வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 2







எங்களது அடுத்த சந்திப்பு பொள்ளாச்சியில்  என்று கேள்விப்பட்டதுமே எனது மனம் கால இயந்திரத்தில் ஏறி 47 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு. ஏப்ரல் திங்கள். மணிப்பாலில் இருந்த எங்களது வங்கியின் தலைமையத்தில் இருந்த அலுவலர்கள் பயிற்சிக் கல்லூரியில் 45 நாட்கள் பயிற்சி முடிந்த பின்  மேற்கொண்டு எந்த கிளைக்கு கள பயிற்சிக்கு செல்லவேண்டுமோ என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, பொள்ளாச்சியில் உள்ள எங்கள் கிளையில் செய்முறை பயிற்சி பெற எனக்கு ஆணை தரப்பட்டது.


பொள்ளாச்சியில் எங்கு தங்குவது என அப்போது தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்த சந்திரசேகர கோட்கி என்ற நண்பரைக் கேட்டபோது, பொள்ளாச்சியில் தானும் சில நாட்கள் பயிற்சிக்காக சென்றபோது கோபால் லாட்ஜில் தங்கியிருந்ததாகவும், அங்கு தங்கலாம் என்றும் சொன்னார்.

பயிற்சியின் போது மணிப்பாலிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருந்த உடுப்பியில் தங்கியிருந்தேன். பொள்ளாச்சி செல்ல ஆணை கொடுத்து என்னை தலைமையகத்திலிருந்து விடுவித்ததும் உடுப்பியிலிருந்து மங்களூர் வந்து அங்கிருந்து பொள்ளாச்சிக்கு நேரடி இரயில் இல்லாததால் வெஸ்ட் கோஸ்ட் விரைவு இரயிலில் பயணித்து ஓலவக்கோடு சந்திப்பில் (தற்போது இது பாலக்காடு சந்திப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  விடிற்காலை இறங்கினேன்.

அங்கிருந்து திண்டுக்கல் செல்லும் காலை இரயிலில் ஏறி பொள்ளாச்சி சந்திப்பில் இறங்கி கோபால் லாட்ஜிக்கு குதிரை வண்டியில் பயணித்து கோபால் லாட்ஜை அடைந்து அறை எடுத்துத் தங்கினேன். பொள்ளாச்சியில் அடுத்து இருந்த மூன்று ஆண்டுகளில் வங்கிப் பணியின் போது எனக்கு கிடைத்த சுவையான மற்றும் கசப்பான அனுபவங்கள் எண்ணிலடங்கா. (அதுபற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.)


இப்போது எங்களது பொள்ளாச்சி சந்திப்பு பற்றி பார்ப்போம்.

தஞ்சை நண்பர்கள் விரைவில் கோவை வந்து தங்களோடு அந்த இடத்தை பார்வையிட்டு முடிவெடுத்த பின்னர், விரிவான விவரங்கள் சுற்றறிக்கை மூலம்  தெரிவிக்கப்படும் என்று நண்பர் மீனாட்சி சுந்தரம் சொல்லியிருந்தபடி 2018 பிப்ரவரி திங்களில் தஞ்சை நண்பர் R பாலசுப்பிரமணியன் ஒரு விரிவான சுற்றறிக்கையை அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.

அதில் 10.02.2018 சனிக்கிழமையன்று பொள்ளாச்சியில் முதற்கூட்டம் நடைபெற்றதென்றும், அதில் தன்னுடன் தஞ்சை நண்பர்களான முருகானந்தம், சரவணன் ஆகியோருடன் கோவை நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், T.N.பாலசுப்ரமணியன் மற்றும் பொள்ளாச்சி நண்பர் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நண்பர் செல்லப்பாவின் உறவினரும், வேளாண் பொறியியல் பொறியாளர் திரு சரவணன் அவர்களின் உதவியுடன் பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலையில் 10 கி.மீ தொலைவில் வலைக்கொம்பு நாகூர் என்ற இடத்தில் உள்ள Great Mount Coco Lagoon என்ற ஓய்வகத்தை (Resort) பார்வையிட்டு தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

ஓய்வகத்தின் ஒரு தோற்றம்


ஓய்வகம் அமைந்துள்ள இடம்.


Lagoon என்ற பெயரைக் கேள்விப்பட்டதும் 2016 ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த பொன் விழா சந்திப்பில் முத்துப்பேட்டை காயலுக்கு (Lagoon) சென்றது நினைவுக்கு வந்தது. இரண்டும் ஒரே பெயராய் அமைந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் ஒரு வேறுபாடு. அது நீர் நிறைந்த காயல். நாங்கள் தங்க இருக்கும் இடமோ தென்னந்தோப்புகள் நிறைந்த ஒரு ஓய்வகம்.   

அந்த Lagoon இல் பயணித்து இரசித்தோம். இந்த Lagoon இல் தங்கி இருக்கப்போகிறோம் என்பதை நினைத்ததும் மிக்க மழ்ச்சியாக இருந்தது. 

நண்பர் பாலு அவரது சுற்றறிகையில் தாங்கள் அந்த ஓய்வகத்தை பார்வையிட சென்றபோது அதன் மேலாளர் திரு செல்வம் அங்குள்ள வசதிகள் பற்றி விளக்கி, சுற்றிக் காட்டியதாகவும், 60 நபர்கள் ஒரு நாள் தங்க ஆகும் செலவையும் அறிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அருமையான இடம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால் அந்த இடத்தில் சந்திப்பை நடத்தவும் 31-08-2018 மதியத்திலிருந்து  01-09-2018 அன்று மதியம் வரை  தங்கவும்  முடிவெடுத்திருப்பதாக சொல்லியிருந்தார்.

அந்த ஓய்வகத்தில் உள்ள வசதிகளை விரிவாகக் குறிப்பிட்டு (அதுபற்றி பின்னர் எழுதுவேன்) ஒருவர் ஒரு நாள் தங்க ( உயர் வசதியுள்ள (Luxury) அறை வாடகை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு மற்றும் காலை காபி  மற்றும் மாலையில் சிற்றுண்டியுடன் காபி அல்லது தேநீர் உட்பட) ரூபாய் 5000 என்றும், குடும்பத்தினர் இருவர்  தங்க ரூபாய் 10000 என்றும் மேற்கொண்டு அந்த அறையில் ஒரு நபர் தங்க ரூபாய் 2360 ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.



தொடரும்     



18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. பரவாயில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு சுற்றுலாவுக்கு சுற்றுலாவும் ஆச்சு; நண்பர்கள் சந்திப்பும் ஆச்சு. நல்ல ஏற்பாடு தான்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர்கள் சந்திப்பை வெவ்வேறு ஊர்களில் நடத்தியதன் நோக்கமே சந்திப்பை நடத்த அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்பதாலும் பல இடங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதாலும் தான்.

    பதிலளிநீக்கு
  4. தங்குமிடம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு
  5. தங்குமிடம் படத்தில் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளது.
    நீண்ட நாட்களுக்குப்பின் எழுத ஆரம்பித்துள்ள கட்டுரை மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. "// குதிரை வண்டியில் பயணித்து//" - இந்த மாதிரி பயணம் எல்லாம் இப்போது வராதா என்று ஏக்கத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! எனக்கும் அந்த ஆசையும் உண்டு. ஆனால் அவை நிறைவேற வாய்ப்பில்லை என எண்ணுகிறேன்.

      எனது நண்பரும் பொறியாளருமான புதுவயல் திரு M அழகப்பன் அவர்கள் சிட்னியில் தான் உள்ளார். அவரை உங்களுக்கு தெரியும் என எண்ணுகிறேன்.

      நீக்கு
    2. அவரை நன்றாக தெரியும் ஐயா.
      உங்களை எப்படி சொன்னால் அவருக்கு தெரியும்?

      நீக்கு
    3. நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம்.எனது குடும்ப நண்பர்.எனது பெயரை சொல்லுங்கள்.அது போதும்.

      நீக்கு
  7. ரசனையான அனுபவம். Lagoon என்றதும் 1980களில் வெளியான Blue Lagoon திரைப்படம் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! அந்த Blue Lagoon இளைஞர்கள் பற்றியது. இந்த Lagoon சந்திப்பு முதியவர்கள் பற்றியது.

      நீக்கு
  8. படங்கள் அழகு
    குதிரை வண்டியில் பயணித்ததை நினைவு கூர்ந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
    தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை கில்லர்ஜி அவர்களே! சில பயணங்களை மறக்க இயலாது. முன்பு கூட இரவில் நிலவின் ஒளியில் குதிரையில் பயணித்ததை குறிப்பிட்டுள்ளேன்.

      நீக்கு
  9. குதிரை வண்டியில் பயணம்.... சில ஊர்களில் இன்னமும் ஜட்கா என அழைக்கப்படும் குதிரை வண்டிகள் உள்ளன. ஆக்ராவில் கூட தாஜ்மஹால் பகுதியில் மோட்டார் வண்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் குதிரை வண்டிகளும், பேட்டரி ரிக்‌ஷாக்களும் மட்டுமே இயங்குகின்றன.

    சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதோ அடுத்து வெளியிட்ட இரண்டு பதிவுகளையும் படிக்க இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!தங்களுக்குத் தெரிந்திருக்கும்.திருச்சி தென்னூரில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் பெயரில் 60 களில் குதிரை வண்டிகள் நிறுத்துமிடமே இருந்தது. இப்போது குதிரை வண்டிகள் இல்லாததால் அதுவும் இல்லாமல் போய்விட்டது. தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு