ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஆசையில் ஒரு கடிதம்? 1


தலைப்பைப் பார்த்ததும்,'அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஒரு கடிதம்!' என்றோ,'கண்மணி! அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!' என்றோ
நான் எழுத இருப்பதாக எண்ணவேண்டாம்.

இது காதல் கடிதங்கள் பற்றிய பதிவு அல்ல என்பதை முதலிலேயே
சொல்லி விடுகிறேன்.  கடிதங்கள் எழுதுவது மெல்ல மெல்ல ம(கு)றைந்துவரும் இந்நாளில் அலுவலக கடிதங்கள் எழுதுவதில் உள்ள தவறுகளை சொல்வது எவ்வளவு தூரம் உதவியாய் இருக்கும் என எனக்குத்தெரியவில்லை. இருப்பினும் நான் தெரிந்துகொண்டதை எழுத நினைக்கிறேன்.  

அரசு அலுவலகங்களில் பணிபுரிவோருக்குத் தெரியும் சாதாரணமாக எழுதும்போது கடித தொடக்கத்தில் Sir, என்றே ஆரம்பித்து கடிதம் எழுதுவார்கள். 

ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பற்றியோ அல்லது அந்த விஷயம்  பற்றி சம்பந்தப்பட்டவரின் கவனத்தை ஈர்க்க விரும்பும்போது, வழக்கமாக விளிச்சொல்லான Sir, என்பதை எழுதாமல் Dear Mr. X என்று சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் அந்த கடிதத்தை அனுப்புவார்கள். அப்படி 
எழுதும்போது Dear Mr. X என்ற சொல்லை கையொப்பமிடுபவரே 
கையால் எழுதி கையொப்பமிட்டு அனுப்புவது உண்டு.  

இதை D.O Letter (Demi Official) என்று சொல்வார்கள்.  

அதன் நோக்கமே அந்த கடிதத்தில் எழுதப்பட்ட விஷயத்திற்கு அதை
பெறும் அலுவலர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஆகும்.
அந்த  கடிதத்தில் எழுப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தராவிட்டாலோ அல்லது பதில் எழுதாமல் விட்டாலோ அடுத்து ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என்பதால் இம்மாதிரி கடிதங்கள்,
மேல் அதிகாரியிடமிருந்து வந்ததும், அதைப் பெறும் நபர் படும் மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த மாதிரி அனுப்படும் D.O Letter களை, அரசு அலுவலகங்களில் செல்லமாக Love Letter என்றும் சொல்வதுண்டு. காரணம் Dear என்று
விளித்து எழுதியிருப்பதால்.

ஆனால் இந்த கடிதங்கள் எழுதுவது பற்றி எழுதப்படாத விதிகள் 
உள்ளன. மேல் அதிகாரி தன்  கீழ் பணிபுரியும் அலுவலருக்கு  
D.O Letter எழுதினால் அந்த அலுவலரின் பெயரை எழுதி 
(உ-ம் Dear Mr.X) கடிதத்தை ஆரம்பிக்கலாமாம்.

ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர் திருப்பி பதிலளிக்கும்போது,  
Dear Sir, என்றுதான் எழுதவேண்டுமாம். அவரது பெயரை 
எழுதக்கூடாதாம். ஏன் அவ்வாறு எனத்தெரியவில்லை. அதுவே மேலதிகாரி பெண் ஆக இருந்தால் Dear Madam என்று 
எழுதக்கூடாதாம். Madam என்றுதான் ஆரம்பிக்கவேண்டுமாம்!

நான் மாநில அரசு பணியில் இருந்தபோது இவ்வாறு கடிதங்கள் வந்தபோது என்னோடு பணியாற்றிய மூத்த அலுவலர்களிடம் 
இது பற்றி கேட்டபோது அவர்களுக்கும் தெரியவில்லை. 
கேட்டால் இதுதான் நடைமுறை என்றார்கள்.

அரசில் புதிதாய் பணியில் சேருவோர் அனைவரும் காரணம் தெரியாமலேயே தமக்கு முன்னர் இருந்தவர்கள் செய்ததைப் பார்த்து தாங்களும் அதையே கடைப்பிடிக்கிறார்கள். 

இதை எழுதும்போது நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 
அநேகம் பேருக்கு இது தெரிந்தும் இருக்கலாம்.

ஒரு அறையில் எட்டு குரங்குகள் விடப்பட்டு, அந்த அறையின் நடுவில் மேலிருந்து ஒரு வாழைப் பழக்குலை கட்டப்பட்டது. அந்த பழங்களுக்கு அருகே  இருக்கும்படி ஒரு ஏணியும் வைக்கப்பட்டது. ஏதாவது ஒரு குரங்கு அந்த பழங்களை ருசிக்க ஏணியில் ஏறும்போது அங்கு உள்ள மற்ற குரங்களின் மேல்  குளிர்ந்த நீரை (Ice Water) வீசப்பட்டது. அந்த குளிர்ச்சியான தண்ணீர் மேலே படும்போது அந்த குரங்குகள் 
அதனுடைய குளிரின் தாக்கத்தை தாங்கமுடியாமல் 
துடிக்கத்தொடங்கின.
 
இதுபோல் ஒவ்வொரு  குரங்கும் ஏணியில் ஏற முயற்சிக்கும்போது 
குளிர் தண்ணீர் வீச ஆரம்பித்ததும், அந்த வலியைத்தாங்க முடியாத 
மற்ற குரங்குகள் ஏணியில் அந்த குரங்கு ஏறுவதால்தானே தங்கள் 
மேல் குளிர் நீரை வீசுகிறார்கள் என்பதால்,ஏணியில் ஏறும் குரங்கின் 
மேல் பாய்ந்து அதை அடிக்கத் தொடங்கிவிட்டன.
 
இதுபோல் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குரங்குகள் ஏணியில் 
ஏற முயற்சித்தாலே மற்றவை அதை ஏறவிடாமல் அடித்து நிறுத்திவிட்டன. இல்லாவிடில் அவைகள் அல்லவா அந்த குளிர் நீரின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும். 

எப்போது ஒரு குரங்கு கூட ஏணியில் ஏறாமல் இருந்ததோ அப்போது 
ஒரு குரங்கை வெளியேற்றிவிட்டு ஒரு புதிய குரங்கு உள்ளே விடப்பட்டது.

அது உள்ளே வந்ததும் மேலே தொங்கும் பழத்தைப் பார்த்ததும் ஏன் 
மற்ற குரங்குகள் சும்மா இருக்கின்றன என எண்ணி தானாவது சாப்பிடலாமே  என்று ஏணியில் ஏறத்தொடங்கியது.அப்போது 
மற்றவைகள் அதன் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பித்தன.ஏன் மற்ற குரங்குகள் தன்னை அடிக்கின்றன எனத் தெரியாததால் அது திரும்பவும் ஏற முயற்சிக்கவில்லை.

பின்பு இரண்டாவது குரங்கை வெளியேற்றிவிட்டு அதற்குப் பதில் 
புதிய குரங்கு ஒன்றை உள்ளே விட்டபோது அதுவும் ஏணியில் ஏற முயற்சித்தபோது, புதிதாய் வந்த குரங்கும் ஏன் அடிக்கவேண்டும் எனத்தெரியாவிட்டாலும் மற்ற குரங்குகளோடு சேர்ந்து கொண்டு 
அதை ஏறவிடாமல் தாக்கிற்று.

இவ்வாறு ஒன்று பின் ஒன்றாக எல்லா பழைய குரங்குகளையும் மாற்றிவிட்டபோது, உள்ளே புதிய எட்டு புதிய குரங்குகள் இருந்தாலும்
ஒன்று கூட ஏணியில் ஏறி பழத்தைப் பறிக்க முயற்சிக்கவில்லை.
குளிர்ந்த நீர் வீசாவிட்டாலும் கூட யாராவது ஏறினால் மற்றவை 
அதன் மேல் பாய்ந்து அதை அடிக்கத் தொடங்கிவிட்டன காரணம் 
என்ன என்று தெரியாமலேயே!

அதுபோலத்தான் அரசின் சில நடைமுறைகளும் காரணம் தெரியாமலேயே எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது என நினைக்கிறேன் நான். 

அலுவலக கடிதம் எழுதுவதில் இருந்த எனது ஐயத்திற்கான விடை   
1999 ல் ஒரு பயிற்சிக்கு ஹைதராபாத் சென்றபோதுதான் கிடைத்தது.


தொடரும்

புதன், 15 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 40

வங்கிகளில் ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் என்று தனித்தனி சங்கங்கள் உண்டு. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களும் உண்டு. ஆனால் அவைகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ள அலுவலர்/ஊழியர் சங்கங்களே  வங்கிகளால் அங்கீகரிக்கப்படும். 
 
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு வங்கி தரும் சலுகைகள் இருந்த காரணத்தால், மற்ற சங்கங்களை சேர்ந்தவர்களிடம் அவர்கள் அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் உறுப்பினர்கள் என்பதற்காக நான் ஒருதலைப்பட்சமாக நடந்ததில்லை. 

எல்லோரும் வங்கி ஊழியர்கள் என்பதால் அனைவருக்கும் 
பொதுவாகவும் நடுநிலையாகவும்  நடந்துகொண்டேன். அதனாலேயே 
நான் மேலாளராகவும், முதன்மை மேலாளராகவும் பணியாற்றிய கிளைகளில் வங்கி-ஊழியர் உறவுகளில் (Industrial Relations) எந்த வித சிக்கலும் ஏற்படவில்லை. உறவு சுமுகமாகவே இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

என்னிடம் இன்னொரு பழக்கம் இருந்தது. என்னோடு
பணியாற்றுபவர்கள் எல்லோரிடமும் மரியாதையோடுதான்
பேசுவேன். யாரையும் ஒருமையில் அழைத்ததும் இல்லை
யாரிடமும் ஒருமையில் பேசியதும் இல்லை.

எனது வயதில் பாதி வயது உள்ள எனது கார் ஓட்டுனர்களைக் கூட, 
நீ, வா, போ என்று சொன்னதில்லை. அவர்களை மரியாதையோடுதான் விளிப்பேன்.

எனக்கு இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் 
தெரியுமாதலால் அந்தந்த மொழியில் பேசும்போது அவர்களிடம்  மரியாதை தரும் சொற்களைத்தான் உபயோகப்படுத்துவேன்.
எல்லோரிடமும் சகஜமாக பழகியதன் அருமை சென்ற ஆண்டு (2011) சனவரியில் தலைமை அலுவலகம் சென்றபோது தெரிந்தது. 
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பும்போது மணிப்பாலில் (தலைமை அலுவலகம் உள்ள இடம்) 
உள்ள பழைய நண்பர்களை பார்க்கச் சென்றேன்.

அலுவலகத்தின் நுழை வாயிலை அடைந்தபோது, அங்கிருந்த 
கார்களின் அருகே நின்றுகொண்டிருந்த ஓட்டுனர்கள் முக மலர்ச்சியுடன் அருகே வந்து கன்னடத்தில் சார்.வாங்க.வாங்க. நலமுடன் இருக்கிறீர்களா? எப்போது வந்தீர்கள்?’ என அன்புடன் விசாரித்தனர். இத்தனைக்கும் அவர்கள் எனக்குத் தரப்பட்டிருந்த வாகனங்கத்திற்கான  ஓட்டுனர்கள் அல்ல.அப்போது எனக்கு ஓட்டுனராக இருந்தவரும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டார். 

நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு, ‘பரவாயில்லையே. 7 வருடங்கள் ஆனாலும் மறக்காமல் இருக்கிறேர்களே?’ என்றதும், 
அவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ,’சார். எங்களை 
நன் முறையில் நடத்திய உங்களை எப்படி மறக்க முடியும்.?’ என்று பதிலளித்தபோது, எனக்கு கண்ணில் நீர் திரண்டது உண்மை.  

 ‘’We should not Demand Respect, but Command Respect.’’ என்று எனது நண்பர் ஒருவர் சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

நான் எவ்வாறு Boss ஆக பணியாற்றினேன் என்பதைப் பற்றி இன்னும் எழுதினால் பதிவு நீண்டுகொண்டே இருக்கும் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் விட்டுப்போனவைகளில் சிலவற்றை நினைவோட்டம் தொடரில் 
நிச்சயம் எழுதுவேன்.

ஆனால் எனது அனுபவத்திலிருந்து ஒன்று மட்டும் சொல்லுவேன். மேலாளர்களுக்கு ஊழியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் தலைவர்களுக்கோ தொண்டர்கள் இருப்பார்கள்.  
(Mangers have subordinates but Leaders have followers) என்பது நூற்றுக்கு நூறு சரியே!

இறுதியாக முடிக்குமுன் Boss கள் பற்றிய நான் படித்த ஒரு 
அதிர்ச்சியான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன்.

‘’முன் மாதிரியாக இருக்கத் தகுந்தவர்கள் என அறியப்படுகின்ற வெற்றிகண்ட மனிதர்களே நிறுவனங்களில் உயர் பொறுப்பு வகிக்க தகுதியானவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நிறுவனத்தின் சில தலைவர்கள் சாதாரண நபர்களை விட 
நான்கு மடங்கு மன நிலை திரிந்தவர் (Psychopath) அதாவது 
உள நோயாளியாக இருக்க வாய்ப்பு உண்டாம்!

நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் 25 பேரில் ஒருவர்  
மன நோய் உள்ளவராக நம்பப்படுகிறதாம். ஆனால் அவர்கள் அதை தங்களது சமூக அந்தஸ்தாலும், வசீகரத்தாலும், நிலமையை 
திறமையாகக் கையாளுதல்மூலமும், மறைத்துவிடுகிறார்களாம்.

நாம் நினைப்பதுபோல் அவர்கள் மன நிலை திரிந்தவர்கள் என்பது வெளியே தெரியாதாம். நமக்குத் தெரியாமலேயே நாம் பல வருடங்கள் அவர்களோடு பழகிக்கொண்டிருக்க வாய்ப்பு உண்டாம். 

உண்மையான சிக்கல் என்னவென்றால் நிறுவனத்தின் தலைவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமே,அதை அந்த மன நிலை திரிந்தவர்கள் சுபாவத்திலே வசீகரம் உடையவர்களாக இருப்பதால், தங்களிடம் அவைகள் இருப்பதுபோல் காட்டக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்.’’

மேலே குறிப்பிட்டவை,  நியூயார்க்கை சேர்ந்த உளவியல் நிபுணர் (Psychologist) திரு பால் பாபியாக் (Paul Babiak) அவர்கள் தலைமையேற்று, கனடா நாட்டின் University of British Columbia வின் உலக பிரசித்தி பெற்ற உளப்பிணி (Psycopathy) நிபுணரான திரு பாப் ஹேர் (Bob Hare) அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் கண்டறிந்த ஆராய்வுகள் (Observation) ஆகும்.

அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், இந்த மாதிரி மனநிலை திரிந்தவர்கள்தான் நிறுவனங்களில் துணைதலைவர்களாகவும், 
(Vice Presidents) இயக்குனார்களாகவும், (Directors) தலைமை செயல் அலுவலர்களாகவும்,(Chief Executive Officers) இருக்கிறார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. 
(நன்றி: The Hindu Business Line க்கு)

மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டாலும், இந்த ஆய்வின் முடிவுகள் நம் நாட்டுக்கும் பொருந்த வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.  எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்? எனவே நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

ஆடை வாய்ப்பதும், ஆம்படையான் வாய்ப்பதும் அதிர்ஷ்டக்காரிக்கு,
மனைவி வாய்ப்பதும், மக்கள் வாய்ப்பதும் மகராசனுக்கு என்று கிராமங்களில் சொல்வதுண்டு. இவைகளோடு Boss கள் வாய்ப்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போல!


அனைவருக்கும் எனது விடுதலை தின வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 39


எங்கள் வங்கியின் தலைமையகம்  அனுப்பும்  சுற்றறிக்கைகளில், 
ஊழியர் துறை சார்ந்த சுற்றறிக்கைகள் மட்டுமே அனைவரும் 
படிப்பார்கள். துறை சார்ந்தவர்கள் அவர்கள் துறையைப்பற்றிய சுற்றறிக்கைகளை மட்டும் படிப்பார்கள். மற்றவைகளை யாரும் படிப்பதில்லை என்று நான் முன்பே Boss கள் பலவிதம்! 29 ல் எழுதியிருக்கிறேன்.

ஏன் அவைகளை படிக்கவில்லை?’ என்று கேட்டால் நேரம் இல்லை. என்ற பதிலே எல்லோரிடமிருந்தும் கிடைக்கும்.

வங்கியின் மற்ற சுற்றறிக்கைகளை படிக்காததால்,வங்கி கொண்டு 
வரும் புதிய வைப்புகள் மற்றும் கடன்கள்  திட்டங்களைப் பற்றி கிளையில் உள்ள அனைவருக்கும் தெரிய வாய்ப்பிருக்காது. உதாரணத்திற்கு வைப்புகள் பார்க்கும் அலுவலர்களுக்கு கடன்கள் 
பற்றிய விவரங்கள் தெரியாது.
  
ஆனால் வங்கியில் நடத்தப்படும் பதவி உயர்வுத் தேர்வுகளுக்கு 
முக்கால் சதம் கேள்விகள் இந்த சுற்றறிக்கைகளிலிருந்தே கேட்கப்படும் என்பதால் அந்த தேர்வு பற்றி அறிவிப்பு வந்தவுடன் தான் எல்லோரும் அவைகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பிப்பார்கள்.

வங்கிக் கிளையில் ஒவ்வொரு சுற்றறிக்கையிலும் இரண்டு படிகள் தான் இருக்கும் என்பதால் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குள்ளும் 
அலுவலக நேரம் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் படிக்க போட்டா போட்டி இருக்கும்.

இதை தவிர்ப்பதற்கும், வங்கிக்கிளையில்  பணிபுரியும் எல்லோருக்கும் எல்லா துறைகள் பற்றிய சமீபத்திய விதிமுறைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவும் நான் பணியாற்றிய ஒரு கிளையில் ஒரு புதிய ஏற்பாட்டை கொண்டு வந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 
3 மணிக்கு  சுற்றறிக்கை வாசித்தல் கூட்டம் (Circular Reading Meeting) 
என்ற திட்டத்தைக் கொண்டுவந்தேன். 

சனிக்கிழமை அரை நாள் தான் வங்கிப்பணி என்பதால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் அந்த ஏற்பாடு. அந்த சுற்றறிக்கை வாசித்தல் கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயம் இல்லை என்றும் விருப்பட்டவர்கள் எந்த பணிநிலைப்
(Cadre) இருந்தாலும் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் 
எல்லோரிடமும் சொன்னேன்.

அந்த கூட்டத்தில் அந்த வாரம் முழுதும் வந்த அனைத்து சுற்றறிக்கைகளையும் படித்து சந்தேகம் இருப்பின் விளக்கங்கள் கொடுத்தேன். அந்த சுற்றறிக்கைகளை நானே படிக்காமல் அந்தந்த 
துறை சார்ந்த அலுவலர்களை படிக்க சொன்னேன். அது  
One man show வாக இருக்கக்கூடாது என்பதால் எல்லோரையும் 
பங்கேற்க செய்தேன். 

முதலில் கூட்டம் ஆரம்பித்தபோது அவ்வளவாக யாரும் அக்கறை காட்டவில்லை. பிறகு வாரங்கள் செல்ல செல்ல கூட்டத்திற்கு 
வருவோர் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. சோம்பல் காரணமாக 
படிக்க முடியாதவர்களும் பிறர் படிக்க சொல்லிக் கேட்டு அறிந்துகொள்வது சுலபமாக இருந்ததால் வர ஆரம்பித்தார்கள். 

கூட்டத்திற்கு வருவது கட்டாயம் இல்லை என்பதாலும்,எப்போது வேண்டுமானாலும் இடையிலே வரலாம் அல்லது போகலாம் என்பதாலும் அந்த சுற்றறிக்கை வாசித்தல் கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பதவி உயர்வுக்கு உதவும் என்பதால் கடைநிலை ஊழியர்கள் கூட வந்து கலந்துகொண்டார்கள்.

வருடாந்திர பதவி உயர்வுக்கான தேர்வு பற்றிய அறிக்கை வந்தவுடன்
தேர்வு எழுதும்  ஊழியர்களுக்கு உதவ  பயிற்சி வகுப்புக்களையும் சனிக்கிழமைகளில் நடத்த ஏற்பாடு செய்தேன். என்னோடு வங்கியில்
இருந்த மூத்த மற்றும் Technical அலுவலர்களும் அந்த பயிற்சியில்
பங்கேற்று வகுப்புகள் எடுத்தார்கள்.

கேரளாவில் பணியாற்றியபோது இதே போன்று  சுற்றறிக்கை வாசித்தல் கூட்டம் மற்றும் பதவி உயர்வு தேர்வுக்கான வகுப்புகளை 
நடத்தியபோது 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த எங்கள் கிளைகளில் இருந்தும் பலர் வந்து கலந்து கொண்டார்கள்.

தேர்வு முடிந்து முடிவுகள் வந்தபோது, அந்த கூட்டங்கள் மற்றும் பயிற்சிக்கு வந்த நண்பர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

எனது அந்த திட்டம்  பலர்  பதவி உயர்வு பெற காரணமாக இருந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உடன் பணியாற்றும் நண்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கோவையில் 
வட்டார மேலாளராக பணியாற்றிய போது ஒரு வழக்கத்தைக் கடைபிடித்தேன்.

தினம் காலையில் தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களிலிருந்து வரும் அஞ்சல்களைப் பிரித்தவுடன் 
அவைகளை நேரே அந்தந்த பிரிவு அலுவலகர்களுக்கு அனுப்பமாட்டேன். பிரிவு அலுவலர்கள் அனைவரையும் எனது அறைக்கு வரச்சொல்லி 
அந்த கடிதங்களைப் படித்து என்ன  செய்யவேண்டும் எனக் கூறிவிட்டு கொடுத்துவிடுவேன். 

இந்த முறையால் காலையில் அரை மணி நேரம் இதற்காக கழிந்தாலும் எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது உண்மை.  


தொடரும்

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 38


நான் Boss ஆக இருந்தபோது, சென்ற பதிவில் சொன்னது போல் நானே வகுத்துக்கொண்ட சில கொள்கைகளை கடைப்பிடித்ததால் என்னால் சுலபமாக என்னோடு பணியாற்றிவர்களை அரவணைத்து செல்ல முடிந்தது.
 
திருச்சி புனித வளவனார் கல்லூரி (St.Joseph’s College)யில்  கற்றுக்கொண்ட  நேரம் தவறாமையை கடைசி வரை கடைப்பிடித்தேன்.(ஏன் இன்று வரையும் கடைப்பிடித்து வருகிறேன்.)

வங்கியில் பணியாற்றியபொழுது (1970 ஜனவரி முதல் 2004 ஜூலை 
வரை) வங்கிக்கு பணிக்கு காலையில் மற்ற ஊழியர்கள் வருமுன் 
ஒரு மணி நேரம் முன்னரே செல்லும் வழக்கத்தைக்கொண்டு 
இருந்தேன்.

Practice what you preach என்ற சொற்றொடருக்கொப்ப 
நடந்துகொண்டதால் மேலாளராக இருக்கும்போது நேரம் கழித்து பணிக்கும் வரும் ஊழியர்களை சரியான நேரத்திற்கு பணிக்கு 
வாருங்கள் என்று என்னால் சொல்ல முடிந்தது.

ஒரு தடவை நான் பணியாற்றிய கிளையில் இருந்த ஊழியர்
ஒருவர் தினம் 10  அல்லது 15 மணித்துளிகள் கழித்தே வேலைக்கு
வந்து கொண்டு. இருந்தார். கூப்பிட்டு என்ன காரணம் தினம் நேரம் கழித்தே வருக்கிறீகள்?’ எனக் கேட்டதற்கு நான் யார் என்று 
தெரிந்தும் என்னை கேட்கிறீர்களா?’ என்றார்.

நான் சொன்னேன். நீங்கள் யாராயிருந்தாலும் இங்கே எல்லோரையும்போல் ஒரு ஊழியர் தான். எனவே நீங்களும் 
நேரத்திற்கு வரவேண்டும். இல்லாவிடில் நான் உங்களுக்கு வருகைப்பதிவேட்டில் வருகை தராதவர் (Absentee) என்று எழுதி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். எனக் கண்டிப்போடு 
சொன்னேன். அதிலிருந்து அவர் ஒழுங்காக வர ஆரம்பித்தார்.

அதுபோல் இன்னொரு கிளையில் ஒரு பெண் ஊழியர் தினம் 
நேரம் கழித்தே வந்து, சரியான நேரத்திற்கு வரமுடியாததற்கு,

‘’பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;’’ 

என்று பாரதியார் பாடியதுபோல,ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
 
அவரிடம் பலமுறை சொல்லியும் அவர் நேரத்திற்கு பணிக்கு 
வருவதாக இல்லை. நேரம் கழித்து ஒரு நாள் வந்தபோது,பொறுமை இழந்து  அவரிடம்,’ நீங்கள் இன்று வீட்டுக்கு போகலாம். உங்களுக்கு விடுப்பு என வருகைப் பதிவேட்டில் எழுதிவிட்டேன். என்றேன்.

அவர் உடனே நேரே அவர் சார்ந்திருந்த சங்க அலுவலகத்திற்கு 
சென்று அது பற்றி முறையிட்டு இருக்கிறார்.அவர்கள் சொன்னார்களாம். சபாபதி நேரத்திற்கு கிளைக்கு வருபவர். அவர் உங்களை நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் என சொன்னது சரியே. எனவே நீங்கள்தான் சரியான நேரத்திற்கு கிளைக்கு செல்லவேண்டும். இதில் நாங்கள் 
ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். 
என சொல்லிவிட்டார்களாம். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு நாள் கூட நேரம் கழித்து வேலைக்கு செல்லாததால் தான் என்னுடன் பணியாற்றுபவர்கள் நேரத்திற்கு வராதபோது அதுபற்றி  என்னால் கேட்கமுடிந்தது என்பதற்காகத்தான்.  

என்னுடன் பணியாற்றியவர்களை என்றுமே நான் விட்டுக் கொடுத்ததில்லை.

நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற 
எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும் என்பதை உணர்ந்ததால், அவர்கள் பணிச்சுமை காரணமாக செய்கின்ற தவறுகளுக்காக தண்டனை வாங்கித்தராமல், அந்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவி செய்து இருக்கிறேன்.

ஒரு மாவட்டத் தலைநகர் கிளையில் மேலாளராக இருந்தபோது 
ஒரு நாள் வங்கிகளுக்கிடையே காசோலை பரிமாற்றும் இடம் 
(Clearing House) மூலம் எங்களது வாடிக்கையாளர் கொடுத்திருந்த 
அவரது மிகைப்பற்று (Overdraft) கணக்கிற்கான காசோலை வந்தது.

அவரது கணக்கில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவான தொகையை அவர் எடுத்துவிட்டதால், அந்த காசோலையை பற்றுப்பதிவு (Debit) 
செய்ய முடியாது என்பதால் அவருக்கு என் உதவி மேலாளர் 
தொலைபேசி மூலம் கூப்பிட்டு அந்த காசோலைக்கான பணத்தைக் 
கட்ட சொல்லி இருக்கிறார்.

அவர் வராமல், அவரது மேலாளரை அனுப்பி  உதவி மேலாளரிடம் இன்று இதை Pass செய்து விடுங்கள். நாளை வந்து பணத்தைக் கட்டிவிடுகிறோம். என சொல்ல சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் எங்கள் மேலாளர் அனுமதி இல்லாமல் இதை Pass செய்ய முடியாது. எனவே அவரிடம் அனுமதி பெற்று வாருங்கள். என்று சொல்லிவிட்டார். 

அந்த வாடிக்கையாளரின் மேலாளர் என்னிடம் வந்துஇன்று ஒரு நாள் மட்டும் அனுமதியுங்கள். நாளை கட்டிவிடுகிறோம். என்றார். நான் தொகை எவ்வளவு?’  என்றதற்கு ரூபாய் 25000 என்றதும், நானும் 
சரி என சொல்லிவிட்டு உள் தொலைபேசி மூலம் அந்த உதவி மேலாளரை கூப்பிட்டு இந்த தடவை மட்டும் அனுமதியுங்கள். எனக்கூறிவிட்டேன்.

(வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இதுபோல் மேல்பற்று 
(Overdrawal) தருவது வழக்கம்தான். ஆனால் அவைகள் பற்றி 
வட்டார அலுவலகத்திற்கு எழுதி ஒப்புதல் வாங்கிக்கொள்ளவேண்டும்.)

அன்று மதியம் அந்த உதவி மேலாளர் அந்த காசோலையை எடுத்துக்கொண்டு என்னிடம் கையெழுத்து வாங்க வந்தார். ஆனால் 
ஒரு காசோலை அல்ல. இரண்டு காசோலைகள்! இரண்டிலும் 
அதே  அளவு தொகை.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், ‘என்ன இது. நான் ஒரு காசோலைத்தானே அனுமதிக்க சொன்னேன். என்றதும்  
உதவி மேலாளர் பதறிப்போய் சார். அவரிடம் இரண்டு காசோலைகளுக்குத்தான் உங்களிடம் அனுமதி வாங்கி வர சொன்னேன்.  அவர் வந்து உங்களிடம் இரண்டு என்று சொல்லாமல் ஒரு காசோலை என்று சொல்லிவிட்டிருக்கிறார் போல. நீங்கள் தொலைபேசியில் 
Pass செய்யலாம் என்றதும் இரண்டையும் Pass செய்துவிட்டேன். 
நானே நேரில் வந்து இரண்டு காசோலை என்று
சொல்லியிருக்கவேண்டும். அது என் தவறுதான். என்றார்.

உடனே அந்த வாடிக்கையாளரை தொலை பேசியில் அழைத்து
என்ன உங்கள் அலுவலர் இவ்வாறு நடந்துகொண்டு இருக்கிறார். இனி இது போன்ற சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள். நாளை வந்து இரண்டு காசோலைகளுக்கான பணத்தைக் கட்டுங்கள். எனக் கண்டிப்போடு  கூறிவிட்டு,என் உதவி மேலாளரிடம், ‘கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். என கூறி கையொப்பமிட்டேன்.

அவருக்கு முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அன்று மட்டும் நான் கையொப்பமிடாமல்  விட்டிருந்தால் அந்த உதவி மேலாளர்
அதற்குப்பிறகு Counter ல் தைரியமாக செயல்பட்டிருக்கமாட்டார் 
என்பது உறுதி. 

(இப்போது அவர் ஒரு மாவட்ட கிளையின் மேலாளராக இருக்கிறார் 
என அறிந்து மகிழ்ச்சியே.)

தொடரும்