புதன், 15 மே, 2013

தென்னக இரயில்வேயும் ஓரவஞ்சனையும்



தென்னக இரயில்வைத் துறை தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகிறது என சிலர் கூறும்போது அது உண்மையாய் இருக்காது என நினைத்ததுண்டு. ஆனால் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அது உண்மைதானோ  என எண்ணம் தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.

பாலக்காடு (ஓலவக்கோடு) கோட்ட அலுவலகத்தொடு இணைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டில் இருந்த இரயில் நிலையங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து சேலத்தில் புதிய கோட்டம்  தொடங்கும்போது சிலர் தடுத்தது, பெங்களூருவிலிருந்து கோவை வரை வந்த பகல் நேர விரைவு வண்டியை பாலக்காடு வரை நீட்டித்தது, தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னையாய் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் புதிய வழி தடங்களை ஆரம்பிப்பதில் சுணக்கம் காட்டுவது போன்றவை அதில் அடங்கும்.

திருச்சி சென்னை Main Line அகலப் பாதையாக்கு முன்பு இருந்த பகல் நேர விரைவு இரயிலான சோழன் இரயில் முக்கியமான இரயில் நிலையங்களில் நின்று சென்றதை, அகலப்பாதை அமைக்கப்பட்டதும் மாவட்ட தலைநகரான கடலூரில் கூட நிற்காமல் செல்லும்படி செய்ததும், (நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் இப்போது நின்று செல்கிறது!) பகலில் செல்வதற்கு கூட உட்காரும் வசதி உள்ள இருக்கைகள் கொண்ட பெட்டிக்குப் பதிலாக தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை இணைத்து பயணிகளின் பயணச்செலவை அதிகரித்ததும் தென்னக இரயில்வே தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த சில முக்கிய சேவைகள் என சொல்லலாம்.

ஆனால் இதே தென்னக இரயில்வே  கேரளா மாநிலம் என்றால் அதிக இரயில்களை விடுவதும், அங்கே உள்ள இரயில் நிலையங்களில் உள்ள உட் கட்டமைப்பு வசதிகளை (Infrastructure Development) மேம்படுத்துவதையும், அங்கு செல்லும் அல்லது அங்கிருந்து கிளம்பும் இரயில்களில் புதிய பெட்டிகளை இணைப்பதையும் பார்க்கும்போது ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இடுவதுபோல் உள்ளது  என்பது நிஜம்.

சமீபத்தில் நான் இரயில் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் மேலே கூறியவை உண்மை என்பதையே நிரூபிக்கின்றன. கடந்த சனியன்று (11-05-2013) சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை நானும் என் மனைவியும் செல்ல பிப்ரவரி மாதத்திலேயே, முத்து நகர் விரைவு வண்டியில் 2 Tier AC பெட்டியில் முன் பதிவு செய்திருந்தேன்.

சனிக்கிழமையன்று வீட்டிலிருந்து கிளம்பி மாலை 6.30 மணிக்கு இரயில் நிலையம் நானும் என் மனைவியும் சென்றோம். வண்டி புறப்படும் நேரம் இரவு 7.15 மணி ஆதலால் பிளாட்பாரத்தில் வண்டி தயாராக இருந்தது. நாங்களும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த A1 பெட்டியைத் தேடினோம். முதல் வகுப்பு AC பெட்டி, A 2 இலக்கமிட்ட 2 Tier AC பெட்டி மற்றும் 3 Tier AC பெட்டிகள் இருந்தனவே தவிர A1 இலக்கமிட்ட 2 Tier AC பெட்டியை காணவில்லை. யாரிடம் கேட்டாலும் தெரியவில்லை. என்றே சொன்னார்கள். எங்களைப்போலவே அந்த பெட்டியில் முன் பதிவு செய்தவர்கள் பிளாட் பாரத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர்.

சொல்லி வைத்ததுபோல்,இரயில் ஊழியரோ அல்லது அந்த வண்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரோ யாருமே பிளாட்பாரத்தில் அப்போது இல்லை. இரயில் நிலையமும் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவும் இல்லை.

என்ன செய்வது என திகைத்து நின்றபோது, போகும் ஊரின் பெயரை பெட்டியில் மாற்ற வந்த ஒரு ஊழியர், A1 2 Tier AC பெட்டி ஒரு சில காரணங்களால்  இன்று இணைக்கவில்லை. அதற்கு பதில் இணைக்கப்பட்டுள்ள இந்த 3 Tier AC பெட்டியில் ஏறிக்கொள்ளுங்கள். டிக்கெட் பரிசோதகர் வந்து உங்களுக்கு இருக்கையை ஒத்துக்குவார். என்றார்.

வேறு வழியின்றி அந்த பழைய, சரியான இருக்கைகள் இல்லாத வண்டியில் ஏறி அமர்ந்ததும் எங்களைப் போலவே 2 Tier AC க்கு பதிவு செய்து A 1 ஒதுக்கப்பட பலர் அங்கே அமர்ந்திருந்தனர். ரயில்வேயின் அலட்சியத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது ஒருவர் சொன்னார், எனது பெயர் காத்திருப்போர் பட்டியலிலில் தான் இருந்தது. நல்ல வேளை 3 Tier பெட்டி இணைத்ததால் எனக்கும் படுக்கை கிடைத்துவிட்டது.
Chart லும் போட்டுவிட்டார்கள். என்றார்.

என்னது. Chart ஒட்டியிருக்கிறார்களா?’ எனக் கேட்டபடி வெளியே வந்து கைபேசி வெளிச்சத்தின் உதவியால் பார்த்தபோது, அங்கே A1 2 Tier எனப் போட்டு ஒட்டப்பட்டிருந்த Chart இல், பிப்ரவரியில் பதிவு செய்து உறுதி செய்யப்பட சீட்டு பெற்றிருந்த எங்களது பெயர் இல்லை! அதற்குள் வண்டி கிளம்பும் நேரம் ஆகிவிட்டதால் ஏறி அமர்ந்துகொண்டு TTE வரட்டும் என காத்திருந்தேன்.

அப்போது என் அருகில் வந்த ஒருவர், TTE AC முதல் வகுப்பு பெட்டியில் இருக்கிறார். அங்கு சிலருக்கு A 2 வில் உள்ள காலியிடங்களை ஒதுக்கிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் போய் கேளுங்கள். என்றார்.

அவர் சொன்னபடியே அங்கு சென்று பார்த்தபோது ,அந்த TTE இருக்கை பதிவு செய்த மக்கள் தடுமாறிக்கொண்டு இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சாவதானமாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று ஏன் எங்களது பெட்டி இணைக்கப்படவில்லை எனக் கேட்டதற்கு. தெரியவில்லை சார். உங்களுக்கு 3 Tier பெட்டியில் ஒதுக்கித்தருகிறேன். என்றார். சிலருக்கு மட்டும் 2 Tier இல் இருக்கை தந்திருக்கிறீர்களே. எனக் கேட்டதற்கு. இருக்கை இருந்ததை கொடுத்து விட்டேன். காலியிடம் இல்லாததால் தர இயலவில்லை. நீங்கள் அங்கு போய் இருங்கள் நான் வருகிறேன். எனக் கூறி எங்களுக்கு ஒதுக்கப்பட இருக்கை எண்ணைத் தந்தார்.

அதற்குள் வண்டி நகரத் தொடங்கிவிட்டதால் வேறு வழியின்றி திரும்ப வந்து  3 Tier பெட்டியில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் நானும் என மனைவியும் அமர்ந்தோம். அந்த பரிசோதகர் இரவு 8 மணிக்குமேல் வந்து எங்களது அடையாள அட்டையை பரிசோதித்து விட்டு, திரும்ப வந்து நாங்கள் 2 Tier க்குப் பதில் 3 Tier இல் பயணம் செய்ததற்கான சான்றிதழை தருவதாகவும் அதை IRCTC க்கு அனுப்பி அதிகப்படியாக செலுத்திய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும்  சொல்லி சென்றார்.

அவர் வருவதற்காக தூங்காமல் காத்திருந்தேன். அவர்  அனைத்து AC பெட்டிகளில் இருந்த எல்லோருடைய பயண சீட்டுகளையும் பரிசோதித்துவிட்டு திரும்ப வந்து சான்றிதழ் கொடுத்து நான் உறங்க சென்றபோது மணி 10 க்கு மேல் ஆகிவிட்டது.

மறு நாள் காலை 4 மணிக்கு மதுரையில் இறங்கி  அங்கு நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரும்ப சென்னைக்கு வர, இரவு 11 மணிக்கு மதுரைக்கு வரும் அனந்தபுரி விரைவு இரயிலில் ஏறியபோது நல்ல வேளையாக சென்னையில் நடந்தது போல் குழப்பம் ஏதும் இல்லாமல் 2 Tier பெட்டியில் எங்களுக்கு இருக்கை இருந்தது.

அதைவிட ஆச்சரியம். அந்த பெட்டி அப்போதுதான் கபூர்த்தாலா அல்லது பெரம்பூர் இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வந்தது போல் புத்தம் புதிதாய் இருந்தது.

முதல் நாள் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற வண்டியில் இணக்கப்பட்டிருந்த பெட்டிகள் அரத பழசாய்  இருந்ததும், திருவனந்தபுரத்தில் இருந்து  சென்னை வரும் வண்டியில் இணைக்கப்பட்ட  பெட்டிகள் புதிதாய் இருப்பதும் எனக்கு தற்செயலாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.

இனி தமிழ்நாட்டில் எங்காவது இரயிலில்  செல்ல வேண்டுமானால் கேரளாவை நோக்கி செல்லும் அல்லது கேரளாவில் இருந்து வரும் இரயில்களில் ஏறினால் மட்டுமே வசதியாய் பயணிக்கலாம் போலும்.

இப்போது சொல்லுங்கள் தமிழகத்திற்கு தென்னக இரயில்வே ஒரவஞ்சனை செய்கிறதா இல்லையா என்று?  

35 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ... பெங்களூரில் இருந்தும் எராளமான ரயில்கள் கேரளாவிற்கு செல்கின்றன .... கடந்த 2010 ஆண்டு .... எர்ணாகுளத்தில் இருந்து மாலை பெங்களூருக்கு வரும் ரயிலை சேலம் , விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு சிலமாதங்கள் கோடைகால சிறப்பு ரயிலாக நீடிப்பு செய்தார்கள் ... வரவேற்ப்பு அதிகமாக இருக்கவே அதை நடைமுறைபடுத்த போவதாக செய்தி பரவ ஆரம்பித்த உடனே ... சேட்டன்கள் அதை எப்படியோ தடுத்து விட்டார்கள் ... இப்போது கோடைகாலத்தில் கூட அது இயக்கப்படுவதில்லை ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கலைச்செல்வன் அவர்களே! திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மண்டலம் (Zone) அமையவேண்டும் என்று மய்ய அமைச்சரான திரு சசி தரூர் போன்றவர்களே அரசை நிர்ப்பந்திக்கும் இந்த சமயத்தில், சந்தடி சாக்கில், நல்ல வணிகம் உள்ள சேலம் கோட்டத்தையும் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களோடு சேர்த்து புதிய மண்டலத்தை உருவாக்க வேண்டும் கேரளாவில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் விழித்துக்கொண்டு இருக்காவிட்டால் அது நிச்சயம் நடந்தேறும் என்பது உண்மை.

      நீக்கு
  2. தமிழகம் என்றால் எப்போதும் இளக்காரம் தானோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. கேரளாவில் மட்டும் தான் மனுசங்க இருக்காங்க போல.. என்ன செய்வது நாம் ஆதங்கப்படுவதைத் தவிர.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  4. தமிழகத்திற்கு தென்னக இரயில்வே ஒரவஞ்சனை
    செய்வது உள்ளங்கை நெல்லிக்கனி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. தமிழர்கள் என்றும் ஏமாளிகளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய் சொன்னீர்கள் முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. தமிழகத்தை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சராக காலம் காலமாய் இருக்கிறார்கள். இதைப்பற்றி எப்போதாவது கேட்டதுண்டா? கிட்ட தட்ட வெளிப்படையாகவே தமிழகத்திற்கு இரண்டாம் தர ட்ரீட்மென்ட் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Bhandu அவர்களே! கேரளாவிலும் மற்ற தென் மாநிலங்களிலும் பிரச்சினை என்று வரும்போது எல்லா கட்சியினரும் ஒன்றுகூடி குரல் கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால் இங்கோ நம்மவர்களிடையே உள்ள தன்முனைப்பு (Ego) காரணமாக நாம் நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவைகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
  7. இரயில் பயண அனுபவங்கள் எனக்கு போதிய அளவு இல்லை! ஆனால் பலரும் கூறியதை வைத்து சொல்கிறேன்! இரயில்வே ஓரவஞ்சனைதான் செய்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  8. நல்ல பதிவு திரு. வே நடனசபாபதி அவர்களே,
    இவை எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தமிழக 'ப்ராஹ்மணர்களே'
    என்ன இருந்தாலும் சேரர்களும் தமிழர்களே அல்லவா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு iTTiAM அவர்களே! நாம் வேண்டுமானால் அவர்களை சேரர்கள் என நினைக்கலாம். ஆனால் அவர்கள் நம்மோடு சேராதவர்களாக இருக்கிறார்களே!

      நீக்கு
  9. தன்முனைப்பு = Initiative / proactive.
    அகங்காரம் = ego
    துராங்காரம் = ஆணவம் = மமதை = தலைக்கனம் = false ego.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ego விற்கான தமிழ் சொல் தந்தமைக்கு நன்றி திரு iTTiAM அவர்களே! ஆனால் அதற்கு தன் முனைப்பு என்றும் சொல்லலாம் என சொல்கிறார்கள்.மேலும் ஆணவம் தற்பெருமை, திமிர் என்றும் சொல்லலாம் என்றும் சொல்கிறார்கள்.

      நீக்கு
  10. One of my north Indian friends told me, in Tamilnadu even villages have very good roads, compared to other states. Also, I understood one central transport minister managed to get more funds for Tamilnadu. So, when we are selfish on something, how can we complain when others are selfish? India, never tried to grow as a single nation. It is our fate.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! திரு T,R. பாலு தரை மற்றும் கடல்வழி போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004-09 ஆண்டுகளில் மைய அரசில் இருந்தபோது தமிழகத்திற்கு அதிக நிதி உதவி பெற்று சாலைகளை மேம்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் எப்போது தெரியுமா? நாடு விடுதலை அடைந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு!! திரு நரசிம்ம ராவ் அவர்கள் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது, தமிழ் நாட்டிலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுக்கு இருந்தும், ஒரு அமைச்சர் பதவி கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை என்பது வரலாறு. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாநிலங்கள் இதுவரை எந்த வித வசதிகள் பெற்றிருக்கின்றன என பட்டியலிட்டு ஒப்பிட்டால் நமக்கு கிடைத்தது மிக சொற்பமே எனத்தெரியும். இரயில்வேயை பொறுத்தவரை கர்நாடகத்திலிருந்து திரு பூனாச்சா அவர்களும் திரு T.A.பாய் அவர்களும் திரு ஜாஃப்பர் ஷெரீப் அவர்களும் இரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது அந்த மாநிலம் என்னென்ன பயன்கள் பெற்றன என்பதும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரு கனிகான் சௌத்ரி அவர்களும், செல்வி மம்தா பானர்ஜி அவர்களும், பீகாரைச் சேர்ந்த திரு லாலு பிரசாத் அவர்களும் தங்கள் மாநிலத்திற்கு என்னென்ன செய்தார்கள் என்பதை பட்டியலிட ஒரு பதிவு போதாது என்பது உண்மை. தமிழகம் புறக்கணிப்பட்டது /இப்போதும் புறக்கணிப்படுகிறது என்பது மறுக்கமுடியாத/மறைக்கமுடியாத உண்மை.

      நீக்கு
  11. தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது.தமிழக மந்திரிகளுக்கு தங்களை கவனித்துக் கொள்ளவே ஐந்து ஆண்டுகள் போதவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  12. தமிழன் என்றால் வடமாவட்டங்கள் மட்டுமல்ல தென்னக மாவட்டங்களுக்கும்
    இளக்காரம் என்பதே முற்றிலும் உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! உண்மைதான். தமிழன் என்றால் எல்லோருக்கும் இளக்காரம்தான்.

      நீக்கு
  13. We can get our atleast due share only our 40 MPs join for a general cause apart from their party affiliations (Like Kerala).More over they don`t have the need to travel in Train like us.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு வேலூரான் அவர்களே! நமது 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் நடக்கமுடியாத ஒன்று. நமது துரதிர்ஷ்டம் இவர்கள் நமது பிரதிநிதிகளாக இருப்பது!

      நீக்கு
  15. உங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. கேரளாவில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை. எனவே அவர்கள் பரீட்சையில் அதிகம் மார்க்கைப் போட்டு வெளியில் அனுப்பி விடுகிறார்கள். எனவே அவர்கள் ரெயில்வே போன்ற துறைகளில் நுழைந்து அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  16. Sir,Ministers and Administration from Kerala State and presently in power in Center are their involvement are the main reasons.. Our ministers and IAS officers of TamilNadu are not bothered about TN.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Prince அவர்களே! நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை!

      நீக்கு
  17. அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. உண்மைதான். மற்ற மாநிலத்தவரிடையே உள்ள ஒற்றுமை நம்மிடையே இல்லைதான். அதனால்தான் நமக்கு கிடைக்கவேண்டியவைகளை இழந்துகொண்டு இருக்கிறோம்!

      நீக்கு
  18. inimelavathu ondru pattu , naam yaar endru unarthuvom, thamizh vazhga

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Vicky அவர்களே!

      நீக்கு