செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 3


கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வேறுபாடு உண்டு என்று  முன்பே சொல்லியிருந்தேன்.




கதை இலக்கிய நூல்கள் எழுத்தாளர்களின் கற்பனை கலந்து எழுதப்பட்டிருப்பதால், அந்த நூல்களை மொழிபெயர்ப்போர் மூலக்கருத்தை எடுத்துக்கொண்டு உள்ளூர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் கற்பனையையும் கலந்து எளிய நடையில் சுவாரஸ்யமாகத் தந்தால் போதும். அவைகள் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும்.

ஆனால் அறிவியல் நூல்கள்  மெய்ப்பிக்கப்பட்ட முடிவுகளை கொண்டு எழுதப்பட்டிருப்பதால் அவைகளை மொழிபெயர்க்கும்போது புதிதாக எதையும் சேர்க்க இயலாது. ஏனெனில் மாற்றி எழுதினால் அவைகள் அறிவியல் நூல்களாக இல்லாமல் அறிவியல் கதைகள் போல் ஆகிவிடும்.

மேலும் அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கும்போது அறிவியல் உண்மைகளை புரிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் தெரிந்த சொற்களை தந்து மொழிபெயர்க்கவேண்டும்.

மொழிபெயர்க்கும் மொழியில் அறிவியல் சொற்களுக்கு இணையான சொற்கள் இல்லாவிடின்/தெரியாவிடின்  மூலத்தில் உள்ள சொற்களையே எழுத்துப்பெயர்ப்பு (Transliteration) செய்யலாம். எடுத்துக்காட்டாக Hydrogen என்பதை தமிழில் நீரகம் என சொல்வதுண்டு. அந்த சொல் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் ஹைட்ரஜன் என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.

ஆனால் கூடியவரை தமிழில் மொழிபெயர்க்கும்போது மூல சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உள்ளனவா என அறிந்துகொண்டு மொழிபெயர்ப்பது நல்லது. தற்சமயம் ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

எடுத்துக்காட்டாக Computer என்பதற்கு கணினி என்றும் Internet என்பதற்கு இணையம் என்றும் உருவாக்கப்பட்ட புதிய சொற்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் தமிழில் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களை பயன்படுத்தும்போது அடைப்புக்குறிக்குள் அதற்கு இணையான ஆங்கில சொற்களை அவசியம் தரவேண்டும்.

கலை இலக்கியமற்றும் அறிவியல் நூல்களை மொழி 
பெயர்ப்பவர்களைவிட மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவர்களின் பணி கடினமானது. ஏனெனில் இரண்டுக்கும் அதிக வேறுபாடு உண்டு. அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.   

தொடரும்  


16 கருத்துகள்:

  1. அழகாக விவரித்து செல்கின்றீர்கள் நண்பரே.

    அந்த வேறுபாடுகள் அறிந்திட தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
    2. அதைத்தான் ராகுல் காந்தி பேச்சை மொழி பெயர்த்த குரியன் அவருடைய முழிப்பில் காட்டினாரே.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! திரு குரியன் மொழிபெயர்க்கு(?) முன்னரே இங்கு திரு தங்கபாலு அதை சரியாக(!) செய்துவிட்டார்.

      நீக்கு
  2. மேலும் அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. மொழி பெயர்ப்பும் மொழியாக்கமும் வேறு வேறு என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! மொழிபெயர்ப்புக்கும்,மொழியாக்கத்திற்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. மொழிபெயர்ப்பு என்பது மொழி மாற்றம் செய்வது (Translation) இதற்கு கலைத்திறன் தேவையில்லை, ஆனால் மொழியாக்கம் (Transcreation) என்பது ஒரு கலை. மூலத்தின் தனித்தன்மையை (Whatness) உள்வாங்கி தன்வயப்படுத்தி வெளிப்படுத்துவதே மொழியாக்கம். ஆனால் ஒருவகையில் எல்லா மொழிபெயர்ப்பும் ஒரு வகையில் ஆக்கங்களே. ஏனெனில் ஆக்கங்கள் இல்லாத மொழிபெயர்ப்பு இல்லை எனலாம்,

      நீக்கு
  4. எனக்குத் தெரிந்த வரையில் ஆங்கில சொற்களுக்கு ஏற்பவான மொழியாக்கமாகத் தான் பலர் செய்கின்றனர். தமிழில் முற்றிலும் வேறு பட்ட சொல்லாய் -- அந்த ஆங்கிலச் சொல்லின் நிழலே படியாதவாறு -- பெயர்ப்பவர் வெகு குறைவே.

    உதாரணம். Columnist -- பத்தி எழுத்தாளர்
    Modern Literature -- நவீன இலக்கியம்
    Magical Realism -- மாய யதார்த்தம்
    surrealism -- (வம்பு ஏன் என்று) அபடியே தமிழில் எழுதிவிடுகின்றனர்.
    Post Modernism -- பின் நவீனத்துவம்

    -- இப்படியாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். ஏற்கனவே சொன்னதுபோல் மொழிபெயர்ப்பாளர்களில் பலர் ஆங்கில சொல்லுக்கு பொருள் தருவதுபோல்தான் மொழிபெயர்க்கிறார்கள். தமிழில் முற்றிலும் புதிதான சொல்லாக மூல ஆங்கிலச் சொல்லிலிருந்து மாறுபட்டு மொழிபெயர்ப்பவர்கள் குறைவுதான்.

      நீக்கு
  5. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிந்த சொல்லாயின் அதைப் புரிந்துகொள்வது கடினமாயிருக்காது. தமிழ்ப்படுத்துகிறேன் என்று புதிய சொல் நிறுவத்தொடங்கினாலது என்ன என்று புரிந்து கொள்ளாமல் மொத்தக்க கட்டுரையுமேளத்து விடும் அபாயமும் உண்டு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தாங்கள் கூறுவது சரிதான். பேருந்து, கணினி, இணையம் போன்ற எல்லோராலும் ஏற்றுக்கொண்ட சொற்களை பயன்படுத்தினால் குழப்பம் வர வாய்ப்பில்லை. தமிழில் இணையான சொற்கள் இல்லையென்றாலும் அல்லது இணையான சொற்கள் உருவாக்கப்பட்டு அவைகள் மக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லையென்றாலும் மூல சொல்லையே இந்த பதிவில் சொன்னதுபோல் எழுத்துப்பெயர்ப்பு (Transliteration) செய்யலாம். முயன்றால் முடியாததொன்றுமில்லை என்பது தெரிந்ததுதானே!

      நீக்கு
  6. அருமை. இன்னும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!

      நீக்கு
  7. அருமையான புரிதல்கள் ... நன்றி.!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலாக எனது வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே!

      நீக்கு