புதன், 25 செப்டம்பர், 2019

தொடரும் சந்திப்பு 12

1971 ஆம் ஆண்டின் இறுதியில் ஜாவா மோட்டார் சைக்கிளை வாங்கி  தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்று, மோட்டார் சைக்கிளை பொள்ளாச்சி நகருக்குள்ளேயே ஓட்டிவந்தேன்.



வங்கியில் வேளாண் கடன்கள்  பிரிவில் அலுவலராக இருந்ததால் வேளாண் வாடிக்கையாளர்களை சந்திக்க பொள்ளாச்சியை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. 

தற்காலிக ஒட்டுனர் உரிமம் பெறிருந்ததாலும், மோட்டார் சைக்கிளை தன்னம்பிக்கையுடன் ஓட்டும் துணிவு அப்போது ஏற்படாததால், பொள்ளாச்சி நகரை விட்டு வெளியே செல்லும்போது என்னோடு ஒருவரை அழைத்து செல்லவேண்டிய நிலை. 

மேலும் மோட்டார் வாகன சட்டப்படி தற்காலிக உரிமம் பெற்று ஒட்டுவோர் பின்னிருக்கையில் (Pillion)  ஓட்டுனர் உரிமம் பெற்ற ஒருவருடன் தான் பயணிக்கவேண்டும் என்ற விதி இருந்ததால் (இப்போது அந்த விதி உண்டா எனத் தெரியவில்லை)  கூட யாரையாவது அழைத்து செல்லவேண்டிய கட்டாயம். 

அப்போது  என்னுடன் வங்கியில் பணிபுரிந்த நண்பர் திரு P.R.கிருஷ்ணன் பொள்ளாச்சியைவிட்டு வெளியே செல்லும்போது உதவிக்கு தானும் வருவதாக சொன்னார். ஆனால் வங்கிப்பணி உள்ள நாட்களில் அவரால் முடியாததாகையால் விடுமுறை நாட்களில் செல்வது என முடிவாயிற்று. 

பொள்ளாச்சியிலிருந்து வடக்கே இருக்கும் கிணத்துக்கடவுக்கு மேற்கே 13 கி,மீ தொலைவில் இருந்த வீரப்பக்கௌண்டனூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒருவர் வங்கியில் வேளாண்மைக் கடன் வாங்கியிருந்தார். அவர் கட்டவேண்டிய தவணைத் தொகையை சரியாக கட்டாததால், அவரை சந்தித்து பேசி நிலுவையில் உள்ள தொகையை கட்ட செய்வதற்காக அங்கு செல்ல விரும்பினேன். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு  வீரப்பக்கௌண்டனூருக்கு நண்பர் திரு கிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றேன். பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு சென்று அங்கிருந்து வீரப்பக்கௌண்டனூர் சென்று வங்கியின் வாடிக்கையாளரை சந்தித்தேன். (அவர் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் வங்கி விதிப்படி அவரது பெயரை இங்கு சொல்லவில்லை)

விளைச்சல் குறைந்ததால் எதிர்பார்த்த வருமானம் கிட்டவில்லையென்றும், அடுத்த மகசூலின்போது தவணைத் தொகை முழுவதையும் கட்டுவதாக வாக்களித்தார்.   

பிறகு அங்கிருந்து திரும்ப பொள்ளாச்சிக்கு புறப்பட்டோம். வீரப்பக்கௌண்டனூரிலிருந்து கிணக்துக்கடவு வரை கருங்கல் பாவிய மண்சாலை உள்ள இட்டேரியில் தான் பயணிக்கவேண்டியிருந்தது. சாலையின் இரு மருங்கிலும் நெருக்கமாக Hedge cactus (Cereus repandus) எனப்படும்  கள்ளிச்செடிகள் ஓங்கி வளர்ந்து  இருந்தன.

இட்டேரி என்பது இருபுறமும் முள் உள்ள மரங்கள் ,கற்றாழை கள்ளிச்செடிகள் உள்ள பாதையைக் குறிக்கும். இது மாட்டு வண்டி போகும் அளவு அகலமாக இருக்கும். இவ்வாறு உள்ள பாதையை இட்டேரி என்று கொங்கு வட்டாரத்தில் சொல்வார்கள். இந்த முள் மரங்களும் கள்ளிச்செடிகளும் தான் உயிர்வேலியாய் இருந்து வேளாண் நிலங்களைக் காப்பவை. 

இட்டேரி படம் கீழே. (கூகிளாருக்கு நன்றி)





அது மாட்டுவண்டிப் பாதை என்பதால் வண்டித்தடத்தில் செல்லும் மாடுகளுக்கு கட்டப்பட்ட லாடங்கள் சிலசமயம் விழுந்து கிடக்கும். அதில் சென்றால் அந்த லாடங்கள் குத்தி, உந்துருளி (Motor cycle) யின் உருளிப்பட்டை (Tyre) கிழிந்துவிட வாய்ப்புண்டு என்பதால் இரண்டு தடத்திற்கும்  இடையே உள்ள  மேடான பாதையில் நண்பர் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டே மோட்டார்  சைக்கிளை மெதுவாக  ஓட்டிக்கொண்டு சென்றேன். 

தொடரும் 


10 கருத்துகள்:

  1. //அவர் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் வங்கி விதிப்படி அவரது பெயரை இங்கு சொல்லவில்லை//

    தங்களது ஞாபக சக்தி ஆச்சர்யமளிக்கிறது நண்பரே...

    உந்துருளியோடு நானும் உருண்டு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,பாராட்டுக்கும், உந்துருளியில் தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! ஒரு நிகழ்வை நினைவில் இருத்துவதற்கு, அந்த நிகழ்வை வேறொன்றுடன் தொடர்வுபடுத்தி மனதில் வைத்துக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை நண்பரே!

      நீக்கு
  2. எனக்கும் உங்களுடைய ஞாபக சக்தியை நினைத்து வியந்ததுண்டு. அதுவும் நேற்று நடந்தது போல் சுவாரஸ்யமாக எழுதுவது இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! தங்களுடைய வியப்பு குறித்த கருத்துக்கு, திரு கில்லர்ஜி அவர்களது பின்னூட்டத்தில் பதின் தந்திருக்கிறேன்.

      நீக்கு
  3. உந்துருளி, உருளிப்பட்டை போன்று தமிழாக்கச் சொற்களை ஒரு தடவை அதற்கான ஆங்கிலச் சொற்களோடு எழுதி விட்டு, பின்வரும் பகுதியில் இதே சொல்லை உபயோக்கிக்க நேரிடுகையில், ஆங்கில சொல் அடைப்புக்குறிக்குள் இல்லாது எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாசகர்கள் ஆங்கிலச் சொல் இல்லாமலேயே அந்த தமிழுரு சொற்களைப் புரிந்து கொள்வார்களா?

    இதில் உங்கள் அனுபவம் எப்படி?.. இதுவரை அப்படி அனுபவப்பட வில்லை என்றால் அனுபவப்பட்டுத் தான் பாருங்களேன்.

    அதற்கான ஆங்கிலச் சொல்லை எழுதினால் தான் அந்தத் தமிழுரு வார்த்தை புரியும் என்ற நிலை இருக்கக் கூடாதல்லவா?.. அதற்காகத் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எனது பதிவுகளில் கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமால் எழுதிவருவதை தாங்கள் அறிவீர்கள். தமிழ் அல்லாத ஆங்கில சொற்கள் வரும்போது அவைகளை தமிழிலும் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கில சொற்களை எழுதுவதால் படிப்பவர்களுக்கு நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் ஆங்கிலசொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      தொடக்கத்தில் இதுபோல் சில சொற்களை எழுதினாலும் பின்பு தமிழ் சொல்லை மட்டும் எழுதியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக கணினி, பேருந்து, மகிழுந்து, நெகிழி போன்ற சொற்களை பயன்படுத்தும்போது ஆங்கில சொற்களை பயன்படுத்துவதில்லை. எனவே மக்களின் பயன்பாட்டுக்கு சில சொற்கள் வரும்வரை தமிழ் சொல்லையும் அதற்கு ஈடான ஆங்கில சொல்லையும் சொல்லலாம் என்பது எனது கருத்து.

      நீக்கு
  4. இட்டேரி, உந்துருளி, உருளிப்பட்டை.... புதிய வார்த்தைகள்....

    உங்கள் அனுபவங்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! புதிய சொற்களை அறிந்துகொண்டதற்கும் தொடர்வதற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு