எங்களது பொள்ளாச்சி சந்திப்பு பற்றிய நண்பர் பாலுவின் விரிவான சுற்றறிக்கை கிடைத்த பிறகு, 30-08-2018 அன்று பொள்ளாச்சி செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை திடீரென ஏற்பட்டது.
எனது மைத்துனரின் மகளுக்கு திருமண உறுதி நாள் (Betrothal) நிகழ்ச்சி 31-08-2018 அன்று மயிலாடுதுறையில் நடத்த, திடீரென முடிவு செய்யப்பட்டதால் என்னால் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதை நண்பர்கள் பாலு மற்றும் மீனாட்சி சுந்தரத்திடமும் சொன்னேன்.
அவர்கள் இருவரும் எப்படியாவது நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டு வந்து கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்றனர்.
மயிலாடுதுறையில் மண உறுதி விழா மாலையில் நடக்க இருந்ததால் அது முடிய இரவு 9 மணி ஆகக்கூடும். அதற்குப் பிறகு புறப்பட்டால் பொள்ளாச்சிக்கு செப்டம்பர் 1 ஆம் நாள் காலையில் தான் போய்ச் சேர முடியும். முக்கியமான நிகிழ்ச்சிகள் 31-08-2018 அன்று மாலையில் இருந்ததால் மறுநாள் அங்கு செல்வது பயன் இல்லை என்பதால் பொள்ளாச்சி செல்லும் திட்டத்தைக் கைவிட்டேன். ஆனால் ஏனோ எங்களது பயணசீட்டை இரத்து செய்யவில்லை.
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்’ என்று சொல்வதுபோல் 31-08-2018 அன்று நடக்க இருந்த மண உறுதி விழா தள்ளி வைக்கப்பட்டதால் எங்களது பொள்ளாச்சி பயணம் உறுதியானது. ஆனால் எனது துணைவியாருக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் நான் மட்டும் பொள்ளாச்சிக்கு புறப்பட்டேன்.
30-08-2018 அன்று சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை விரைவு இரயில் புறப்படும் நேரம் காலை 6.10 மணி என்பதால் முதல் நாள் இரவே Call Taxi நிறுவனத்தை தொடர்பு கொண்டு காலை 4.30 மணிக்கு மகிழுந்தை அனுப்ப சொல்லியிருந்தேன்.
பயணிக்கும் இரயிலில் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவின் தரம் பற்றி தெரியும் ஆதலால் எனது துணைவியார் காலை 3,3௦ மணிக்கே எழுந்து காலை சிற்றுண்டிக்கு இட்லி சட்னியும், மதிய உணவிற்கு எலுமிச்சை மற்றும் தயிர் சாதங்களையும் தயார் செய்து கொடுத்துவிட்டார்.
சொன்ன நேரத்திற்கு வந்த மகிழுந்தில் ஏறி சென்ட்ரல் இரயில் நிலையம் அடைந்து நடைமேடையில் காத்திருந்து பயணிக்கும் வண்டி வந்ததும் ஏறி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.
காலை 6-10 க்கு புறப்படும் இரயில் மதியம் 1.55 க்குத்தான் கோவையை அடையும் என்பதால் 8 மணி நேரத்தை செலவிட கையோடு சில புத்தகங்களை எடுத்து சென்றிருந்தேன்.
பயணச்சீட்டு பரிசோதகர் வந்து சென்றபிறகு புத்தகத்தை படித்துக்கொண்டும் இடையிடையே வெளியே பார்த்துக்கொண்டும் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருந்தேன்.
இடையில் காலை 8 மணிக்கு சிற்றுண்டியையும் மதியம் 1 மணிக்கு மதிய உணவையும் உண்டு முடித்துவிட்டேன்.
இங்கு ஒன்றை நான் குறிப்பிடவேண்டும். உணவை குறிப்பிட்ட இடைவெளி விட்டு, குறித்த நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதால், 8-1-8 என்ற விதிமுறையை நானே ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். அதாவது சிற்றுண்டியை காலை 8 மணிக்கும் மதிய உணவை மதியம் 1 மணிக்கும் இரவு உணவை இரவு 8 மணிக்கும் சாப்பிடுவது என்பதே அது. பணிஓய்விற்குப் பின் இதை நான் கூடியவரை பின்பற்றுகிறேன்.
இரயில் திருப்பூர் நிலையத்தை 12.45 மணிக்கு அடைந்தபோது கோவையிலிருந்து நண்பர் திரு இந்திரஜித் தொடர்பு கொண்டு நான் எங்கிருக்கிறேன் என விசாரித்துவிட்டு, என்னை அழைத்து செல்ல கோவை சந்திப்புக்கு வந்துகொண்டு இருப்பதாக சொன்னார்.
கோவை சந்திப்பில் இட நெருக்கடி காரணமாக அவரது மகிழுந்தை நிறுத்த இடம் இருக்காது என்பதால் தான் வெளியே காத்திருப்பதாகவும், கோவை வந்ததும் வெளியே வருமாறும் கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னது போலவே இரயில் கோவை சந்திப்பை அடைந்ததும் வெளியே வந்தேன்.
தொடரும்
8-1-8 என்ற விதிமுறை அருமை ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குதொடர் விறுவிறுப்பாக செல்கிறது கோவை வந்தாகி விட்டது அடுத்தது என்ன ? ஆவலுடன் நானும்...
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! கோவையில் ஒரு நாள் தங்கிவிட்டு அடுத்த நாள் பொள்ளாச்சி சென்றேன். காத்திருப்பதற்கு நன்றி!
நீக்கு8-1-8 விதிமுறை நல்ல விஷயம்.
பதிலளிநீக்குபொள்ளாச்சி சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குநானும் 8-1-8தான் நீண்ட வருடங்களாகப் பின்பற்றுகிறேன். காலை மட்டும் 8 என்பது பணிச்சூழல் காரணமாக 9க்குள் முடியும்.
பதிலளிநீக்குசூழல்கள் ஒத்துவந்து, பொள்ளாச்சி பயணம் தொடங்கி விட்டது.... தொடர்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தாங்களும் 8-1-8 விதிமுறையை பின்பற்றுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்வதற்கும் நன்றி!
நீக்குமகிழுந்து?... காரணப்பெயரோ?
பதிலளிநீக்குசன்னனோர -- பலகணியோர
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மகிழுந்து என்பது காரணப்பெயர்தான். அதில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். அதனால்தான் இதை பிளஷர் (Pleasure) என்று முன்பு சொல்வதுண்டு, சன்னல் என்பதை பலக்கணி என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
நீக்கு8-1-8 -- நானும் பின்பற்ற முடியுமா என்று பார்க்கிறேன். முடிந்தால் தெரிவிக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த 8-1-8 விதிமுறையை நீங்கள் அவசியம் பின்பற்றுங்கள். இதன் பலனை நீங்களே உணர்வீர்கள்.
நீக்குஒரெ சீரான நேரத்தில் உணவு உட்கொள்ளுவது சிறப்பு
பதிலளிநீக்குவருகைக்கும், சீரான நேரத்தில் உணவு உட்கொள்வது சிறப்பு என எடுத்துக் கூறியமைக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!
நீக்கு8-1-8 என்ற விதிமுறை - இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குபொள்ளாச்சி பயணம் தொடர்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! 8-1-8 என்பது நானே ஏற்படுத்திக்கொண்ட விதிமுறை. வங்கியில் பணிபுரிந்தபோது மதியம் 2 மணிக்கு மேல் தான் சாப்பிடமுடியும் காலையில் 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு வங்கிக்கு சென்றால் 6 மணி நேரம் சென்றபிறகுதான் சாப்பிடமுடியும். அதுவரை காப்பி தேநீர் போன்றவைகளை சாப்பிட்டு இருக்கவேண்டியதுதான். பணி ஓய்வுக்குப்பின் நேரக் கட்டுப்பாடு ஏதும் இல்லாததால், குறிப்பிட்ட இடைவெளி விட்டு சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது என்பதால் இதைக் கடைபிடிக்கிறேன்.
நீக்கு8-1-8; பயணத்திலும் வீட்டு சாப்பாடு; ஏமாற்றம் ஏதும் இல்லாமல் தங்களுக்கு மட்டுமாவது, பொள்ளாச்சிக்குச் செல்ல பயண வாய்ப்பு கிடைக்கப்பெற்றது எல்லாமே சுவாரஸ்யமாக உள்ளன.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பயணத்தைவிட சந்திப்பு நிகழ்ச்சி வழ்க்கம்போல் சுவரஸ்யமாக இருந்தது. அது பற்றி பின்னர் எழுதுவேன்.
நீக்கு