் நன்றி திரு கங்காதரன் அவர்களே! நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இனி என் செய்ய? பழைய நிகழ்வுகளை நினைத்து மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைய வேண்டியதுதான்.

      நீக்கு
  11. மிக அருமையான பதிவு ஐயா.
    மனம் மிகவும் வலிக்கிறது.அதுவும் நேற்று மணிப்பால் தலைமை அலுவலகத்தில் பெயர்ப்பலகையை மாற்றும் காணொளி ஒன்றில் நமது வங்கி பெயர் பலகையைக்காலால் அழுத்திக்கிழிப்பதை தாங்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அனானி அவர்களே! எனக்கும் அந்த காணொளியைப் பார்த்தபோது கண்ணீர் பெருகிவிட்டது.

      நீக்கு
  12. நிறைய தகவல்கள்.  என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் சிண்டிகேட் வங்கியில்தான் பணிபுரிகிறார்.  ஒரு வரமாய் லீவில் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீதர் !

      நீக்கு
  13. Wonderful article. I relish my period of association with Syndicate Bank. I stepped into Syndicate Bank for an educational loan for higher studies. For want of surety, I could not get loan. But I was surprised when I got job offer while I was working as a chemist in cement factory. I wanted modification of education loan guideline that surety need not be insisted up to certain limits. This has become a reality now. I cannot forget the fact that Syndicate bank provided me Shelter, Salary and Status. The name will ever remain in the hearts of the public.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! சிண்டிகேட் வங்கியில் பணி புரிந்த அனைவருக்குமே வங்கியுடன் இருந்த பிணைப்பு ஒரு சுகமான அனுபவமே. தாங்கள் விரும்பியவாறு கல்விக் கடனுக்கு பிணையதாரர் தேவையில்லை என ஆனது மகிழ்ச்சியான தகவலே.

      நீக்கு
  14. எல்லாம் AIBEU- உடன் எற்பட்ட தொடர்பால் தான். ஒவ்வொரு ஊருக்கும் நான் பணி மாற்றலாகிச் செல்கையில் அந்தந்த ஊர் சார்ந்த தொழிற்சங்கப் பொறுப்பில் இருக்கும் AIBEU தோழர்கள் நட்பாவார்கள். காஞ்சீபுரத்தில் நான் இருந்த பொழுது பழக்கமான
    தோழர்கள் முருகையனும், ஸ்ரீராமுலுவும் உங்கள் பதிவை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே நினைவுக்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! சிண்டிகேட் வங்கியில் இருந்த AIBEA தோழர்கள் தங்களின் நண்பார்கள் என அறிந்து மகிழ்ச்சி. இந்த பதிவு, காஞ்சீபுரத்தில் தங்களுக்கு பழக்கமான தோழர்கள் முருகையனையும், ஸ்ரீராமுலுவையும் நினைக்க வைத்தது அறிந்து மேலும் மகிழ்ச்சி.

      நீக்கு
  15. ** AIBEA என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன். தட்டச்சுப் பிழை.

    பதிலளிநீக்கு
  16. You have traced the bank from its origin to its merger (or demise?). All the important milestones are brought out. Thanks Sir!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சாய்கிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  17. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பழ.இரவீந்தரன்அவர்களே!

      நீக்கு
  18. சார்
    தங்களின் எண்ணவோட்டங்கள் மூலம் நமது வங்கியின் சிறப்புக்களையும்,பழகிய மனிதர்களின் மனிதநேய நிகழ்வுகள் மனதை நெருடும்படி உள்ளது .
    நமது வாழ்க்கையின் தற்போதய மகிழ்ச்சிக்கு காரணம் நம் வங்கியால்தான் என்பதை நம் மனம் என்றும் உணரும் என்பதை தங்களின் எண்ணவோட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.
    தித்திக்கும் நினைவுகள் தேனில் ஊறிய கனிச்சுவை போன்று சுவைபட இருக்கின்றது.
    காவிரி ஆறு என்றும் சிறப்புறும்.எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரம் தந்த காவிரியினை பயன்பெற்றோர் என்றும் தெய்வமாகப் போற்றுவர்.
    கடலில் கலந்தாலும் கலக்கும் இடந்தனில் காவிரிப்பூம்பட்டினம் போல் தனியிடம் பெறும் என்பதில் ஐயம் இல்லை.
    நம் வங்கியில் உங்களின் தொடர்பு "பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் விடும் "என்றாகி விட்டது .என் நெஞ்சில் இருக்கும் அன்பர்.
    நான் கண்ட இரத்தின சபாபதி.
    என்றும் நினைவில் நிற்கும் சிண்டிகேட் வங்கி .
    பழ.ரவீந்திரன்
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு பழ.இரவீந்தரன் அவர்களே! வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் தான் தங்களைப் போன்ற நண்பர்களின் நட்பு கிடைத்து, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் சிண்டிகேட் வங்கிக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  19. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்

    Excellent article bringing out the nostalgic memories of a great institution where the writer contributed his mite for four decades. Well done Mr Sabapathy. Congratulations.
    Sundaravadivel. Former Banking Ombudsman for the state of Kerala and Lakshadweep

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா! எங்கள் வங்கியைப் பற்றி எழுதிய எனது பதிவிற்கு தாங்கள் தந்துள்ள பாராட்டு எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் தெம்பூட்டி (Tonic) என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

      நீக்கு
  20. தங்களின் இந்த பதிவின் மூலம்,சிண்டிகேட் வங்கியைப்பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் எங்கள் வங்கியைப் பற்றி தெரிந்துகொண்டமைக்கும் நன்றி! சிட்னியில் இருக்கும் எனது நண்பர் புதுவயல் திரு அழகப்பனும் சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்தவர்தான்.

      நீக்கு
  21. ஆஹா !!! .... சிண்டிகேட் வங்கியின் முழு ஜாதகத்தையும் தந்துள்ளீர்கள் ... அறியாத பல விசயங்களை அறிந்து கொண்டோம்.. எல்லா வங்கிகளுக்கும் இது ஒரு முன்மாதிரி (Role Model) ஆக இருந்தது என்பது பெருமைப்பட வைக்கிறது ... அதே வேளையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தன் தனித்தன்மையை இழந்து நிற்பதை கண்ணுறும்போது உங்கள் வேதனை எங்களையும் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! எங்கள் வங்கியை பற்றி அறிந்துகொண்டமைக்கும் எங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!

      நீக்கு
  22. ரொம்ப நாள் கழிச்சி வரேன். வருத்தமான விஷயம் தான். இணைப்பு அரசு எதிர்பார்த்த பலனை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் இனி முன்பு போல் சின்டிகேட் வங்கி ஊழியர்கள் குறிப்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு எத்தகைய ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் இந்த இணைப்பு நினைத்த பலனைத் தருமா என்பதையும் முன்னாள் சிண்டிகேட் ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றோர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நல்லதே நடக்கும் என நம்பத்தான் வேண்டும்.

      நீக்கு
  23. "The king is dead.,long live the king"
    சிண்டிகேட் வங்கி என்ற பெயர் இன்று இல்லை.ஆனால் புதிய கூட்டணியில்,சிண்டிகேட் ஊழியர்கள் தம் திறமையை,தனித்தன்மையை வெளிப்படுத்தி முத்திரை பதித்து,தொடர்ந்து அப்பெயரைப் பேச வைப்பார்கள்.
    வாழ்க .வளர்க.
    சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் சிண்டிகேட் நண்பர்கள் புதிய கூட்டணியில் ( Syndicate என்பதற்கு கூட்டமைப்பு என்று தானே பொருள்) கண்டிப்பாக வரலாறு படைப்பார்கள். நானும் உங்களோடு சேர்ந்து வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  24. உள்ளத்தை உருக வைத்த உணர்வுபூர்வமான பதிவு். எத்துணையோ திட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய நம் வங்கி தன் முகத்தை இழந்தது சொல்லொன்னா துயரம்
    CBS ஐ அறிமுகம் செய்த முதல் பொதுத்துறை வங்கியும் நமதே்
    Off site Monitoring of branches என்ற அற்புத திட்டத்தை கொண்டுவந்ததும் நாமே்
    Online Inspection of branches க்கும் நாமே முன்னோடி்்
    உங்கள் பதிவை அச்சிட்டு கிளைகளில் உள்ள இன்றைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும்🙏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டு க்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! CBS ஐ 2000ஆம் ஆண்டில், முதன் முதல் இந்தியாவில் நமது வங்கிதான் அறிமுகப்படுத்தியது என எழுத எண்ணியிருந்தேன்.ஆனால் அது ஏனோ விடுபட்டுப்போயிற்று, அதை தாங்கள் சொன்னதற்கும், Off site Monitoring of branches, Online Inspection of branches போன்ற திட்டங்களை கொண்டுவந்த முன்னோடி வங்கி நமது வங்கிதான் என சொன்னதற்கு நன்றி!நமது வங்கி, இன்னும் பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்பது பற்றியும்,மய்ய அரசினுடைய பல பரிசுகளைப் பெற்றது என்பது பற்றியும் எழுத எண்ணினேன். ஆனால் பதிவு நீண்டுவிடும் என்பதால் எழுதவில்லை.

      நீக்கு
  25. தனியான மகளிர் கிளைகள், வேளாண் கடன் போன்ற முன்னோடி திட்டங்கள் நம் வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு