திங்கள், 13 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 16

தஞ்சை அரண்மனையை அடைந்ததும் நாங்கள் உள்ளே நுழையுமுன் நண்பர் முருகானந்தம் சொன்னார். ‘நண்பர்களே! நமக்கு இடதுபுறம் உள்ள வளாகத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் வாரிசுகள் வசிக்கிறார்கள்; அங்கே செல்ல நமக்கு அனுமதியில்லை.




நாம் பார்க்க இருக்கும் அரண்மனை வளாகமும், கலைக்கூடமும் (Art Gallery) சரஸ்வதி மகால் நூலகமும் மாலை 6 மணிவரை தான் திறந்திருக்கும் என்பதால் நாம் விரைவில் அரண்மனையையும் கலைக்கூடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம். இங்கேயே அனைவருக்கும் தேநீர் கொண்டுவர சொல்லியிருக்கிறோம். அதை அருந்திவிட்டு பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்த்துவிட்டு பெரிய கோவிலுக்கு செல்வோம்.

அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு 7 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பினால்தான் நடக்க இருக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள சரியாக இருக்கும். எனவே வாருங்கள்.போகலாம்.’ என்று சொல்லி அவர் முன்னே நடக்க நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

அவர் எங்கள் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு இருக்கும்போது, இதே அரண்மனையை 10 ஆவது வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது நான் வந்து பார்த்ததும் அப்போது இந்த அரண்மனைப்பற்றி கேள்விப்பட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தது.

கி.பி 1279 ஆம் ஆண்டு பாண்டியர்களோடு ஏற்பட்ட போரில், சோழர்களின் கீழ் இருந்த தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்ததும் பாண்டியர்கள் வசம் சென்றதாம். பின்னர் அவர்களது வீழ்ச்சிக்குப்பின் தஞ்சை விஜயநகர அரசின் ஆட்சியின் கீழ் வந்ததாம்.

அதற்குப் பின்னர் கி.பி 1532 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசுக்கு திறை செலுத்தும் தனி ஆட்சி நாயக்கர்களின் தலைமையில் அமைந்து நாயக்க வம்சத்தின் முதல் மன்னராக சேவப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி பொறுப்பேற்றாராம்.

அவரது காலத்தில் தான் கி.பி 1534 ஆம் ஆண்டு உள்ளூர் கைதிகளை வைத்து கட்ட ஆரம்பித்த இந்த அரண்மனையை கி.பி 1535 ஆம் ஆண்டு முடித்தார்களாம். ஆரம்பத்தில் சிவகங்கை கோட்டை என அழைக்கப்பட்ட இந்த அரண்மனை பின்னர் இது தஞ்சை அரண்மனை என்றே அழைக்கப்பட்டு வருகிறதாம்.

கி.பி 1674 ஆம் ஆண்டு வரை நாயக்கர்கள் வசம் இருந்த தஞ்சை, பின்னர் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி ராவ் வசம் வந்தபோது மராட்டியர் ஆட்சி தொடங்கியதும், இந்த அரண்மனையின் கட்டிட அமைப்பை மேம்படுத்தி 110 ஏக்கர் பரப்பளவு உள்ள அரண்மனை வளாகத்தை விரிவு படுத்தப்பட்டதாம். கி.பி 1799 ஆம் ஆண்டு தஞ்சை ஆங்கிலேயர் வசம் வந்தபோது இந்த அரண்மனையும் அவர்களின் வசமாயிற்றாம்.

பழைய நினைவுகளிலிருந்து மீண்ட நான், நண்பர்களோடு அரண்மனைக்குள் நுழைந்தபோது முதலில் நாங்கள் பார்த்தது தர்பார் மண்டபம். வெளியே பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் உள்ளே சென்றதும்தான் அதனுடைய அழகையும் கம்பீரத்தையும் பார்க்க முடிந்தது. முதலில் அரண்மனையை பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு செல்ல இருந்ததால் புகைப்படக் கருவியை எடுத்துச் செல்லவில்லை.

எனவே கைபேசி மூலமே சில படங்களை எடுக்க முடிந்தது, மேலும் பார்வை நேரத்திற்குள் பார்க்கவேண்டும் என்பதால் விரைவாக செல்லும்படியாகிவிட்டது.

அப்போது நான் எடுத்த படங்கள் கீழே.




நான் எடுத்த படம் முழுமையாக இல்லாததால் இணையத்திலிருந்து எடுத்த படத்தை கீழே வெளியிட்டிருக்கிறேன்.


தர்பார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு அடுத்து அங்கிருந்து ஒரு வாயில் வழியே வெளியே வந்தோம். அங்கு வரிசையாய் நின்றிருந்த அழகிய தூண்கள் எங்களை வரவேற்பதுபோல் இருந்தன.



அந்த தோரண வாயில் வழியாக செல்லும்போது ஒருகாலத்தில் உபயோகத்தில் இருந்து தற்போது தனது இணையைப் பிரிந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் மரத்தாலான ஒரு பெரிய கதவைக் கண்டோம். அதை எனது கைபேசி படம் பிடிக்கத் தவறவில்லை.


அங்குள்ள சிற்பங்களைப் பார்த்துவிட்டு வெளியே வந்து ‘கூடகோபுரம்’ என அழைக்கப்படும் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த கோபுரத்தை (Arsenal Tower) பார்க்க விரைந்தோம்.

தொடரும்










22 கருத்துகள்:

  1. வியப்பான தகவல்கள்.... இது வரை தஞ்சை அரண்மனை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! அவசியம் நீங்கள் தஞ்சை சென்று எல்லா இடங்களையும் படம் எடுத்து பதிவிடவேண்டும். நான் குழுவுடன் சென்றதால் ஆற அமர எல்லா இடங்களையும் பார்க்க இயலவில்லை. மேலும் காமிரா எடுத்து செல்லாததால் அதிக படங்கள் எடுக்க இயலவில்லை. தாங்கள் சென்றால் தங்களின் காமிரா கண்ணிற்கு எதுவும் தப்பாது.

      நீக்கு
  2. ....பழைய தகவல்கள் நினைவு - அரிய தகவல்கள்.... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. தகவல்கள் நன்று அதிலும் தஞ்சை அரண்மனையைப்பற்றிய அபூர்வ விடயங்கள் அறிந்தேன் நன்றி
    த.ம.+ 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. //தனது இணையைப் பிரிந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் மரத்தாலான ஒரு பெரிய கதவைக் கண்டோம்.//

    நல்ல கற்பனை. இரண்டாக இருக்க வேண்டியவை தனித்து விடப் பட்ட ஒன்றாக இருந்தாலே அது அதன் தன்மையை இழப்பதோடு மனசுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது.

    அரண்மனை பள்ளி ஒன்று இருக்குமே, இப்பொழுது அது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தனியாக தரையில் கிடந்த அந்த கதவைப் பார்த்ததும் அது எவ்வாறு ஜோடியாக இணைந்து செயல்பட்டிருக்கும் என்ற எண்ணம் வந்தததால், அதை உடனே படம் எடுத்தேன்.
      நேரம் இல்லாததால் அரண்மனையையே முழுதும் பார்க்க இயலவில்லை. அதனால் அந்த பள்ளியையும் பார்க்கவில்லை. எனவே அது இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

      நீக்கு
  5. தஞ்சை அரண்மனைப் படங்களைப் பார்க்கும் பொழுது ஏனோ மதுரை திருமலை நாயக்கர் மஹால் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. நாயக்கர் மஹால் தூண்கள் மழமழவென்று கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பருத்து வட்டமாய் என்றால் த.அ. தூண்கள் பட்டை பட்டையாய் கலைடாஸ்கோப்பில் போட்டு உருட்டிய மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மதுரை திருமலை நாயக்கர் மகால் அளவுக்கு இந்த தர்பார் மண்டபத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றே கருதுகிறேன். தாங்கள் சொன்னதுபோல் மதுரை மகாலின் தூண்கள் உருளையானவை. மேலும் வெண்மை நிறத்துடன் உயரமானவையும் கூட. ஆனால் தஞ்சை மகாலின் தூண்கள் பட்டை முகம் கொண்டு பல வண்ணத்தில் மிளிர்பவை. இரண்டும் வெவ்வேறு வடிவத்தில் இருந்தாலும் அழகிய வடிவுள்ளவைகள்.

      நீக்கு
  6. ஆஹா .... அழகழகான படங்களுடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அற்புதமான செய்திகள்.

    இன்றுவரை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் மைசூர் மஹாராஜா அரண்மனையை, நான் முதன்முதலாகப் போய்ப் பார்த்தபோது பிரமித்து அப்படியே சொக்கிப்போனேன்.

    ஏனோ இந்தத் தங்களின் பதிவினில் அந்த தர்பார் மண்டபத்தைப் பார்த்ததும், எனக்கு அந்த ஞாபகம்தான் வந்தது. பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மைசூர் அரண்மனை தர்பார் ஹால் பிரமாண்டமானது. ஆனால் தஞ்சை அரண்மனை தர்பார் ஹால் அந்த அளவுக்கு பெரியது இல்லையென்றாலும் சிறியதாக சிறப்பாக இருக்கிறது. தங்களின் பின்னூட்டம் மூலம் மைசூர் அரண்மனையை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டீர்கள். அதற்கு நன்றி! இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. அதனால் உடனே பதில் தரஇயலவில்லை.

      நீக்கு
  7. நாங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்கள்தான். இருந்தாலும் உங்கள் எழுத்தின்ஊடே பார்த்தபோது பிரமிப்பு மேலிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  8. தஞ்சை அரண்மனையை 18 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது ஏதும் நினைவுக்கு வரவில்லை உங்கள் பதிவை ஆவணமாகக் கொண்டு இன்னொரு முறை அரண்மனையும் சரஸ்வதி மகாலையும் காண வேண்டும் எப்போதோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இது போற சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அவசியம் சென்று வாருங்கள்.

      நீக்கு
  9. தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பலருக்கு தஞ்சை அரண்மனை பற்றி தெரிவதில்லை. எனவே எப்போதுமே (விழாக் காலம் தவிர) காலியாகவே இருக்கும். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! தஞ்சை வருபவர்கள் பெரிய கோவிலை மட்டும் பார்த்துவிட்டு அரண்மனையைப் பார்க்காமல செல்வதற்கு காரணம் நமது சுற்றுலாத்துறை சரியான முறையில் அரண்மனையைப்பற்றி விளம்பரம் செய்யாதுதான் என நினைக்கிறேன்.

      நீக்கு
  10. வணக்கம்.

    இரத்தினச் சுருக்கமான தஞ்சை நாயக்க வரலாறு. படங்களுடன்.
    பார்த்த இடம்தான் என்றாலும் தங்கள் படங்கள் வழி மீண்டும் அவ்விடங்களில் பயணிப்பது போல் தோன்றியது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு
  11. படங்கள் பதிவுக்குச் சுவை சேர்க்கின்றன. ஏற்கெனவே நான் பார்த்த இடங்கள் என்றாலும், இப்போது மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவையும் படங்களையும் இரசித்தமைக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே!

      நீக்கு