செவ்வாய், 21 மே, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 48



‘’எங்களது வங்கிக் கிளையின் வாடிக்கையாளர், தலைமை அலுவலகத்திற்கு கொடுத்த புகார் பற்றி விசாரித்துவிட்டு திரும்பி வந்த மறுநாள் மதியம் எனது உதவியாளர் வந்து, என்னைப் பார்க்க இருவர் வந்திருப்பதாக சொன்னார். அவர்களை உடனே உள்ளே வர சொன்னேன். வந்தவர்களில் ஒருவரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.’’ என்று சொன்னேன் அல்லவா?

அதற்கு  காரணம் அவர்தான் முதல் நாள் நான் சென்று பார்த்தபோது, என்னிடம் முகம் கொடுத்து பேசாமல், உள்ளே வந்து உட்காரக் கூட சொல்லாமல் நிற்க வைத்தே வழி அனுப்பிய வாடிக்கையாளர். அவரோடு வந்தவரைப் பார்த்ததும், அவர் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்த அரசியவாதி என தெரிந்துகொண்டென்.

அவர்கள் இருவரையும் அமர சொல்லிவிட்டு, அவர்களுக்கு எங்கள் அலுவலகம் இருந்த கட்டிடத்தின் கீழே இருந்த பிரபலமான உணவகத்திலிருந்து காபி வாங்கி வரச் சொன்னேன்.

அவர்கள் காபி அருந்தி முடித்ததும், முதல் நாள் நடந்த விஷயம் பற்றி எதுவும் பேசாமல், என்ன விஷயமாக என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அந்த வாடிக்கையாளர் ஏதும் பதில் சொல்லவில்லை. அவர் என்னைப் பார்க்க சங்கோசப்படுவதுபோல் தோன்றியது.  

அவர் கூட வந்த அரசியல்வாதி, சார். நேற்று எங்கள் ஊருக்கு வந்தீர்கள் போல. நான் அப்போது ஊரில் இல்லை. நீங்கள் வருவது தெரிந்திருந்தால் இருந்து  உங்களைப் பார்த்திருப்பேன். என்றார்.

அதற்கு நான், நான் வெளியூருக்கு ஆய்வுக்கு செல்லும்போது சொல்லிவிட்டு செல்வதில்லை. அதனால் திடீரென அங்கு வரவேண்டியதாகிவிட்டது. மேலும் உங்களைப் பார்க்க நான் வரவில்லையே? அது சரி. இவர் உங்களுக்கு என்ன வேண்டும். எதற்காக இவரை அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்றேன்.

அதற்கு அவர்,’ இந்த தம்பி நாம் ஊர்க்காரர். நமக்கு வேண்டியவர். நடந்ததைக் கேள்விப்பட்டேன். அது விஷயமாகத்தான்  உங்களிடம் பேச எண்ணி வந்திருக்கிறேன். என்றார்.

நேற்று நான் உங்கள் ஊர் வந்து இவரிடம் விசாரிக்க வந்தபோது, இவர் என்னிடம் பேசவே விரும்பவில்லை. ஏதோ அழையா விருந்தாளியை நடத்துவது போல் அல்லவா என்னை நடத்தினார்? இவர் எங்களது கிளை பற்றி புகார் கொடுத்ததால் தான் இவரது இருப்பிடத்திற்கு அது பற்றி விசாரிக்க சென்றேன். ஆனால் இவர் தலைமை அலுவலகத்திற்கு புகார் கொடுத்த நிகழ்வு பற்றி  மேற்கொண்டு எதுவும் பேச மறுத்துவிட்டார். எந்த வித தகவலும் தராமல் ஒத்துழைக்க மறுக்கும் இவரின் புகார் பற்றி நான் எப்படி விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்றேன் நான்.

அதற்கு அந்த அரசியல்வாதி, அது பற்றி தான் பேச வந்திருக்கிறோம். நீங்கள் மேற்கொண்டு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவேண்டாம். இவர் அந்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். என்றார்

அதைக்கேட்டு எனக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு, என்ன காரணத்தால் இவர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்? எனக் கேட்டேன்.

இல்லை. இல்லை. இந்த தம்பி ஏதோ அவசரத்தில் அவ்வாறு புகார் தந்துவிட்டார். உங்கள் வங்கி கிளையில் பணி புரியும் உள்ள ஊழியர்கள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள்  எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல சேவையை தந்து  கொண்டிருக்கும்போது, இவர் இந்த மாதிரி புகார் தந்திருக்கத் தேவையில்லை.

நீங்கள் வந்து போனீர்கள் எனக் கேள்விப்பட்ட பிறகு, நான் தான் இவரை அந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ள சொன்னேன்.இவரும் ஒத்துக்கொண்டதால்  உங்களிடம் சொல்லிவிட்டு அதைச் செய்யலாம் என்பதால் இங்கு வந்தோம். தயை செய்து இதை இத்தோடு விட்டுவிடுங்கள். இன்றே இவர் உங்கள் தலைமை  அலுவலகத்திற்கு இது பற்றி இன்றே எழுதி விடுவார்.என்றார்.

என்ன சார் இது! இவர் விரும்பும்போது புகார் கொடுக்கவும், திரும்ப பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தானா கிடைத்தோம். இவரது பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்கிற போது இவர் புகாரைத் திரும்பப் பெறவேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால் இவர் கொடுத்த புகார் பொய்யா?’ என சற்று வேகத்தோடு கேட்டேன்.


அதற்கு அவர், நீங்கள் கோபப்படுவது சரிதான். ஏதோ தெரியாமல்  இது நடந்துவிட்டது. இதோடு இதை விட்டு விடுங்கள். என்றார்.

சரி. இவரை ஏன் இந்த புகாரைத் திரும்பப்பெறுகிறார் என்பதை எங்கள் தலைமை அலுவகத்திற்கு விரிவாக எழுதிவிட்டு அதனுடைய படியை இந்த அலுவலகத்திற்கும் அனுப்புங்கள். இந்த புகாரை மேற்கொண்டு என்ன செய்வது என்பதை எங்கள் தலைமை அலுவலகம் தான் தீர்மானிக்கும்.  என்றேன்.

அவர் நன்றி. என சொல்லி கிளம்பும்போது சொன்னேன். இவர் உங்களுக்கு வேண்டியவர் என்று சொன்னீர்கள். வணிகம் செய்யும் இவரிடம் சொல்லுங்கள். இவரைத் தேடி வருபவர்களை ஒழுங்காக இன்முகத்தோடு வரவேற்று பேசவேண்டும் என்று. அதுவும் இவர் கொடுத்த புகாரின் பேரில் அதை விசாரித்து உதவி செய்ய வருபர்களை, உட்காரவைத்து பேசவேண்டும் என்கின்ற அடிப்படை நாகரீகத்தை பற்றியும் சொல்லிக்கொடுங்கள். என்றேன்.  

அதுவரை பேசாமல் இருந்த அந்த இளம் வாடிக்கையாளர் என்னைப் பார்த்து சார் என்னை மன்னிக்க வேண்டும். யார் மீதோ இருந்த கோபத்தை உங்களிடம் நேற்று காண்பித்து விட்டேன். அவ்வாறு நடந்துகொண்டது தவறு என இப்போது உணர்கிறேன். இனி அவ்வாறு நடக்க மாட்டேன். என்றார்.

நீங்கள் செய்தது சரியல்ல என்று உணர்ந்ததே போதும். மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை. போய் வாருங்கள் என்றேன். இருவரும் வணக்கம் சொல்லி சென்று விட்டனர்.

நான் அவரை வரவேற்று உட்காரவைத்து உபசரித்தது  அவரை அவ்வாறு பேச வைத்தது போலும்.

பிறகு தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப இருந்த எனது அறிக்கையில் அன்று நடந்த நிகழ்வையும் குறிப்பிட்டு அனுப்பிவிட்டேன்.

பின்பு கேள்விப்பட்டேன். நான் அந்த கிளைக்கு ஆய்வுக்கு சென்று வந்த பின், அந்த கிளையின் கடைநிலை ஊழியர் அந்த அரசியல்வாதியைப் பார்த்து இது பற்றி ஏதோ பேசி அவரது உதவியைக் கேட்க, அவரும் இதில் தலையிட்டு அவர்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கல் கணக்கை நேர் செய்திருக்கிறார். அதனால் தான் அந்த வாடிக்கையாளர் தனது புகாரை திரும்பப் பெற்றிருக்கிறார் என அறிந்துகொண்டேன்.

புகார் கொடுத்தவரே அதை திரும்பப் பெற்றதால் அந்த விஷயத்தை அப்படியே விடும்படி ஆகிவிட்டது.  

ந்த நிகழ்வால், சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம். என்பது போல் புகாரில் தெரிவித்த தொகையை விட நான் காரில் போய் வந்த செலவு அதிகம் ஆனதும், வாடிக்கையாளரிடம் நான் பெற்ற வரவேற்பு அனுபவமும் தான் மிச்சம்!




தொடரும்

21 கருத்துகள்:

  1. நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லி அனுப்பி உள்ளீர்கள்... தேவையில்லாத- செலவான அனுபவம் தான்...

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ என்பது போல் புகாரில் தெரிவித்த தொகையை விட காரில் போய் வந்த செலவு அதிகம் ஆனதும், வாடிக்கையாளரிடம் பெற்ற வரவேற்பு அனுபவமும் கசப்பு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  4. ‘சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ நல்ல பழமொழியை தக்க நேரத்தில் சொன்னீர்கள். அனுபவம் சிறப்புங்க எங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  5. நல்ல வாடிக்கையாளர்தான்! உங்கள் செயல் அவரை நாணப்படுத்தி மாற்றியது மகிழ்ச்சியே! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  6. எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு .அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்சனை..உங்கள் அனுபவங்கள் ஒரு பாடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  7. I believe logically, it is an offense to make false complaint. One can be prosecuted for that. But I agree that, it is no point to proceed further. At least you could have asked him to bear the expenses the bank incurred in the process.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் அவர் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதனால் கால விரயம் மற்றும் பண விரயம் ஆகும் என்பதாலும், வங்கிக்கு வேறு முக்கிய பணிகள் இருந்ததாலும் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அவரை அந்த செலவை ஏற்றுக்கொள்ள செய்ய வங்கி மேலும் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதால் செய்யவில்லை

      நீக்கு
    2. நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  8. இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் வழி நீங்கள் நடந்து கொண்ட விதம் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி KA அவர்களே!

      நீக்கு
  9. யாரோ இருவருக்கு இடையில் நடக்கும், கொடுக்கல் வாங்கல் தகராறுகளுக்கு வங்கி நிர்வாகம் வீணே அலைய வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான்.

      நீக்கு
  10. நீங்கள் நடந்து கொண்ட விதம் மேலாண்மை கற்பவர்களுக்கு ஒரு முன்மாதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு