ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 30

அந்த கிளையில் பணியில் நான் சேர்ந்த முதல் நாளன்று 
என்னை வந்து சந்தித்த அந்த வாடிக்கையாளர், ஏற்றுமதி 
செய்வதற்காக வங்கியில் இருவித கடன் வசதிகளைப் 
பெற்றிருந்தார்.

மூலப் பொருட்களை (Raw Materials) வாங்க PCL 
(Packing Credit Limit) எனப்படும் கடன் வசதியையும், 
ஏற்றுமதியாளர்கள்  தயாரிப்புகளை ஏற்றுமதி 
செய்ததற்கான ஆவணங்களின் மேல் தரப்படும் 
கடன் வசதியான  Bills Limit டும் தான் அவைகள்.

(ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து   
நடத்த வங்கிகள் இந்த மாதிரி இரு கடன் வசதிகளை 
அளிப்பது வாடிக்கை. மூலப்பொருட்கள் வாங்கி 
தயாரிக்க உதவும் PCL எனப்படும் கடன் வசதிமூலம் 
பொருட்களை வாங்கி தயாரிப்பார்கள்.

பின்பு அவைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு 
செய்துவிட்டு, அப்படி அனுப்பியதற்கான சான்றிதழ் 
ஆவணங்களை வங்கியில் கொடுத்தால் வங்கி 
Bills Limit வசதியில் பற்று (Debit) செய்து, (இதை 
வங்கியின் மொழிப்பாணியில் Negotiate என்பார்கள்)  
PCL கணக்கை முடித்து பாக்கி உள்ள பணத்தை 
வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்.

இதன் மூலம் அந்த வாடிக்கையாளர் திரும்பவும் 
PCL வசதி மூலம் மூலப்பொருட்களை வாங்கி 
தொழிலை தொடர்ந்து நடத்த ஏதுவாக இருக்கும்.   
வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததும் Bills Limit 
வசதியில் வரவு வைக்கப்படும்.)

நான் அங்கு சென்று பணியில் சேர்ந்த சமயம், 
அவரது ஏற்றுமதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு 
பாணியில் சொன்னால் நல்லாத்தான் போய்கிட்டு 
இருந்தது.ஆனால் என்ன நடந்தது எனத் 
தெரியவில்லை.திடீரென அவரது வணிகத்தில் 
சுணக்கம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் பகல் 12 மணிக்கு 
அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 
அதை எடுத்து பேசியபோது, அவர் சொன்னார்.  
சார், இன்று ஒரு அனுப்புச் சரக்கு (Consignment)   
ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்து Bill of Lading யும் 
பெற்றுவிட்டோம்.

ஆனால் கொச்சியில் GR Form இல் கையொப்பமிடும் 
அலுவலர் வெளியே சென்றிருக்கிறார். அவர்  
12.30 மணிக்கு மேல்தான் வருவாராம். அவரிடம் 
கையொப்பம் பெறுவதற்காக எனது ஆள் அங்கு 
காத்துக்கொண்டு இருக்கிறார்.அவரிடம் கையொப்பம் 
வாங்கிக்கொண்டு, மதியம் 1 மணிக்கு 
எர்ணாகுளத்திலிருந்து கிளம்பும் இரயிலில் 
கிளம்பினால், இங்கு 2 மணிக்கு மேல்தான் 
வர முடியும். (அவரது தயாரிப்புகள் அப்போது 
கொச்சி துறைமுகத்திலிருந்துதான் 
ஏற்றுமதியாகிக்கொண்டு இருந்தன.)


நிச்சயம் 3 மணிக்குள் வந்து GR Form ஐ கொடுத்து
விடுகிறோம். எனவே இப்போது எங்களது Bill ஐ 
 Negotiate செய்து PCL கணக்கை முடித்துவிடுங்கள் 
என்றார். அதற்கு நான்.GR Form இல்லாமல்  
BillNegotiate செய்யமுடியாது. அது வரட்டும் 
திங்களன்று காலையில் பார்த்துக்கொள்ளலாம். 
என்றேன்.

ஆனால் அவரோ, சார். இன்று வெள்ளிக்கிழமை. 
அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் 
மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. திங்களன்று எப்படி 
சந்தை இருக்கும் எனத் தெரியாததால் இன்றே  
Negotiate செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். 
என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் நான் கண்டிப்பாக GR Form  இல்லாமல் 
 BillNegotiate செய்யமுடியாது. என 
சொல்லிவிட்டேன். அவர் பல முறை கேட்டும் 
எனது பதில் முடியாது என்பதாகத்தான் இருந்தது.

சரி. என சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை 
வைத்துவிட்ட சிறிது நேரத்தில் தொலை பேசி 
அழைப்பு ஒன்று வந்தது. திருவனந்தபுரத்தில் 
இருந்து எனது துணைப் பொதுமேலாளர் தான் 
பேசினார்.  

என்ன சபாபதி? என்ன ப்ராப்ளம்? அந்த 
வாடிக்கையாளரின் BillNegotiate செய்யமாட்டேன் 
என்று சொல்கிறீர்களாமே? ஏன்?’ என்று கேட்டார். 
அவரிடம்,’சார். GR Form   இல்லாமல்  Bill 
Negotiate செய்ய சொல்கிறார் .அதனால் தான் 
முடியாது என்று சொன்னேன். என்றேன்.

(அந்த வாடிக்கையாளர் எனது Boss க்கு 
தொலைபேசியில் சொல்லியிருப்பார் போலும்)

அவர்தான் 3 மணிக்குள் அதை தருகிறேன் 
என்கிறாரே. இன்னும் ஏன் உங்களுக்குத் தயக்கம். 
அவர் நமது நீண்ட நாள் வாடிக்கையாளர் எனத் 
தெரியாதா? உடனே Negotiate செய்து பணத்தைக் 
கொடுங்கள். என்றார் துணைப் பொதுமேலாளர்.

நான், சார். அது 22 இலட்ச ரூபாய்க்கான  
Bill. GR Form   இல்லாமல் பணம் தருவது கடினம். 
என்றேன். அதற்கு அவர். எனக்கு அது தெரியும். 
நீங்கள் நான் சொல்கிறபடி கொடுங்கள். அவர் 
3 மணிக்கு கொடுத்துவிடுவார். எனக் கூறி 
சட்டென தொலை பேசியை வைத்துவிட்டார்.

அவர் வாய்மொழியாகத்தான் சொன்னரே தவிர 
எழுத்து மூலம் தரச்சொல்லி  ஆணை தருவதாக 
சொல்லவில்லை. ஆனால் அவரது பேச்சுத் 
தொனியில் ஒரு கட்டளையிடும் தோரணை 
இருந்ததை உணர்ந்தேன்.

அதற்குள் அந்த வாடிக்கையாளரின் அலுவலக 
உதவியாளர் வந்து என்னைப் பார்த்து சார் 
திருவனந்தபுரம் அலுவலகத்திற்கு பேசிவிட்டாராம். 
நீங்கள் ஆவன செய்வீர்கள் என்று அங்கிருந்து 
சொல்லிவிட்டார்களாம். என்று கூறி
ஆவணங்களை (GR Form  இல்லாமல்) கொடுத்தார்.

எனது  துணைப் பொதுமேலாளர் சொன்னதால் 
அந்த Bill க்கான பணத்தை கணக்கிட்டு PCL கடன் 
போக மீதியை அவரது கணக்கில் வரவு வைக்க 
ஒப்பிட்டுக் கொடுத்தேன். அதோடு வேறொன்றும் 
செய்தேன்.(அது என்னவென்று பின் சொல்கிறேன்.)

மதியம் உணவு இடைவேளை முடிந்து அறைக்கு 
வந்தபோது மணி 2.30. அந்நிய செலாவணி பார்க்கும் 
அலுவலரைக் கூப்பிட்டு 3 மணிக்கு GR Form   
வந்ததும் என்னிடம் சொல்லுங்கள் எனக்கூறிவிட்டு 
வேறு வேலையில் மூழ்கிவிட்டேன்.

சுமார் 4 மணிக்கு அந்த அலுவலர் வந்து,’சார். 
இதுவரை GR Form  யாரும் கொண்டு வந்து 
தரவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் 
அந்த நிறுவனத்தில் யாரும் அதை எடுப்பதாகத் 
தெரியவில்லை. என்ன செய்வது? என்றார்.


தொடரும்

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு HajasreeN அவர்களே! யாருக்கு ஆப்பு என்பதை அறிய பொறுத்திருங்கள்!

   நீக்கு
 2. எங்கு சென்றாலும் மேலிடத்தில் யாராவது தெரிந்தவர் இருந்தால் ஒரு வித அதிகார தோரணை வந்து விடுகிறது அனைவருக்கும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 3. இக்கட்டான நிலையை சமாளித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே! சஸ்பென்ஸ் வைத்து பதிவை தொடர்கின்ற விருப்பம் எனக்கு இல்லை. ஆனால் அது ‘தானாகவே’ வந்துவிடுகிறதே! என் செய்ய.

   நீக்கு
 5. நல்ல முன்யோசனையாகத்தான் செய்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி கடற்கரைக்கார நண்பர் அவர்களே!

   நீக்கு


 7. இப்படி சில அதிகாரிகள் இருப்பதால் தான் தொல்லையே வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு,நன்றி புலவர் ஐயா அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

   நீக்கு
 8. அந்த வேறொன்று செய்ததை எதிர்ப்பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அந்த ‘வேறொன்று’ என்னவென்று பின்னால் தெரியும்.

   நீக்கு
 9. //அதற்கு அவர். ‘எனக்கு அது தெரியும்.
  நீங்கள் நான் சொல்கிறபடி கொடுங்கள். அவர்
  3 மணிக்கு கொடுத்துவிடுவார்.’ எனக் கூறி
  சட்டென தொலை பேசியை வைத்துவிட்டார்.//

  Do they really have rights to go against the set rules? How can such people get to the top? Will he do that, if it is his own organisation? Too difficult to digest.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! சமீபத்தில் இந்தியாவில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். சுய இலாபத்திற்காக தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்ற மனப்பான்மை உள்ளவர்கள் தலைமை ஏற்க வரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இங்கு வாடிக்கை. தவறு ஏற்படுமானால் அதை தன் கீழ் பணிபுரிவோர் மேல் சுமத்தி தப்பித்துக் கொள்வதும் இங்குதான். என்ன செய்ய!

   நீக்கு
 10. சார்,

  1. அயல்நாட்டு வர்த்தகம் பற்றிய நடைமுறைகளை அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதி இருக்கிறீர்கள்.

  2. ஸஸ்பென்ஸ் நிறைந்த ஒரு ஆங்கில படம் மாதிரி இருக்கிறது.

  3. இடை இடையே வடிவேல் வரும் நகைச்சுவை காட்சியும் உள்ளது.

  மொத்ததில் இது ஒரு மிக இனிமையான நினைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

   நீக்கு
 11. வருக! வருக!! திரு T.N.முரளிதரன் அவர்களே! என்னவாயிற்று என அறிய பொறுத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக் கொள்ளாமல் செய்திருக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்!காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், யூகித்ததற்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

   நீக்கு
 13. என் அப்பா இதை போல அவர் வங்கியில் பணிபுரிந்த சமயம் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களை கதையாக எனக்கு சொல்லுவார். ஒரு சில உண்மைச் சம்பவங்களின் suspense - கதைகளையும் மிஞ்சி விடுகின்றது! தொடருங்கள்...
  Nice Blog!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதங்கி அவர்களே! நீங்க்ல சொல்வது சரிதான். சில நிகழ்வுகள் கதைகளைவிட சுவாரஸ்யமானவை

   நீக்கு