செவ்வாய், 22 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 26




அன்று மாலை சுமார் 4 மணிக்கு வந்த அந்த வாடிக்கையாளர், 
எங்கள் கணக்கை முடித்து, இப்போதே எங்கள் ஆவணங்களைத் 
தாருங்கள் என்று சொன்னபோது,  நான் அவரிடம்,நீங்கள் 
வருமுன்பே அவைகளை உங்களிடம் திருப்பித்தர 
அனுமதிக்கும்படி எனது வட்டார அலுவலகத்திற்கு 
கடிதம் எழுதிவிட்டேன்.

இன்றைய அஞ்சலில் அதை அனுப்ப இருக்கிறோம். 
நாளை அது அவர்களுக்கு கிடைத்துவிடும்.அனேகமாக 
நாளையே அனுமதி தந்துவிடுவார்கள். நாளையே அவர்கள் 
அதை அஞ்சலில் அனுப்பினால்  அந்த அனுமதி கடிதம் 
நிச்சயம் நாளை மறுநாள் வரும். அது வந்ததும் உடனே 
தந்துவிடுகிறேன். என்றேன்.

அவர் முகத்தில் அதுவரை இருந்த புன்சிரிப்பு மறைந்து 
விட்டது. அவர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு, 
என்ன சார் இது.  கடனை அடைத்த பிறகு உடனே 
ஆவணங்களை தருவதுதானே முறை.நீங்கள் 
என்னவென்றால் திருவனந்தபுரம் எழுதி கேட்டுத் 
தருகிறேன் என்கிறீர்கள்.அவர்கள் அனுமதி தரும் 
வரையெல்லாம் என்னால் காத்திருக்கமுடியாது. 
நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. 
அவைகள் இன்று மாலை 5 மணிக்குள் எனக்கு 
வேண்டும். என்றார் கறாராக. 

நானோ பொறுமையாக, சார், உங்களுக்கு யார் கடனை 
ஒப்பளிப்பு செய்தார்களோ அவர்களுக்குத்தான் உங்கள் 
ஆவணங்களை திருப்பித்தர அதிகாரம் உண்டு. நான் இந்த 
வசதியை ஒப்பளிப்பு செய்யாததால் எனக்கு ஆவணங்களை 
திருப்பித்தர அதிகாரம் இல்லை. எனவே என்னால் உடனே 
தர இயலாது. தயை செய்து ஒரு நாள் பொறுங்கள். நாளை 
காலை எனது கடிதம் அங்கு சென்றடைந்ததும், 
தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுமதி பெற்று 
தருகிறேன். என்றேன்.

அதற்கு அவர், அனுமதி பெற்றுத் தருவது அல்லது பெறாமல் 
தருவது உங்களுடைய வேலை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.எனக்கு இப்போது உடனே ஆவணங்கள் வேண்டும்.
அதைப் பெறாமல் இங்கிருந்து நான் போவதாக இல்லை. 
எனக் கூறி எனது அறையிலேயே அமர்ந்துவிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் வங்கியில் செலவைக் 
குறைக்கும் நடவடிக்கையாக, கிளையில் இருந்த 
தொலைபேசியில் STD வசதியை எடுத்துவிட்டார்கள்.

Trunk Call செய்து அனுமதி பெற நேரம் ஆகும் என்பதால் 
அவரது கோப்பை எடுத்துக்கொண்டு (என் தலைவிதியையும் நொந்துகொண்டு) நான்கு கட்டிடங்கள் தள்ளி இருந்த 
ஒரு STD கூடம் சென்று, எனது துணைப் 
பொதுமேலாளரை தொடர்புகொண்டு விவரம் சொல்லி, 
அனுமதி கேட்டேன்.

அதற்கு அவர். கடிதம் அனுப்பிவிட்டீர்களா?’ என்றார். நான், 
இல்லை சார் இன்றைய அஞ்சலில் தான் அனுப்புகிறேன். 
ஆனால் அந்த வாடிக்கையாளர் இன்றே வேண்டும் 
என்கிறார். அதனால்தான் உங்களிடம் தொலைபேசி மூலம் 
அனுமதி கேட்கிறேன்.என்றேன்.

அவர்,’என்ன சபாபதி. அந்த கணக்கு முழுமையாக 
முடிக்கப்பட்டுவிட்டது என்று எழுத்து மூலம் வந்தால்தானே 
நாங்கள் அனுமதி தர இயலும். அன்றைக்கு என்னவோ 
அவர்களது காசோலையை Pass செய்ய அனுமதி கேட்டபோது, 
அவர்கள் நல்ல வாடிக்கையாளர்கள் என்றீர்கள்.அவர்களால் 
ஒரு நாள் பொறுத்துக்கொள்ள முடியாதா? என்றார்.

சார். அன்று நான் சொன்னது சரிதான். ஆனால் இன்று 
அவர் பிடிவாதமாக இப்போதே ஆவணங்கள் வேண்டும் 
என்று சொல்லி நட்சத்திரேயன்போல் என் அறையிலேயே 
உட்கார்ந்து இருக்கிறார். என்னால் எந்த வேலையையும் 
செய்ய இயலவில்லை. அதனால்தான் வெளியில் வந்து  
உங்களை தொடர்பு கொண்டுள்ளேன். தயை செய்து நீங்கள் 
எனக்காக அனுமதி தரவேண்டும். என்றேன். 

அவர் எனது பரிதாப(!) நிலையை அறிந்து , சரி நீங்கள் 
கிளைக்கு சென்று உடனே தொலையச்சு மூலம் உங்கள் 
பரிந்துரையை அனுப்புங்கள். நான் அதைப் பார்த்து அனுமதி 
தருகிறேன். என்றார்.

உடனே திரும்பி வந்து கடித்ததில் எழுதியிருந்ததை 
தொலையச்சு மூலம் அனுப்பினேன். நான் இவ்வாறு 
கஷ்டப்பட்டு கோப்பைத் தூக்கிக்கொண்டு சென்று வெளியே 
பேசிவிட்டு வருவதை அந்த வாடிக்கையாளர் 
வேடிக்கை பார்த்துக்கொண்டு  இருந்தார்.

நல்ல வேளையாக சற்று நேரத்தில் எனது வட்டார 
அலுவலகத்தில் இருந்து அனுமதி தொலையச்சு மூலம் 
வந்து விட்டது.

உடனே அவரிடம் அவரது ஆவணங்களைக் கொடுத்து 
கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அவர் நன்றி கூட 
சொல்லாமல் (அதை எதிர்பார்ப்பதும் தவறுதானே) 
கிளம்பிவிட்டார். 

அவர் வெளியே சென்றதும் தான் எனக்கு அதுவரை 
இருந்த மன அழுத்தம் குறைந்தது. பின்னர் உள்ளே வந்த 
எனது சக அலுவலர்கள்,’சார். நீங்கள் அன்று செய்த 
உதவிக்கு அவர் செய்த கைமாறை பார்த்தீர்கள் அல்லவா? 
இப்படி பேசி உங்களை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கிய 
அவருக்கு நீங்கள் அன்று அப்படி Personal Risk எடுத்து 
உதவியிருக்க வேண்டியதில்லை. என்றார்கள்.

நான் சொன்னேன்.அவர் நாம் செய்த உதவியை 
நினைத்துக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்த்து அந்த 
உதவியை செய்யவில்லை. நீண்ட காலம் நம்மோடு 
வணிகம் செய்த நல்ல வாடிக்கையாளர் என்பதால் 
என்னாலான உதவியை செய்தேன். கடமையை 
செய்துவிட்டு நன்றியை எதிர்பார்ப்பது தவறு. 
மேலும் மறப்பது மனித இயல்பு தானே. என்ன செய்ய.
நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. 
என்றேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சில நேரங்களில் 
சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று!



தொடரும்



18 கருத்துகள்:

  1. மனவேதனைதான். உலகில் எல்லோரும் நன்றியுடன் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. அலுவலக வாழ்க்கையில்தான் எத்தனை விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! உண்மைதான். அலுவலக வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள் தான்.

      நீக்கு
  3. சிலர் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
    உங்கள் முயற்சியும் வங்கியின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  4. தங்கள் பொறுமை தங்களுக்கே பெருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  5. We live in ‘kali yuham”. Though we help people, at time they turn back and ask, I did not force you to do that. This makes us “soodu kanda poonai” and changes our normal character. But, in customer service, one has to have thick skin. I guess, you still have to help the next customer too, irrespective of the appreciation you get.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும்போது எல்லோரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். சில வாடிக்கையாளர்கள் இன்னும் கூட என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள்.எனவே ஒரு சில நிகழ்வுகள் நமது ஆர்வத்தை குறைக்கக் கூடாது என்பது உண்மை.

      நீக்கு
  6. // இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சில நேரங்களில்
    சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று! //

    சில நேரங்களில் மட்டுமல்ல பல நேரங்களிலும் அவர்கள் (காரியவாதிகள்) அப்படித்தான் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. சில நேரங்களில்
    சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ ..//

    நிறைய டென்ஷன் கொடுத்திருக்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வங்கிப் பணியே மன அழுத்தம் தரக்கூடியதுதான். ஆரம்பத்தில் அதை தாங்கிக் கொள்ள கடினமாக இருந்தாலும், போகப்போக அதைத் தாங்கும் சக்தி வந்துவிடும்!

      நீக்கு
  8. அன்பின் நடன சபாபதி - ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு விதம் - அவருக்கு என்ன அவசரமோ - நம்க்குத் தெரியாது - இருப்பினும் இது மாதிரி நிகழ்வுகள் வங்கிகளீல் சாதாரணமாக நடக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! இந்த மாதிரி நிகழ்வுகள் எதிர்பார்க்கக்கூடியது என்றாலும், அந்த வாடிக்கையாளர் அந்த நேரத்தில் அப்படி கண்டிப்புடன் நடந்துகொண்டதுதான் அசாதாரணமாகக் தெரிந்தது.

      நீக்கு
  9. உண்மைதான். ஆனால. கண்டிப்பாக அவர்கள் செய்த அந்த தவறை உணர்வார்கள் ஓர் நாள்🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ,நாம் நமது கடமையை,பாராட்டையோ பலனையோ எதிர்பார்க்காமல் செய்தோம் என்பது உண்மை.

      நீக்கு