திங்கள், 18 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 1

கீழே உள்ள படம் 1967 ல் கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டது ) தார்வாரில், தேசிய விதைக் கழகத்தில் பணி புரிந்தபோது வரைந்தது.

18-09-1967 அன்று வெளிவந்த ஒரு செய்தித்தாளில் வெளியான ஒரு இந்தி படத்தின் விளம்பரத்தைப் பார்த்து வரைந்தேன்.








அந்த விளம்பரத்தில் அந்த குழந்தை அழுதுகொண்டே நடப்பதுபோல் வெளியான அப்படம் ஏனோ என்னைக்கவர்ந்தது. உடனே அதை வரையவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், கையில் கிடைத்த தாளில், Ball Point பேனா கொண்டு வரைந்தேன்.

இந்த படம் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்தேன்.

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 14 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள்

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி எனக்கு ஏற்பட்டது எனத்தெரியவில்லை.அரியலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்காக ஒரு ஓவிய போட்டி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமலே அதில் கலந்துகொண்டேன்.

எங்களை ஒரு இயற்கை காட்சியை வரையச்சொன்னார்கள். ஒரு ஆறும், அதில்
ஒரு படகும், அருகில் ஒரு தென்னை மரமும் , மற்றும் எதிர் கரையில் ஒரு மலையும் உள்ளது போல் படம் வரைந்தேன். பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் பலபேருக்கு நடுவில் தரையில் அமர்ந்து படம்
போட்ட ஒரு இனிய அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அரியலூர் மற்றும் பெண்ணாடம் பள்ளிகளில் ஓவிய
வகுப்பு இல்லாததால் என்னால் ஓவியம் வரையும் முயற்சியை தொடர முடியவில்லை. ஆனால் விருத்தாசலம் பள்ளியில்எங்களுக்கு ஓவிய வகுப்பு இருந்தது. எங்கள் ஓவிய ஆசிரியர் திரு ஜெயராமன் அவர்கள் மூன்று வருடங்களும் சொல்லிக்கொடுத்த முறை எனக்கு ஓவியம் வரைவதில் ஒரு விருப்பத்தை உண்டாக்கியது.

அதுவும் அவர் கரும்பலகையில் பூக்களின் Design ஐ
பாதியாக வரைந்து. அதைப்பார்த்து எங்களது ஓவிய
நோட்டு புத்தகத்தில் முழு Design யும் வரையச்சொல்லி
பழக்கியது, பின்னால் ஒரு படத்தைப்பார்த்து Free Hand
முறையில் படம் வரைய உதவியது.

பத்தாம் வகுப்பில்'தண்டலை மயில்கள் ஆட" என்ற
கம்ப இராமாயண பாடலுக்கு படம் வரைந்து பார்த்ததும்,
நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில், இளம் அறிவியல்
பட்ட படிப்பில் சேர்ந்தபோது தான்ஓவியம் வரையத்தெரிவது எவ்வளவு
முக்கியம் எனத் தெரிந்துகொண்டேன்.

காரணம் விலங்கியல், தாவரவியல்,பூச்சிஇயல் போன்ற பாடங்களில் செய்முறை வகுப்புகளில் குறிப்பிட்ட
செடியையோ அல்லது விலங்கு அல்லது பூச்சியை படம்
வரைந்தோ தான் விளக்குவார்கள்.

அதோடல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும்
தாவரகுடும்பத்தில்ஒவ்வோவோன்றிலிருந்தும் ஒரு செடியை பூக்களோடு கொடுத்து அதைப்பார்த்துவரையச்சொல்வார்கள். எனவே அவைகளை எங்களது Record Note களில்வரைந்து ஆசிரியர்களிடம் காட்டி கையொப்பம் பெறவேண்டும்.அப்படி பெற்றால் தான் செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் பெறமுடியும்.

எனக்கு பள்ளியில் கற்ற அனுபவத்தால் எந்த ஒரு
Specimen யும் பார்த்துவரைவது சுலபமாக இருந்தது. நான் சுலபமாக படம் போடுவதை பார்த்தஎனது வகுப்பு தோழர்கள் அவர்களது Record லும் என்னை வரையச்சொல்லி கேட்டபோது,தயங்காமல் வரைந்துகொடுத்தேன். அது பின்னால் தேர்வில் அந்த படங்களை சுலபமாக வரைய எனக்கு உதவியது.

எங்களது துறையின் ஆண்டுமலருக்கு
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களது உருவத்தை
Indian Ink ல் நான் வரைந்து தந்ததும் அந்த படம் ஆண்டு
மலரில் வெளியானதும் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

கல்லூரியை விட்டு வந்தபிறகு ஓவியம் வரைவதை
மறந்தேவிட்டேன். 1967 ல் கர்நாடகாவில் உள்ள தார்வார்
என்ற ஊரில் பணி செய்தபோது,தனிமை என்னை
வாட்டியபோது அதை மறக்க ஓவியம் வரைந்தாலென்ன
என யோசித்து வரையத்தொடங்கினேன்.

அப்படி வரைந்த சில படங்களை இந்த பதிவில் வெளியிட இருக்கிறேன்.

அவைகள் அடுத்த பதிவில் ......

புதன், 6 அக்டோபர், 2010

நினைவோட்டம் 30

எந்த ஒரு நிகழ்வையும் நினைவில் இருத்த, அதோடு தொடர்புடைய நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை நினைவில் வைத்தால் அந்த நிகழ்வை எப்போதும் மறக்காமல் இருக்கமுடியும் என்பதே எங்கள் ஆசான் திரு M .R .G எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது.

