புதன், 25 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 8


தலைஞாயிறும் திரும்பியதும் ஆணையர் என்னை தனது அறைக்கு வரச்சொன்னார்.உள்ளே சென்றதும்,இறுதியாக என்ன முடிவு செய்து
இருக்கிறீர்கள்?’ என்றார்.

நான் உடனே, ‘சார். நான் சொன்னபடி Fidelity Bond தருகிறேன் ஆனால். நிச்சயம் பணத்தைக் கட்டுவதாக இல்லை. என்றேன். சிறிது நேரம்
சும்மா இருந்துவிட்டு, ‘நீங்கள் போகலாம்.என்றார். வெளியே வந்ததும்
நண்பர்கள், உள்ளே என்ன நடந்தது?’என விசாரித்தார்கள்.ஒன்றுமில்லை
என சொல்லிவிட்டு இருக்கைக்கு திரும்பிவிட்டேன்.

நான் அவ்வாறு ஆணையரிடம் துணிவாகப் பேசியதற்கு பின்னணி
உண்டு. சென்னையில் இருந்த என் அண்ணன்
டாக்டர் வே.ஞானப்பிரகாசம் அவர்களிடம், இந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தபோது, அவர்நீ பணம் கட்டவேண்டாம். Madras Financial 
Act படி Bond கொடுத்தால்போதும். மேலும் பிணைக்கான பணத்தை, ஊராட்சி ஒன்றிய அளவில்உனது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யமுடியாது. அப்படி ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்கு
உடனே தந்தி கொடு.நான் இங்கு உள்ள வேளாண்துறை நண்பர்கள்
மூலம் ஆவன செய்கிறேன். என எழுதியிருந்தார். அந்த கடிதம்
கொடுத்த தெம்பில்தான் நான் அவ்வாறு பேசினேன்.

நல்ல வேளையாக அந்த ஆணையருக்கு சங்கடம் ஏதும் தராமல் அந்த பணியிலிருந்தே நான் அடுத்த மாதமே விலகிவிட்டேன்.

நான் பணியை விட்டு வந்தபிறகு, அந்த ஆணையர் என் நண்பர் வீராசாமியிடம் சொன்னாராம். நல்ல வேளை நெளிவு சுளிவு தெரியாத உங்கள் நண்பர் பணியை விட்டு போய்விட்டார். இருந்திருந்தால் எல்லோருக்கும் தொல்லைதான். என்று

நான் அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரிந்தது இரண்டரை
மாதங்களுக்கும் குறைவுதான்.அந்த நாட்களில் பலமுறை
ஆணையரோடு வெவ்வேறு விஷயங்களில் வாக்குவாதம்
(என் பக்கம் நியாயம்இருந்ததால்) செய்திருக்கிறேன்.அதன்
காரணமாகவும் அவர்அவ்வாறு  சொல்லியிருக்கக்கூடும்.

அவருக்கும் எனக்கும் நடந்த விவாதம் பற்றி பின்னர்
நினைவோட்டத்தில் எழுத இருக்கிறேன்.

நான் பணியை விட்டு வர நினைத்தன் முதல் காரணம் அங்கு
சுமுகமாக பணிபுரியும் சூழ்நிலை இல்லாததும்மேலதிகாரிகளின்
அராஜக அதிகாரமும் தான்.

என்னைப்போல் கல்லூரியில் படித்து முடித்து,புதிதாக பணியில்
சேரும் வேளாண் பட்டதாரிகள் தாங்கள் பணிபுரியும் இடத்தில்
வேளாண் பெருமக்களுக்கு உதவவேண்டும் என்ற
எண்ணத்தோடுதான் பணியில் சேருவார்கள். ஆனால் அங்குள்ள
சூழ்நிலை அவர்களை பணி செய்ய விடாது.

மேலதிகாரிகளோடு ஒத்துப்போக முடியாதவர்கள் என்னைப்போல் வெளியே வந்து விடுவார்கள். ஊரோடு ஒத்து வாழ்என்ற பழமொழிக்கேற்ப, அநேகம் பேர் வெறும் அறிக்கை தரும்
அலுவலர்களாக மாறிவிடுவார்கள். அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. மேலதிகாரிகள் சொல்படி நடக்காவிட்டால், அவர்களுக்கு
தினம் நரகம் தான்.

முக்கால் வாசி மேலதிகாரிகள் தங்கள் கீழே உள்ள அலுவலர்களை தொந்தரவு (Harassment) செய்ததன் காரணம் அவர்கள் பணியில் புதிதாய் சேர்ந்தபோது அவர்களை, அவர்களது மேலதிகாரிகள் சரியாக
நடத்தாததுதான். நாம் கஷ்டப்பட்டோமல்லவா, இவர்களும் கஷ்டப்படட்டுமே என்ற நல்ல எண்ணம் தான்.

முதலில் பணியில் சேரும்போது, தங்கள் Boss கள் தங்களை கஷ்டப்படுத்தும்போது, நாம் Boss ஆனால் இவ்வாறு செய்யக்கூடாது
என நினைப்பார்கள்.ஆனால் பதவி உயர்வு பெற்றதும் அதை
மறந்து விடுவார்கள்.

என்னைக் கேட்டால் இதுவும் இப்போது கல்லூரிகளில் மூத்த மாணவர்கள், புதிதாய் சேரும் மாணவர்களை பகடி(Ragging) செய்வது போலத்தான்!

இன்னும் சில அதிகாரிகள் தங்கள் கீழே உள்ள அலுவலர்கள் தங்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். வேளாண் துறையில் பண்ணை மேலாளர்களாக (Farm Manager) இருப்பவர்களுக்குத்தான் இந்த வகைத் தொந்தரவு அதிகம் இருக்கும்.

வேளாண் விரிவாக்க அலுவலர்களாக பணியில் சேருபவர்கள் கட்டாயம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அரசின் பண்ணையில்
(State Agricultural Farm) மேலாளராக பணிபுரிய வேண்டும். அப்போது பண்ணைக்கு ஆய்வுக்கு(?) வரும் மாவட்ட வேளாண் அலுவலருக்கு
(DAO க்கு) இராஜ உபசாரம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
இந்த மாதிரி ஆய்வுக்கும் வரும் அதிகாரிகளின் உபசார எதிர்பார்ப்பு
மற்ற துறைகளிலும் இருந்தது என எனக்குத் தெரியும்.

வேளாண் துறையில் பணிபுரிந்த பண்ணை மேலாளர்களுக்கு
ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி அடுத்த பதிவில்...


தொடரும்

12 கருத்துகள்:

  1. இதுபோன்ற அனுபவங்களை எதிர் கொண்டவர்கள் தாங்கள் Boss ஆனால் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் சீட்டுக்கு வந்ததும் மாறி விடுவார்கள். -நூறு சதவீதம் உண்மை. நான் இப்படி ஒருவரைக் கண்டு வேதனையையும் சிரிப்பையும் அனுபவித்ததுண்டு. தொடரும் உங்கள் அனுபவங்களைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய முதல் மேலதிகாரியும் இவ்வாறான போக்குக் கொண்டவர்தான். என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலையை விட முடியவில்லை. ஆனால் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். அந்தப் பிரிவு அந்த ஆபீசரின் பிரிவிலிருந்து வேறுபட்டது.

    முதுகலைப் படிப்பு முடிந்ததும் அந்தப் பிரிவில் (மண்வளம்) உள்ளூரிலேயே வேலை கிடைத்தது. பிறகு முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகள் பெற்று நல்ல நிலையில் பணி ஓய்வு பெற்றேன்.

    ஆக கஷ்டங்களினாலும் நன்மை உண்டு.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! உண்மைதான். கஷ்டங்களிலும் நன்மை உண்டு. நீங்களும், நானும் உயர் பதவிபெற காரணமாக இருந்த அந்த மேலதிகாரிகளுக்கு, இப்போது நன்றி சொல்வோம்!

    பதிலளிநீக்கு
  5. பணியில் விலகியதும் தொல்லையிலிருந்து தப்பி விட்டீர்கள். நன்று தொடர்வேன் பணி தொடர வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" கொள்கையில் பற்று கொண்டவர்களாகவே உள்ளார்கள் என்பது உண்மை .. விதிவிலக்கு வெகு சிலரே . அதேபோல் வெகு சிலரே நவீன நக்கீரர்களை ( உங்களை போல் ) சந்தித்து இருப்பார்கள் .நியாயமாக உண்மையாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் படும் பாட்டினை இன்றும் காண்கிறோம்.. பல முறை இட மாற்றம் செய்யபடுவதை பார்க்கிறோமே ..
    ஆணவமாக நடந்து கொள்ளும் அரசியல் வாதிகளை பல முறை நாம் கண்டுள்ளோம் ... இந்த நிலைமை என்று மாறுமோ ? வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! ‘காலம் ஒரு நாள் மாறும் நாம் கவலைகள் யாவும் தீரும்.’ என்ற பாடல்தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. நிச்சயம் இந்த நடைமுறை மாறும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  9. //நல்ல வேளையாக அந்த ஆணையருக்கு சங்கடம் ஏதும் தராமல் அந்த பணியிலிருந்தே நான் அடுத்த மாதமே விலகிவிட்டேன்.//

    அடாடா .... உங்களுக்கும் அவர்களுக்கும் விடுதலையா !

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //பண்ணைக்கு ஆய்வுக்கு(?) வரும் மாவட்ட வேளாண் அலுவலருக்கு (DAO க்கு) இராஜ உபசாரம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த மாதிரி ஆய்வுக்கும் வரும் அதிகாரிகளின் உபசார எதிர்பார்ப்பு மற்ற துறைகளிலும் இருந்தது என எனக்குத் தெரியும்.//

    திரு. ஹரிஜி என்ற உபந்யாசகர் சொன்ன பத்ராசலம் ராமதாஸர் கதை ஒன்றினை சமீபத்தில் கேட்டேன். கதை சொல்லும் உபந்யாசகரான அவருக்கு இப்போது 65 வயதாகி விட்டதாம். அந்தக் காலத்தில் அவர் சின்னப் பையானாக இருந்தபோது கிராமத்திற்கு தாசில்தார் வருகிறார் என்றால், அங்குள்ள கணக்குப்பிள்ளையும், பட்டாமணியாரும் படாதபாடு படுவார்களாம்.

    காளை மாட்டு வண்டி வைத்து கூட்டி வருவார்களாம். ஒரு நாற்காலி போட்டு உட்கார வைப்பார்களாம். ஊரெல்லாம் தோரணம் கட்டி இருப்பார்களாம். சோடா, காஃபி, டீ எல்லாம் வராத காலமாம் அது. அதனால் இளநீர் சீவி சீவிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம். கூட வருபவர்களும் குடிப்பார்களாம். ஒரு ஆளைப்போட்டு, தாசில்தாருக்கு விசிறி விடுவார்களாம். இப்படியெல்லாம் ராஜ உபசாரம் செய்வது வழக்கமாம்.

    அன்று ஆரம்பித்த இதுபோன்ற வழக்கங்கள் இன்றும் வேறு விதமாக ஆடம்பரமாக .... குட்டி, புட்டி, பொட்டி என எவ்வழியிலாவது திருப்திப் படுத்தி அவர்களைக் குளிப்பாட்டி அனுப்புதல் என்ற முறையில் நன்கு நாகரீகமாக வளர்ந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மேற்படி பின்னூட்டத்தில், முதல் பாராவில் நான்காவது வரியின் முதல் வார்த்தையில், ஓர் சின்ன எழுத்துப்பிழை ஆகியுள்ளது ....

      சின்னப் பையானாக = சின்னப் பையனாக

      நீக்கு
    2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அந்த காலத்தில் தாசில்தாருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் அப்போது மாவட்டங்கள் பெரியதாக இருந்ததால் மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லா ஊர்களுக்கும் செல்ல இயலாது. எனவே சிற்றூர்களைப் பொருத்தவரையில் தாசில்தார் தான் பெரிய ஆபீசர்! அதனால் பழமொழி கூட ‘ஆசை இருக்கு தாசில் பண்ண’ என்று ஆரம்பிக்கிறது போலும். வருவாய்த்துறையில் ஆரம்பித்த இந்தக் ‘குளிப்பாட்டும்’ நிகழ்ச்சி எல்லா துறைக்கும் பரவிவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்று.

      நீக்கு