வெள்ளி, 17 ஜனவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 13


எல்லோரும் தேநீர் மற்றும் காஃபியும் அருந்தி முடித்ததும், நிகழ்ச்சியை 
ஏற்பாடு செய்திருந்த நண்பர்களில் ஒருவரான திரு வெங்கட்ரமணன் 
எல்லோரையும் வரவேற்றுவிட்டு, இதுவரை நடந்த சந்திப்புக்கு வராமல் 
இந்த சந்திப்புக்கு முதன் முறையாக வந்திருந்த வகுப்புத்தோழர்கள் 
முன்னால் வந்து தாங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்து வெளியே 
சென்ற பின் வேலை பார்த்த இடங்கள் கடைசியாய் பதவி 
ஓய்வுபெற்றபோது இருந்த பதவி மற்றும் தங்கள் குடும்பம் பற்றிய 
விவரங்களை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

நண்பர் வெங்கட்ரமணன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த
புகைப்படம் கீழே





இந்த சந்திப்பில் நண்பர்கள் முனைவர் அய்யம்பெருமாள் அவர் தம் துணைவியாருடனும், நண்பர் திரு கோகுல்தாஸ் அவர் தம் 
துணைவியாருடனும், முனைவர் சங்கரனும், D.கோவிந்தராஜனும் 
சேதுராமனும் முதன்முறையாக வந்திருந்தனர்.

முதலில் முனைவர் அய்யம்பெருமாள் அவருடைய துணைவியாரோடு 
வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். நண்பர் அய்யம்பெருமாள்  
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எங்களோடு இளநிலை 
வேளாண் அறிவியல் படித்தவர்.பின்பு எங்கள் பல்கலைக் கழகத்திலேயே 
முது நிலை வேளாண் அறிவியலில் நுண்ணுயிரியல் (Microbiology) 
படிப்பை படித்து பின்னர் கனடா சென்று அங்கு காடு வளர்க்கும்  
கலையில்(Forestry) முனைவர் பட்டம் பெற்று, கனடா அரசில்  
பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் கனடாவில் ஒட்டாவாவில்(Ottawa) 
குடியிருப்பவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வெளி நாட்டில் 
வசித்துவருகிறார்.

அடுத்து  நண்பர் திரு கோகுல்தாஸ் அவர் தம் துணைவியாருடனும் 
வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் துணை வேளாண்மை 
இயக்குனராக(Deputy Director of Agriculture) பணியாற்றி ஒய்வு பெற்று 
தற்சமயம் திண்டிவனத்தில் வசித்து வருகிறார்.

நண்பர் கோகுல்தாஸ் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே




அடுத்து முனைவர் சங்கரன் தன்னைப்பற்றிய விவரங்களை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு 
பெற்று தற்சமயம் கோவையில் வசிப்பதாக சொன்னார்


நண்பர் சங்கரன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே





அடுத்து வந்த நண்பர் சேதுராமன் வேளாண்மைத் துறையில் 
பணியாற்றும்போதே இந்தியன் வங்கிக்கு அயல் பணியில் 
(Deputation) சென்றுவிட்டு பின் வேளாண்மைத் துறையிலேயே 
பணியாற்றி இணை வேளாண்மை இயக்குனராக(Joint Director of  
Agriculture) ஒய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிப்பதாக 
சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் வந்த நண்பர் D.கோவிந்தராஜன் தான் இணை வேளாண்மை 
இயக்குனராக(Joint Director of Agriculture) பணியாற்றி ஒய்வு பெற்று 
தற்சமயம் வேலூரில் வசிப்பதாகவும் பணியாற்றும்போது மகளிர் 
முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்ததாக சொன்னார்.

இந்த அறிமுகப்படலத்திற்குப் பிறகு, வேதாத்ரி மகரிஷி அவர்களின் 
மனவளக் கலை பற்றிய இதுவரை தெரியாத தகவல்களை, 
தெளிவாக தங்குதடையின்றி சொல்லி அனைவருடைய 
கவனத்தையும் ஈர்த்தார் திருமதி S.அருட்செல்வி அவர்கள் .இவர் 
தற்போது சேலத்தில் பல்லவன் கிராம வங்கியில் மேலாளராகப் 
பணிபுரிந்து வருகிறார். (இவரை அழைத்து வந்து பேச வைத்த 
சேலம் நண்பர்களை பாராட்டத்தான் வேண்டும்)

மனவளக் கலை மன்றங்களில் போதிக்கும், உடலையும்,
உள்ளத்தையும் தூய்மையாக வைப்பதற்கான வழிமுறைகளான  
உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, காயகல்ப பயிற்சி முறைகள் பற்றி அவர் 
விளக்கியபோது சுமார் ஒரு மணி நேரம் அனைவரும் மெய்மறந்து
அவரது சொற்பொழிவில் ஒன்றியிருந்தோம்.

திருமதி S.அருட்செல்வி அவர்கள் பேசும்போது திரு அய்யம்பெருமாள் 
எடுத்த புகைப்படம் கீழே.



இந்த மனவளக் கலையில் பயிற்சி பெற்ற எங்ககளது வகுப்புத்தோழர் 
ஹரிராமனும் அது பற்றி பேசி அவரது அனுபவம் பற்றி விளக்கினார்.

நண்பர் ஹரிராமன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே.




இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முனைவர் நாச்சியப்பன் நடத்திய புதிர் 
போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

முதலில் திருமதி செல்லையா அவர்களுக்கு திரு செல்லையாவின் 
கையாலேயே பரிசு வழங்கப்பட்டது. திரு செல்லையா தன் 
துணைவியாருடன் கைகுலுக்கி பரிசு தரத் தயாராக இருந்தபோது 
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே  


 
(படத்தில் இடமிருந்து வலமாக நண்பர் செல்லையா முனைவர் 
நாச்சியப்பன் முனைவர் கோவிந்தசாமி மற்றும் திருமதி செல்லையா.)

முனைவர் அந்தோணிராஜுக்கு முனைவர் கோவிந்தாமி பரிசு 
வழங்கியபோது நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே 




நண்பர் சேதுராமனுக்கு நண்பர் பழனியப்பன் பரிசு வழங்கியபோது 
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே

  

பரிசளிப்பு முடிந்ததும், எங்களது அடுத்த சந்திப்பை எங்கு 
வைத்துக்கொள்ளலாம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது 
பற்றி அனைவரும் தங்களது கருத்துக்களை கூறுமாறு நண்பர்கள் 
கேட்டுக்கொண்டனர். 

2011இல் அண்ணாமலை நகரில் கூடியபோது 2016 இல் கோவையில் 
சந்திக்கலாம் என முடிவெடுத்திருந்தாலும், சிலர் வேறு இடத்தில் 
சந்திக்கலாம் என விரும்பியதால் திரும்பவும் அது பற்றி 
விவாதித்தோம்.

பெரும்பான்மையோர் எங்களது பொன் விழா சந்திப்பை தஞ்சையில்  
2016 ஆம் ஆண்டு வைத்துக்கொள்ளலாம் என விரும்பியபோது 
தஞ்சையில் இருக்கும் நண்பர்கள் பாலசுப்ரமணியன், முருகானந்தம், 
நாகராஜன் நாராயணசாமி ஆகியோர் தாங்கள் அந்த சந்திப்பை 
பிரமாண்டமாக நடத்துவதாக ஒத்துக்கொண்டனர்.

தஞ்சையில் சந்திப்பை மிக சிறப்பாக தாங்கள் நடத்துவதாக
நண்பர் பாலசுப்ரமணியன்  மற்ற தஞ்சை நண்பர்கள் சார்பில் 
உறுதியளித்தபோது நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் 
கீழே



நண்பர் நாகராஜன், அந்த சந்திப்பின்போது முத்துப்பேட்டை அருகே 
உள்ள காயல் (Lagoon) அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்றும் 
அங்கே சென்று பார்க்க, தான் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு 
ஒரு நாள் தேவை என்றும் சொன்னார்.

பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த 50 ஆம் ஆண்டை,தஞ்சை 
மாநகரில் சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடுவது என்றும், 
மூன்று நாட்களில் முத்துப்பேட்டை காயலை பார்க்க ஒரு நாள் 
ஒதுக்கிவிட்டு, மீதி நாட்களில் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் 
வேளாங்கன்னி மாதா கோயில் நாகூர் தர்கா முதலிய இடங்களுக்கு 
செல்லலாம் என்றும் எல்லோரும் ஒருமித்து முடிவெடுத்தோம்.

பேசிக்கொண்டிருந்ததில் இரவு 8 மணி ஆகிவிட்டது தெரியவில்லை. 
மறு நாள் காலை ஹோகனேக்கல் செல்லவேண்டும் என்பதால், 
சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றி 
சொல்லி அதோடு கூட்டத்தை முடித்து இரவு உணவை 
சாப்பிடத் தயரானோம்.  

மதிய உணவை தயார் செய்தவர்களே இரவிலும் இட்லி, சப்பாத்தி 
போன்றவைகளைத் தந்து எங்களது வயிற்றுப் பசியைப் 
போக்கினார்கள்.

ஏற்காட்டில் உள்ள இன்னொரு முக்கியமான கல்வி நிறுவனம் பற்றி 
சொல்ல மறந்துவிட்டேன்.அதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். 
1917 இல் முதல் உலக மகா யுத்தம் ஆரம்பித்த போது ஏற்படுத்தப்பட்ட 
Montfort School என்ற உண்டுறை விடுதியைக்கொண்ட கல்வி 
நிறுவனம் தான் அது. 

நல்லொழுக்கத்தையும் உழைப்பையும் குறிக்கோள்களாக கொண்டுள்ள 
இந்த பள்ளி இருபாலருக்கும் உரியது. இந்த பள்ளியில் இடம் 
கிடைப்பது கடினம் என்று சொல்வார்கள்.

இந்தப் பள்ளியில் தான் காலஞ்சென்ற பி.‌டி.‌ஆர்.பழனிவேல் ராஜன் 
அவர்கள், இலங்கை அமைச்சர் தொண்டைமான் அவர்கள், 
தற்போதைய மய்ய அரசின் இணை அமைச்சர் சசி தரூர் அவர்கள், 
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், கிரிக்கெட் வீரர் ரோஜர் 
பின்னி அவர்கள், மற்றும் விக்ரம் கென்னடி என அழைக்கப்பட்ட 
பிரபல திரைப்பட நடிகர்  விக்ரம் அவர்கள் படித்தார்கள் என்பது 
சிலருக்கு புதிய தகவலாய் இருக்கக்கூடும். 

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்கு ஏற்காட்டை விட்டு 
பேருந்தில் புறப்பட்டோம். இரவில் நாங்கள் பயணம் செய்த மூன்று 
பேருந்துகளைத் தவிர வேறு எந்த நடமாட்டமும் அந்த மலைப்
பாதையில் இல்லை. வழியில் எந்த வித பழுதும் பேருந்துகளுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என நினைத்துக்கொண்டே இருந்தேன்.

இரவு 10.15 மணிக்கு சேலத்தில் உள்ள எங்களது தங்குமிடத்தை 
சௌகரியமாக அடைந்து உறங்கச் சென்றோம்.


தொடரும்






14 கருத்துகள்:

  1. அருமையான நினைவுகள். இவ்வளவு விவரங்களையும் நினைவிலிருந்தா எழுதுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே!. கல்லூரியில் படிக்கும்போது வகுப்புத்தோழர்கள் அனைவருடன் பழகியது நானாகத்தான் இருக்கும். அதனால் ஒவ்வொருவரையும் நான் நன்றாக அறிவேன். மேலும் இந்த சந்திப்புக்கு முன் ஒவ்வொருவரையும் தொலைபேசியில் அழைத்து
      சந்திப்புக்கு வர அழைப்பு விடுத்ததால் அவர்கள் இருக்குமிடமும் தெரியும். மேலும் நிகழ்ச்சி நடந்த அன்று ஒவ்வொரு நிகழ்வின் போதும் அந்த நேரத்தை மட்டும் குறித்து வைத்துக்கொண்டேன். அவ்வளவுதான். மற்றவையெல்லாம் என் நினைவிலிருந்து எழுதிவை.

      நீக்கு
  2. படத்துடன் ஒவ்வொரு நிகழ்வும் அருமை ஐயா... சிறப்பான கல்வி நிறுவன தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!.

      நீக்கு
  3. கடந்த காலங்களை மீண்டும் பெறமுடியாது. ஆனால் இத்தகைய சந்திப்புகளின் மூலம் மீண்டும் ஒருமுறை அந்த காலங்களை அசை போடலாம். மீட்டிங்-களுக்கு அப்பறம் வரும், மினிட்ஸ் ஆஃப் தெ மீட்டிங் போல அனைத்து விபரங்களையும் தந்துவிட்டீர்கள். சந்திப்புக்கு வந்தவர்கள் படித்தால் அடுத்த சந்திப்புக்கு மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் கூறுவது உண்மைதான்.கடந்த காலங்கள் திரும்பி வராது. ஆனால் அப்போது நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்து அசை போடும்போது சுகமாகத்தானே இருக்கும். நடந்த
      நிகழ்வுகளை இப்போது போல் பதிவு செய்து வைக்க அந்த கால கட்டத்தில் தொழில் நுட்பம் இல்லை. இப்போது இருப்பதால் (மேலும் வேலை ஏதும் இல்லாததால்!) அவைகளை பதிவு செய்து வைக்கிறேன். இந்த தொடர் முடிந்ததும் தொடரின் படியை வகுப்புத் தோழர்களுக்கு அனுப்ப இருக்கிறேன்.

      நீக்கு
  4. சிறப்பான நினைவுகள்.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  5. ஒரு வார காலமாக ஊரில் இல்லை. இன்றுதான் இதை படிக்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் ஊர்வழி போகும்போது உங்களுடைய இந்த தொடரை நினைத்துப்பார்ப்பேன். நம்முடைய பயண அனுபவங்களையும் எழுத வேண்டும் என்று சிலவற்றை குறித்துக்கொள்வேன். ஆனால் பயணம் முடிந்து ஊர்திரும்பியதும் எதுவுமே நினைவில் நிற்காமல் போய்விடும். ஆனால் நீங்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு கோர்வையாக எழுதுவதைக் காணும்போது வியப்பு மேலிடுகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும். கருத்துக்கும். நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொண்டு கோர்வையாக எழுதுவது வியப்பாக இருக்கிறது என சொல்லியுள்ளீர்கள்.

      இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. நான் தினம் படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பார்க்கிறேன்.இதுவும் ஒருவகையில் மனதில் டைரி எழுதுவது போலத்தான். அது மூளையில் சேமிக்கப்படுவதால், வேண்டும்போது கணினியிலிருந்து திரும்பவும் பக்கங்களைத் திறந்து பார்ப்பது போல நான் அவற்றை திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வந்து எழுதுகிறேன். அவ்வளவுதான்.

      கணினி வல்லுனரான தங்களால் முடியாததல்ல. இது தங்களுக்கு ஒரு 'குழந்தை விளையாட்டு'ப்போலத்தான்.

      நீக்கு
  6. நல்ல நண்பர்கள்! நல்ல சந்திப்பு! தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. மறக்க முடியாத நினைவுகளை மறுபடியும் புதுப்பித்திருக்கீறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கவிப்ரியன் ஆர்க்காடு அவர்களே!

      நீக்கு