குறு நில மன்னர்கள் தத்து எடுப்பதை தடுக்க கொண்டுவந்த திட்டம் யாரால்
கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் இருத்த, 'தத்து எடுப்பது எப்போது நடைபெறும்?' என எங்களிடம் கேட்டார்.

'நாங்கள் குழந்தை இல்லாதபோது' என சொன்னபோது 'குழந்தை இல்லாத வீடு எப்படி இருக்கும்?' எனக்கேட்டு அவரே சொன்னார். "Dull ஆக இருக்கும். அதாவது அந்த House Dull ஆக இருக்கும். இதை நீங்கள் நினைவில் வைத்தால் அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் Dalhousie பிரபு என சுலபமாக சொல்லிவிடலாம்" என்று.

அது போல மன்னர் அக்பர் தன்னுடைய குதிரைப்படையில் உள்ள குதிரைகளை யாரும் களவாடி செல்லாமல் இருக்க, கால் நடை மருத்துவர்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை பரிசோதித்தபின் அவைகளுக்கு முத்திரை இடுவதுபோல், அந்த குதிரைகளின் உடலின்மேல் எண்ணிக்கை முத்திரை (Tattoo) வைத்தார் என சொன்னது இன்றும் நினைவுக்கு வருகிறது.

அப்போதெல்லாம் S.S.L.C தேர்வில், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி படிப்பான S.S.L.C வரை சொல்லிக்கொடுத்த சமூகவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்பார்கள் என்பதால் ஒன்பதாம் வகுப்பில் படித்ததையும் மறக்காமல் இருந்து தேர்வு எழுதவேண்டும்.

எனவேதான் எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையால் எங்களுக்கு தேர்வு எழுத எந்த கஷ்டமும் இருந்தது இல்லை.

அவர் சொல்லிக்கொடுத்தது 1956 ல். ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நினைவில் இருக்கிறது என்றால் அவர் சொல்லிகொடுத்த முறைதான்.

அவரது பயிற்சி எவ்வாறு பிறகு நான் வங்கியில் பணிபுரிந்தபோது உதவியது என்பதை பின்னால் எழுதுகிறேன்.

என்னால் இன்னும் மறக்க முடியாத ஆசிரியர்களில் திரு M.R.G அவர்களும் ஒருவர்.





நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

சனி, 25 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 29

அப்போதெல்லாம் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியராக இருப்பார்கள்.
அவர்கள் ஆங்கிலம் அல்லாமல் வேறொரு பாடமும் எடுப்பார்கள்.

அப்படி எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்த
M.R.G என அன்புடன் அழைக்கப்பட்ட திரு.M.R.கோவிந்தசாமி அவர்கள்,
ஆங்கிலத்தோடு சமூகவியல் (Social Studies ) பாடமும் நடத்தினார்.

அவருடைய வகுப்பு என்றாலே எங்களுக்கு சந்தோஷம் தான். ஆங்கில படத்தையும், சமூக பாடத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நகைச்சுவையோடும்,உவமையோடும் அவர் நடத்தியதால்,அவரது வகுப்புகளை எவரும் தவற விட்டதில்லை.

சமூக இயல் பாட வகுப்பு என்றால், அநேகருக்கு நான் முன்பே சொன்னதுபோல் அது எட்டிக்காய்தான்.
அந்த பாடத்தில் வரும் வரலாற்று சம்பவங்களையும் அது நடைபெற்ற வருடங்களையும், தேதிகளையும் நினைவில்
இருத்தி தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்ததுதான் காரணம்.

எட்டாம் வகுப்பில் எப்படி எங்கள் ஆசிரியர் திரு E .C. நாத் அவர்கள் சமூகவியல் பாடத்தை சுவைபட நடத்தி விரும்பச்செய்தாரோ,அது போல
திரு M.R.G அவர்கள் சிரிக்க சிரிக்க பேசி அந்த பாடத்தின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கினார் என்பதே நிஜம்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இருந்த கவர்னர் ஜெனெரல்கள் பெயர்களையும்,அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தம் அல்லது சட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டபோது,
திரு.M.R.G அவர்கள் அவைகளை நினைவில் வைக்க மிக
சுலபமான வழிகளை சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அப்போது இருந்த சமஸ்தானங்களின்(Princely states)
குறுநில மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்து
இறந்தால்,அவர்களுக்கு பின் அந்த சமஸ்தானங்களை
ஆள குடி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு
முடிசூட்டுவது வழக்கமாக இருந்தது.

இதை ஒழிப்பதற்காக, அப்போது இருந்த கவர்னர் ஜெனெரல் ஒருவர் அந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி,அவைகளை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர ஏற்படுத்தியதுதான் Doctrine of lapse
எனப்படும் தத்து எடுப்பதை தடுக்கும் திட்டம்.

அந்த திட்டத்தை கொண்டுவந்தது யார் என்பதை நினைவில் இருத்த எங்கள் M.R.G அவர்கள் சொன்னது ....?

புதன், 8 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 28

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டவை அநேகம். அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வணங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.

எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.

அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.

ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.

அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.

(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)

எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.

இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.

'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 27

ஒரு வழியாக எனது அண்ணனுக்கு விருத்தாசலம்
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.

விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.

விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.

வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.

சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.

நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.

காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),

ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),

ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),

ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),

ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),

ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),

அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.

சாப்பாடு 50 பைசா தான்.

(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)



நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 26

நான் விருத்தாசலத்தில் மூன்று ஆண்டுகள் அதாவது 1957 ஜூன் முதல் 1960 பிப்ரவரி வரை படித்தேன்.

(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)

நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.

என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!

இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.

திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.

இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!

இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.

இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.

இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.

இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி