செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
நினைவோட்டம் 26
(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)
நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.
என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!
இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.
திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.
இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!
இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.
நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.
இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.
இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.
இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
வெள்ளி, 23 ஜூலை, 2010
எனக்குப்பிடித்த பாடல்கள் 7
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.
இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.
எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.
காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.
இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.
இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.
இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.
இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.
இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.
'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.
ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!
வியாழன், 15 ஜூலை, 2010
நினைவோட்டம் 25
ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.
பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.
காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.
காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)
காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.
வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.
வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.
ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
புதன், 30 ஜூன், 2010
நினைவோட்டம் 24
முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.
பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.
ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.
எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.
முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.
ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
செவ்வாய், 15 ஜூன், 2010
நினைவோட்டம் 23
ஆனால் ஒவ்வொரு தெருவிலும் ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட விளக்கு கம்பங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரவு முழுவதும் எரிவதற்கு ஏற்பாடு செய்திருந்ததால் மின் வசதி இல்லாத குறை தெரியவில்லை.
பேரூந்து நிறுத்தத்திலிருந்து இரயில் நிலையம் வரை வரிசையாய் இரு மருங்கிலும் மரங்கள் அணி வகுத்து நிற்பது ஒரு கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (ஆனால் இன்றோ அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு வரிசையாய் கான்க்ரீட் கட்டிடங்கள் அவைகளின் இடத்தை
ஆக்கிரமித்துள்ளன.)
அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சமே பெண்ணாடத்தில் இருந்ததில்லை. நிலத்தடி நீர் சுமார் பத்தடிக்கு கீழேயே கிடைத்ததால் ஒவ்வொரு வீட்டிலும் கைகளால் இயக்கும் நீரேற்றும் பம்புகள் இருந்தன.
இருந்தாலும் நான் இருந்த தெருவில் உள்ள என் வயது பையன்கள் அனைவரும் அருகே ஓடும் கால்வாய்க்கு சென்றே குளித்துவருவோம். போகும் வழியில் உள்ள இலுப்பை தோப்பினூடே காலையில் செல்வது ஒரு இனிய அனுபவம். (இப்போது அந்த இலுப்பை தோப்பும் காணாமல் போய்விட்டது.)
காலையில் வீட்டை விட்டு 6 மணி சுமாருக்கு குளிக்க கிளம்பினால் வாய்க்காலில் கும்மாளம் போட்டுவிட்டு திரும்பும்போது 7 மணிக்கு மேல் ஆகிவிடும். வந்தவுடன் பெரியம்மாவின் சொல்படி திருநீறு பூசி ,சாமி கும்பிட்டுவிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்ல தயாராவேன்.
பள்ளிக்கு நாங்கள் ஒரு கூட்டமாக சென்று மதிய இடைவேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வோம். இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. மதிய இடைவேளை நேரம் ஒரு மணி நேரம்தான். அதற்குள் ஓடோடி வந்து (காலில் செருப்பில்லாமல் தான்) சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும். காரணம் நான் முன்பே சொன்னபடி எங்கள் வகுப்பு அறைகள், பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால்.
மாலையில் இந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவிவிட்டு காப்பி குடித்துவிட்டு, இரவு படிப்பதற்காக லாந்தர் விளக்கின் கண்ணாடியை துடைப்பேன். அந்த லாந்தர் எனது பெரியம்மாவால் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டதாம். ஒவ்வொரு நாளும் அதை எடுக்கும்போதும் எனது பெரியம்மா 'பார்த்து துடைப்பா.பத்திரம். இதை நான் வாங்கி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. கீழே போட்டுவிடாமல் மெதுவாக துடை' என்பார்கள்.
லாந்தரை எடுத்து, அதன் கம்பி கூட்டிலிருந்து கண்ணாடியை வெளியே எடுத்து என் மடி மீது வைத்துக்கொண்டு விபூதியைக்கொண்டு, அதை துடைத்து, திரும்பவும் மாட்டுவதற்குள் வேர்த்து விறுவிறுத்துவிடும். அப்படி ஒரு நாள் துடைக்கும்போது , அதை கீழே போட்டு உடைத்துவிட்டேன். அதற்காக பெரியம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் மறக்க முடியாதவை.
இந்த நேரத்தில் எனது பெரியம்மாவைப்பற்றி சொல்லவேண்டும். அவர்கள் இளம் வயதிலேயே திருமணமாகி, அறியாப்பருவத்திலேயே கணவனை இழந்தவர்கள். அதனால் எந்த நேரமும் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பார்கள். தினம் சாமி கும்பிட்டுவிட்டுதான் எதையும் தொடங்கவேண்டும் என்று சொல்வார்கள். என்னிடம் கண்டிப்பாக இருந்தாலும், என் பேரில் ஆசையாக இருந்தார்கள்.
எனக்காக அவர்கள் தன் சௌகரியத்தை பாராது, என் விருப்பப்படி சமையல் செய்து என்னை படிக்கவைத்ததை இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
அந்த ஆண்டு பள்ளியில் ஒரு கட்டுரைப்போட்டி வைத்திருந்தார்கள். எதோ ஒரு குருட்டு தைரியத்தில் நானும் கலந்துகொண்டேன். கட்டுரையை பாதி எழுதும்போதே பேனாவில் மை தீர்ந்துவிட்டதால் மேலே எழுதமுடியாமல் தாளை கொடுத்துவந்துவிட்டேன். போட்டியின் முடிவை அறிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதில் மூன்றாவது பரிசு எனக்கு கிடைத்து இருந்தது.
பரிசாக பெண்ணாடத்தில் அப்போது இருந்த 'புதுமை பிரசுரம்' என்ற நூல்கள் வெளியிடும் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட 'கடல் கன்னி' என்ற புதினம் ஒன்றை கொடுத்தார்கள்.
கல்வி ஆண்டு முடிந்தபோது, 'ப்ராத்மிக்' என்ற இந்தி தேர்வையும், எட்டாம் வகுப்பின் இறுதித் தேர்வையும் எழுதிவிட்டு ஊருக்கு திரும்பினேன். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது வேறு ஊருக்கு செல்லவேண்டும் என்பதை நினைத்தபோது வருத்தமாக இருந்தது.
ஏனெனில் அரியலூரைவிட பெண்ணாடத்தில் சுதந்திர காற்றை சுவாசித்தேன் என்பதால்தான்.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
வியாழன், 10 ஜூன், 2010
நினைவோட்டம் 22
அப்போதெல்லாம் வாக்கு சீட்டில் முத்திரை இடும் முறை பின்பற்றப்படவில்லை.ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவைகள் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் விரும்பும்(?) வேட்பாளர்களின் பெட்டியில் போடவேண்டும்.
விவரம் தெரியாதவர்கள் பெட்டியின் மேலேயே சீட்டை வைத்து வருவதுண்டு. அவர்களுக்கு பின்னால் செல்பவர் அதை எடுத்து தாங்கள் விரும்பும் பெட்டியில் போடுவதும் உண்டு. (ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் தருவதற்கு பதிலாக வண்ணம் கொடுத்திருந்தார்கள். எனவே வாக்கு பேட்டிகள் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்திலேயே இருக்கும். )
1957 பொது தேர்தல், தமிழ் நாட்டு மக்களை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அண்ணா மற்றும் தி மு க முன்னணி பேச்சாளர்களின் மேடைப்பேச்சும், தி மு க வெளியிட்ட விளம்பர சுவரொட்டிகளும்அவற்றுள் சில.
அப்போது பெண்ணாடம் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் சார்பில் திரு ராஜவேல் படையாட்சி அவர்களும், தி மு க சார்பில் திரு செல்வராஜ் அவர்களும் ,கம்யுனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளராக திரு வீராசாமி படையாட்சி அவர்களும் போட்டியிட்டது நினைவுக்கு வருகிறது.காங்கிரசுக்கு இரட்டை காளைகள் சின்னமும் தி மு க விற்கு உதய சூரியன் சின்னமும் இருந்தது.
தேர்தல் சமயத்தில் தினம் ஒவ்வொரு கட்சி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கும் அதன் பின் நடக்கும் தேர்தல் நாடகத்தையும் பார்க்க நாங்கள் கூட்டமாக சென்றது உண்டு.
அந்த தேர்தலில் தான் தி மு க, அதுவரை அபேட்சகர் என அழைக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாகவும், ஓட்டுகளை வாக்குகள் எனவும் அழைக்கும் முறையை கொண்டுவந்தது.
தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தி மு க வை சேர்ந்த திரு செல்வராஜ் வெற்றிபெற்றபோது பெண்ணாடம் விழாக்கோலம் பூண்டது உண்மை.
அவர் வெற்றி பெற்றது, எங்கள் எல்லோருக்கும் நாங்களே தேர்வில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு பெற்றோம்.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
வியாழன், 20 மே, 2010
நினைவோட்டம் 21
நான் பெண்ணாடத்தில் படித்த ஆண்டில்
(1956-57) நடந்த பல நிகழ்வுகள் மறக்க இயலாதவை.
அந்த ஆண்டில் தான் அரியலூர் அருகே மருதையாற்று ரயில் பாலத்தில் நடந்த கோர விபத்தில் பலர் இறந்ததால், அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு லால் பகதூர் சாஸ்த்ரி பதவியை துறந்தார்.
அதுவரை புழக்கத்தில் இருந்த ரூபாய், அணா பைசாவுக்கு பதில் ரூபாய், நயா பைசா என்ற
புதிய நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்போதுதான்.
(அப்போது இருந்த ஒரு ரூபாய்க்கு 16 அணாவும், ஒரு அணாவுக்கு 12 பைசாவும் என கணக்கிடப்பட்டன.)
புதிய நாணய முறை(ரூபாயும், பைசாவும்)
1 - 4 -1957 லிருந்து நடைமுறைக்கு வந்ததும், பழைய நாணயங்களும் புழக்கத்தில் இருந்ததால் புதிய முறைக்கு மாறுவதில் மக்கள் சிரமப்பட்டது உண்மை.
அரசால் செய்தி தாட்களில் வெளியிடப்பட்ட நாணய மாற்று அட்டவணையை(Conversion Table) கையில் வைத்துக்கொண்டுதான் எதையும் விற்கவோ, வாங்கவோ முடிந்தது.
அந்த ஆண்டில் தான் இரண்டாவது பொதுத்தேர்தல் வந்தது. திராவிட முன்னேற்ற கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலுக்கு
போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றதும் அந்த தேர்தலில்தான்.
அரசியல் பற்றியோ, தேர்தல் பற்றியோ அறியாத என் வயதொத்த மாணவர்களுக்கு அந்த வேளையில் நடந்த தேர்தல் பிரச்சாரம்
ஒரு விநோதமாக தெரிந்தது.
அப்போது தி. மு.க தினம் ஒரு சுவரொட்டியை வெளியிடும். அதை பார்க்க, படிக்க எங்களிடையே போட்டி இருந்தது உண்மை.
மேலும் எங்களது தமிழ் ஆசான் புலவர் குஞ்சிதபாதனார் வகுப்புக்கு வந்ததும் எங்களை பார்த்து 'இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள
சுவரொட்டி என்ன?' என்று கேட்பார்.
(அப்போதெல்லாம் தமிழ் ஆசிரியர்கள் தான் தி.மு,க வளர உதவினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதில் வேடிக்கை என்ன வென்றால் எங்களது இந்தி ஆசிரியரும், இந்தி பாடத்தை நடத்திவிட்டு அப்போதைய அரசியல் பற்றி பேசி, மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பை வளர்த்தார் என்பதே! )
தமிழ் ஆசிரியர் கேட்பாரே என்பதற்காக, பள்ளி வரும்போது தி.மு.க தேர்தல் அலுவலகத்தின் முன் ஒட்டப்பட்டுள்ள
சுவரோட்டியைப்படித்துவிட்டுவந்து போட்டிபோட்டுக்கொண்டு ஆசிரியர் கேட்கு முன்னே சுவரொட்டியில் உள்ள வரிகளை சொல்வோம்.
அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் படித்தவற்றில் நினைவுக்கு வருபவை.
அரியலூர் அழகேசா
ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது.
ரயில் எஞ்சின்கள் செய்வது வடக்கே
ரயில் பெட்டிகள் செய்வது தெற்கே.
நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார்
நோட்டு அடித்தால் போதாது.
டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்கு பகையாளி.
கடைசியில் உள்ள வரிகளை இப்போது படிக்கும்போது, காலம் தான் எத்தனை பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என
நினைக்க தோன்றுகிறது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி