திங்கள், 8 பிப்ரவரி, 2010

நினைவோட்டம் 17

அரியலூரில் இரண்டு ஆண்டுகள் (ஆறாம் வகுப்பு & ஏழாம் வகுப்பு) தான் படித்தேன் என்றாலும் கற்றுகொண்டது அதிகம் தமிழ்,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டதின் மூலம் பேச்சுத்திறனையும் பெற்றேன்.கைத்தொழில் பாடமாக தச்சு தொழில் இருந்ததால் அதையும் ஓரளவு கற்றேன். தனியாக கடைக்கும் சந்தைக்கும் சென்று பொருள்கள் வாங்கும் பயிற்சியையும் பெற்றேன்.

தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அப்பா 'ஒரு சில காரணத்தால் அங்கே படிப்பை தொடர முடியாது என்றும், என்னை எட்டாம் வகுப்புக்கு எங்கள் ஊருக்கு அருகில் இருந்த ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் இருந்த தனியார் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும்' கூறினார்கள். விடுமுறை கழிந்து அப்பாவுடன் அரியலூர் போய் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றேன்.

மாமாவின் கெடுபிடி காரணமாக, அரியலூரை விட்டு வருவது மனதில் ஒரு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அந்த ஊரையும் அந்த வீட்டையும் விட்டு பிரிவது என்னவோ போல் இருந்தது உண்மை. மாமாவின் வீட்டில் முன்பக்க வராண்டாவை அடுத்த அவரது அறையில், அவரது நாற்காலிக்கு பின்னால் கண்ணாடி பதித்த அலமாரியில் 'பைண்ட்' செய்யப்பட்ட Madras law journal புத்தகங்களையும், சுவற்றில் மாட்டியிருந்த அட்டையில் இருந்த

'பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ அதையே நீ பிறர்க்கு செய்'

'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் உனது இடது கன்னத்தைக்காட்டு'

என்ற வாசகங்களையும் மாமா இல்லாதபோது கண்கொட்டாமல் பார்ப்பது எனது வழக்கம். (ஒரு வேளை நாமும் மாமாவைப்போல் வழக்கறிஞர் ஆகி அவரைப்போல் அந்த மாதிரி சூழலில் பணியாற்றவேண்டும் என்ற ஆசையின் காரணமாக அது இருந்திருக்கலாம்)

அப்பாவுடன் ஊருக்கு கிளம்பும்போது அவைகளை திரும்பவும் ஒரு ஆவலோடு பார்த்துவிட்டு, ரயிலேறி பெண்ணாடம் என அழைக்கப்படும் பெண்ணாகடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

நினைவோட்டம் 16

முன்பே சொன்னதுபோல் பள்ளி நாட்களில் எங்கள் மாமா பள்ளி முடியும்போது கோர்ட்டிலிருந்து வந்து அழைத்து சென்றுவிடுவார். அப்படி அவர் வராத நாட்களில் நாங்கள் பள்ளி விட்டதும் நேரே வீட்டுக்கு வந்துவிடுவோம்.


வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.வேறெங்கும் செல்ல அனுமதி கிடையாது. வந்ததும் கைகால் கழுவி டிபன் சாப்பிட்டுவிட்டு டியூஷனுக்கு தயாராக வேண்டும். எப்போதாவது சினிமாவுக்கு செல்ல அனுமதி உண்டு. அப்படி இரண்டு ஆண்டுகளில் பார்த்த படங்கள் மலைக்கள்ளன்,கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் குணசுந்தரி ஆகிய மூன்றும் தான்!

காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகள் முடிந்ததும் தரப்படுகின்ற 'புராகிரஸ் ரிப்போர்ட்' டில் மாமாவிடம் கையெழுத்து வாங்குவதற்கு நாங்கள் பயப்படுவோம். எண்பது சதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் ஏன் நூறு சதவிகிதம் வாங்கவில்லை என கேட்டு அடிப்பார். மாமா வீட்டில் இருக்கும்போது நாங்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருப்போம். மாதத்தில் சில நாட்கள் அவர் திருச்சி செல்வார். அந்த நாட்கள் தான் எங்களுக்கு சுதந்திரமான நாட்கள். நான் முன்பு எழுதியிருந்தது போல் ஐயாவிடமிருந்து தப்பித்தோம் என சந்தோஷப்பட்டது தற்காலிகம்தான் என்பது நான் மாமாவின் கண்டிப்பைப் பார்த்ததும் அறிந்துகொண்டேன்.

அங்கு படிக்கும்போதுதான் தேவிகுளம் பீர்மேடு, மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்ககோரிபோராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது பள்ளிகளை மூடச்சொல்லி போராட்டகாரர்கள் பள்ளிமுன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். வேலை நிறுத்தம் காரணமாக பள்ளி மூடப்பட்டதால், சந்தோஷப்பட்டு, இதுபோல் அடிக்கடி வேலைநிறுத்தம் நடக்ககூடாதா என எண்ணியதுண்டு. ஆனால்இந்த சந்தோஷமே பிற்காலத்தில் வெறுப்பாக மாறும் எனஅப்போது நினைக்கவில்லை. பின்பு கேரளாவில் பணியில் இருந்தபோது அடிக்கடி 'பணிமுடக்கம்' என்ற பெயரில் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது கண்டு வருத்தப்பட்ட நாட்கள் அநேகம். (அது பற்றி பின் எழுதுகிறேன்)

ஞாயிற்றுகிழமை என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் அன்றுதான் எனக்கு வெளியே சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.


அரியலூரில் ஒவ்வொரு ஞாயிறும் சந்தை எனது பள்ளி அருகே உள்ள திடலில் நடக்கும். அங்கு என்னை அனுப்பி காய்கறி வர சொல்வார்கள்.அங்கு போய் வர சுமார் ஒரு மணி என்பதால் நான் அந்த வேலையை மிகவும்

மகிழ்ச்சியோடு செய்யகாத்துகொண்டிருப்பேன் என்னென்ன வேண்டும் என்பதை கேட்டு மனதில்வாங்கிக்கொண்டு போய் வாங்கிவரவேண்டும்.

காய்கறிகளின் பெயர்களை, நினைவில் இருத்துவது மட்டுமல்ல, ஒவ்வொன்றிலும் எவ்வளவு வாங்கவேண்டும் என்பதையும், அவைகளை வாங்க கொடுத்த காசையும் நினைவில் கொண்டு திரும்ப வந்து கணக்கை சரியாக தரவேண்டும்.

ஊரில் ஐயா கொடுத்த பயிற்சிதான் எனக்கு அப்போது உதவியது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

புதன், 13 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து!

தமிழர்தம் திருநாளன்று

தைத்திங்கள் முதல்நாளன்று

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க

இல்லத்தில் பாலும் பொங்க

நல்லவை நாளும் தங்க

நானுமே வாழ்த்துகின்றேன்!

நல்லவை நாளும் தங்க

நானுமே வாழ்த்துகின்றேன்!

ஞாயிறு, 15 நவம்பர், 2009

சிவபூஜையில் கரடி!

நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நான் இந்த சொல்லாடலை நினைக்க காரணம் இருக்கிறது. நான் முன்பு எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அவர்களது பூஜை முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அந்த நேரத்தில் யாரும் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் அப்பா பூஜை செய்யும்போது 'கரடி' போல குறுக்கிட்டு இடையூறு செய்தார் ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல. எங்கள் ஊர் மணியக்காரர் தான். அவர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊரைச்சேர்ந்தவர். அதோடு எங்களுக்கு தூரத்து உறவினரும் கூட.

(1980 க்கு முன்னால், கிராமங்களில் அரசுக்கு வரவேண்டிய நிலவரி வசூலிப்பதற்கும் மற்றும் மற்றைய வருமான (Revenue) சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதற்கும் மணியக்காரர் என்றும் கணக்கப்பிள்ளை என்றும் அலுவலர்கள் இருந்தார்கள். 1980 ல் திரு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இந்த பதவிகளை அவசர சட்டத்தின் மூலம் நீக்கிவிட்டு கிராம வளர்ச்சி அலுவலர் என்ற ஒரே பதவியை ஏற்படுத்தினார். அவர்கள் அப்போது முழு நேர அரசு ஊழியர்கள் இல்லை என்றாலும் கிராமத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஏனெனில் அவர்கள் நினைத்தால் ஒன்றுக்கும் உபயோகமில்லாத நிலத்திற்கு வரியை உயர்த்த முடியும். மாட்டு வண்டியை தெருவில் நிறுத்தினால் வரி வசூலிக்க முடியும்.அதனாலேயே அவர்களை யாரும்பகைத்துக்கொளவதில்லை.)

அந்த நிகழ்வு நடந்த நாளில், எங்கள் ஊருக்கு தாசில்தார் தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வைப்பு நிதி பெற வந்திருந்தார். அவர் வருவதை முன்பே தண்டோரா போட்டு தெரிவித்திருந்தனர். அன்றும், ஏன் இன்றும் கூட அரசின் சேமிப்பு பத்திரங்கள் வற்புறுத்திதான் விற்கப்படுகின்றன! எல்லோரும் தாசில்தார் வந்ததும் சாவடி அருகில் கூடினர். அப்பா பூஜையில் இருந்ததால் உடனே போகமுடியவில்லை.

அப்பா வரவில்லை என கணக்கப்பிள்ளை சொல்லியிருக்கிறார்.
உடனேதாசில்தார் 'ஏன் அவர் வரமாட்டாராமா? போய் அழைத்து வாருங்கள்' என சொன்னதும் மணியக்காரர் 'நானே போய் அழைத்து வருகிறேன்' என சொல்லி எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவிடம் எங்கள் அப்பா எங்கே எனக்கேட்டதும் அவர்கள் பூஜையில் இருப்பதாகக் கூறி, பூஜை முடிந்தும் வருவார் என கூறினார்கள்.

அவர் உடனே.'என்ன பெரிய பூஜை! தாசில்தார் வந்திருக்கிறார். அவர் கூப்பிட்டிருக்கும்போது வரவேண்டாமா? எனக்கூறிவிட்டு விடுவிடு என்று அப்பா பூஜை செய்யும் இடத்திற்கே வந்து சப்தம் போட்டு அப்பாவைக்கூப்பிட்டார்.

அம்மா 'அவர்களை பூஜை செய்யும்போது தொந்தரவு செய்யாதீர்கள்' என சொல்லியும் கேட்காமல் அப்பா பூஜை செய்யும்போது இடையூறு செய்தார். ஆனால் அப்பா எதுவுமே நடக்காதது போல் பூஜையிலே ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிவ பூஜையை நடக்க விடாமல் இப்படி தடுக்கிறாரே என்ன ஆகுமோ என பேசிக்கொண்டார்கள்.

அப்பா பூஜை முடிந்தவுடன் தாசில்தாரை போய் பார்த்து வந்தார்கள். அப்பாவும் மணியக்காரரிடம் 'ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' எனக்கேட்கவில்லை. எல்லோரும் அப்பாவிடம் 'அவர் உறவினாயிருந்தும் உங்களைப்பற்றி அறிந்திருந்தும் இவ்வாறு செய்தாரே?' என சொன்னபோதும் அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

இது நடந்து ஓரிரு நாட்களில் அந்த மணியக்காரருக்கு 'பக்க வாத நோய்' வந்து கையும் காலும் செயலிழந்து வாய் பேசமுடியாமல் குழறுகிறார் என செய்தி வந்த போது 'சிவ பூஜையை தடுத்ததால் தான் அவருக்கு இந்த தண்டனை' என்று ஊரே சொல்லியது. அவர் கடைசிவரை அவ்வாறு இருந்தே காலமானார்.

'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல்' அவருக்கு ஏற்பட்டது அவரது உடற்கூறு காரணமாக நடந்திருக்கலாம். அவர் அப்பாவின் பூஜையை தடுத்ததற்கும் அவருக்கு ஏற்பட்ட வியாதிக்கும் தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனாலும் கூட 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பழமொழி உண்மைதானோ!

வெள்ளி, 6 நவம்பர், 2009

நினைவோட்டம் 15

ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகள் வரை தான் அரியலூரில் படித்தேன்.ஆனாலும் அங்கு கிடைத்த அனுபவங்களும் பயிற்சிகளும் பிற்காலத்தில் உதவியது என்பது உண்மை. இப்போது நினைத்தாலும், நான் படித்த பள்ளியும், அதன் எதிரே இருந்த நாங்கள் நோட்டு புத்தகங்கள் வாங்கும் 'நடேசன் ஸ்டோர்'- ம், மதியம் நாங்கள் சாப்பிட செல்லும் செட்டி ஏரியின் படிக்கட்டுகளும் ஏரியில் பூத்திருந்த தாமரைப்பூக்களும்
என்னை 1954 ம் ஆண்டுக்கே அழைத்து சென்று ஆறாம் வகுப்பு மாணவனாக்குகிறது என்பது நிஜம்.

எனது மாமா வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜாஜி நகரில் இருந்தது. அங்கிருந்து நான் படித்த பள்ளி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். காலையில் எனது மாமா மகனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவேன். மாலையில் பள்ளி விட்டதும் மாமா கோர்ட்டிலிருந்து வரும்போது எங்களை அவரது மாட்டு வண்டியில் அழைத்து வந்துவிடுவார்.

எனது மாமாவின் வீட்டிற்கு 'Law Mansion' என்ற பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அந்த பெயரின் பொருள் புரியாதபோதிலும் அதனால் கவரப்பட்டு எனது புத்தகங்களின் மேல் அட்டையில் எனது பெயருக்குப் பின்னால் B.A.B.L என எழுதி 'Law Mansion' எனக்குறிப்பிட்டு இருப்பேன். எனது மாமா வழக்கறிஞராக இருந்ததால் அவருக்கு வரும் கட்சிக்காரர்கள், வழக்கு வெற்றி பெற்றதும் வந்து மாமாவை வாழ்த்தியதைப்பார்த்து, நாமும் இவ்வாறு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.

எங்களது மாமா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் குற்றவியல் வழக்குகளையும் எடுத்து நடத்தியதால் வீட்டில் எந்த நேரமும் வழக்காடும் கட்சிக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கட்சிக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் படிக்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சரியான 'மண்டகப்படி' கிடைக்கும்.

எனது மாமா மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். காலையில் 5 மணிக்கே எழுப்பிவிட்டு படிக்க சொல்வார். மாலையில் திரு கல்யாணசுந்தரம் அய்யர் என்ற ஆசிரியரை டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் நன்றாக படித்தாலும் அவசியம் டியூஷன் ஆசிரியரிடம் படிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் நான் எனது டியூஷன் ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களைப்பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர்.கண்டிக்கவேண்டிய வேளையில் கண்டித்து சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவார். அவர் போன்ற கடமையில் கண்ணான ஆசிரியர்கள் இப்போது குறைவு என்றே நான் சொல்லுவேன். நான் சேர்ந்த முதலாம் ஆண்டு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிகள் அறிவித்தபோது என்னை கட்டாயப்படுத்தி பெயர் கொடுக்கசொல்லி கலந்துகொள்ளவைத்தார். என்னை பேச தயார் படுத்தி இரண்டு போட்டியிலும் முதல் பரிசை பெற காரணமாயிருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் பின்னால் மேடையில் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சரளமாக தடையின்றி, பயமின்றி பேச உதவியது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

நான் கடலூரில் வங்கியில் மேலாளராக இருந்தபோது,அவர் பண்ருட்டியில் அவரது மூத்த மகன் வீட்டில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டேன். அவரை, பார்க்க சென்றபோது என்னைப்பெருமையுடன் அவரது குடும்பத்தார்க்கு அறிமுகப்படுத்தியபோது, நான் நானாக இல்லை என்பதே உண்மை. அவரது மகன் தாசில்தாராக இருந்தும் அவர் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லை என்பதை அறிந்தபோது எனது ஆசான் எவ்வாறு தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும், இவர் போன்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகம் இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். காரணம் உங்களுக்கே தெரியும். தாசில்தாரராக இருந்த அவர் மகன் நினைத்திருந்தால் வானொலிப்பெட்டி என்ன தொலைக்காட்சிப்பெட்டியையே பெற்றிருக்கமுடியும்!

அப்போது நினைத்துகொண்டேன், சும்மாவா சொன்னார்கள் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

புதன், 7 அக்டோபர், 2009

நினைவோட்டம் 14

அப்போதெல்லாம் பொதுத்தமிழ் என்று ஒரு பாடம் எல்லோரும் படித்தாகவேண்டும். சிறப்புத்தமிழ் என்ற பாடம் விருப்ப பாடமாக இருந்தது. சிறப்புத்தமிழுக்கு பதில் வடமொழி(சமஸ்கிருதம்) படிக்கலாம்.

அப்பா எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்திருந்ததால், வட மொழி படிப்பது சுலபமாக இருக்கும் என்று, அதை சிறப்புப்பாடமாக எடுக்க சொன்னார்கள். அப்பா சொன்னதால் நான் வடமொழியை எனது சிறப்பு பாடமாக எடுத்தேன். மேலும் எனது இரண்டாவது அண்ணன் அதே அரியலூர் பள்ளியில் வடமொழியை இரண்டாம் பாடமாக எடுத்து படித்து, பின் இண்டர்மீடியட்டிலிலும் அதையே எடுத்து படித்திருந்ததால் எனக்கு அந்த பாடத்தை எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லாதிருந்தது.

ஆனால் முதன்முதல் வடமொழி வகுப்புக்கு சென்றபோது எனக்கு அந்த ஆசிரியரிடமிருந்து வரவேற்பு சரியாக இல்லை. காரணம் எனக்கு திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும், நான் வடமொழி தெரியாத குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், என்னால் அந்த மொழியை படிக்கமுடியுமா என நினைத்ததாலும், 'என்னப்பா, உனக்கு சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தால் வருமா?' என சந்தேகத்தோடே அவர் கேட்டபோது, நான் 'சார் எனக்கு ஹிந்தி எழுத்துகள் தெரியுமாதலால், நிச்சயம் நன்றாக படிப்பேன் சார்' என்றேன். அவர் என்னை எழுதச்சொல்லி பார்த்துவிட்டு, திருப்தி அடைந்தவராய் பாடங்களை தொடர்ந்தார்.

ஆனால் எனது வடமொழி படிப்பு தொடர்ந்து நீடிக்கவில்லை. காரணம், அரியலூருக்கு வந்த எனது பெரியம்மா மகன், என்னிடம் 'ஏன் சமஸ்கிருதம் எடுத்தாய். வேறு பள்ளிக்கு மாற்றி சென்றால், அங்கு அந்த பாடம் இல்லாவிட்டால் உன்னால் அப்போது சிறப்புத்தமிழ் எடுத்து படிக்க முடியாது, காரணம், மேல் வகுப்புக்கு போகப்போக சிறப்புத்தமிழ் கடினமாயிருக்கும். எனவே இப்போதே சிறப்புத்தமிழுக்கு மாறிவிடு.' என அறிவுரை சொன்னார்.

அவர் சொற்படி நான் சிறப்புத்தமிழ் வகுப்புக்கு செல்வதாக கூறியதும், எந்த ஆசிரியர் 'எனக்கு வடமொழி சொல்லிக்கொடுக்க தயங்கினாரோ அவரே 'ஏன் அங்கு போகிறாய்?, நீ நன்றாகத்தானே படிக்கிறாய். வேண்டாம் இங்கேயே இரு' என்றார்.

ஆனால் நான் என் அண்ணன் சொன்னபடி, பள்ளி அலுவலகத்தில் சென்று அனுமதி பெற்று சிறப்புத்தமிழ் வகுப்புக்கு சென்றேன். என்னைப்பார்த்ததும் தமிழ் ஆசிரியர், 'வாப்பா, தமிழ் துரோகி! இப்போதுதான் தமிழ் படிக்க ஆசை வந்ததா?' எனக்கூறி வரவேற்றார். நான் அவரிடம் பொதுத்தமிழ் படிப்பது ஏனோ அவருக்கு அப்போது தெரியவில்லை. என்ன இப்படி சொல்கிறாரே, பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாமோ என நினைத்தாலும், ஒன்றும் சொல்லாமல் வகுப்பில் அமர்ந்தேன்.

