வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 9




 

தொலைபேசியில் என்னை கூப்பிட்டு எங்கள் Boss குரலில் பேசி தனது 

மைத்துனருக்கு பணம் தர சொன்னவர் போலியானவர் என்பதை எப்படி கண்டுபிடித்தேன் என்ற கேள்வியுடன் சென்ற பதிவை முடித்திருந்தேன்.  

 

தொலைபேசியில் பேசியவர் போலியானவர் என்பதை அறிந்துகொள்ள 

எனக்கு உதவிய துப்புகள் (Clues) இரண்டு. ஒன்று எனது Boss 

தொலைபேசியில் வழக்கமாக பேசும் தனிப்பாங்கு (Mannerism). 

இன்னொன்று இந்த நிகழ்வு நடப்பதற்கு முன் தினத்தாளில் வந்த 

ஒரு செய்தி.

 

அந்த நபர் பேசிக்கொண்டிருக்கும்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகப் 

பொறியால் இந்த இரண்டும் சடேரென நினைவுக்கு வந்தது. அதனால் 

அவரை சந்தேகப்பட்டு நீங்கள் எங்கள் DGM தானா? சந்தேகமாக 

இருக்கிறது. நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்?’  என்றதும் 

அவர் என்னை நம்பவில்லையா? என சொல்லிவிட்டு தொலைபேசி

இணைப்பை துண்டித்துவிட்டார்.

 

வழக்கமாக எங்கள் Boss எப்போது பேசினாலும் வணக்கம். சபாபதி. 

நான் -------(அவரது பெயரைச் சொல்லி) பேசுகிறேன். எப்படியிருக்கிறீர்கள்? 

குடும்பத்தில் அனைவரும் நலந்தானே? என விசாரித்துவிட்டுத்தான் 

மற்ற விஷயங்களை பேச ஆரம்பிப்பார். ஆனால் இந்த நபரோ 

தொலைபேசியை எடுத்ததும் இது சிண்டிகேட் வங்கியின் மெயின் 

பிராஞ்ச் கிளையின் மேலாளர் வீடு தானே?’ என்று கேட்டுவிட்டு, 

அதற்கு நான் ஆமாம். என்றதும், நான் DGM(O) பேசறேன்.என்றார்.

 

நான் ஆமாம். என்று சொன்னதுமே அவர் உண்மையிலேயே எனது 

Boss ஆக இருந்திருந்தால் வழக்கமான பாணியில் பேசியிருக்கவேண்டும். 

அவரது குரல் அச்சு அசலாக எங்கள் Boss பேசுவதுபோல் இருந்தாலும், 

வழக்கமான பாணியில் நேரடியாக தனது பெயரை சொல்லாமல் 

நான் DGM(O) பேசறேன். என்று சொன்னது சந்தேகத்தை உண்டாக்கியது.

 

மேலும்  துணைப் பொதுமேலாளர் பதவியை தற்காலிகமாக 

ஏற்றிருப்பவர்கள் தங்களது சார்நிலை ஊழியரிடம் பேசும்போது தங்களை 

DGM(O) என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.ஏனெனில்

அவர்கள் வகிப்பது  ஒரு தற்காலிக பதவி மட்டுமே. மேலும் அவர்கள் 

தங்களை யாரென்று இனம் காட்டிக்கொள்ளும்போது அவர்களது பதவியின் 

பெயரை சொல்ல வேண்டியதில்லையே. ஏனெனில் அவர்கள் எந்த 

பதவியில் இருக்கிறார்கள்  என்பது தான் அவர்களது சார்நிலை 

ஊழியர்களுக்குத் தெரியுமே.

 

அவரது பேச்சுமுறை எனக்கு சந்தேகத்தை தந்தது மட்டுமல்லாமல் 

இந்த நிகழ்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் 

வந்த செய்தி ஒன்றும் அந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

 

நான் எப்போதும் The Hindu நாளிதழோடு உள்ளூர் செய்திகளை 

அறிந்துகொள்ள தினத்தந்தி நாளிதழையும் படிப்பது வழக்கம். 

அலுவலகத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, அதுவும் வங்கியில் 

மேலாளர்களாக இருப்பவர்களுக்கு உள்ளூர் செய்திகளை அறிந்து 

கொள்வது மிகவும் அவசியம். உள்ளூர் செய்திகளைத் உடனுக்குடன் 

தருவது தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் தானே. எனவே அதை வங்கி 

மேலாளராக பணியேற்ற ஆண்டான 1983 லிருந்து படிக்க ஆரம்பித்தேன்.  

(அப்போது ஆரம்பித்த அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது!)

 

நான் படித்த அந்த செய்தியில் இருந்த தகவல் இதுதான். வேலூரில் 

இருந்த ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தின்(General Insurance Company)யின் 

மேலாளர் ஒருவரை ஒரு நாள் காலையில் தொலைபேசியில் அழைத்த 

நபர் அவரது வட்ட மேலாளர் (Divisional Manager) பேசுவதாக சொல்லிவிட்டு, 

தன்னுடைய மைத்துனர் பெங்களூர் செல்லும்போது எல்லாவற்றையும் 

பறி கொடுத்துவிட்டு வேலூர் பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும் தன் 

மைத்துனர் நிற்கும் இடத்தின் அடையாளத்தையும் சொல்லி, உடனே 

ரூபாய் 5000 கொடுத்து உதவுமாறும் தான் காலையில் அலுவலகம் 

வந்ததும் அந்த பணத்தை உடனே அனுப்பி வைப்பதாகவும் 

(என்னிடம் சொன்னதுபோல்) சொல்லியிருக்கிறார்.

 

உதவி கேட்பது நமது வட்ட மேலாளராயிற்றே என்ற நினைப்பில் அந்த 

பொது காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் உடனே ரூபாய் 5000 த்தை 

எடுத்துக்கொண்டு போய் வேலூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று 

கொண்டிருந்த அவரது வட்ட மேலாளரின்  மைத்துனர் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். பெற்றுக் கொண்டவரும் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

 

வீட்டிற்கு வந்ததும் அந்த மேலாளர் உடனே தனது வட்ட மேலாளரை தொலைபேசியில் அழைத்து, சார். நீங்கள் தொலைபேசியில் 

சொன்னபடியே உங்கள் மைத்துனரிடம் ரூபாய் 5000 த்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். என்றிருக்கிறார். அதற்கு அவரது Boss என்ன. 

நான் சொன்னபடி என் மைத்துனருக்கு பணம் கொடுத்தீர்களா? நான் 

உங்களை தொலைபேசியில் அழைக்க இல்லையே. மேலும் எனக்கு 

மைத்துனரே இல்லையே. தீர விசாரிக்காமல் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிட்டீர்களே. என்று சொல்லிவிட்டார். 

 

அப்போதுதான் தெரிந்தது அவருக்கு. தனது வட்ட மேலாளர் குரலில் 

பேசி யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள் என்று. அவர் உடனே காவல் 

துறையில் புகார் செய்திருக்கிறார்.  காவல் துறையினரும் ஏமாற்றிய 

அந்த நபரை வலை வீசி தேடிக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தி 

சொல்லியது.  

 

இந்த இரண்டு விஷயங்களும் சட்டென்று மனதில் தோன்றியதால் 

தொலைபேசியில் பேசியவர் போலியானவர் என கண்டுகொண்டேன். 

அவை இரண்டும் நினைவுக்கு வந்தது என் அதிர்ஷ்டமே. இல்லாவிடில் 

நானும் பணத்தை பறி கொடுத்திருப்பேன்.

 

காவல் துறையிடம் இந்த நிகழ்வு பற்றி புகார் தந்திருக்கலாமே என 

சிலர் நினைக்கலாம். அதே ஊரில் ஏற்கனவே காவல் துறையிடம் 

வேறொரு புகார் செய்யப் போய் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்னைத் 

தடுத்ததால் புகார் செய்யவில்லை. பணத்தைப் பறி கொடுத்திருந்தாலே உதவமாட்டார்கள். பணத்தை இழக்காதபோது நமது பேச்சைக் கூட 

கேட்கமாட்டார்கள் என்பதால் அதை செய்யவில்லை.

 

என்னை ஏமாற்ற நினைத்த அந்த நபரின் திருவிளையாடல் பற்றிய 

இன்னும் சில தகவல்களை, எனக்கு காவல் துறையிடம் ஏற்பட்ட 

அனுபவத்தை சொல்லிவிட்டு சொல்லலாமென எண்ணுகிறேன்.  

 

 

தொடரும்



18 கருத்துகள்:

  1. தங்களுக்கு சரியான நேரத்தில், இந்த சந்தேகங்கள் ஏற்பட்டதால், நீங்கள் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சமயங்களில் இப்படி யோசிக்க முடியும்.

    இந்த பதிவை பகிர்ந்துக்கொண்டதால், நாட்டில் எப்படியெல்லாம் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அந்த நேரத்தில் திடீரென சந்தேகம் வந்ததால் ஏமாறவில்லை. எந்த நேரமும் விழிப்போடு இருந்தால்தான் அது சாத்தியம் என்பதை உணர்கிறேன்.

      நீக்கு
  2. நல்ல அனுபவம். நமது சுழியும் நன்றாக இருந்தால்தான் நமது ஞாபக சக்தியும் ஒத்துழைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. நமது நேரம்(சுழி!) சரியாக இருந்தால்தான் நினைவாற்றலும் ஒத்துழைக்கும்.

      நீக்கு
  3. நீங்கள் சொல்வதுபோல் நமக்கு எல்லாருக்குமே ஒரு பேச்சு பாணி உள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் ஒன்னும் இல்லீங்க டிபிஆர் என்று சொல்லிவிட்டுத்தான் பேச்சையே துவங்குவார். வேறொருவர் பேச்சுக்கிடையில் என்ன நா சொன்னது புரிஞ்சிதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இதை அறியாமல் அவருடைய குரலை இமிடேட் செய்தால் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் பதட்டத்தில் இருக்கும்போது இது நம் நினைவிற்கு வருவது அரிது. உங்களுக்கு சரியான நேரத்தில் நினைவுக்கு வந்ததால் ஏமாறாமல் தப்பித்துக்கொண்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! எல்லோருக்கும் தனிப்பட்ட பேச்சுப் பாணி இருப்பதை இது போன்று ஏமாற்றுக்காரர்கள் அறியமாட்டார்கள் என்பது சரிதான். அதுதான் என்னை பண விரயத்திலிருந்து காப்பாற்றியது.

      நீக்கு
  4. ஏமாறக்கூடாது என்று அமைந்திருந்ததனால் தப்பித்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். காவல் துறை குறித்து தாங்கள் கூறுவது ஒத்துக்கொள்ளக்கூடியதுதான். பிரச்சனை, உதவி என்று செல்பவர்களை படுத்தி எடுத்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அன்றைக்கு நான் ஏமாறவேண்டும் என்றிருந்தால் அந்த துப்புகள் நினைவுக்கு வந்திருக்காது என்பதை அறிவேன். காவல் துறை எவ்வாறு ‘உதவி’ செய்கிறதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அது பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  5. பத்திரிக்கை படித்தால் மட்டும் போதாது, செய்திகளையும் உள்வாங்க வேண்டும் ஒருவரிடம் பேசும் போது நம் பாணி நம்மை காட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நாளிதழ்களின் செய்திகளை உள் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது சரியே.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.
    தங்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  7. விசயம் சுவாரஸ்யமாக போகும்போது தொடரும்னு போட்டு ஏமாத்துறீங்களே... நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! ‘தொடரும்’ என போட்டால் தானே தொடர்வீர்கள்!

      நீக்கு
  8. அன்றைக்கே படித்து விட்டேன்! இப்போதுதான் வர முடிந்தது. போலீஸ் என்றாலே எதற்கு என்று யோசிக்கத்தான் வைத்து விடுகிறார்கள்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் அய்யா அவர்களே!

      நீக்கு