வெள்ளி, 16 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 9

கன்னோட் பிளேஸ்(Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்ததும், உடனே கீழே
வந்து,அங்கிருந்த ‘மெஸ்’ மேலாளரிடம் கன்னோட்
பிளேஸ் செல்லும் பேருந்து எண் மற்றும் எந்த
இடத்தில் அதில் ஏறவேண்டும் என விசாரித்துக்
கொண்டு கிளம்பினோம்.

அந்த பேருந்து ஏற,ஆர்ய சமாஜ் சாலை
செல்லவேண்டும் என அவர் கூறியதால்.நாங்கள்
அங்கு சென்று,அந்த பேருந்து நிற்குமிடம் சென்று
காத்திருந்தோம்.

அப்போது நான் ‘இங்கு ஏதாவது வாங்க
வேண்டுமென்றால், பேரம் பேசித்தான் வாங்க
வேண்டுமாம்.இல்லாவிட்டால் ஏமாந்து
விடுவோமாம்.இந்தி தெரிந்தால் பேரம் பேசலாம்.
நமக்குத்தான் தெரியாதே என்ன செய்வது?’என்றேன்.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,’உங்களுக்கு
வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.எனக்குத்
தெரியும்.ஏனெனில் கேரளாவில் எங்களுக்கு
எஸ்‌.எஸ்.‌எல்‌.சி வரை இந்தி மொழிப்பாடம் உண்டு.
அதனால் கவலை வேண்டாம்.'என்றார்.அதோடு
நிற்கவில்லை அவர். பின் சொன்னார்,'உங்கள்
மாநிலத்தில்தான் இந்தியை எதிர்க்கிறீர்களே.
அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான்
வேண்டும்.’என்று.

நான் உடனே,’நண்பரே.நாங்கள் இந்தி என்ற
மொழியை எதிர்க்கவில்லை.அதை எங்கள் மேல்
திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.இந்த திணிப்பு
நடைபெறு முன்னரே தமிழ் நாட்டில் இந்தியை
விரும்பிப் படித்தவர்கள் அநேகம்.ஏன் தட்சிண பாரத்
இந்தி பிரசார் சபா இருப்பதே சென்னையில் தானே.
எனவே விவரம் தெரியாமல் பேசாதீர்கள்.’என்றேன்.
(இந்த இந்தித் திணிப்பு பற்றி தனியாக ஒரு பதிவு
எழுத இருக்கிறேன்.)

மேலும் பேச்சு நீடிக்குமுன் நாங்கள் ஏற வேண்டிய
பேருந்து வந்துவிட்டது. அப்போதெல்லாம் டில்லியில்
பேருந்துகள்,Delhi Transport Corporation (DTC)
என்ற அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய
நிறுவனத்தால் இயக்கப்பட்டன.

DTC யிடம் அதிக பேருந்துகள் இல்லாததால்,சில
வழித் தடங்களில் தனியார் நிறுவனங்கள்,அவர்களது
பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க DTC
அனுமதித்து இருந்தது.

அப்படிபட்ட பேருந்துகளில் On DTC Contract என
எழுதியிருக்கும்.அப்படிப்பட்ட பேருந்து ஒன்றில்தான்
நாங்கள் கன்னோட் பிளேஸ் செல்ல ஏறி,மூவரும்
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

நாங்கள் ஏறியவுடன் அந்த பேருந்தின் நடத்துனர் உடனே
எங்கள் அருகே வரவில்லை.இரண்டு நிறுத்தங்கள்
தாண்டியதும் ‘டிக்கெட், டிக்கெட் எனக் கேட்டுக்கொண்டு
எங்கள் அருகே வந்தார்.

நண்பர் இராதாகிருஷ்ணன் இருக்கையின் ஆரம்பத்தில்
அமர்ந்து இருந்ததால் பணத்தை எடுத்துக் கொடுத்து,
‘தீன் கன்னோட் பிளேஸ்.’என்றார்.அதற்கு அந்த
நடத்துனர்,‘கஹான் ஸே?’ என்றார். நண்பரும்
அந்த நடத்துனர் சரியாக கவனிக்கவில்லை போலும்
என எண்ணி திரும்பவும் ‘தீன் கன்னோட் பிளேஸ்.’
என்றார்.

அந்த நடத்துனர் நண்பரை ஒரு மாதிரியாய் பார்த்து,
‘அரே பாய். கஹான் ஸே?’ என்றார் திரும்பவும்.
நண்பர் இராதாகிருஷ்ணன்,திரும்பவும் ‘கன்னோட்
பிளேஸ்’ என்றதும், அந்த நடத்துனர் வழக்கமாக
எல்லா நடத்துனர்களும் நடத்தும் ‘அர்ச்சனை’யை
இந்தியில் செய்தார்!

எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று
ஒன்றும் புரியவில்லை.ஆனால் அவர் திட்டுகிறார்
என்று மட்டும் தெரிந்தது.பேருந்தில் உள்ள
அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியதும்,
எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சிலர்
சிரிக்கவும் தொடங்கிவிட்டனர்.

அப்போது எங்களுக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த
ஒருவர், ஆங்கிலத்தில் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’
என்றார்.‘ஆம்.’என்றதும்,’நீங்கள் எங்கு ஏறினீர்கள்?’
என்று கேட்டார்,‘கரோல் பாக்’ என்று சொன்னதும்,
அவர் ‘நடத்துனர் அதைத்தான் உங்களிடம் கேட்டார்.
நீங்கள் அதைச் சொல்லாமல் போகுமிடத்தை
சொன்னதும்,அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது.
இந்தியில் ‘கஹான் ஸே’ என்றால் ‘எங்கிருந்து’
என்று பொருள்.’என்று கூறிவிட்டு அந்த
நடத்துனரிடம் ஏதோ சொன்னார்.

என்ன எங்களை, இவர்கள் மதராசிகள். இந்தி
தெரியாததால் நீங்கள் கேட்டது புரியவில்லை
இவர்களுக்கு ‘கரோல்பாக்’ கிலிருந்து கன்னோட்
பிளேஸ் போக சீட்டு கொடுங்கள் என்றிருப்பார்.

அந்த நடத்துனரும் ஏதோ முணுமுணுத்துக்
கொண்டு சீட்டுகள் கொடுத்தார்,(சாவு கிராக்கிகள்
என அவரது மொழியில் சொல்லியிருப்பாரோ
என்னவோ.)

பேருந்தில் உள்ள அனைவரும் எங்களையே பார்த்து
ஏதோ பேசிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு
அவமானமாகிவிட்டது.எப்போதடா பேருந்திலிருந்து
இறங்குவோம் என ஆகிவிட்டது.

அப்போது பேருந்து ஒரு இடத்தை அடைந்தது.அங்கு
வரிசையாக அநேக கடைகளும், கூட்டமும்
இருந்ததால், கன்னோட் பிளேஸ் வந்துவிட்டது என
எண்ணி மற்றவர்களைக் கேட்க கூச்சப்பட்டு உடனே
இறங்கிவிட்டோம்.

இறங்கிய பேருந்து நகர்ந்ததும்,நண்பர் அங்கிருந்த
ஒருவரிடம்,‘இது கன்னோட் பிளேஸ் தானே?’ என்று
கேட்டார்.அதற்கு அவர், ‘இல்லை இல்லை. இது
Gole Market.கன்னோட் பிளேஸ் இங்கிருந்து இரண்டு
கிலோ மீட்டர் தூரம்.’என்றார். நாங்கள் ஒருவரை
ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டு,
மேற்கொண்டு என்ன செய்வது என
யோசித்துக்கொண்டு நின்றோம்.


தொடரும்

10 கருத்துகள்:

  1. அடடா....... நடந்தீங்களா?

    மொழி தெரியலைன்னா சிரமம்தான்

    பதிலளிநீக்கு
  2. அரைகுறையாக தெலுங்கு கற்று வைத்திருந்த ஒருவர் மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பெண்ணிடம், ‘‘ஐது ரூபாக்கு ஒஸ்தாவா?’’ என்று கேட்டு அடிவாங்கியதாக நான் கேள்விப்பட்டதுண்டு. (‘ஐது ரூபாய்க்கு இஸ்தாவா?’ என்று கேட்டிருக்க வேண்டும். இஸ்தாவா - தருவியா? ஒஸ்தாவா - வருவியா?) அது மாதிரி ஹிந்தி தெரியாமல் நீங்கள் பட்ட கஷ்டம் இப்போ எங்களுக்கு ‌காமெடியா இரு்க்கு. இந்தி திணிப்புக்கு நீங்க ‌சொன்ன விஷயமும் மிகவும் சரியானதே. அனுபவம் அருமை!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திருமதி துளசி கோபால் அவர்களே! மேற்கொண்டு என்ன ‘நடந்தது’ என்பதை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! அரைகுறை தெலுங்கில் பேசி, ஒருவர் பட்ட அனுபவம் பற்றி நீங்கள் எழுதியது போல், கன்னடம் சரியாகத் தெரியாமல் ‘கதக்’ என்ற ஊரில் நான் பேசி, பட்ட அனுபவம் பற்றி பின் எழுத இருக்கிறேன். ஆனால் அடி ஏதும் வாங்கவில்லை!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. தனக்கு ஹிந்தி தெரியும் என்ற நண்பரின் நிலை என்ன வென்று வர்ணிக்கவில்லையே ..அவருக்கும் உங்களுக்கும் நடந்த சிறு வாக்கு வாதம் ஒரு MINI முல்லைபெரியார் பிரச்சினை போல் இருந்தது ! ஹிந்தி திணிப்பை தான் எதிர்த்தோம் என்பது சரியே .. ஆனால் அரசியல் ஆக்கப்பட்ட இந்த பிரச்சினையின் காரணம் தமிழ் நாட்டவர்கள் பல விதத்தில் பாதிக்க பட்டனர் என்பதே உண்மை.
    மொழி தெரியா புரிய இடத்தில் அவதி படும் காட்சிகள் சில திரை பட நகைச்சுவை காட்சிகளை நினைவு ஊட்டுகின்றன.
    தொடரட்டும் உங்கள் பயணம் Gole Maket லிருந்து Connaught Place வரை ...
    வாசு

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்தி தெரியும் என்ற நண்பரைப் பற்றி வரும் பதிவுகளில் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல அனுபவங்கள் வாழ்த்துகள் சகோதரரே!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு