வியாழன், 19 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 3

முந்தைய பதிவில் ஒருவர் எப்படி என்னிடம் பொய் சொல்லி 
உதவி கேட்டார் என்பதையும் அவர் சொல்வது பொய் எனத் தெரிந்தும்
நான் ஏன் பணம் கொடுத்தேன் என்பதையும் எழுதியபோது, நம்மவர்கள் 
பற்றி வட இந்தியர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என்பதை 
அடுத்த பதிவில் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. 
அதைப் பற்றிய தகவல் கீழே.  
  
பொதுவாக வட இந்தியர்களுக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாக 
தமிழர்களை கேலி செய்வது இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். 
அதுவும் நமது நிறத்தை கேலி செய்வதில் அவர்களுக்கு 
அலாதிப் பிரியம்.

எங்கள் வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த தமிழர் ஒருவர் 
ஒருமுறை தில்லியில் உணவு இடைவேளையின் போது 
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஊழியர்களில் 
அப்போது அவர் மட்டுமே மதராசி அதாவது தென்னாட்டுக்காரர்.

அப்போது அங்கிருந்த பஞ்சாபி நண்பர் ஒருவர் கேலியாக 
மற்றவர்களிடம் நண்பரின் உடல் நிறத்தை கிண்டல் செய்யும் நோக்கில்
சொன்னாராம். ‘ஏன் மதராசிகள் கருப்பாக இருக்கிறார்கள் தெரியுமா? 
பிரம்மா நம் நாட்டில் பிறந்த அனைவருக்கும் வண்ணம் 
கொடுக்கவேண்டி ஒரு சிறு கைப்பையில் வண்ணத்தை  
எடுத்துக்கொண்டு தூவிக்கொண்டே சென்றாராம்.

அவர் முதலில் வடக்கில் இருந்து ஆரம்பித்ததால் வண்ணம் 
குறைந்துகொண்டே போய் கடைசியில் தெற்கே சென்றபோது, 
பையில் ஒன்றுமே இல்லாததால் தூவுவதற்கு ஒன்றும் இல்லையாம். 
அதனால் தான் நம் நண்பர்கள் போன்றவர்கள் கருப்பாக 
இருக்கிறார்களாம். என்று முடித்ததும் அங்கிருந்த அனைவரும் 
விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த தமிழ் நண்பர் அந்த கேலிக்கெல்லாம் அசரவில்லையாம். 
கோபப்படாமல் கிண்டல் செய்தவரைப் பார்த்து நண்பா. கதை அதோடு முடிந்துவிடவில்லை. தெற்கே சென்ற பிரம்மா வண்ணம் இருந்த 
பையுடன் கூட அறிவு உள்ள இன்னொரு பையையும்   
வைத்திருந்தாராம். 

அதை விட்ட இடத்திலிருந்து அதாவது தெற்கிலிருந்து 
தூவிக்கொண்டு வந்தபோது, இங்கே அதாவது வடக்கே வந்தபோது 
தூவுவதற்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டதாம். அதனால் தான் 
நீங்கள் இப்படி இருக்கிறீர்களாம். என்றதும் கிண்டல் செய்த பஞ்சாபி
நண்பரின் முகம் என்னவோ போல் ஆகிவிட்டதாம். சிரித்த மற்ற 
நண்பர்கள் இருந்த இடம் தெரியவில்லையாம்.

இதை எழுதுவதன் மூலம் நான் நம்மவர்கள் புத்திசாலிகள் என்றோ 
வட இந்தியர்கள் புத்தி குறைந்தவர்கள் என்றோ சொல்ல வரவில்லை. 
ஆனால் நம்மைப் பற்றி அவர்கள் எந்த அளவுக்கு அபிப்பிராயம் 
கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே எழுதினேன்.

நான் பணிபுரிந்த 38 ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் தில்லியிலும், 
ஏழு ஆண்டுகள் கர்நாடகத்திலும் ஏழு ஆண்டுகள் கேரளாவிலும் 
பணிபுரிந்திருக்கிறேன். அதனால் தமிழர்கள் பற்றி அவர்கள் என்ன 
நினைக்கிறார்கள் என்பதை அறிவேன். என்னவோ தெரியவில்லை 
அவர்களில் பலருக்கு தமிழர்கள் என்றால் பிடிப்பதில்லை.
(அது பற்றி பின்னர் எழுதுவேன்.)

ஏமாற்றுபவர்கள் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன் அல்லவா? அதன் 
தொடர்ச்சியாக இன்னொரு நிகழ்வு பற்றி பகிர்ந்து கொள்ளலாமென 
எண்ணுகிறேன். 1970-73 ஆண்டுகளில் எங்கள் வங்கியின் பொள்ளாச்சி 
கிளையில் கள அலுவலராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

அப்போது பொள்ளாச்சியில் பாலகோபாலபுரம் தெருவில் இருந்த 
சீத்தாராம் லாட்ஜில் தங்கியிருந்தேன். (மாத வாடகை ரூபாய் 55 தான்.) 
என்னைப்போல் என்னோடு வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்த 
திரு முத்துராம் மற்றும் Cpt.சுப்பையா ஆகிய இரு அலுவலர்களும், 
பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்த 
திரு புருஷோத்தமன் அவர்களும் தங்கியிருந்தனர். 

அந்த லாட்ஜில் பெரும்பாலும் எங்களைப் போன்று மாத வாடகை 
செலுத்தி தங்கியிருப்பவர்கள் தான் அதிகம். பொள்ளாச்சிக்கு வரும் 
எல்லா மருந்து விற்பனை பிரதிநிதிகளும் தங்குமிடமும் அதுதான்.

அந்த லாட்ஜின் உரிமையாளர் திரு இராமய்யர் அவர்கள் மிகவும் 
கண்டிப்பானவர். அவருக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடக்காது. 
வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது.

அப்படி இருந்தும் 1972 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை சுமார் 7 மணி 
இருக்கும், நான் தங்கியிருந்த அறைக்கு ஒருவர் வந்தார். அவரிடம் 
நீங்கள் யாரைப்பார்க்கவேண்டும்?’ எனக் கேட்டதற்கு, அவர் நீங்கள் 
தானே சபாபதி சார். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். என்று 
மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்.

அவரை நான்  அதற்கு முன் பார்த்ததில்லையாதலால் இவர் எதற்கு 
என்னை பார்க்க வந்திருக்கிறார் என எண்ணிக்கொண்டு, ஆமாம்.
நான் தான் சபாபதி. நீங்கள் யார்? என்னை எதற்காக பார்க்க வந்தீர்கள்?’ 
என்றேன்.

அப்போது எனக்கு மலையாளம் தெரியாது. இருப்பினும் அவர் 
மலையாளத்தில் பேசியதில் பாதி புரிந்தது. அவர் எங்கள் வங்கியின் 
கோழிக்கோடு கிளை மேலாளரின் கார் ஓட்டுனராக பணி புரிவதாகவும் 
தானும் வங்கி ஊழியர் தான் என்றும் பழனிக்கு வந்த இடத்தில் பணம் போதவில்லையென்றும் ரூபாய் 200 கொடுத்தால் ஊர் திரும்பியதும்  
MT (Mail Transfer) மூலம் பணத்தை அனுப்பி விடுவதாகவும் 
சொன்னார்.

அவர் வங்கியைப்பற்றி பேசியதும் வங்கியின் நடைமுறையில் உள்ள  
MT பற்றி சொன்னதும் அவர் ஒருவேளை வங்கி ஊழியராக இருப்பாரோ 
என்ற சந்தேகம் வந்தது. அதே நேரத்தில் வங்கியில் நான் சேர்ந்து இரண்டு 
ஆண்டுகள் தான் ஆகி இருந்ததால், கோழிக்கோடு மேலாளரின் 
கார் ஓட்டுனர் வங்கி ஊழியராக இருப்பாரா என்ற சந்தேகமும் வந்தது. 
அதனால் அவர் சொல்வதை நம்புவதா இல்லையா எனத் தெரியவில்லை.

அவரிடம் விவரமாக என்னால் மலையாளத்தில் பேசி மற்ற விவரங்களை அறியமுடியாததால், நீங்கள் ஒன்று செய்யுங்கள். கிளைக்கு 10 மணிக்கு 
வாருங்கள். எங்கள் மேலாளர் கூட கோழிக்கொடிலிருந்து வந்தவர் தான். உங்களுடைய காசோலையை Discount செய்து பணம் கொடுக்க ஏற்பாடு 
செய்கிறேன். என்றேன்.

அப்போதெல்லாம் வெளியூர் காசோலைகளை Collection க்கு 
அனுப்பினால் பணம் வர நாளாகும் என்பதால், பணத்தை உடனே தர 
காசோலையை Discount செய்து (காசோலையில் உள்ள தொகையில் 
குறிப்பிட்ட அளவு commission எடுத்துக்கொண்டு) பணம் தரும் வசதி 
வங்கிகளில் உண்டு. சில வங்கிகளில் இதை Cheque Purchasing  
என்பார்கள்.

(நான் சொல்வது பழைய நடைமுறை. இப்போது Anywhere Banking 
என்ற Core Banking வசதி இருப்பதால் எந்த ஊர் காசோலையையும் 
கொடுத்து உடனே பணம் வாங்கிவிடலாம்)

அவர் உடனே, இல்லை சார். குடும்பத்தோடு வந்திருக்கிறேன்.அவர்கள் 
எல்லாம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள். 10 மணி என்றால் 
நேரமாகிவிடும். எனவே நீங்களே தாருங்கள். என்றார்.

எனக்கு அவர் அப்படி சொன்னதும் எனது சந்தேகம் வலுத்தது. 
அதே நேரத்தில் அவர் சொல்வது உண்மையாய் இருக்குமோ என்ற 
எண்ணமும் வந்தது. அவரிடம் மலையாளத்தில் பேசி மேலதிக 
தகவல்களை பெற சரியான ஒருவரிடம் அனுப்பி அவருக்கு 
உதவ நினைத்தேன்.

என்னோடு பணிபுரிந்து கொண்டிருந்த பாலக்காட்டை சேர்ந்த 
எனது நண்பர் திரு P.R.கிருஷ்ணன்  நான் தங்கியிருந்த லாட்ஜ் 
இருந்த தெருவில் சில கட்டடங்கள் தள்ளி ஒரு வீட்டில் 
தங்கியிருந்தார். 

அவரது முகவரியை அந்த நபரிடம் கொடுத்து என் நண்பர் இவர். 
இவருக்கு மலையாளம் தெரியும் இவரைப் போய் பார்த்து உங்கள் 
நிலையை  சொல்லுங்கள்.பின் இங்கு வாருங்கள். என்று சொன்னேன்.

அவருக்கு உதவ நினைத்து தான் அப்படி சொன்னேன்.அவர் சென்ற பிறகு 
நான் செய்தது தவறோ என்ற எண்ணம் வந்தது. செல்லும் செல்லாததற்கு 
செட்டியார் பக்கத்தில் இருக்கிறார். என்பது போல் நடந்துகொண்டு 
விட்டேனோ என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டது எனக்கு.

அது என்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் பக்கத்தில் 
இருக்கிறார். என்பது. அதை அடுத்த பதிவில் சொல்லுவேன்.   

 

 

 

தொடரும்


19 கருத்துகள்:

  1. பொய்யையும் உண்மைபோல் கூறத் தெரிந்திருக்கவேண்டும் வாழ்வில் ஒவ்வொருவரும் எங்கேயாவது யாரிடமாவது ஒரு முறையாவது ஏமாற்றப் பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  2. வட இந்தியர்கள் தமிழர்களை குறைத்து மதிப்பிடுவது ரொம்ப நாளாக தொடர்கிறது போல! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு 'தளிர்' சுரேஷ் அவர்களே! வட இந்திய நண்பர்கள் நம்மை கிண்டல் செய்வதும் இன்றும் நடக்கிறது என்பது உண்மைதான்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.... தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  4. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், நன்றாக கோத்துவிட்டுவிட்டீர்கள். விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. இன்னார் அனுப்பினார்கள் என்று அந்த ஆசாமி சொல்லிவிட்டால், மறுக்கவா முடியும். ஏதாவது சொல்ல நினைத்தாலும், அந்தக் காலத்தில் போன் வசதியும் அவ்வளவு புழக்கத்தில் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படி முடிந்தது என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் அப்போது தொலைபேசி வசதி இல்லை. மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அனுப்பி வைத்தேன். என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்வேன்.

      நீக்கு
  5. நானும் தமிழகத்திற்கு வெளியில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன். ஆகவே தமிழர்களை பலருக்கும் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம் என்று நானும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் அதற்கு இதுதான் காரணம் என்று எதையும் என்னால் கூற முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! தமிழர்கள் ஏன் வெறுக்கப்படுகிறார்கள் என்பதை பின்பு விரிவாக எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  6. வட இந்தியாவில் தமிழர்களைக் கிண்டல் செய்வது போலவே பீஹாரிகளையும் இப்போது அதிகம் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போதெல்லாம் தில்லி வருவது கணிசமாக குறைந்துவிட, பீஹாரிகள் எல்லா இடங்களுக்கும் வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நண்பர் வீட்டுக்கு அனுப்பிய பின் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே! வட இந்தியர்களுக்கு குறிப்பாக பஞ்சாபியர்களுக்கு தாங்கள் தான் மேலானவர்கள் என்ற எண்ணம் இருப்பதால் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு
  7. வடஇந்தியர்கள் மட்டுமல்ல... அரபுதேசங்களில் தற்போதும்கூட தமிழர்களை மலையாளிகள் மதிப்பதில்லை என்ன செய்வது ? காரணம் தமிழன் சினிமா நடிகனை அன்றிலிருந்து இன்றுவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறான்.

    குறிப்பு-ஐயா கடந்த ஒருவாரமாக தங்களது பதிவை படிக்க முடியவில்லை காரணம் மூவிங்கிலேயே இருக்கிறது நிற்பதில்லை பலமுறை இதைக்குறிப்பிட முயற்சித்தேன் இன்றுதான் முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! சிலரது பதிவுகளை படிக்க முடியாததன் காரணம் பற்றி ப்ளாகர் நண்பன் ‘துள்ளிக் குதிக்கும் பிளாக்-தீர்வு என்ன ? (http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html) என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தார். அதைப் படித்துவிட்டு மாற்றம் செய்ய இருக்கிறேன். அப்போது இந்த பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி!

      நீக்கு
  8. விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. SUSPENSE .... உங்கள் அடுத்த பதிவினை தொடர்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  9. விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. SUSPENSE .... உங்கள் அடுத்த பதிவினை தொடர்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  10. வட இந்தியர்களுக்கு நம்மை பார்த்தால் ஒரு இளக்காரம் தான். நமக்கு ஹிந்தி தெரியாது என்கிற ஒன்றை வைத்தே அவர்கள் நம்மை மட்டம் தட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! வட இந்தியர்களுக்கு நமக்கு இந்தி தெரியாது என்பதை விட ஆங்கிலம் தெரிகிறதே என்பதால் தான் இந்த கிண்டலும் கேலியும் என நினைக்கிறேன் நான்.

      நீக்கு