ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 11



நண்பர்களில் சிலர் ஏரியில் படகு சவாரி செய்து வருவதாக சொல்லி 
சென்றதும், நாங்கள் அண்ணா பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு அவர்கள் 
வரும் வரையிலும் அங்கே காத்திருக்கலாம் என்று முடிவெடுத்து 
உள்ளே சென்றோம்.

தமிழ அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள இந்த பூங்கா 
நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டத்தான் வேண்டும். 
வகுப்பு தோழர் பேராசிரியர் முனைவர் நாச்சியப்பன் பூச்சியியல் நிபுணர் 
என்றாலும், தற்சமயம் பூச்செடிகள் மற்றும் பழச்செடிகள் வளர்ப்புப் பண்ணை 
(Nursery) வைத்திருப்பதால், படித்த பாடங்களை மறந்துபோன எங்களுக்கு, 
அங்குள்ள எல்லா செடிகளின் பொதுப் பெயர்களையும் (Common Names), 
தாவரப் பெயர்களையும் (Botanical Names) சொல்லி, கல்லூரி நாட்களில் 
கல்விச் சுற்றுலா செல்லும்போது பேராசிரியர்கள் செடிகளைக் காண்பித்து விளக்குவதுபோல் விளக்கி, எங்களை அந்த  நாட்களுக்கே அழைத்து 
சென்றுவிட்டார்!

அங்கு பார்த்த செடிகளில் என்னைக் கவர்ந்தது நடனமாடும் பொம்மைகள் 
(Dancing Dolls) என அழைக்கப்படும் பூக்களை உடைய செடிகள்தான். 
Fuchsia குடும்பத்தை சேர்ந்த இந்த மலர் செடிகளின் வகைகள் மட்டும்  
100 க்கு மேல் உண்டாம்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இவைகள் இந்தியாவில் 
மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இவைகள் உள்ளன. 
இவற்றில் சிலவகை செடிகள் போல் வளர்ந்தாலும் நியூசிலாந்தில் இந்த 
குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் மரம் போல் வளருமாம்.

அண்ணா பூங்காவில் அந்த மலரை நான் எடுத்த புகைப்படம் கீழே. 




வெவ்வேறு வண்ணங்களில் உள்ள மேலும் சில பூக்கள்  கீழே. 
(கூகிளாருக்கு நன்றி)





பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு எல்லோரும் ஓரிடத்தில் கூடினோம். 
நண்பர் நாச்சியப்பன் அப்போது நேரத்தை செலவிட புதிர் போட்டி நடத்த 
இருப்பதாக சொன்னபோது எல்லோரும் அதை உற்சாகத்தோடு 
வரவேற்றோம்.   

எல்லோருக்கும் பொதுவான ஒன்றும், தம்பதியர்களுக்கான ஒன்றும் மற்றும் மளிருக்கான போட்டியும் ஆக மூன்றுவிதமான புதிர் போட்டி நடத்த 
இருப்பதாக சொன்னார். மற்ற நண்பர்கள் வரும் வரையில் காத்திருக்கலாம் 
என்றதால் அனைவரும் அங்கிருந்த புல் தரையில் அம்ர்ந்து 
பேசிக்கொண்டிருந்தோம்.  

மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தபோது திருமதி அய்யம்பெருமாள் 
எடுத்த புகைப்படம் கீழே. 





சில நண்பர்களை நான் எடுத்த புகைப்படம் கீழே.






திருமதி அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படங்கள் கீழே.





 

அங்கிருந்த ஊஞ்சல் சிலருக்கு இளமைக்காலத்தை நினைவூட்டியது போலும். நண்பர்களின் துணைவியர்களில் சிலர் வயதை மறந்து ஊஞ்சலாடியபோது 
திருமதி அய்யம்பெருமாள் எடுத்த படம் கீழே.






எல்லோரும் வந்ததும் அனைவரும் புல் தரையில் அமர்ந்து போட்டியில் 
பங்குபெறத் தயாரோனோம்.

அப்போது திருமதி அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே.






நண்பர் நாச்சியப்பன்  புதிர் போட்டியை  ஆரம்பிக்குமுன் அதை நடத்த 
தனக்கு உதவியாக இருவர் வேண்டும் என்று கூறி நண்பர் முனைவர் கோவிந்தசாமியையும் என்னையும் அழைத்தார். என்னால் போட்டியில் 
கலந்துகொள்ள முடியவில்லையே  என்று ஆதங்கம் இருந்தாலும், 
நண்பரின் அழைப்பை மீறமுடியுமா என்ன?

முதலில் அனைவருக்கும் பொதுவான போட்டி என சொல்லிவிட்டு அதன் விதிமுறைகளை சொன்னார். மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்படும் என்றும் 
முதலில் யார் விடை தெரியும் என கையைத் தூக்குகிறார்களோ அவர்கள் பதில்சொல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.  

அவரது விடை சரியாக இருந்தால் அவருக்கு 50 ரூபாய் பரிசாகத் தரப்படும். 
அவரது விடை தவறாக இருந்தால் மற்றவர்கள் பதில் சொல்லலாம். ஆனால் 
அவர்கள் சரியாக பதில் சொன்னாலும் பரிசு கிடையாது என்றார்.எனக்கும் 
நண்பர் கோவிந்தசாமிக்கும் கையைத் தூக்குபவர்களில் யார் முதலில் கை 
தூக்கியது என்பதை சொல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டது.

நண்பர் நாச்சியப்பன் கேட்ட 10 கேள்விகளுக்கான பதில் சுலபம் போல் 
தோன்றினாலும் மூன்று கேள்விகளுக்கு மட்டுமே மூவர் சரியாக பதில் 
சொன்னார்கள். எல்லா கேள்விகளை இங்கே எழுதி இதை படிப்போரை 
சிரமப்படுத்த விரும்பாததால் மாதிரிக்கு நான்கு கேள்விகளை மட்டும் 
தருகிறேன்.

1.Peacock இன் முட்டையின் நிறம் என்ன?

2.சதுரங்கப்பலகையில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

3.'காதலெனும் வடிவம் கண்டேன்' என்ற வரிகள் கொண்ட பாட்டு இடம்
பெற்ற திரைப்படம் எது? (இந்த பாடலை அவரே ஒரு பாடகர் என்பதால் 
அந்த பாட்டைப் பாடிவிட்டு கேள்வியைக் கேட்டார்.)

4.கணிதமேதை இராமானுஜம் நோபல் பரிசு பெறாததன் காரணம் 
அ) அவர் இந்தியர் என்பதாலா? 
ஆ) அவரது கண்டுபிடிப்பு பரிசுக்குத் தகுதியில்லை என்பதாலா?   
அல்லது 
இ) அவர் அந்த பரிசு வேண்டாமென்று கூறிவிட்டாரா?

மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். 
விடை தர விரும்புவோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். 

தொடரும்

17 கருத்துகள்:

  1. சுற்றுலாவினை மிகச் சிறப்பாக வர்ணித்து இருக்கீங்க.... போட்டியும் நன்று.

    மலர்களின் படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் இனிய பயணம்... வாழ்த்துக்கள்...

    1. முட்டையின் நிறம் : வெள்ளை...
    2. 204 சதுரங்கள்... விபரம்:

    1x1 (Individual squares) = 64, 2x2 squares= 49, 3X3 squares =36, 4X4 squares = 25, 5X5 squares =16, 6X6 squares = 9, 7X7 squares = 4, 8X8 square =1. In total we have, 64+49+36+25+16+9+4+1 = 204.

    3. காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்...
    மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி... (2)

    ஓ ஓ ஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்... (2)
    தொட்ட உடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே (2)

    திரைப்படம்: பாக்யலக்ஷ்மி

    4. கணிதமேதை கணிதமேதை இராமானுஜம் அவர்கள் அதிக நாள் உயிரோடு இருந்து இருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் புதிர்களுக்கு பதில் அளித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் தந்துள்ள பதில்கள் சரிதானா எனப் பார்ப்போம்.

      1.Peacock முட்டையின் நிறம் வெள்ளை என கூறியுள்ளீர்கள். அது தவறு. ஏனெனில் Peacock என்பது ஆண்மயில்!

      2.சதுரங்கப்பலகையில் விளையாடும் சதுரங்கள் 64 தான். ஆனாலும் கேள்வி தெளிவாக இல்லாததால் உங்களது பதிலும் சரிதான்.

      3.துள்ளாமல் துள்ளும் உள்ளம் என்ற பாடல் இடம் பெற்ற படம் நீங்கள் கூறியதுபோல் ‘பாக்யலக்ஷ்மி’ தான். இதில் நீங்கள் திவரு செய்யமாட்டீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

      4. திரு N.பக்கிரிசாமி அவர்கள் பதிலை சரியாக சொல்லிவிட்டார். கணிதமேதை இராமானுஜத்திற்கு நோபல் பரிசு கிடைக்காததன் காரணம் கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்பதுதான்!

      நீக்கு
    2. 3 ஆவது பதிலில் ‘திவரு’ என்பதை ‘தவறு’ எனப் படிக்கவும். தட்டச்சு செய்யும்போது தவறு நேர்ந்துவிட்டது.

      நீக்கு
  3. நல்ல புதிர்கள். சதுரங்கப்பலகையில் 64 சதுரங்கங்கள் என்று கேள்வி. நான் எண்ணிப் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஒரு புதிருக்கு விடை தந்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் தந்த விடை சரியே. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வேறொரு விடையைத் தந்திருக்கிறார். அதுபற்றி அவரது பின்னூட்டத்தில் தெரிவிப்பேன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  5. மலர்கள் பார்ப்பதற்கு நடனமாடும் பொம்மைகள் போன்றுதான் காட்சியளிக்கின்றன. “Dancing Plant” என்று கூகுளில் வீடியோக்கள் உள்ளன. அவற்றைப் போன்று இந்தப் பூக்களும் நடனமாடும் என்று நினைத்துவிட்டேன்.

    கணிதத்துக்குதான் நோபல் பரிசுகிடையாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், புதிருக்கு பதில் அளித்தமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! கணிதமேதை இராமானுஜத்திற்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்பதை சரியாக சொல்லிவிட்டீர்கள்.

      நீக்கு
  6. இவ்வாறு பால்ய நண்பர்களுடன் பயணம் சென்று வருவது ஒரு அலாதியான அனுபவம்தான். அருமையான படங்கள். அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு கோர்வையாக சுவையுடன் அளித்ததும் அருமை. தொடர்கிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. திண்டுக்கல் தனபாலனின் lateral thinking அபாரம். திரைப்படப் பாடல் எனின் டி டி அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்க வேண்டும். நான்காவது புதிர் பக்கிரிசாமி சரி என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! திரு திண்டுக்கல் தனபாலன் & திரு N.பக்கிரிசாமி ஆகியோரின் பதில்களை வழிமொழிந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  8. பல்கலைக் கழகத்தில் தங்களோடு பயின்ற அன்றைய மாணவ நண்பர்களோடு இன்றைய இன்பச் சுற்றுலா குறித்த தங்கள் பகிர்வுக்கு நன்றி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு