வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கருணைக் கொலையை அனுமதிக்கலாமா?



கருணைக்கொலையை அனுமதிக்கலாமா என்பது இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள கேள்வி. அதற்கு முன் கருணைக் கொலை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம். Euthanasia என்ற ஆங்கிலத்தில் சொல்வதைத்தான் கருணைக் கொலை என்று தமிழில் சொல்கிறோம்.


ஆனால் இந்த மொழிபெயர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை. கொலை என்பது ஒருவரை மரணமடையச் செய்வது. அந்த செயல் குற்றமாக கருதும்போ,து அதில் கருணை எங்கிருந்து வரும் என்பதுதான் எனது கேள்வி.

Euthanasia என்ற சொல் கூட Good Death என கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது தான்.Euthanasia என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் உண்டா எனத் தேடியபோது வேதனையற்ற மரணம் என்றும் நல்ல சாக்காடு (நல்ல சாவு) என்றும் பதில் கிடைத்தது. வேதனையற்ற மரணம் என்பதைவிட நல்ல சாக்காடு என்பதே பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். தமிழறிஞர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை கருணைக்கொலை என்றே நாம் சொல்வோம்.

மீளமுடியா உடல் வேதனையிலிருந்து ஒருவரை மீட்க அவரது உயிரை திட்டமிட்டு முடிப்பதே கருணைக் கொலையாகும். கருணைக்  கொலையை 3 வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
 
1.சுய விருப்ப வகை (Voluntary Euthanasia.) நோயுறுவோர் மருத்துவரின் உதவியோடு வாழ்வை முடித்துக்கொள்வது.

2. விருப்பம் பெறமுடியாத வகை (Non Voluntary Euthanasia).  நோயுற்றோரின் விருப்பத்தை பெற முடியாதபோது செய்வது.(இது பற்றித்தான் இந்த பதிவே)

3. விருப்பத்திற்கெதிராக செய்வது (Involuntary Euthanasia). இதற்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மேற்கூறிய மூன்றிலும், முனைப்பு வகை (Active Euthanasia) என்றும் முனைப்பற்ற வகை (Passive Euthanasia) இரண்டிரண்டு வகைகள் உள்ளன. முனைப்பு வகையில் நச்சு (விஷ) மருந்தை செலுத்தி உயிரை முடிப்பது. முனைப்பற்ற வகையில் உயிர் வாழ உதவும் கிருமியொடுக்கிகள் (Antibiotics) மற்றும் உணவை நிறுத்துவது.


ஆனால் இந்த செயலை செய்யலாமா என்று உலகளாவிய அளவில்  விவாதங்கள் நடைபெற்றாலும் பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் ஓரிகான். வாஷிங்டன் மாகாணங்களிலும்  கருணைக்கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

 உலக நாடுகளில் பல கருணைக்கொலையை ஆதரிக்காததன் காரணம் சில சமயங்களில் சொத்துக்காகவோ அல்லது சொந்த ஆதாயத்திற்காகவோ சிலர் இதை அடுத்தவரை கொலை செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் தான்.

ஒருவேளை கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால், பல குடும்பங்களில் பெற்றோரையே சட்டப்படி கருணைக்கொலை செய்யும் வாரிசுகள் பலர் உருவாகிவிட வாய்ப்புண்டு!

சர்ச்சைக்குரிய இந்த செயல் நமது சட்டப்படி கொலையாக கருதுவதால்,  இதுவரை நம் நாட்டில் கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் இது பற்றி தீர்ப்பு சொல்ல நேர்ந்தது ஏனென்றால் மனிதாபின அடிப்படையில் ஒருவர் நீதி மன்றத்தை அணுகியதால்.

மும்பை பரேலில் (Parel) உள்ள King Edward Memorial மருத்துவமனையில் கர்நாடக மாநிலம் உத்திர கன்னட மாவட்டத்தை சேர்ந்த அருணா ஷான்பாக் (Aruna Shanbaug) என்ற இளநிலை செவிலியர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1973ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி இரவு, Sohanlal Bhartha Walmiki என்ற மருத்துவமனை ஊழியரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நாய்ச் சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டார்.

அதனால் மூளைக்கு செல்லும் பிராண வாயு துண்டிக்கப்பட்டு கண்களும் குருடாகி நினைவற்ற நிலை (Coma) க்கு அவர் தள்ளப்பட்டார். அவரை இந்த நிலைக்குத் தள்ளிய மாபாதகன் சோகன்லாலோ கடுமையாய் தாக்குதல் மற்றும் கொள்ளை ஆகிய குற்றங்களுக்காக மட்டும் (கவனிக்கவும் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொந்தரவுக்காக அல்ல) 7 ஆண்டுகள் தண்டனை பெற்று விடுதலையாகிவிட்டான். ஆனால் அருணாவோ உயிரோடு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்.


Aruna Shanbaug இன் புகைப்படம் கீழே (நன்றி: கூகிளாறுக்கு)



                              அன்றும் 

                             
                              இன்றும் 


37 ஆண்டுகளுக்கு மேலாக முழுக்க முழுக்க அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் கோமா நிலையில்(Permanent vegetative stage) இருக்கும் அருணாவுக்காக அவரது சிநேகிதியான  Pinki Virani என்பவர் 2010 டிசம்பர் 17 ஆம் நாள் உச்ச நீதி மன்றத்தை அணுகி, அருணாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருவதால் அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.  

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அருணாவின் உடல் நிலை பற்றி ஆய்ந்து அறிக்கை தர பணித்தது. அந்த குழுவும் அருணாவின் உடல் நிலையை பரிசோதித்துவிட்டு அவரது உடலில் முக்கியமான அவயவங்கள் யாவும் Permanent vegetative stage இல் இருப்பதாக அறிக்கை தந்தது.

அதை பரிசீலித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய  உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், முழுக்க முழுக்க அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் கோமா நிலையில் உள்ளவர்களை விதிவிலக்கான சூழலில், முனைப்பற்ற கருணைக் கொலையை (Passive Euthanasia) செய்ய அனுமதிக்கலாம் என்றும், ஓரளவு உறுப்புகள் செயல்படும் நிலையில் உள்ளவர்களை கருணைக்கொலை செய்வது சட்டவிரோதமானது.’ என்றும் 2011 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இந்த அணுகுமுறையைக் கையாளுவதற்கு அனுமதித்த நீதிமன்றம், ‘இத்தகைய முனைப்பற்ற கருணைக்கொலைக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். என்றும் ஒரு நிபந்தனையையும் விதித்தது.

அருணா வழக்கை பொறுத்தவரை அதன் உண்மைகளும், சூழல்களும், மருத்துவ சான்றுகளும் அவரை கருணைக்கொலை செய்ய தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன. என்று  கூறி  அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

கோமா நிலையில் கிடந்த செவிலியர் அருணாவை கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் இதுவரை பாதுகாத்து, மருத்துவம் அளித்து வரும் KEM மருத்துவமனையின் மனிதாபிமானமும் அங்குள்ள ஊழியர்களின் அக்கறையும் பாராட்டக்கூடியது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.  அந்த தீர்ப்புக்கு ஊடகங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 25-02-2014 அன்று  ஒரு NGO தந்த கோரிக்கைக்கு தீர்ப்பளித்த,  தலைமை நீதிபதி P.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் ககோய், S.K.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோமா நிலையில் உள்ளவர்களுக்கு தரப்பட்ட முனைப்பற்ற கருணைக் கொலை(Passive Euthanasia) உரிமையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட Constitution Bench திரும்பவும் புதிதாக ஆராய்ந்து புதிய நெறிமுறைகளை வகுக்கவேண்டும் எனக் கூறியுள்ளது.

இவ்வாறு தீர்ப்பளித்த காரணம் முன்பு தந்த இரு வேறு தீர்ப்புகளில் இருந்த முரண்பாட்டால்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு Gian Kaur இன் வழக்கில் தீர்ப்பு தந்த உச்ச நீதி மன்ற Constitution Bench, வாழும் உரிமை உள்ளோருக்கு இறக்கும் உரிமை இல்லை என்றும் ஆனால் கண்ணியத்தோடு வாழும் உரிமையில் கண்ணியத்தோடு இறக்கும் உரிமையும் உள்ளது என்று சொன்னது.(Right to life did not include right to die but ruled that right to live with dignity included right to die with dignity)

ஆனால் 2011 இல் அருணாவின் வழக்கில் உச்ச நீதி மன்றம் கோமா நிலையில் உள்ளவர்களுக்கு முனைப்பற்ற கருணைக் கொலை (Passive Euthanasia) உரிமையை தந்து தீர்ப்பளித்தது.

இந்த இருவேறுபட்ட தீர்ப்பின் காரணமாகவும்,  சமூக, சட்ட.மருத்துவ, மற்றும் அரசியல் அமைப்பு ஆகியவை அடங்கிய சட்டம் பற்றிய வினாவுக்கு மிகத்தெளிவான சட்ட விளக்கக்கூற்று (Enunciation of Law) தேவை என்பதாலும் இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட Constitution Bench க்கு அனுப்புவதாக கூறியுள்ளது.

அப்போது அரசு சார்பில் வாதாடிய Additional Solicitor General திரு சித்தார்த் லுத்ரா  மருத்துவர்கள் தங்ளிடம் வரும் நோயாளிகளை காப்பாற்ற ஹிப்போகிராடிக் உறுதிமொழி எடுத்திருப்பதால் அவர்கள் இந்த கருணைக்கொலையை செய்ய முடியாது என வாதிட்டிருக்கிறார். (நன்றி: Times of India)


கருணைக்கொலையை  அனுமதிக்கலாமா இல்லையா என்பது ஐந்து நீதிபதிகள் கொண்ட Constitution Bench தீர்ப்பைத் தந்த பின் தான், நம் நாடு அதை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா எனத் தெரியவரும். உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பைத்தரும் என்ற நம்பிக்கையோடு அருணா ஷான்பாக் போன்றோர் காத்திருக்கவேண்டியதுதான்.

நாமும் அவருக்காக வேண்டிக்கொள்வோம்.





                             
 



21 கருத்துகள்:

  1. எனக்கு இந்தக் கொலை தவறு என்றே தோன்றுகிறது... எனக்குத் தெரிந்து தீடீரென்று ஏற்பட்ட விபத்தால் "கோமா" நிலைக்கு சென்ற குடும்பத் தலைவனோ / தலைவியோ உள்ளவர்கள் வீட்டில் இன்னும் அவர்களை கண்காணித்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்... இதில் அவர்கள் பணம் என்பதை துச்சமாக மதிப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்... ஏனென்றால் இன்றைக்கு கோமா நிலை + பணச் செலவு என்று நினைத்தாலே உடனே கழுத்தை நெரிப்பது என்றாகி விட்டது... தென் பகுதியில் முன்பு அதிகம்...

    அருணா அவர்களின் நிலை வருந்தத்தக்கது... மாபாதகன் சோகன்லாலோவை கொலை செய்தால் என்ன...?

    நல்ல சாக்காடு என்பதை விட பாவம் என்று கொள்வதால் பாவக்கொலை என்று வேண்டுமானாலும் சொல்லலாம்... ஆனால் எந்தக் கொலையும் வேண்டாம் என்பதே என் கருத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் என்று கொள்வதால் --> பாவம் என்று (கொள்வதால் கொல்வதால்...

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்கள் கருத்தே என் கருத்தும். ஆனாலும் அருணா போன்றவர்களுக்காக தனி (Special) சட்டமே கொண்டு வரலாம்.

      நீக்கு
  2. ஐயா வணக்கம். , கருணைக் கொலையை அனுமதிக்கலாமா என்று கேள்விக்கு சட்டத்துக்கு உட்பட்ட பதில் தர இயலுமா தெரியவில்லை. நான் என் அனுபவத்தில் பலரைக் கண்டிருக்கிறேன். வேதனை பட்டிருக்கிறேன். அது குறித்து பதிலறியாக் கேள்விகள் என்னும் பதிவும் எழுதி இருந்தேன்( அதை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.) கருணைக் கொலைக்கு சட்டப்படி தீர்ப்பு சொல்வது ஒரு புறம். மனிதாபிமான அடிப்படையில் எண்ணுவது ஒரு புறம். எனக்குத் தெரிந்த ஒருவர் என் வயதொத்தவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப் பட்டு வெண்டிலேடரில் வைத்திருந்தார்கள். அதை எடுத்தால் உயிர் போகலாம் என்ற நிலை. எத்தனை நாள் அவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாதநிலை. அவரது பிரிவுக்கு அனைவரும் தயார் என்னும் நிலை வந்து செயற்கை சுவாசம் நிறுத்தப் பட்டது. ஆனால் ஆச்சரியமாக அவர் பிழைத்து விட்டார். ஆனால் உயிர் இருந்தும் எதையும் செய்ய முடியாத ஒரு குழந்தை நிலை. அவரது வயது முதிர்ந்த மனைவிக்கு மெல்லவும் முடியாத முழுங்கவும் முடியாத நிலை. அவர் உயிரோடு இருந்து என்னலாபம். இருப்பது அனைவருக்கும் பாரம். அம்மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் என்னாகும். ? கேள்விகள் எளிது. பதில்கள்......? எனக்குத் தெரிந்தே இன்னும் வேறு சில கேஸ்களும் இருக்கின்றன. அதுவே என்னை ஒரு பதிவு எழுதத் தூண்டியது.வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியன் அவர்களே! தங்களுடைய ‘ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்’, ‘பதிலறியாக் கேள்விகள் நடுவே.....’ என்ற இரண்டு பதிவுகளையும் படித்தேன். படிக்கும்போதும், படித்த பின்னும் கண்ணில் நீர் வழிந்தது உண்மை. கேள்விகள் எளிது. பதில்கள் ?? என்ற தங்களின் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

      நீக்கு
  3. கருணைக்கொலையை அனுமதிக்கும் நாடுகளிலும், கருணைக்கொலை என்பது இன்று போய் அப்ளை செய்தால் நாளையே கணக்கு முடித்துவிடுவார்கள் என்பதுபோல் அவ்வளவு எளிதாக செய்யக்கூடிய காரியம் கிடையாது. இரண்டு, மூன்று மருத்துவர்கள் அதனை ஒத்துக்கொள்ள வேண்டும், போன்று சில கண்டிப்பான செயல்முறைகள் உண்டு. அதற்கான தொகையையும் செலுத்த வேண்டும். இங்கு ஆஸ்திரேலியாவில் இன்னும் கருணைக்கொலைக்கு அனுமதி இல்லை. இங்கிருந்து ஒருவர் ஸ்விஸ் நாட்டுக்கு கருணைக்கொலை செய்துகொள்வதற்காக சென்றார். அவருடைய பேட்டியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கு 35 வயதுதான். பிறந்தது முதல், உடலில் பிரச்சனைகளோடு வாழ்கிறார். எப்படிதான் சட்டம் இருந்தாலும், தாங்கள் சொல்வதுபோல் சொந்த காரியத்துக்காக இந்தியா போன்ற நாடுகளில் சட்டத்தை வளைக்க சாத்தியம் உண்டு. கருணைக்கொலை, மரண தண்டனை போன்றவைகள் ஒத்துக்கொள்ளக்கூடியவைகள் என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!கருணைக்கொலை வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. அருணா போன்றோர்களுக்காக சட்டத்தில் எதேனு வழி செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்து.

      நீக்கு
  4. அய்யா வணக்கம்! கருணைக்கொலை பற்றிய விவரங்களோடு புதிய தகவலையும் தந்தமைக்கு நன்றி! இது விஷயமாக சட்டென்று யாராலும் எந்த முடிவுக்கும் வர முடியாது என்பதே உண்மை! ஏனெனில் கருணைக் கொலைக்கு அனுமதி தந்தால் கொலையையே சட்டபூர்வமாக கருணைக் கொலையாக்கும் பேர்வழிகள் அதிகம்.
    நானும் கருணைக் கொலை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன்!

    கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்
    http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! எனது கருத்தை திரு N.பக்கிரிசாமி அவர்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் கூறியுள்ளேன். தங்களது ‘கருணைக்கொலையும் முதுமக்கள் தாழியும்’ என்ற பதிவைப் படித்து முன்பே எனது கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். இந்த பதிவு, 25-02-2014, தலைமை நீதிபதி P.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் ககோய், S.K.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோமா நிலையில் உள்ளவர்களுக்கு தரப்பட்ட முனைப்பற்ற கருணைக் கொலை உரிமையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட Constitution Bench திரும்பவும் புதிதாக ஆராய்ந்து புதிய நெறிமுறைகளை வகுக்கவேண்டும் எனக் கூறியுள்ளதைப் படித்தததால் ஏற்பட்ட விளைவு.

      நீக்கு
  5. அருணா அவர்களின் நிலை மிகவும் வருந்தத் தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  6. அருணா அவர்களின் நிலையில் கருணைக் கொலை அவசியமானதாக தோன்றினாலும் நீங்கள் கூறியுள்ளதுபோல் அதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. சிறுநீரக தானத்திற்கென சட்டம் பல நிபந்தனைகளை வகுத்துள்ளபோதும் அவற்றையெல்லாம் மீறி சட்ட விரோதமாக பல தானங்கள் இன்றும் நடைபெறுகின்றனவே. ஆகவே நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை கருணைக்கொலை தவறாகப் பயன்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது என்பதால் அதை சட்டபூர்வமாகவும் கூட அனுமதிக்கலாகாது என்பதே என்னுடைய கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நம் நாட்டில் கருணைக்கொலையை தவறாக பயன்படுத்து வாய்ப்பு உண்டு என்றாலும், அருணா போன்றவர்களுக்காக எதேனு செய்யவேண்டும் எனபது தான் எனது கருத்து.

      நீக்கு
  7. கருணைக்கொலை பற்றி விரிவாக அருமையாக எழுதப்பட்ட பதிவு.இது விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது கடினம்தான்.சில நேரங்களில் அவசியமாகத் தோன்றினாலும்,தவறாகப் பயன் படுத்தப்படும் வாய்ப்பும் பயமுறுத்துகிறது. கடுமையான நடைமுறைகளைப் பயன் படுத்தி அனுமதி வழங்கப்பட வேண்டியது அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவை பாராட்டியமைக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உங்கள் கருத்தே என்னுடையதும்.

      நீக்கு
  8. கருணைக் கொலை பற்றிய உங்கள் பகிர்வு நன்று. அருணா போன்றவர்கள் இப்படி கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது இது நல்லது தான் என்று தோன்றினாலும், இந்த செயல் இன்னும் சிலருக்கு வசதியாகப் போய்விடும் என்ற கருத்தும் இருக்கிறது.

    நமது நாட்டினைப் பொறுத்தவரை எந்த சட்டத்தினையும் தங்களுக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்கிற நிலை இருப்பதால் இது தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன். இருப்பினும் அருணா போன்றவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்பது தான் எனது கருத்து.

      நீக்கு
  9. Hello Sir. I haven't been up-to-date in the blogshere for some time now. Today, I happened to browse through some of the blogs by bloggers whom I read regularly. Aruna Shenbaug case is something I had been following up for quite some time. When Justice Katju's decision was printed- I thought it to be one of India's most important judicial decisions- where our judiciary's maturity and wisdom had made our nation proud. There are very few instances of such extraordinary sense exhibited by our justice system.
    Euthanasia is a topic that needs to wait for its turn to be discussed in India. But that time- is fast approaching. In the film "Spiderman"- a character Uncle Ben says "With great power comes great responsibility". The right to take away a person's life force- is a great "responsibility" indeed. But here- the term "power" needs to be used with caution. In our country- we are yet to gain that maturity to look at Euthanasia as something beyond the cutural question of "right and wrong" or "moral or immoral". Rather its a question of 'if it ought to be so'. Impartial analysis of a given situation- without the emotional overbearing of the sense of 'natural justice' is needed. Our culture, values and tradition are different from that of the countries that have allowed Euthanasia. A law cannot be enough in our country to make people accept it. It is and will remain a taboo. What is needed is a rational outlook and an intellectual up-gradation of the minds of the people. And that is still- yet to happen...

    பதிலளிநீக்கு

  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! வெறும் சட்டம் மற்றும் இயற்றினால் போதாது என்பதில் நானும் உடன்படுகிறேன். நீங்கள் சொன்னது போல் விவேகமுள்ள கண்ணோட்டமும், மேம்படுத்தபட்ட அறிவாற்றலுள்ள உணர்வு நிலை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அது நம் மக்களிடையே ஏற்படும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  12. எனது வலைப்பதிவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

    பி.கு. மூன்று நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் வலைப்பக்கமே வர இயலவில்லை. அதனால் தான் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை. இப்போதுதான் எனது அறிமுகம் பற்றி அறிந்தேன்.

    பதிலளிநீக்கு