புதன், 24 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 44



Transfer Of Tension பற்றி எனது வங்கி பயிற்சிக் கல்லூரியில் சொன்ன கதை ஒன்று அப்போது நினைவுக்கு வந்தது என்று சொன்னேன் அல்லவா அது இதுதான்.

ஒரு நாள் திரு கிருஷ்ணமூர்த்தி என்பவர்  இரவு 12 மணி வரை தூங்காமல் அங்கும் இங்கும் கவலையோடு வீட்டிற்குள் நடந்துகொண்டிருந்தாராம் அதைக் கவனித்த அவரது மனைவி என்ன விஷயம்?’ என்று விசாரிக்க, அவர் ஒன்றுமில்லை நான் நண்பர் திரு இராமமூர்த்தியிடம் ரூபாய் 10,000 கடன் வாங்கியிருந்தேன். அதை நாளை திருப்பித்தருவதாக சொல்லியிருந்தேன். இப்போது கையில் பணமேதுமில்லை. நாளை  எப்படி சொன்னபடி தருவது என்ற கவலையால் தூக்கம் வரவில்லை. அதனால்தான் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருக்கிறேன். என்றாராம்.

அதற்கு அவர் மனைவி, இவ்வளவுதானா? நீங்கள் திரு இராமமூர்த்தியின் தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். என்றிருக்கிறார். 

பின் அந்த தொலைபேசி எண்ணைப் பெற்று, அந்த நடு இரவில் தூங்கிக்கொண்டிருந்த திரு இராமமூர்த்தியைக் கூப்பிட்டாராம். அவரும் என்னவோ ஏதோ என நினைத்து தொலைபேசியை எடுத்தவுடன், நான் திருமதி கிருஷ்ணமூர்த்தி பேசறேன். என் கணவர் நாளை உங்களுக்கு ரூபாய் 10,000 தருவதாக சொல்லியிருந்தார் அல்லவா? அதைத் தரமாட்டார். என சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

அவ்வளவுதான் திரு கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பணம் நாளை வராது எனத் தெரிந்ததும் அதை எப்படி வாங்குவது என்ற கவலையால் திரு இராமமூர்த்தியின் தூக்கம் அடியோடு கலைந்து,அவர் வீட்டில் அங்கும் இங்கு நடைபோடத் தொடங்கிவிட்டாராம்!  அதே நேரத்தில் திரு கிருஷ்ணமூர்த்தி நிம்மதியாக உறங்கிவிட்டாராம்!

இப்படித்தான் நம்மில் பலர் தங்களது பிரச்சினைகளை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டு தாங்கள் அதிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதற்காக சொன்ன கதை அது.

அந்த டாக்டரின் கடிதத்தைப் படித்தவுடன் எனக்கும் அந்த எண்ணம் தான் வந்தது. நான் நல்ல எண்ணத்தில் உதவி செய்யப் போக அதுவே எனக்கு சிக்கலை உண்டாக்கியதை நினைத்ததும், என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்தேன். அந்த நேரத்தில் நான் ஏதோ கடன் வாங்கிவிட்டது போலவும், குறிப்பிட்ட தேதியில் அதை கட்ட முடியாமல் தவிப்பதுபோலவும் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.  

அந்த பள்ளியிலிருந்து பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லி கோரிக்கை வருமுன், லிபியாவில் அரசின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அந்த டாக்டர் பணம் அனுப்பமாட்டாரா என்ற நைப்பாசையில் தினம் காலையில் வரும் அஞ்சல்களில் வெளி நாட்டு அஞ்சல் ஏதேனும் உண்டா என பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால் எதுவும் வரவில்லை. அதற்குப் பதில் நான்கு மாதங்கள் கழிந்ததும், நான் எதிர்பார்த்தது (?) போல அந்த பிள்ளைகளுக்கான பள்ளி மற்றும் விடுதிக் கட்டணங்களை கட்டச் சொல்லி அஞ்சல் வந்தது.

சரி நடந்ததை பள்ளியில் சொல்லி பணத்தைக் கட்ட அவகாசம் கேட்போம் என நினைத்து, அந்த வாடிக்கையாளரை அழைத்து வந்த எங்களது தினசேமிப்பு முகவரை (Pigmy Deposit Agent) அழைத்து, நீங்கள் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இன்னும் அந்த டாக்டரிடமிருந்து வங்கிக்கு வெளி நாட்டிலிருந்து காசோலை வரவில்லை. வந்தவுடன் அந்த பணத்தைக் கட்டுவதாக சொல்லி அவகாசம் கேட்டு வாருங்கள் என்று சொன்னேன்.

அவரும் போய் விவரத்தை எடுத்து சொன்னதும், அந்த பள்ளி முதல்வர் எங்கள் (எனது) நிலையை அறிந்து அதனாலென்ன. அடுத்த மாத பணத்தோடு சேர்த்துக் கட்டிவிடுங்கள். என்று சொல்லிவிட்டார்.

என்ன கொடுமை பாருங்கள். வங்கியில் கடன் வாங்கியவர்கள் குறித்த நாளில் கட்ட முடியாதபோது தவணை கேட்பது போல, கடன் ஏதும் வாங்காத, அதுவும் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த நான், யாருக்குக்காகவோ பணத்தைக் கட்ட அவகாசம் கேட்டது எனது நேரம் போலும்!

பள்ளி நிர்வாகம் கொடுத்த தற்காலிக நிம்மதியில் ஒரு மாதத்தை கழித்தேன்.அந்த மாதமும் அந்த டாக்டரிடமிருந்து அஞ்சலோ, 
காசோலையோ வரவில்லை. ஆனால் ஐந்தாம் மாதம் பள்ளியிலிருந்து இரண்டு மாத கட்டணத்தையும் உடனே கட்ட சொல்லி கடிதம் வந்தது.


இனி தினசேமிப்பு முகவரை பள்ளிக்கு அனுப்புவது சரியாக இருக்காது என தீர்மானித்து, நானே நேரில் சென்று அந்த பள்ளியின் முதல்வரைப் பார்த்தேன். அந்த டாக்டரின் கணக்கில் பணம் ஏதும் இல்லையென்றும், வங்கியும் அவருக்கு எந்த வித கடனீடு (Security) இல்லாமல், அதுவும் வெளி நாட்டில் உள்ளவருக்கு கடன் தர இயலாது என்றும், அவர் நிச்சயம் காசோலை அனுப்புவார் என்றும், அதுவரை பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மேலும் அந்த பிள்ளைகளை பணம் கட்டாத காரணத்தால் வெளியே அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டேன்.

ஒரு வங்கி மேலாளர் என்ற முறையில் ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டதையும் எடுத்துச் சொன்னேன்.
  
உண்மை நிலையை (எனது பரிதாப நிலையை!) புரிந்துக்கொண்ட அந்த பள்ளியின் முதல்வர், சார். உங்கள் நிலைப்பாடு  எனக்குப் புரிகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. எதற்கும் பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முன் உங்கள் கோரிக்கையை எனது பரிந்துரையுடன் வைத்து, கட்டணத்தைக் கட்ட இன்னும்  மூன்று மாத கால அவகாசம் பெற்றுத்தர முயற்சிக்கிறேன். அதற்குள் நீங்கள் அந்த டாக்டருக்கு கடிதம் எழுதி பணத்தை அனுப்ப சொல்லுங்கள். என்றார்.

அவருக்கு பல முறை நன்றி தெரிவித்து திரும்பினேன்.உடனே அந்த டாக்டர் வாடிக்கையாளருக்கு எனது இக்கட்டான நிலையை தெரிவித்து, எப்படியாவது பணத்தை அனுப்ப சொல்லி கடிதம் எழுதிவிட்டு, என் தலை விதியை நொந்துகொண்டு காத்திருந்தேன்.

சில நாட்களில் அந்த பள்ளியின் முதல்வர் என்னை தொலைபேசியில் அழைத்து,’ஒரு மகிழ்ச்சியான செய்தி. உங்களின் கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் கட்டணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். என்றார். எனக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது அப்போது.

கவலையோடு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தபோது, சரியாக அந்த குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக அந்த டாக்டரிடமிருந்து ஒரு அஞ்சல் வந்தது. பரபரப்புடன் அதை பிரித்தபோது அதில் காசோலையும் தாமதமாக பணம் அனுப்புவதற்கு மன்னிப்பு கோரியும் கடிதம் இருந்தது.

எனது கடிதத்தைப் பார்த்து நிலையை அறிந்துகொண்டு எப்படியோ பணத்தை அனுப்பிவிட்டார் போலும். நம்பமாட்டீர்கள் அன்று நான் அடைந்த சந்தோஷம் சிண்டிகேட் வங்கியில் பணி நியமன ஆணை கிடைத்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, முது நிலை மேலாளராக பதவி உயர்வு பெற்ற போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, பல மடங்கு அதிகமாக இருந்தது என்பது உண்மை.

உடனே அந்த காசோலைக்கான பணத்தை அவரது கணக்கில் வரவு வைத்து. பின் பள்ளிக்கு அனுப்பவேண்டிய தொகையை பற்று பதிவு (Debit) செய்து பணக் கொடுப்பாணை (Pay order)யாக எடுத்துக்கொண்டு அந்த பள்ளிக்கு நேரே சென்று கொடுத்துவிட்டு, நல்ல மனம் படைத்த அந்த பள்ளி முதல்வருக்கு நன்றி தெரிவித்துத் திரும்பினேன்.

அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன். எனது பணிக்காலத்தில் எனக்கு வாடிக்கையாளர்களுடன் எத்தனையோ வகையான அனுபவங்கள் ஏற்பட்டாலும்  இந்த வாடிக்கையாளருடன் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை என்று.

ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது என்பதையும் அறிந்து கொண்டேன்.


தொடரும்

22 கருத்துகள்:

  1. ஏதோ இந்த அளவில் உங்கள் தலை தப்பியதே.

    நல்லதொரு அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வரதராஜுலு.பூ அவர்களே!

      நீக்கு
  2. பரவாயில்லை, தப்பித்தீர்கள். நானும் என் அலுவலக வாழ்க்கையில் இம்மாதிரி அனுபவங்களைச் சந்தித்தது உண்டு. ஆனால் ஒருவர் நல்ல நோக்கத்தோடு செயல்பட்டிருந்தால், அவருக்கு எந்தத் தீங்கும் வராது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!. நன்மை செய்தால் தீங்கு வராது என்பது உண்மைதான்

      நீக்கு
  3. கதையில்லை... பல இடங்களில் (பிரச்சினைகளை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டு தாங்கள் அதிலிருந்து தப்பிக்கிறார்கள்) நடக்கும் உண்மை...

    உங்களுக்கு கிடைத்த சந்தோசம் எவ்வளவு அதிகம் என்பதை வரிகளில் புரிந்து கொள்ள முடிகிறது...

    /// ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது ///

    சத்தியமான வார்த்தைகள்... அந்த சந்தோச அனுபவம் எனக்கும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் வாய்த்தமை அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  4. Very strange case. I don't think many people who work in a bank would have come across such an episode! Very interesting... But the school principal needs to be really appreciated. These days- when schools are demanding around 60,000 for pre kg admission- I doubt if such kindness/understanding can be expected frm such school boards even when reasons for delayed payment are genuine...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! வங்கியில் பணிபுரிவோர் அனைவருக்கும் வெவ்வேறு வித அனுபவம் கிட்டியிருக்கும். பலர் சொல்வதில்லை. என்னைப் போன்றோர் அதைப் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே. நீங்கள் சொன்னதைப் போல் அந்த பள்ளி முதல்வர் பாராட்டப்பட வேண்டியவர்.அதனால் தான் அவரை இங்கே நினைவுகூர்ந்தேன்.

      நீக்கு
  5. // ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது என்பதையும் அறிந்து கொண்டேன். //

    அனுபவமான வரிகள்!

    ( நான் படிக்காமல் விட்டுப்போன உங்களது முந்தைய பதிவுகளை இன்றுதான் படித்து முடித்தேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  6. இந்தக் கதையை முல்லா கதையாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்!
    உண்மையிலேயே மறக்கவே முடியாத அனுபவம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  7. The doctor should have contacted the school and explained the problem. He should not have used you as a mediator. As you said he did nothing but transferred the tension. In the end everything went smoothly. That is a solace.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! All is well that ends well என வில்லியம் ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் முடிவில் எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டது.

      நீக்கு
  8. //ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது என்பதையும் அறிந்து கொண்டேன். //
    மிகச் சரியான வார்த்தைகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  9. ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது என்பதையும் அறிந்து கொள்ளவைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. பணம் வராது என்று தெரிந்தும் தாங்கள் பள்ளிக்கு சென்று கால அவகாசம் கேட்டு அதனால் அந்த குடும்பம் அடைந்த பலனை படித்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு விதத்தில் வாடிக்கையாளரின் மெத்தன போக்கும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

      நீக்கு



  12. தேடிப்பிடித்துப் படித்தேன்! படித்த எனக்கே அப்பாடா!என்றிருக்கு! உங்களுக்கு!!!!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!


      நீக்கு