ஆனாலும் வேறொரு மொழி கற்க முடியாமல் போனாலும், சிறப்புத்தமிழ் படித்ததால்தான் தாய்மொழி மேல் ஒரு பற்று வந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நினைவோட்டம் 13

எனது கடந்த கால நிகழ்வுகளைப்பற்றி மனதில் அசை போடும்போது , எங்கள் அப்பாவைப்பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது.எனவே அவ்வப்போது என் அப்பாவைப்பற்றியும் எழுதுவேன்.

புற்றீசல் போல் இப்போது உள்ள தனியார் பள்ளிகள் அப்போது இல்லை.தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. மேலும் பள்ளிகளில் பாடங்கள் முழுக்க முழுக்க தமிழில்தான் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே(ஜில்லா போர்டு ) நடத்தி வந்தன. அந்த பள்ளிகள் எல்லாம் கழக உயர்நிலைப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன.

அப்படி அரியலூரில் இருந்த கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்து சென்றபோது ஜூலை மாதம் ஆகிவிட்டது. பள்ளியில் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தன. நான் ஒரு சிற்றூரில் உள்ள பள்ளியில் படித்திருந்ததால் நுழைவுத்தேர்வு வைத்தே என்னை தேர்வு செய்தார்கள்.

ஒருவித தயக்கத்தோடும் பயத்தோடும் 'பர்ஸ்ட் பாரம்' எனப்படும் ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். அதுவரை தரையில் மணலில் உட்கார்ந்து படித்த எனக்கு, 'டெஸ்க்' எனப்படும் மரத்தால் ஆன இருக்கையில் அமர்ந்து படிப்பதும், கட்டைப்பேனா வைத்து மசிக்கூட்டிலிருந்து மசியை(Ink) தொட்டு எழுதியது போக ஊற்றுப்பேனா(Fountain Pen) மூலம் எழுதுவதும், புதுமையாக இருந்தன.

நான் பாடங்கள் ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து சேர்ந்ததால் வகுப்பு ஆசிரியர் 'உனக்கு எப்படிடா தனியாக திரும்பவும் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது?' என சலித்துக்கொண்டார். ஏனெனில் அந்த நாட்களில்,ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எனக்கு அப்பா முன்பே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருந்ததால் எனக்கு அந்த பாடங்கள் அவ்வளவு கடினமாகத்தெரியவில்லை.

ஆனால் முதல் நாளே எனக்கு வந்தது "சோதனை". மாலையில் பள்ளி விட மணி அடித்ததும் வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக கிளம்பியபோது பேனாவை எங்கோ விட்டுவிட்டேன். வீட்டிற்கு வந்து பார்த்ததில் பேனாவை தொலைத்துவிட்டேன் என்றதும், அழுதபடி எனது மாமா மகனிடம் சொன்னேன். அவரும் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அவர், மறுநாள் காலையில் பேனா தொலைந்தது பற்றி எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் அவர் அந்த கடிதத்தை எல்லா வகுப்புகளிலும் காட்ட அனுமதி கொடுப்பார் என்றும் கவலை வேண்டாம் எனக்கூறி அவரே கடிதம் எழுதிக்கொடுத்தார்.

மறுநாள் அதை தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்று கையொப்பம் வாங்கி, ஒவ்வொரு வகுப்பாக எடுத்து சென்று காண்பித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இருந்த, ஆசிரியர்கள் அதை மாணவர்களிடையே படித்து காண்பித்து, பேனா கிடைத்தால் என்னிடம் தருமாறு கூறினார்கள். ஆனால் S.S.L.C எனப்பட்ட பள்ளி இறுதி வகுப்பு ஆசிரியர் ஒருவர் மட்டும் எனது கடிதத்தை சத்தம் போட்டு வாசித்துவிட்டு சொன்னார். 'வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.' என்று.

அதுதான் நான் கற்ற முதல் பாடம். பேனா கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி