செவ்வாய், 18 மார்ச், 2014

நினைவோட்டம் 76



அக்டோபர் 29, 2013 தேதி பதிவிட்ட நினைவோட்டம் 75ல் திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் (StJoseph’s College) 1960-61 ஆண்டில் புகுமுக வகுப்பு (Pre University Course) படித்தபோது, எனக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் பற்றி எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சி இதோ.

நான் முன்பே சொன்னது போல் புகுமுக வகுப்பில், B Group என சொல்லப்பட்ட Natural Science, Physical Sciences உள்ளடக்கிய  Science Group இல்  வணிகவியல் (Commerce) மற்றும் தர்க்கவியல் (Logic) ஆகியவகளை விருப்பப் பாடங்களாக எடுத்திருந்தேன்.

தாவரவியல் பாடத்தை திரு வெங்கடராமன் அவர்கள் நடத்தினார். எப்போதும் சிரித்த முகத்தோடு வரும் அவர் ஆரம்பத்தில் பாடம் நடத்தும்போது, பாடம் புரியாமல் விழிக்கும் எங்களின் முகக் குறிப்பை அறிந்து உடனே அதனுடைய தமிழ் பெயரையும் சொல்லுவார். இப்படித்தான் Photosynthesis பற்றி பாடம் நடத்தியபோது எங்களில் பலர் அவர் சொல்வது என்னவென்று புரியாமல் இருந்தபோது, கடைசியில் முத்தாய்ப்பாக ‘It is called ஒளிச்சேர்க்கை in Tamil.’ என்று அவர் சொன்னது இன்னும் என் நினவில் இருக்கிறது!

ஆனால் இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு அவர் மறந்தும் தமிழில் பேசியதில்லை. காரணம் நாங்கள்  ஆங்கிலத்தில் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

அப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி 11 ஆண்டுகள் அறிவியல் உட்பட எல்லா பாடங்களையும் தமிழில் படித்துவிட்டு, புகுமுக வகுப்பில் சேர்ந்ததும், மூன்று மாதங்களுக்குள் ஆங்கிலத்தில் பாடம் நடத்திய அவைகளை  புரிந்துகொண்டு படித்து தேர்வு எழுதினோம் என்று.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது சாத்தியம் என்றே தோன்றுகிறது. வேளாண் பெருமக்கள் நெற் பயிரை நேரடியாக வளர்க்காமல் முதலில் நாற்றங்காலில்(Nursery) நெல் விதைகளைத் தூவுவார்கள்.பின்பு அவை வளர்ந்ததும் அவற்றை பிடுங்கி வயல்களில் (Main Field) நடுவார்கள். அவைகள் முதலில் வாடினாற்போல் தோன்றினாலும், பின்னால் வேர் பிடித்து செழுமையாக வளர்ந்து மகசூல் தருவதில்லையா அதுபோல் தான் பள்ளி என்ற நாற்றங்காலில் வளர்க்கப்பட்ட நாங்கள் கல்லூரி என்ற வயலுக்கு மாற்றப்பட்டபோது ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னால் ஆங்கிலத்தை புரிந்துகொண்டு நன்றாகவே படித்து முன்னேறினோம் என்பது உண்மை.

ஆனால் இப்போது அந்த நிலை பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் மழலையர் பள்ளியிலிருந்தே ஆங்கிலத்தில் பாடங்களைப் படிப்பதால்.(இது நல்லதா இல்லையா என்பதை வேறொரு பதிவில் அலசலாம்)

திரு வெங்கடராமன் அவர்களின் எங்களுக்கு பாடம் நடத்திய முதல் நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் பாடம் நடத்திய நேரம் மதியம் 3 மணியிலிருந்து 4 மணி வரை. அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது 4 மணி ஆகிவிட்டதால் கல்லூரியில் அன்றைய வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்தார்கள்.

எங்களில் பலர் பழைய நினைப்பில் உடனே புத்தகம், நோட்டுகள் முதலிவற்றை மூட ஆரம்பித்தோம்.அதைக் கவனித்த அவர் எங்களை நோக்கி Are you from Board High School? என்றதும், வகுப்பில் ஒரே சிரிப்பலைதான். அதற்குப்பிறகு நாங்கள் மணி அடித்தாலும் ஆசிரியர் பாடத்தை முடிக்கும் வரை அந்த தவறை செய்ததில்லை.

எங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தியவர் திரு இராமகிருஷ்ணன். இவர் தவறி கூட சிரிக்கமாட்டார். ஆனால்  மிகவும் பொறுமையாக பாடங்களை சொல்லித்தருவார். இவரைப் போலவே வேதியல் பாடம் நடத்திய திரு மாத்யூ அவர்களும், கடினமான (அதாவது எனக்கு) வேதியலை மிகவும் நிறுத்தி நிதானமாக சொல்லிக் கொடுப்பார்.

எங்களுக்கு வணிகவியல் பாடம் எடுத்தவர் கேரளாவைச் சேர்ந்த திரு பெர்னாண்டஸ் அவர்கள். அவர் எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார். வணிகவியல் பாடத்தில் கணக்கியல் (Accountancy) மற்றும் பொருளியல்(Economics) பாடங்கள் உண்டு. கணக்கியல்  பாடம் நடத்தும் போது இருப்பு நிலைக் குறிப்பை (Balance Sheet) சரி செய்யும்(Tally) வரை விடமாட்டார்.

அவர் சொல்லிக் கொடுத்த பொருளியல் பாடம், பின்னால் வேளாண் அறிவியல் படிக்கும்போது நடத்தப்பட்ட Agricultural Economics பாடத்தை புரிந்துகொள்ளவும், அவர் சொல்லிக்கொடுத்த அடிப்படை கணக்கியல் பாடம், வங்கியில் சேர்ந்தபிறகு CAIIB தேர்வுக்குப் படித்தபோது உயர் நிலை கணக்கியல்( Higher Accountancy) பாடத்தை புரிந்துகொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற உதவியாக இருந்ததையும் இப்போதும் நன்றிடன் நினைவு கூர்வேன்.

அடுத்து நான் மறக்க இயலா ஆசிரியர் தர்க்கவியல் (Logic) பாடம் நடத்தியவர்.
அவர் பற்றி அடுத்த பதிவில்.

நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

14 கருத்துகள்:

  1. நெற் பயிர் சொன்னவிதம் அருமை... எவ்வளவு பொறுப்புடன் திறமையாகவும் ஆசிரியர்கள் இருந்துள்ளார்கள்... (இன்று சிலர் மட்டும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. பள்ளியில் பாடம் நடத்தியவர்கள் நினைவு எளிதில் மறையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. உங்கள் ஆசிரியர்கள் பற்றிய பதிவு நன்று. ஆசிரியர்கள் என்றுமே மறக்க முடியாதவர்கள் தான்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! உண்மைதான். நமது ஆசிரியர்களை மறக்கமுடியாதுதான்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. நினைவோட்டம் – நானும் உங்கள் தொடரோடு தொடர்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  6. பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களைப் பற்றி எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் மறக்க முடிவதில்லை. எந்த மொழியில் படித்து வந்தவர்களாயினும் கல்லூரியில் முதல் மூன்று மாத காலம் கடினமாகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் படித்து வந்தவர்களுக்கு பேராசிரியர்களின் பேச்சு வேண்டுமானால் எளிதில் புரிய வாய்ப்புள்ளது ஆனால் தேர்வுகளில் அதே அளவுக்கு அவர்கள் பரிணமிப்பார்களா என்று கூற முடியாது. ஏனெனில் பேச்சு ஆங்கிலத்தில் பிரகாசிக்கும் பல மாணவர்கள் எழுத்து ஆங்கிலத்தில் தடுமாறுவதை இன்றும் காணலாம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  7. எனக்கு நேற்று சாப்பிட்டது இன்று நினைவுக்கு இருக்காது. எப்படிதான் தங்களால் நினைவுகூற முடிகிறது என்பது ஆச்சர்யம்தான். எனக்கு செலக்டிவ் அம்னீஷியா என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு