செவ்வாய், 25 டிசம்பர், 2012

தோற்றத்தை வைத்து ஒருவரை எள்ளி நகையாடலாமா?



நம்மில் சிலர் ஒல்லியாய் இருப்பவர்களைப் பார்த்து, 
கொத்தவரைக்காய் உடம்பு என்று கேலியாக சொல்வதுண்டு. 
ஆனால் கொத்தவரைக்காயின் (கொத்தவரங்காயின்) அருமை 
பெருமை பற்றி தெரிந்தால் நாம் அவ்வாறு சொல்லமாட்டோம்.





Fabaceae  என்ற தாவர குடும்பத்தைச்சேர்ந்த Cyamopsis tetragonoloba என்ற 
தாவரப் பெயர் (Botanical Name) கொண்ட கொத்தவரைக்காய், ஒரு பயறுவகை (Legume) தாவரம். இதை இந்தியில் பசுவிற்கான 
தீவனம் என்ற பொருளில் குவார் (Guar) என்பார்கள்.

இந்தியாவில் இது வளர்வதற்கான தட்பவெட்ப நிலை 
காரணமாக இது அதிகமாக இராஜஸ்தான் மாநிலத்தில் 
பயிரிடப்படுகிறது என்பதும் உலகில் பயிரிடப்படும் 
கொத்தவரைக்காய் பயிர்களில் 80 சதம் 
இராஜஸ்தானில் பயிரிடப்படுகின்றன என்பது 
வியப்பூட்டும் செய்தி. 
 
கொத்தவரைக்காயைப் பற்றி நாம் 
வேண்டுமானால் சாதாரணமாக   
நினைக்கலாம். காரணம் நம்மைப் 
பொறுத்தவரையில் கொத்தவரைக்காய் 
என்பது சாம்பாருக்கு உபயோகிப்பதற்கும், 
உசிலி செய்வதற்கும், பொரியல் 
செய்வதற்கும், வத்தல் போடுவதற்கும் தான் 
இலாயக்கான காய்கறி வகை என நினைத்துக் 
கொண்டு இருப்பதால்.


ஆரம்பத்தில் இராஜஸ்தானில் இதை கால்நடைகளுக்கு 
தீவனமாகத்தான் உபயோகித்து வந்தனர். பின்னால் இதற்கு 
ஏற்பட்ட கிராக்கி காரணமாக இதனுடைய மதிப்பு எங்கோ 
போய்விட்டது.  

இன்றைய நிலையில் இராஜஸ்தானில் உள்ள வேளாண் 
பெருங்குடி மக்களுக்கு இது வாழ்வை உயர்த்த வந்துள்ள 
பணப்பயிர் (Cash Crop) என்று சொல்லலாம்.




கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm  எனப்படுகிற
முளைசூழ்தசையில் கிடைக்கும் பிசின் (Gum) ஐஸ் கிரீம்
செய்வதற்கும், தக்காளிசுவைச்சாறுக்கு (Ketchup) 
பிசுபிசுப்பை (Gloopiness) கொடுப்பதற்கும் பாலாடைக்கட்டியை 
(Cheese) நிலைப்படுத்தவும், இறைச்சியையும் பதப்படுத்தவும்,
காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும்  பற்பசை தயாரிக்கவும், உபயோகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறதாம்.

                                                     கொத்தவரைக்காய் பிசின்




சமீபகாலமாக இதன் பிசின் Shale எனப்படும் நிலத்தடியில் 
உள்ள மென் களிக்கல்லிலிருந்து எண்ணையையும் 
எரி வாயுவையும் Fracking என்கிற Hydraulic fracturing மூலம் 
எடுக்க உதவுகிறது என்பது மற்றொரு செய்தி. 

களிக்கல்லிலிருந்து, எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க துரப்பணம் இடும்போது இந்த பிசின்களை 
உபயோகிப்பதால் கருவிகளின் பாகுநிலை (Viscosity)யை 
அதிகரிப்பதால்,அவைகள் களிகல்லை விரிவாக்கி 
அதிலிருந்து அதிக  எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க உதவுகிறதாம். மேலும் உராய்வை தடுக்க 
உதவுவதால் எரிபொருள் மிச்சமாகிறதாம்   

இதன் காரணமாக பல கோடி அமெரிக்க டாலர்களை 
ஈட்டி தரும் Shale Energy நிறுவனங்கள் இராஜஸ்தானில் 
பயிராகும் கொத்தவரைக்காய்களின் விதைகளுக்கு 
அதிக விலை கொடுத்து (அதாவது ஒரு கிலோ 
விதைக்கு 5.5 அமெரிக்க டாலர்கள் கொடுத்தவர்கள் 
தற்போது 25 அமெரிக்க டாலர்கள் கொடுத்து) வாங்கி 
செல்கின்றன. 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 33,800 மெட்ரிக் டன் கொத்தவரைக்காய் பிசின்களை அவைகள் இந்தியாவில் வாங்கியிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு அந்த 
நிறுவனங்களுக்கு தேவையான பிசின்கள் மட்டும் 
3 இலட்சம் டன்களாம். 

இந்த பயிருக்கு ஏற்பட்டுள்ள இந்த மவுசு காரணமாக 
இராஜஸ்தான் மாநில விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் 
உயர்ந்துவிட்டது என்பதும் அவர்களில் சிலர் தங்கம் 
வாங்க வெளி நாடு சென்று வரும் அளவிற்கு பணம் 
ஈட்டியிருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படுத்தும் 
செய்திகள். அதனால்தான் அவர்கள் கொத்தவரைக்காய் 
பயிரை கருப்புத் தங்கம் என்று செல்லமாக 
அழைக்கிறார்கள். 

விவசாயிகள் கொத்தவரைக்காய் விதைகளின் விலை 
ஏற்றத்தை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் 
அதை வாங்கும் நிறுவனங்கள் இவைகளுக்கு பதில் 
மாற்றாக வேறு ஒன்றை தேடும் ஆராய்ச்சியில் 
உள்ளனராம். எது எப்படியோ அப்படியே விலை 
குறைந்தாலும் அதுவும் விவசாயிகளுக்கு வழக்கமாக 
கிடைக்கும் வருவாயை விட அதிகமாகத்தான் இருக்கும்.

எனவே இனி ஒல்லியானவர்களைப் பார்த்தால் 
கொத்தவரைக்காய் போல் இருக்கிறார்கள் என 
சொல்லாதீர்கள். ஏனெனில் எந்த புற்றில் எந்த 
பாம்பு இருக்குமோ?’

பி.கு உருவத்தை வைத்து ஒருவரை எடை போடுவது 
பற்றி  எனக்குப் பிடித்த பாடல்கள் 5 என்ற பதிவில் 
ஏற்கனவே வேறொரு பொருளில் எழுதியிருக்கிறேன்.   

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நாள் நல் வாழ்த்துக்கள்!



படங்கள் தந்த கூகிளார்க்கு நன்றி.

22 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி.

    இருந்த போதிலும் மனிதர்கள் பட்டினியால் சாகும் இதே இந்திய நாட்டில் விளையும் இது போன்ற வகைகளை ப்ணம் கொழிப்ப்தற்காக் அந்நிய நாடுகளுக்கு ஏற்றும்தி செய்வது என்பது முத்ல் தவறு. பூமியிலிருந்து கச்சா எண்ணை எடுக்க இதை பயண் படுத்துவது இதை விட மாபெரும் தவறு.

    பணம் தரும் போதை ஆடம்பரம் ஆணவம் திமிர் அக்ங்காரத்தின் முன் மனிதத்திற்கும் இயற்கைக்கும் மதிப்பு மரியாதைகள் ம்றைந்ந்து போனது ஆபத்தானதே.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு மாசிலாமணி அவர்களே! நானும் பணப் பயிர்களை ஏற்றுமதி செய்வதை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உணவுப் பயிர்களுக்கு, அதை உண்டாக்கித்தரும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க இந்த அரசு ஏற்பாடு செய்யாதவரை, இடைத்தரகர்கள் கொழிக்கும்வரை, விவசாயிகள் இவ்வாறு பணம் தரும் பயிர்களுக்கு மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்.அரசு தான் தலையிட்டு நெல்லுக்கும் கோதுமைக்கும் நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

      நீக்கு
  2. வியப்பூட்டும் அருமையான தகவல் பகிர்வுகள்...

    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!உங்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. கொத்தவரங்காய்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே. இனி கொத்தவரங்காய் சாப்பிடும்போது உங்களை நினைக்காமல் சாப்பிட முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  4. நானும் தங்கள் பதிவைப் படித்துப் முனைவர் பழனி.கந்தசாமி அவர்களைப் போலவே வியந்து போனேன் அறிய வேண்டிய அரிய தகவல்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  5. அருமையான கருத்தோடு கொத்தவரைக்காய் பற்றியும் பல தகவல்களை அறிந்துக்கொள்ள துணைப்புரிந்துள்ள தங்களது பதிவுக்கு மிக்க நன்றி.தொடருங்கள்/
    http://kumaran-filmthoughts.blogspot.com/2012/12/hugo-2011_25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தவ முருகன் அவர்களே!

      நீக்கு
    2. மன்னிக்கவும். முருகனையே நினைத்துக்கொண்டு இருந்ததால், தங்கள் பெயரை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் திரு தவ குமரன் அவர்களே!இருப்பினும் முருகனின் மறு பெயர் குமரன் தானே!

      நீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேசியம் திவ்யா மோகன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. ஆச்சிரியமுட்டும் அருமையான பயனுள்ள தகவல் பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மதுரை தமிழன் அவர்களே!

      நீக்கு
  8. கொத்தவரைக்காயில் இவ்வளவு இருக்கா?காசிக்குப் போனவர்கள் விட்டு விடும் காய் கொத்தவரைக்காய்.நான் சாப்பிட்டு வருடக்கணக்காச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்பிலும், நமக்கு தெரியாத செய்திகள் அநேகம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

      நீக்கு
  9. //கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm எனப்படுகிற
    முளைசூழ்தசையில் கிடைக்கும் பிசின் (Gum) ஐஸ் கிரீம்
    செய்வதற்கும், தக்காளிசுவைச்சாறுக்கு (Ketchup)
    பிசுபிசுப்பை (Gloopiness) கொடுப்பதற்கும் பாலாடைக்கட்டியை
    (Cheese) நிலைப்படுத்தவும், இறைச்சியையும் பதப்படுத்தவும்,
    காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும் பற்பசை தயாரிக்கவும், உபயோகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. //
    கொத்தவரங்காய் (கொத்தவரைக்காய்) பற்றிய இவ்வளவு தகவல்களையும், இன்றுதான் முதன்முதல் உங்கள் பதிவின் முலம் தெரிந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  10. நல்ல பகிர்வு. பலவும் அறிந்துகோண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!

      நீக்கு
  11. மிகவும் அருமையான பதிவு.... நன்றி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே!

      நீக்கு