சனி, 11 மே, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 47



அந்த வாடிக்கையாளர் கிளையின் கடை நிலை ஊழியரிடம் பணம் கொடுத்து கட்ட சொன்னது பற்றி விசாரிக்க, திரும்பவும் கிளைக்கு சென்றேன்.

அந்த ஊழியரை மேலாளரின் அறைக்கு அழைத்து, அந்த வாடிக்கையாளர் உங்களிடம் பணம் கொடுத்து அவரது கணக்கில் கட்ட சொன்னதாகவும் ஆனால் நீங்கள் அதை கட்டவில்லை என்கிறாரே அது உண்மையா?’ என்றுகேட்டேன்.

அதற்கு அவர், சார். அவர் என்னிடம் பணம் கொடுக்கவேயில்லை. அப்படி இருக்கும்போது நான் அதை அவரது கணக்கில் கட்டவில்லை என எப்படி சொல்லமுடியும்? மேலும் காசாளர் இருக்கும்போது அவர் என்னிடம் பணத்தை தந்தேன் என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை. என்றார்.

எவ்வளவு தடவை கேட்டும், ஒரேயடியாக தான் பணத்தை வாங்கவே இல்லை என்று சொல்லிவிட்டார் அந்த ஊழியர். வாடிக்கையாளர் பணம் தந்தேன் என்று சொல்வதை வைத்து, எந்த வித ஆதாரமும் இல்லாமல்  அதற்கு மேல் அவரை விசாரிக்க முடியவில்லை.

மேலும் ஒரு ஊழியரை விசாரிப்பதற்கென்று சில வழிமுறைகள் உண்டு. சம்பந்தப்பட்ட ஊழியருக்கு குற்ற அறிக்கை (Charge Sheet) தந்து, துறை சார்ந்த  நடவடிக்கைகள் (Departmental Enquiry) மூலம் தான் விசாரணை செய்யமுடியும்.

அப்படியே விசாரணை நடத்தினாலும், அதற்கு பலன் ஏதும் இருக்குமா என்பதில் எனக்கு ஐயம் இருந்தது. காரணம் அந்த கிளை இருந்த ஊர் ஒரு சிற்றூர். அப்படி ஒன்றும் அந்த கிளையில் கூட்டம் நிரம்பி வழியாது. எனவே பணம் கட்ட வருபவர்கள் சுலபமாக நேரே காசாளரிடமே பணத்தை கட்டிவிடலாம். மற்ற ஊழியர்களிடம் தர வேண்டிய அவசியம் இருக்காது.

நிச்சயம் விசாரணை என்று வரும்போது, ஊழியர் சார்பில் எதிர்வாதம் செய்யும் பிரதிநிதி (Defence Representative) இதைக் காரணம் காட்டியே இந்த புகார் தவறானது என வாதாடக்கூடும். இதையெல்லாம் மனதில் கொண்டு மேலாளரிடம் திரும்பவும் நீங்கள் அந்த வாடிக்கையாளரிடம் அவர் பணம் அந்த ஊழியரிடம் தான் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா என விசாரியுங்கள். எனக் கூறினேன்.

அதற்கு அந்த கிளையின் மேலாளர்,’சார். எனக்கு ஒரு சந்தேகம். வாடிக்கையாளர் உண்மையிலேயே பணம் கட்ட சொல்லி இந்த ஊழியரிடம் கொடுத்தாரா? அல்லது இந்த ஊழியர் அவரிடம் வாங்கிய கடனை திருப்பித்தராமல் இப்படி அடிச்சீட்டில் (Counterfoil)  முத்திரையிட்டுக் கொடுத்துவிட்டாரா என்பது தான்.

தான் அந்த ஊழியரிடம் கடன் கொடுத்ததை  மறைத்துவிட்டு, வங்கியில் பணம் கட்டக் கொடுத்ததாக அந்த வாடிக்கையாளர் புகார் செய்திருக்கிறார். என நினைக்கிறேன். எதற்கும் நீங்கள் சொன்னபடியே திரும்பவும் அவரை சந்தித்து  ஆதாரம் ஏதேனும் இருப்பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன். என்றார்.

சரி. நான் வருகிறேன். என்று சொல்லி கிளம்பும்போது, வங்கியின் முத்திரைவில்லை (Stamp) வங்கியின் காசாளர் அருகே உள்ள பணம் செலுத்தும் முகப்பின் (Counter) மேலேயே இருந்ததைப் பார்த்தேன்.

உடனே காசாளரிடம் ஏன் இதை இப்படி வெளியே வைத்திருக்கிறீர்கள். இப்படி இருந்தால் யார் வேண்டுமானாலும் இதை தவறாக உபயோகிக்க முடியுமே. உடனே இதை எடுத்து உள்ளே வையுங்கள். எனக் கூறிவிட்டு மேலாளரிடமும் இவைகளையெல்லாம் நீங்கள் பார்ப்பதில்லையா? இது போன்று அஜாக்கிரதையாக இருப்பதால் தான்  இந்த மாதிரி புகார்கள் வருகின்றன. எனக் கூறிவிட்டு தலைமையிடம் திரும்பினேன்.

வந்தவுடன் முதலில் கிளையில் எல்லாம் சரியாக இருக்கிறதா ஆய்வு செய்ய ஒரு அலுவலரை மறுநாளே அங்கு அனுப்பினேன். பின் தலைமை அலுவலகத்திற்கு எனது ஆய்வு மற்றும் விசாரணை பற்றிய அறிக்கையை சுருக்கெழுத்தாளரிடம் Dictate செய்து, அதை தட்டச்சு செய்து வர சொன்னேன்.

மறுநாள் மதியம் எனது உதவியாளர் வந்து, என்னைப் பார்க்க இருவர் வந்திருப்பதாக சொன்னார். உடனே உள்ளே வர சொன்னேன்.
வந்தவர்களில் ஒருவரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.


தொடரும்



14 கருத்துகள்:

  1. வாடிக்கையாளர்களுக்கும், பேங்க்-கும் உருப்படியாக முன்னேற்றத்துக்கு தேவையான வேலை செய்வதற்கு பதிலாக இது போல அனாவசியமான பிரச்சனைகளுக்கும் நேரத்தை விரயம் செய்வதென்பது எரிச்சலான விஷயம். அனைத்து தொழில்களிலும் இது போன்ற தேவையற்ற சம்பவங்கள் தவிர்க்கமுடியாதவைகள் என்று நினைக்கிறேன். All in the game.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வங்கிகளில் அதுவும் நாட்டுடமையாக்கப் பட்ட வங்கிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம். சொல்லப்போனால் அந்த புகாரை விசாரிக்க ஆன கால விரயம் இருக்கட்டும். அதற்கு ஆன செலவு மட்டும் புகார் தரப்பட்ட தொகையை விட அதிகம். என் செய்ய. புகார் என்று வந்தபிறகு அது சரியா எனப் பார்க்கத்தானே வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அந்த ஆள் வந்து விட்டாரா? அவர் மாதிரியே நிக்கவச்சுப் பேசினீங்களா அல்லது அவர உக்காரவச்சுப் பேசினீங்களா? நிச்சயம் உக்கார வச்சுத்தான் பேசியிருப்பீங். நம்ம படிப்பு அப்படி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நான் எப்படி அவரை நடத்தியிருப்பேன் என்பதை சரியாக யூகித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொன்னது சரியே!

      நீக்கு
  4. வாடிக்கையாளர்களும் நானும் – 45, 46, 47 இன்றுதான் படிக்க முடிந்தது. யாரோ செய்யும் தவறுக்கு இருப்பவர்கள் அலைய வேண்டி உள்ளது. அடுத்த பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  5. வங்கியின் முத்திரைவில்லை - சரியான கவனிப்பு...

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!


      நீக்கு
  6. ஏத்தனை அலைச்சல் , மன உளைச்சல் தரும் பணி என்று உணரமுடிந்தது ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வரதராஜுலு.பூ அவர்களே!

      நீக்கு
  8. Sometimes I think that this is the reason why most bankers I have got to meet are so negative/pessimistic... The customers they get to meet...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், வங்கியாளர்களை புரிந்துகொண்டதற்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே!

      நீக்கு